×

கோபம், ஆத்திரம், அகங்காரம் ஏன்? எப்படி?

பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் பல்வேறு வகையான குணாதிசயங்கள் உண்டு. இதை நவரசங்களாக பகுப்பார்கள் இன்பம், நகைச்சுவை, கருணை, அற்புதம்,  சாந்தம், அருவறுப்பு, பயம், வீரம், கோபம் இது சராசரியாக எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் ஒர் கலவையான குணங்களாகும். நேரம், காலம், சூழ்நிலை,  சந்தர்ப்பம், பிரச்னைகள், வயது இவைகளுக்கேற்ப ஒருவரின் மனநிலையில் மாற்றங்கள் உண்டாகிறது. இந்த குண அமைப்புக்களில் கோபம் என்பது  இயற்கையான ஒர் அம்சமாகும்.

எது இருக்கிறதோ இல்லையோ இந்த கோபம், முன்கோபம், வாதம், பிடிவாதம், தர்க்கவாதம், ஆவேசம், மூர்க்கத்தனம், காழ்ப்புணர்ச்சி, அதீத வெறுப்பு, ஆத்திரம்,  ஆணவம், கர்வம், உணர்ச்சி வசப்படுதல், எதேச் சதிகாரம், கல்நெஞ்சம், என இன்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. கோபம் மனிதர்களுக்கிடையே  தோன்றும் ஒர் அசாதாரண உணர்ச்சியாகும். இந்த உணர்ச்சி குழந்தைப் பருவத்தில் இருந்தே ஒருவரை ஆக்கிரமித்துக் கொள்கிறது. இதன் வேகம், அளவு, எல்லை  மீறும் போது தான் இந்த ஆத்திரம் பல பிரச்னைகளை உண்டாக்குகிறது.

வெறுப்பு,கோபம் ஒருவரை மெல்ல, மெல்ல ஆக்கிரமித்து தன் நிலை, தன்வசம் இழக்கச் செய்து உள்ளத்திலும், உடலிலும். நடத்தையிலும் பல மாற்றங்களை  ஏற்படுத்தக் கூடியது. இந்த குணம் ஒருவரின் குடும்பத்தையும், வாழ்க்கையையும், உடல் நலத்தையும் பாதித்து நண்பர்கள். உற்றார், உறவினர்கள் மற்றும்  சமூகத்தில் கெட்ட பெயரை உண்டாக்குகிறது. அதிக  அளவிலான ஆணவம் மன இறுக்கத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி அதன் விளைவாக  அட்ரினலின் என்ற திரவத்தை அதிகம் சுரக்கச் செய்து படபடப்பு, வேகமான இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் என தொடங்கி உடல் நலத்தை பாதிப்படையச்  செய்கிறது.

கோபத்தை வேத, ஜோதிட சாஸ்திரம் நான்கு வகையாக பிரிக்கிறது. உத்தமம், மத்திமம், அதமம், கர்வம் அல்லது அஹோராத்ரம் என்று பிரிவுகள் உள்ளன.  சாதாரணமாக கோபித்துக் கொள்வது உத்தம வகை இது சில நிமிடங்கள் நீடிக்கும். மத்திம வகையான கோபம் இரண்டு கடிகை அதாவது சுமாராக ஒரு மணி  நேரம் இருக்கும். அதம வகை கோபம். ஒரு நாள் வரை வந்து வந்து போகும். கடைசியாக கர்வ வகை தான் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவது.  இந்த கடைசி வகை கோபம் தான் கருவிக் கொண்டே இருப்பது.

இந்த வகையான ஆத்திரத்தில் இருந்து பிறக்கும் பல தீய குணங்கள், வன்செயல், வெட்டு குத்து, அவதூறு, தீய எண்ணங்கள், வருத்தம், பொறாமை, வஞ்சம்,  சூழ்ச்சி, பொருட்களை அழித்தல் என ஒரு விதமான ஆங்கார, அகங்கார , அஹோராத்ர குணம் இருக்கும். இந்த வகையான கோபம்தான் வாழ்க்கையில் பல்வேறு  விதமான பிரச்னைகள், சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இந்த குணம் பல வகைகளில் நமக்கு உண்டாகிறது.

பரம்பரையாக வருவது, வம்சாவளி, மரபணு என இந்த பிடிவாதம். ஒருவரை பிடித்து ஆட்டுகிறது. சாஸ்திரத்தில் முன் ஜென்மத்தின் தொடர்ச்சியாகவும்  இருக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இதற்கெல்லாம் மேலாக அவரவர்களின் ஜாதக அமைப்பு, லக்னம், ராசி, பிறந்த தேதி, விதி எண், கூட்டு எண்,  நட்சத்திரம், கிரக சேர்க்கை, பார்வை, பரிவர்த்தனை, நீசம் போன்ற ஜோதிட சாஸ்திர அமைப்புக்களே காரணமாக இருக்கிறது என்பது அனுபவ பூர்வமாக  தெளிவாகத் தெரிய வருகிறது.

ஜாதக அமைப்பு

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதைத் தொட்டு, இதைத் தொட்டு அங்கு சுத்தி, இங்கு சுத்தி கடைசியாக எல்லோரும் வந்து நிற்கும் இடம் ஜாதகம், கிரக  பெயர்ச்சி, தசாபுக்தி. இது வெறும் நம்பிக்கை மட்டும் அல்ல,  காலம் காலமாக அனுபவ பூர்வமாக ஜாதகத்தில் உள்ள கிரக அம்சத்தின் படி எல்லா விஷயங்களும்  நடைபெறுவதே முக்கிய மூல காரணமாகும். இந்த ஆணவம், கோபம் போன்ற குணங்கள் எல்லாம். ஏதோ ஒரு கிரகம் அல்லது ஒரு லக்னம், ராசி இதை வைத்து  வந்து  விடுவதில்லை. பல விஷயங்களின் சேர்க்கை, பார்வை கிரக சார அமைப்புக்களின் மூலம் தான் இந்த குணா திசியங்கள் வெளிப்படுகின்றன.
    
ஒருவரின் பிடிவாத குணம், கோபாவேசம் போன்றவற்றிற்கெல்லாம் . நாம் முதலில் லக்னத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ராசிக் கட்டத்தில் உள்ள லக்னமும்,  நவாம்ச கட்டத்தில் உள்ள லக்னமும். இந்த இரண்டையும் பார்ப்பது மிகவும் அவசியம். ஏன் என்றால் இந்த லக்னம் தான் ஒரு ஜாதகத்தை இயக்கும் இடம்.  லக்னம், லக்னாதிபதி இந்த இரண்டு விஷயங்கள் ஒருவரின் உண்மை நிலையை தெரிவிக்கும் இடம். எந்த லக்னமாக இருந்தாலும். அந்த லக்னத்தில் நீச கிரகம்  இருந்தால் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக, அடாவடியாக, அதிகார தோரணையுடன் பேசுவர்களாக இருப்பார்கள்.

லக்னத்தில் வக்கிர கிரகம் இருந்தால் சொல் ஒன்று செயல் வேறாக இருக்கும். நம்பகத் தன்மை இல்லாதவராக நாணயம் அற்றவராக கடுஞ் சொற்கள் பேசுபவராக  இருப்பார்கள். இந்த வக்கிர கிரக அமைப்பு லக்னத்தைப் பார்த்தாலும் இதே நிலை தான். லக்னத்திற்கு ஆறு, எட்டுக்கிடையே கிரகம் லக்னத்தில் இருந்தாலும்,  லக்னத்தை பார்த்தாலும் தான் சொல்வதுதான் சரி என்று சாதிப்பார்கள். தவறாக பேசுகிறோம் என்று உணர்ந்தாலும் கூட பிடிவாத போக்கை கைவிட மாட்டார்கள்.  எடுத்தெறிந்து பேசுவதே இவர்களின் குண விசேஷமாகும். இதனால் எல்லா நிலைகளிலும் இவர்களுக்கு எதிரிகள் அதிகமாக இருப்பார்கள்.

இதே போல் லக்னம் ஆறாம் அதிபதி. அல்லது எட்டாம் அதிபதி சாரத்தில் இருந்தால். எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை கணிக்க முடியாது.  மூக்கின் மேல் கோபம் என்று சொல்வார்கள் அந்தளவிற்கு முரட்டு சினம் இவர்களை சீரழிக்கும். குடும்பத்திலும் சரி நண்பர்கள் வட்டாரங்களிலும் இவர்கள் பழைய  முடிந்து போன விஷயங்கள் பிரச்னைகளை நினைவில் வைத்துக் கொண்டு சமயம் வரும் போது ஆத்திரத்தைக் காட்டுவார்கள்.

அடுத்து லக்னாதிபதி என்ற கிரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. லக்னாதிபதி எந்த கிரகமாக இருந்தாலும். 6,8,12 க்குடைய கிரகங்களுடன் சேர்ந்து இருந்தால்  ஆவேசம், தர்க்கவாதத்தில் ஈடுபடுவார்கள். லக்னாதிபதி நீசமாக இருந்தாலும், நீசகிரகத்துடன் சேர்ந்து இருந்தாலும். இந்த கோபத்தினால் பல பிரச்னைகளை  சந்திப்பார்கள். நல்ல வாய்ப்புக்களும் இந்த குணம் காரணமாக கை நழுவிப்போகும்.

லக்னாதிபதியும், சந்திரனும் சரியாக அமையாமல் இருந்தால் அதாவது நீச பார்வை, சேர்க்கை என இருந்தால் அவர்களை அறியாமலேயே தான் என்ன  பேசுகிறோம் என்று தெரியாமலேயே ஆவேசமாகப் பேசுவார்கள். இதனால் வேலை செய்யும் இடங்களிலும், பொது இடங்களிலும் இவர்களுக்கு கெட்ட பெயர்  ஏற்பட்டுவிடும். பொதுவாக நாம் நினைப்பது நடக்காமல் போகும் போதுதான் மனம் தன் நிலையை இழக்கிறது. மற்றவர்கள் நம் கருத்துக்கு எதிராக பேசும் போது  ஆத்திரம் வருகிறது. இது ஒரு எல்லையை மீறும் போது அடிதடி, வெட்டு குத்து. ரத்த காயங்கள், போலீஸ், கோர்ட் என வாழ்க்கை பாதையே மாறிப்போகிறது.  மரணம் கூட நிகழ்ந்துவிடுகிறது.

இரண்டு - ஆறு - எட்டு

இரண்டாம் இடம் என்பது தனம், வாக்கு, குடும்பம், நேத்திரம் என நம் வாழ்க்கையின். முக்கிய விஷயங்களை வெளிப்படுத்தும் இடமாகும். அடுத்தது ஆறாம் இடம்  இது ருணம், ரோகம், சத்ரு போன்ற பல விவகாரங்கள் அடங்கியுள்ளது இடம். எட்டாம் இடம் என்பது முக்கியமான மறைவு ஸ்தானம் ஆயுள் ஸ்தானம்,  மாங்கல்ய ஸ்தானம். இதில் இந்த இரண்டுக்கும், எட்டிற்கும் நேரடியான சமசப்தம பார்வை உள்ள அமைப்பாகும். இந்த ஸ்தானத்தில் எந்த கிரகம் இருந்தாலும்  ஒன்றை மற்றொன்று பார்க்கும் அமைப்பு ஏற்படுகிறது.

இந்த இடத்தில் நீசக்கிரகம் இருக்கும் போது எடுத்தெறிந்து பேசுகின்ற குணம் இயல்பாகவே வந்து விடுகிறது. தான்  என்ற ஆணவம் உண்டாகிறது. எட்டாம்  இடத்து கிரகங்களால் மனதில் தீய எண்ணங்கள் பொறாமை, இயலாமை, ஒருவிதமான உணர்ச்சி வசப்பட்ட நிலை உண்டாகிறது. இந்த அமைப்பு பெண்களுக்கு  அவர்கள் ஜாதகங்களில் அமையும் போது குடும்ப உறவுகளிடையே கருத்து வேறுபாடுகள், ஒத்துப் போகாத தன்மைகள் உண்டாகிறது. எப்பெழுதும் ஒரு  படபடப்புடன் காணப்படுவார்கள்.

இதில் சந்திரன், புதன் நீசமாக இருந்தால் வாழ்க்கையே கேள்விக் குறியாகி விடும். ஒரு விஷயத்தை சொல்லத் தெரியாமல், பேசத் தெரியாமல் ஒன்றிற்கு ஒன்று  முரண்பாடாகப் பேசப் போய் வீண் பிரச்னைகள், வம்புகள், சவால்கள் என்று ஏற்பட்டு கோபாவேசம் காரணமாக சுமுகமாக நல்ல முறையில் முடிய வேண்டிய  விஷயங்கள் நீயா, நானா என்ற அகங்கார நிலை காரணமாக வீண் வில்லங்களில் போய் நிற்கிறது. இதைத்தான் அனுபவ மிக்கவர்கள் கிரகச்சாரம் என்று  பெயரிட்டு அழைக்கிறார்கள்.

ஐந்தாம் இடம் - ஏழாம் இடம்

ஐந்தாம் இடம் என்பது ஜாதகத்தில் மிக முக்கிய ஸ்தானமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் சொல்வார்கள். ஒருவர் வாழ்க்கையில் சந்திக்கின்ற பல  முக்கியமான பிரச்னைகள், இன்ப துன்பங்கள், லாப நஷ்டங்கள், விரக்தி, சந்தோஷம் என எல்லாவற்றுக்கும் இந்த ஸ்தானமே காரணமாக இருக்கிறது. கர்மவினை,  பூர்வ ஜென்ம வாசனை தொடர்பு எல்லாம் இங்கு இருந்து தான் வெளிப்படுகின்றது. சிந்தனை, புத்தி, அறிவு , ஞானம் போன்ற பல விஷயங்கள் இந்த ஐந்தாம்  இடத்திற்கு உரியதாகும். இந்த ஸ்தானம் பலவீனமாக இருந்தாலும், இந்த ஸ்தானத்திற்குரிய கிரகம் பலவீனமாக இருந்தாலும். நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம்,  விட்ட குறைதொட்ட குைற நம்மைத் தொடர்கிறது என்று.
    
இந்த 5 ஆம் இடம், 5ஆம் அதிபதி நீசம் அடைந்தாலும், ராகு, கேது சம்மந்தம் ஏற்பட்டாலும். 6, 8, 12 க்கு குடையவர்களின் சேர்க்கை பார்வை பெற்றாலும்  அதீதமான சிந்தனைகள் தோன்றும். மனம் அமைதியில்லாமல் இருக்கும். யார் மீதோ உள்ள கோபத்தை யார் மீதோ காட்டுவார்கள். விரக்தி வெறுப்பு காரணமாக  அடிக்கடி உணர்ச்சி வசப்படுவார்கள். பிள்ளைகள் மற்றும் சொந்த பந்தங்களின் பிரச்னைகள் காரணமாக எதையாவது பிதற்றிக் கொண்டே இருப்பார்கள். இந்த  இடத்தில் இருந்து எழும் கோபம் அடிக்கடி தோன்றி மறையும். இதனால் மனம், மூளை, உடல் நலம் பாதிப்பு காட்டும்.  
     
ஏழாம் இடம் என்பது வாழ்்க்கையின் இல்லறத்தைக் குறிப்பதாகும். இதற்கும் லக்னத்திற்கும் சம சப்தம பார்வைத் தொடர்பு உண்டு. லக்னத்தில் இருக்கும் தீய,  நீச கிரகங்கள் ஏழாம் இடத்தையும் பாதிக்கும். இந்த இடம் சற்று கூடுதலான உணர்ச்சி வசப்படக் கூடிய இடம். 7ஆம் இடத்தில் நீசக் கிரகம் 6,8,12க்குரிய கிரகங்கள்  இருந்தால் அமைதியற்று காணப் படுவார்கள். சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் மூக்கின் மேல் கோபம் வரும். கணவன், மனைவிக்கிடையே மனக்கசப்பு,  வார்த்தைப் போர் என்பது சர்வ சாதாரணமாக நடைபெறுகின்ற விஷயமாக இருக்கும்.

இந்த மூர்க்கத்தனம் காரணமாக உறவுகளிடையே அடிக்கடி பகை, கோபதாபங்கள், ஒத்து வராத சூழ்நிலைகள் உண்டாகும். இவர்களிடம் யாரும் நல்ல நீடித்த  நட்பை வளர்த்துக் கொள்ள முடியாது. நான், தான் என்ற அகங்காரம் முன் நிற்கும். ஆகையால் நண்பர்களிடையே பிரச்னைகள் வரும். அந்தந்த  சூழ்நிலைகளுக்கேற்ப  அடிதடி, வெட்டுக்குத்து என்று முடியும். இந்த இடம் மாரக ஸ்தானம் என்பதால் இந்த ஆத்திரம், கோபம் கண்ணை மறைக்கும். ஆகையால்  தங்களை கட்டுப்படுத்த முடியாமல் வன்முறை, கொடுஞ் செயல்களில் இறங்குவார்கள் . இதனால் உடலில் வெட்டுக்கள், அங்கஹீனம், அகால மரணம் போன்றவை நிகழும்.

ராகு - கேது - செவ்வாய்

ராகு, கேது, செவ்வாய் இந்த மூன்று கிரகங்கள்தான் எல்லா விதமான மூர்க்கத்தனத்திற்கும், முரட்டு தைரியத்திற்கும் காரணமாக இருக்கின்றன. இந்த மூன்று  கிரகங்களும் ஒன்றிக்கு ஒன்று தொடர்பு பெற்றோ, தனியாகவோ இருந்தால் இருக்கும் வீடு, ராசியை பொறுத்து பலன்கள் அமையும். பொதுவாக செவ்வாய் உக்கிர  கிரகம், ரத்த சம்பந்தமான கிரகம், உணர்ச்சிகளை தூண்டக் கூடியவர். மொத்தத்தில் இந்த ஆத்திரம், கோபம், வெறிச் செயல்களுக்கு காரணகர்த்தாவாவார்.

ஜாதகத்தில் திருமணப் பொருத்தம் பார்க்கும் போது பொதுவாக நட்சத்திரப் பொருத்தம் பார்த்து விட்டு, ராகு கேது தோஷம், செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்று  பார்ப்பார்கள். ஏன் என்றால் இதுதான் பொருத்தத்தில் முக்கியமான விஷயம். ஜாதக கட்டத்தில் லக்னத்தில் ராகு, ஏழில் கேது. இரண்டில் ராகு எட்டில் கேது. இந்த  அமைப்பு சர்ப்ப தோஷம் என்று சொல்லப்படுகிறது. இந்த தோஷம் இருப்பவர்கள் அதிக ஆத்திரம் உடையவர்களாக இருப்பார்கள். லக்னம், இரண்டு, ஏழு, எட்டு  ஆகிய ஸ்தானங்கள் பாதிக்கப்படுவதால் முன்கோபம், ஆவேசம், முரட்டு பிடிவாதம் இருக்கும். இதனால் கணவன், மனைவி மற்றும் குடும்பத்தில் எப்பொழுதும்  ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவும். இந்த எதிர் மறையான மூர்க்கத்தனம் தான் வாழ்க்கையில் பிரச்னைகளை ஏற்படுத்தி. பிரிவு, வழக்கு, விவாகரத்து என்று  முடிகிறது.

செவ்வாய் தோஷம் என்பது லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12ல் இருந்தால் செவ்வாய் தோஷம். இந்த செவ்வாய் தோஷம் ஏற்படுத்தும் இடங்களைப் பார்த்தாலே  தெரியும், இது வாழ்க்கை, வாழ்வாதாரத்தோடு தொடர்புடையது என்று. இரண்டில் உள்ள செவ்வாய் வீண் விதண்டா வாதத்தை ஏற்படுத்தி குடும்ப நிம்மதியைக்  கெடுப்பார். நான்கில் உள்ள செவ்வாயின் பார்வை காரணமாக பகை உணர்ச்சி அதிகரிக்கும். ஏழு, எட்டு, பனிரெண்டாம் இடத்து செவ்வாய்தான் அதிக வீரியமுள்ள  சுபாவத்தை வெளிப்படுத்துவார். கணவன் மனைவிக்கிடையே உடல் ரீதியாக, மன ரீதியாக ஒத்துப் போகாத தன்மைகள் உண்டாகும்.

தாம்பத்திய உறவில் சிக்கல்கள், இயலாமை, உஷ்ண ஆதிக்கம் காரணமாக என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்று தெரியாத நிலையில் ஒருவரின் மனோ  நிலை இருக்கும். இந்த 7ஆம் இடம், 8ஆம் இடத்து செவ்வாயால்தான் குடும்பம் மற்றும் உறவுகள், வெளிவட்டார நண்பர்களிடைேய பிரச்னைகள் தகராறுகள்,  சண்டைகள், வழக்குகள். எல்லாம் வருவதற்கு காரணம். இதனால் தான் இந்த கோப, ஆத்திரத்தை சமன் செய்யும் வகையில் ஆண், பெண் என்ற தோஷ  ஜாதகங்களை ஒன்றாக சேர்த்தார்கள். பொதுவாக லக்னம், இரண்டு, ஏழு, எட்டாம் இடம், அதில் உள்ள வீரியமிக்க கிரகங்களால் தான் இந்த முரட்டு  கோபாசவேசமான குணங்கள் ஏற்படுகின்றது.

ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

Tags :
× RELATED ALP ஜோதிடம் ஓர் அறிமுகம்