×

செருப்பு காணிக்கை செலுத்தி வழிபடும் கோயில்

திருநெல்வேலி மாவட்டம் காரையாரில் உள்ள சொரிமுத்தய்யன் கோயிலில் வீற்றிருக்கும் மொம்மக்கா, திம்மக்காவுடன் அருளாட்சி புரியும் முத்துப்பட்டன்  சுவாமிக்கு பக்தர்கள் செருப்பை காணிக்கையாக செலுத்துகின்றனர். காரணம் அந்தணர் குலத்தில் பிறந்த முத்துப்பட்டன், செருப்பு தைக்கும் தொழிலாளியின்  மகள்களான பொம்மக்கா, திம்மக்காவை காதல் மணம் புரிந்தார். அதனால் அவர் சமூகமும், குடும்பமும் இவரை புறக்கணித்தனர். இதனால் முத்துப்பட்டன்  செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டார். அதன் காரணமாக அவருக்கு செருப்பை காணிக்கையாக செலுத்தும் வழக்கம் வந்தது.

கேரளா மாநில் ஆரியங்காவில் அந்தணர் குடும்பத்தில் ஏழு அண்ணன்மார்களுக்குப் பிறகு பிறந்தவர் முத்துப்பட்டன். இவரது தந்தை கோயிலில் அர்ச்சகராக  இருந்தார். முத்துப்பட்டன் இளம் வயதிலேயே குல வழக்கப்படி, வேதங்களும், சாஸ்திரங்களும் கற்று தேர்ந்தவர். ஒரு முறை இரண்டாவது அண்ணன் அவனை  அடிக்க, பதிலுக்கு முத்துப்பட்டன் மூத்தவன் என்றும் பாராமல் எதிர்த்து தாக்கினான்.

அதனை கண்ட அவரது தந்தை, ‘‘ஒரு மணி நேரம் வெயிலில் ஒற்றைக்காலில் நில். அப்போது தான் உனக்கு புத்தி வரும்.’’ என்று தண்டனை வழங்கினார்.  தண்டனையை ஏற்க மறுத்து முத்துப்பட்டன் வீட்டை விட்டு வெளியேறினான். கொட்டாரக்கரை வந்து சேர்ந்த முத்துப்பட்டன், அங்கே ஆட்சிபுரிந்து வந்த  சிற்றரசன் ராமராஜனிடம் மெய்க்காப்பாளனாக சேர்ந்தார்.

மாதம் நூறு பொற்காசுகள் ஊதியமாக பெற்ற அவன், தனது வருமானத்திலிருந்து ஏழை, எளியோருக்கு கொடுத்து உதவினான். கொட்டாரக்கரை மன்னருக்கு  மெய்க்காப்பாளனாக தம்பி இருப்பதை அறிந்து பெருமிதம் கொண்ட அவரது அண்ணன்மார்கள் கொட்டாரக்கரை சென்று, ‘‘தாயும், தந்தையும் உன்னைக் காண  ஆவலாக இருக்கின்றனர். நாங்கள் மணமுடித்து மனைவி, பிள்ளைகளோடு நமது பூர்வீக ஊரான விக்கிரமங்கசிங்கபுரம் அக்ரஹாரத்தில் இருக்கிறோம். உனக்கும்  மணமுடிக்க பெண் பார்த்திருக்கிறார்கள்.

எங்களோடு புறப்பட்டு வா,’’ என்று மூத்த அண்ணன் சோமலிங்கபட்டன் கூற, மன்னனும் முத்துப்பட்டனை அவனது அண்ணன்மார்களுடன் அனுப்பி வைத்து,  கூடவே ஆயிரம் பொற்காசுகளையும் கொடுத்தனுப்பினார். குதிரை வண்டியில் வந்த அண்ணன்மார்களை தற்போதைய காரையார் அருகே வந்ததும், ‘‘நீங்கள்  செல்லுங்கள், நான் பின்பு வருகிறேன். இது நமது ஊர் எனக்கு தெரியாத இடமா?’’ என்று சொல்லி அண்ணன்மார்களை அனுப்பி வைத்தான் முத்துப்பட்டன்.
 
மரநிழலில் ஓய்வெடுத்தார். மாலையில் சந்தியாவந்தனம் (மாலைப்பொழுது வழிபாடு) செய்து கொண்டிருந்தபோது ‘‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்,’’ என்று  குரல் கேட்க, திரும்பி பார்த்தார். பதினெட்டு வயது நிரம்பிய பருவப்பெண் ஒருத்தியை ஒருவன் தோளில் தூக்கிக்கொண்டு செல்ல, பின்னாடி ஒருவன் கையில்  வாளுடன் மலை முகடை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். விரைந்து சென்ற முத்துப்பட்டன், உடைவாளை உருவியபடி தான் யார் என்பதை சொல்ல, அவர்கள்  பயந்து நடுங்கி, அந்த பெண்ணை முத்துப்பட்டனுடன் அனுப்பி வைத்தனர்.

அவளிடம், முத்துப்பட்டன், ‘‘குதிரையில் ஏறு, உன் வீட்டில் கொண்டு விடுகிறேன்,’’ என்று கூற, அவளோ, ‘‘ஐயா, நீங்க ஒசந்த சாதிக்காரங்க. நான்  தாழ்த்தப்பட்ட சாதி. உங்களோடு நான் வந்தா தீட்டாகும். நான் நடந்து போயிக்கிறேன். வீடு பக்கத்தில தான் சாமி இருக்கு’’ என்று பதிலளித்தாள்.

 ‘‘இல்லை, உன் வீடு இருக்கும் பகுதி வரை பாதுகாப்பாக வருகிறேன்,’’ என்று கூறி, உடன் நடந்தான். அவளுடைய வீடு வந்ததும் விடைபெற்றுச் சென்றான்  முத்துப்பட்டன். அடுத்தநாள் ஆற்றங்கரையில் முத்துப்பட்டன் அமர்ந்திருந்தபோது அழகான குரலில் தெம்மாங்கு பாட்டு, மேய்ந்துகொண்டிருந்த மாடுகள் நடுவே  நின்றிருந்த பெண்ணொருத்தி பாடிக் கொண்டிருந்தாள். அவள், முந்தின நாள் தன்னால் காப்பாற்றப்பட்ட பெண் தான் என்பதை அறிந்து அவளை நோக்கி ஓடினார்.  அவரைப் பார்த்து அந்தப் பெண் அஞ்சி ஓடினாள்.

பனைஓலையால் வேயப்பட்ட குடிசையில் செருப்பு தைத்துக்கொண்டிருந்த தனது தந்தையிடம் சென்றாள்.  ‘‘அப்பா, என்னை
ஒருவன் விரட்டி வருகிறான். என்றாள்.’’

‘‘நீ இங்கே இரு, அவனை கண்டதுண்டமாக வெட்டிப்போட்டு விட்டு வருகிறேன்,’’ என்று கூறிய பகடை, அரிவாளுடன் வெளியே வந்தான்.  

திம்மியை விரட்டி வந்த முத்துப்பட்டன் கல் தட்டி கீழே விழுந்து மயங்கி கிடந்தார். அரிவாளுடன் ஒடி வந்த பகடை, முத்துப்பட்டன் முகத்தில் நீர்  தெளித்தான்.’’

‘‘ஐயா, என் மகள் மாட்டுக்காவலுக்கு வந்திருந்தவளை எவனோ ஒருத்தன் விரட்டிருக்கிறான். அவனை கண்ட துண்டமா வெட்டி எறியுணும்ன்னு தான்  அரிவாளோட வந்தேன் சாமி.’’

முத்துப்பட்டன் புரிந்து கொண்டான், நாம் விரட்டிய பெண் இவனுடைய மகளா, என்று நினைத்துக்கொண்டு, அவளைப் பார்க்கும் ஆர்வத்தில் பகடையிடம், ‘‘உங்க  வீட்டுக்கு போகலாமா?’’ என்று கேட்டார்.

திகைத்து நின்ற பகடையிடம், ‘‘எனக்கு கல் பட்டதில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒத்தடம் கொடுத்தா உடனே சரியாயிடும் அதுதான் கேட்டேன். உங்களுக்கு  விருப்பம் இல்லைனா வேண்டாம்,’’ என்றார் முத்துப்பட்டன்.

‘‘அப்படி இல்ல சாமி, என் குடிசையிலே, மாட்டுத்தோல் காய வைச்சிருக்கிறேன்.    அந்த வாடை உங்களுக்கு ஒத்துக்காது. பரவாயில்லேன்னா வாங்க சாமி,’’  என்று கூறி தன்னுடன் அழைத்துச் சென்றான்.

இருவரும் பேசியபடியே பகடையின் குடிசையை நெருங்கினர். குடிசை முன்னே அக்கம்பக்கத்தினர் மற்றும் பகடையின் மகள்களும், அவரது மனைவியும் நின்று  கொண்டிருந்தனர்.

குடிசையின் திண்ணையில் அமர்ந்து கொண்ட முத்துப்பட்டனிடம், ‘‘சாமி இது என் பொஞ்சாதி, இவள் என் மூத்த மகள் பொம்மி, இளையவள் திம்மி,’’ என்று  தனது மகள்களை காட்டி அறிமுகம் செய்து வைத்தான் பகடை.

‘‘ஒத்த உருவமுடைய இரண்டு பெண்களை நான் இப்போது தான் பார்க்கிறேன். என்ன ஆச்சர்யம்! உயரம், எடை, தோற்றம் எல்லாம் ஒரே மாதிரியாக  இருக்கிறதே,’’ என்று வியந்த முத்துப்பட்டன், ‘‘இவர்களில் நேற்று நான் சந்தித்த பெண் யார்?’’ என்று கேட்டான்.

பொம்மி முன் வந்து ‘‘நான்தான் சாமி,’’ என்றாள். கூடவே தன் தந்தையிடம், ‘‘அப்பா, நேற்று என்னை அந்த கயவர்களிடமிருந்து காப்பாற்றியது  இவர்தான்,’’ என்று கூறினாள். உடனே பகடையும், அவரது மனைவியும் முத்துப்பட்டனைப் பார்த்து கை எடுத்து
வணங்கியவாறு ‘‘ரொம்ப நன்றி சாமி, உங்களுக்கு என்ன கைமாறு செய்யப்போறோம்!’’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.

உடனே முத்துப்பட்டன், ‘‘ கைமாறு எதுவும் வேண்டாம். உங்க மகளை கொடுங்க பொம்மியைத் திருமணம் செய்து கொள்கிறேன். உங்களோடு வாழ்கிறேன்’’  என்றான்.

‘‘சாமி, நாங்க செருப்பு தைக்கிறவங்க, மாமிசம் சாப்பிடுறவங்க, இது எப்படி
சாத்தியமாகும்?’’

‘‘நான் மாமிசம் சாப்பிடமாட்டேன், மற்றபடி நீங்கள் செய்யும் வேலையை நான்
செய்கிறேன்.’’

‘‘சாமி, உங்க குடும்பத்துக்கு இந்த விவரம் தெரிந்தால் எங்களை உயிரோடு எரித்து விடுவார்களே!’’

‘‘அச்சம் வேண்டாம் மாமா,’’ உரிமையுடன் அழைத்தான் முத்துப்பட்டன். ‘‘விரும்பினால் பங்கேற்பார்கள்; வெறுத்தால் சபிப்பார்கள். கொடுஞ்செயல் புரியும்  மன வலிமையும் அவர்களுக்குக் கிடையாது  என்றான் பட்டன்.

 ‘‘எனது மூத்த மகளை நீங்கள் திருமணம் செய்துகொண்டால், இளையவளை என் சாதிக்காரன் எவனும் மணமுடிக்க முன் வரமாட்டான்; அதனால் என் இரண்டு  மகள்களையும் நீங்களே மணமுடித்துக்கொள்ளுங்கள். என் குடிசையின் அருகே வசியுங்கள்,’’ என்றான் பகடை. அதற்கு சம்மதித்தான் முத்துப்பட்டன்.

பொம்மி - திம்மியுடன் திருமணம் நடந்தது.
அவர்களோடு வசித்த முத்துப்பட்டன், செருப்பு தைக்கும் தொழில் செய்தார். பல ஆண்டுகளாக அனுபவம் பெற்ற பகடையை விட அதிகமாகவும், வேகமாகவும்  செருப்புகள் செய்தார்.

நாட்கள் சில கடந்த நிலையில் ஒருநாள் வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்திருந்த பகடையிடம் ஒருவன் ஓடோடி வந்தான். ‘‘சித்தப்பு, நம்ம மாட்டு  மந்தையிலிருந்து மாடுகளை 15 கள்வர்கள் ஓட்டிச்செல்கின்றனர்,’’ என்று பரபரப்புடன் சொன்னான்.

அப்போது அங்கே வந்த முத்துப்பட்டன், ‘‘என்ன கள்வர்கள், நம்ம மாடுகளை ஓட்டிச் செல்கிறார்களா, நான் அவர்களை விரட்டிவிட்டு மாடுகளை ஓட்டி  வருகிறேன்,’’ என்று கூறிச் சென்றான்.

‘‘வேண்டாம் ஐயா, நாங்கள் போய் பார்க்கிறோம். நீங்கள் ஓய்வெடுங்கள்,’’ என்று பகடை அவனை போகவிடாமல் தடுத்தார்.

ஆனால் முத்துப்பட்டனோ, ‘‘வாளுடன் குதிரையில் புறப்பட்டான். அவனை பகடை வீட்டு நாய் ஊளையிட்டபடி தொடர்ந்தது.

குளித்து முடித்து குடிசைக்கு வந்த பொம்மியும், திம்மியும் தங்களைகூட கவனிக்காமல் வேகமாக குதிரையில் முத்துப்பட்டன் போவதைப் பார்த்துவிட்டு,  பகடையிடம் விவரம் கேட்டனர். அவன் விளக்கிச் சொன்னதும், ‘‘ அவரை ஏன் அனுமதித்தீர்கள்?’’ என்று வேதனையுடன் கேட்டனர்.

அரசரடித்துறையில் எதிரிகளோடு சண்டையிட்டு அவர்களை வீழ்த்தினான் முத்துப்பட்டன். அவர்களில் ஒருவன் ஊனமுற்றவன் என்பதால் அவனை மட்டும்  கொல்லாமல் ஒரு அடியில் கீழே வீழ்த்தினான். அவனும் மயங்கியது போல் படுத்துக்கிடந்தான். கள்வர்களை விரட்டியடித்து மரத்தடியில் ஓய்வெடுத்துக்  கொண்டிருந்த முத்துப்பட்டனை, பின்புறகாக வந்து அந்த ஊனமுற்ற கள்ளன் வெட்டி கொலை செய்தான். வாளால் வெட்டுண்டு மரணமடைந்தான் முத்துப்பட்டன்.  உடன் வந்திருந்த நாய், அவன் உடலை முகர்ந்து பார்த்து ஊளையிட்டது.

பின்னர் வேகமாக சென்று பொம்மியையும், திம்மியையும் அவர்களின் சேலை முந்தானையை கவ்வி இழுத்தது. நாயின் மூக்கில் ரத்தக்கறையைக் கண்டு  அதிர்ந்துபோன சகோதரிகள் நாயுடன் வந்து முத்துப்பட்டன் உடலை கண்டு அழுது புலம்பினர். கணவனின் உடலை இருவரும் எடுத்துக்கொண்டு வந்தனர். பின்னர்  சிங்கம்பட்டி சிற்றரசனிடம் சென்றார்கள். ‘‘எங்கள் கணவன் உடலுக்கு தீ மூட்டும் போது நாங்களும் அந்தத் தீயில் இறங்கி உயிரை மாய்த்துக்கொள்கிறோம்,’’  என்று கூறினர். அதற்கு முதலில் மறுத்த மன்னன் பின்னர் தயக்கத்துடன் சம்மதித்தான்.

மறுநாள் மயானத்திற்கு அலங்கரிக்கப்பட்ட முத்துப்பட்டன் உடல் கொண்டு வரப்பட்டது. மன்னன் சைகை காட்டிய பின் பகடை, முத்துப்பட்டன் உடலுக்கு சிதை  மூட்டினான். அப்போது பொம்மியும், திம்மியும் குளித்து முடித்து அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு பூஜை நடத்தப்பட்டது. வேதனை  மிகுதியால், அவர்கள் தம்மையறியாமல் ஓலமிட்டனர். பிறகு அதே வேகத்தில் தீக்குள் பாய்ந்தனர். மரண ஓலத்துடன் அவர்கள் ஆன்மா, முத்துப்பட்டனோடு  கலந்தது. அந்த மூவரும் தெய்வமாக நின்று சொரிமுத்தய்யன் கோயிலில் தனிச்சந்நதி கொண்டு மக்களுக்கு அருள்புரிந்து வருகின்றனர்.

முத்துப்பட்டன் சுவாமிக்கு புதிய செருப்புகள் வாங்கி பக்தர்கள் காணிக்கை செலுத்துகின்றனர். இதில் அதிசயம் என்னவென்றால், அந்த செருப்புகள் அடுத்த ஆண்டு  தேய்ந்து போயிருக்கும்! முத்துப்பட்டனே செருப்பை பயன்படுத்துவதாக பக்தர்கள் நம்புகின்றனர். பொம்மியும், திம்மியும் தீக்குழி இறங்குவதை நினைவூட்டும்  வகையில் சொரிமுத்தய்யன் கோயிலில் நடைபெறும் தீக்குழி விழாவில் தீக்குண்டம் இறங்கும் பக்தர்கள், ஆடி மாத விழாவின் போது ராஜ தர்பாரில் இருக்கும்  சிங்கம்பட்டி ஜமீன்தாரிடம் அனுமதி பெற்று பக்தர்கள் இறங்குகின்றனர். அவ்வாறு தீ குண்டம் இறங்கும் பக்தர்கள் இதனால் தீவினை அகன்று நன்மை  விளைகிறது என்கிறார்கள்.

படங்கள்: முத்தாலங்குறிச்சி காமராசு
சு.இளம் கலைமாறன்

Tags : Temple ,
× RELATED திருப்பதி கோவில் குறித்து...