×

சமந்தா தந்தை திடீர் மரணம்

சென்னை: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு, உடல்நலக்குறைவு காரணமாக நேற்று திடீரென்று மரணம் அடைந்தார். இதையடுத்து தனது தந்தை குறித்து சமந்தா வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு வைரலாகி வருகிறது. தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி, இந்தியிலும் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களில் சமந்தா நடித்து வருகிறார். இந்நிலையில், தனது தந்தை ஜோசப் பிரபுவின் மறைவுச்செய்தியை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் பகிர்ந்துள்ளார்.

அதில், ‘அப்பா, உங்களை மீண்டும் சந்திக்கும் வரை’ என்று, உடைந்த ஒரு இதயத்தின் எமோஜியுடன் பதிவிட்டு, தனது ஆழமான சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார். சென்னையில் பிறந்த சமந்தாவின் தந்தை தெலுங்கு ஆங்கிலோ-இந்தியர். சமந்தாவின் வளர்ப்பில் அதிக பங்கு வகித்தார். தனது திரைப்பயணத்துக்கு குடும்பத்தினர் அளித்து வரும் ஆதரவு குறித்து சமந்தா அடிக்கடி பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் சமந்தா அளித்திருந்த ஒரு பேட்டியில், தனது தந்தை பல இந்திய பெற்றோரைப் போலவே தன்னைப் பெரிதும் பாதுகாத்து வந்ததாகவும், இந்திய கல்வியின் தரத்தால்தான் தனக்கு கல்வியில் சிறந்த மதிப்பெண்கள் கிடைத்ததாக தந்தை சொன்னதாகவும் குறிப்பிட்டிருந்தார். தந்தையை இழந்த சமந்தாவுக்கு அவரது ரசிகர்கள், நெட்டிசன்கள் மற்றும் திரையுலகினர் ஆறுதல் கூறி கமென்ட் வெளியிட்டு வருகின்றனர்.

Tags : Samantha ,Chennai ,Joseph Prabhu ,
× RELATED என்னை செகண்ட் ஹேண்ட் என்றார்கள்: சமந்தா கண்ணீர்