×

வெற்றி தருவாள் கொற்றவை நல்லாள்

தமிழர் தம் வாழ்வியலை நிலங்களை அடிப்படையாக வைத்துப் பிரித்தனர். அவ்வகையில் தமிழ் நிலம் ஐந்நிலமாகப் பிரிக்கப் பெற்றது. அவை முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பனவாகும்.அவற்றுள் குறிஞ்சிக்குரிய  கடவுளாக முருகனும் முல்லைக்குரிய கடவுளாகத் திருமாலும் மருதத்திற்குரிய கடவுளாக இந்திரனும் நெய்தலுக்குரிய கடவுளாக வருணனும் குறிக்கப்படுகின்றனர். இத்தகைய அமைப்பு முறையில் ‘கொற்றவை’ பாலை நிலத்திற்குரிய  கடவுளாகச் சுட்டப்படுகிறாள். மறவர்கள், எயினர்கள் எனப்பெறும் இருபெரும் பிரிவினர்கள் கொற்றவையைத் தெய்வமெனப் போற்றியதாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. தொல்காப்பியம் பாலை நிலத்தின் கடவுளாகக் கொற்றவையை  வெளிப்படக் குறிக்கவில்லை எனினும், புறத்திணையில் ஒருதுறையாய்க் கொற்றவைநிலை என்பதனைப் படைத்துக் காட்டுகிறது.
 
‘‘மறங்கடை கூட்டிய குடிநிலை சிறந்தகொற்றவை நிலையும் அத்திணைப் புறனே’’
- என்பது தொல்காப்பியம். மாற்றாருடன் போருக்குச் செல்லும் வீரர்கள் வெற்றி வேண்டி வணங்கிச் செல்லும் நிலையே ‘கொற்றவை நிலை’ என்பதாகும். திருமுருகாற்றுப்படை கொற்றவையை முருகனின் தாயாகக் குறிப்பிடுகிறது.
 
‘‘வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவவிழையணி சிறப்பிற் பழையோள் குழவி’’
‘வென்றி வெல்போர்க் கொற்றவை’ என்று குறிக்கப்படுவதால் கொற்றவை போர்க் களத்தில் வெற்றியைத் தருபவள் என்பதும் ‘பழையோள்’ எனக் குறிக்கப்படுவதால் தமிழ்த் தெய்வங்களுள் கொற்றவையே தொன்மைக் கடவுள் என்பதும்  தெரியவருகிறது. இதனை உறுதி செய்வதுபோல் தக்கயாகப் பரணி என்னும் நூல் கொற்றவையைத் ‘தொல்லைநாயகி’ (தொன்மை நாயகி) என்று குறிப்பிடுகிறது. முருகனின் தாய் எனக் கொற்றவை குறிக்கப்படுதலால் கொற்றவை குறிஞ்சி நிலக்  கடவுளாய் இருந்து பாலை நிலக் கடவுளாய் மாறியிருக்கிறாள் என்பது தெரியவருகிறது.

தொல்காப்பியர் ‘வெட்சி தானே குறிஞ்சியது புறனே’ என்ற நூற்பாவில் மலை சார்ந்த பகுதி அகத்திணையில் குறிஞ்சியாகவும் புறத்திணையில்;   வெட்சியாகவும் இருந்ததெனக் குறிப்பிடுகிறார். புறத்திணையாகிய வெட்சியின் கடவுள்  கொற்றவை ஆவாள். தொல்காப்பியத்தின் இந்நூற்பாவிற்கு உரையெழுதும் இளம் பூரணர் கொற்றவை நிலை என்றதனாலே, குறிஞ்சிக்கு முருகவேளேயன்றிக் கொற்றவையும் தெய்வம் என்பது பெற்றாம் என்று குறிப்பார். நச்சினார்க்கினியரோ, ‘வருகின்ற வஞ்சிக்கும்  கொற்றவை நிலை காரணமாயிற்று, தோற்றோர்க்குக் கொற்றம் வேண்டியும் வென்றோர்க்கும் மேற் செல்லுங்காற் கொற்றம் வேண்டியும் வழிபடுவராதலின்’ என்று விளக்கம் கூறுவார்.எனவே, தொல்காப்பியத்தின் வழியும் அதற்கான உரைகளின் அடிப்படையிலும் கொற்றவை குறிஞ்சி நிலத்திற்குரிய கடவுளாக விளங்கியமையை அறிய முடிகிறது. ஆனால், பிற்காலத்துத் தோற்றம் பெற்ற இலக்கண நூல்களும்,  இலக்கியங்களும் பரணி போலும் சிற்றிலக்கியங்களும் கொற்றவையைப் பாலை நிலக் கடவுளாகவே காட்டுகின்றன.

முல்லையும் குறிஞ்சியும் கோடைகாலத்து தன் இயல்பில் திரிதலால் தோன்றும் நிலமே பாலை என்பதால் கொற்றவை குறிஞ்சி நிலக்கடவுளாய் இருந்து பின் பாலைநிலக்கடவுளாய் மாறி அமைந்திருக்கலாம். மேலும், கொற்றவை முல்லை  நிலக் கடவுளாகிய திருமாலின் தங்கை எனப் பிற்காலத்து சுட்டப்படுவதை நினைவு கொள்ளல் சிறப்புடைத்தாம்.ஆயினும், திருமுருகாற்றுப்படைக்கு முந்திய சங்க இலக்கியங்களுள் கொற்றவை என்ற சொல்லாடல் இல்லை. எனினும் திருமுருகாற்றுப்படை செய்தியோடு ஒத்த தன்மையுடையதாய்ப் பெரும்பாணாற்றுப்படையில் காணப்படும் சூரனைக்  கொன்ற முருகனைப் பெற்ற வயிற்றினையும், பேய்களாடும் துணங்கைக் கூத்தையும் அழகையும் உடைய செல்வி என்னும் பொருளைத் தரும்படியான, ‘கடுஞ்சூர் கொன்ற பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத் துணங்கைஅம் செல்வி’ என்னும்  தொடர் கொற்றவையையே குறிக்கிறது என்பதில் ஐயமில்லை. கலித்தொகையில் வரும் தலைவன் தன்னிடம் கூறும் ஏமாற்று வார்த்தைகள் பெருங்காட்டுக் கொற்றியே பேய், அந்தப் பேய்க்கு பேய் பிடித்தது என்று சொல்வது போல் உள்ளது எனத் தலைவி குறிப்பிடுகிறாள். இதனைக் குறிக்கும் பாடல் அடி,
 
“பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு”
 
என்பது ஆகும். கொற்றவை காட்டினை விரும்பி உறைபவள் ஆவாள். எனவே அகநானூறு “ஓங்குபுகழ் கானமர் செல்வி” எனக் குறிப்பிடுவது கொற்றவையையே எனத் துணியலாம். குறுந்தொகை “விறல் கெழு சூலி” எனவும், பதிற்றுப்பத்து “உருகெழு மரபின் அயிரை எனவும் குறிப்பதும் கொற்றவையையே ஆகும். அயிரை என்னும் கொற்றவை இருந்த இடம்  என்பதாலே இம்மலை அயிரை மலை எனப்பட்டது. இளஞ்சேரல் இரும்பொறையின் முன்னோனாகிய பல்யானைச் செல்கெழுகுட்டுவன் புலவுச்சோறு தந்து அயிரை தெய்வத்தை வழிபட்டான் என்பதனை,குருவி விதிர்த்த குவுவுச் சோற்றுக் குன்றோடுஉருகெழ மரபின் அயிரை பரைஇ
 
- எனப் பதிற்றுப் பத்து குறிப்பிடுகிறது. அவ்வாறு இவ்வரசன் கொற்றவையாகிய அயிரையை வணங்கியபொழுது திங்களைச் சுற்றியிருக்கும் விண்மீன்போல அரசனுடைய சுற்றத்தார் குழுமியிருந்தனர் என்பதனை...பல்மீன் நாப்பண் திங்கள் போல
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலைஉருகெழு மரபின் அயிரை பரவியும்

 - என்னும் பதிற்றுப்பத்தின் அடிகள் விளக்கிடும். இதன் வழி சேரர் மரபினர் வழிவழியாகத் தொழுது பரவும் தெய்வமாய்க் கொற்றவை விளங்கியிருக்கிறாள் என்பது தெரியவரும்.

பரிபாடலில் தைந்நீராடும் பெண் ஒருத்தி தன் காதில் நீலமலரைச் சூடிக் கொண்டு வேறொருத்தியை நோக்குகின்றாள். அவளோ தன் காதில் அசோகந்தளிரைச் சூடிக்கொண்டாள். அந்த அசோகந்தளிரின் ஒளியால் அந்நீலமலர் இளவெயில்  தழுவியது போலாயிற்று; அப்பொழுது அசோகு சூடியவள் நீலஞ் சூடியவளை நோக்கி, இவள் தன் காதுகளில் நீலமலர்சூடி இப்பொழுது நான்கு விழி படைத்தாள் என்று கூறுகின்றாள். மேலும், அவள் உருவம் கொற்றவை போன்று தோன்றும்  பொருட்டு அவளுடைய நெற்றியில் கனல் விழிபோல ஒரு திலகமிட்டாள் எனவும் குறிக்கின்றாள்.
 
இவள்செரீஇ நான்கு விழிபடைத் தாளென்று நெற்றி விழியா நிறைத்திலக மிட்டாளே கொற்றவைகோ லங்கொண்டோர் பெண் மேற்கண்ட பரிபாடல் அக்காலத்துப் பெண்கள் கொற்றவைபோல் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் ஆர்வம் உடையவர்களாய் இருந்தனர் என்பதைத் தெரிவிக்கிறது. இவ்வாறு தமிழ் இலக்கியங்களில் கொற்றவை பற்றிய குறிப்புகள்  காணப்பட்டாலும் தமிழின் முதற் காப்பியமாகிய சிலப்பதிகாரமே கொற்றவை பற்றிய தெளிவான செய்திகளைத் தருகின்றது. சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்தில் காடுகாண் காதை கொற்றவைக்குக் கோயில் இருந்தது என்கிற செய்தியைப்  பதிவு செய்கின்றது.சிலப்பதிகாரத்தில் ஐயை, கார்த்திகை என்ற பெயர்களுடைய பெண்களும் காட்சி தருகின்றனர். அவை துர்க்கையின் பெயர் என்பது
குறிப்பிடத்தக்கது.   மதுரை நகருக்கு கவுந்தியடிகளுடன் நடந்து வந்த கண்ணகியும் கோவலனும் முதலில் ஒரு கொற்றவை கோவிலில்தான் தங்குகின்றனர். இதனை,
 
“விழிநுதற் குமரி, விண்ணோர் பாவை,மையறு சிறப்பின் வான நாடிஐயை தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு  என்ரூஙரழவ்’’
 
- என்ற சிலப்பதிகார அடிகள் உணர்த்தும்.

கொற்றவையின் தோற்றம் கொற்றவையின் தோற்றத்தினைச் சிலப்பதிகாரம் விரித்துப் பேசுகிறது. மறவர்கள் வில்லையேந்திப் பகைவரிடத்துச் செல்லும்போது அவர்களுக்கு வெற்றியைக் கொடுப்பவளும் அவர்கள் தரும் அவிப்பலியை விரும்பி ஏற்பவளும் ஆகிய  கொற்றவை, சந்திரப்பிறை சூடிய தலை, நெற்றிக் கண், பவள வாய், முத்துப் போன்ற சிரிப்பு, நஞ்சுண்ட கறுத்த கழுத்து, பாம்பையே கயிறாகக் கொண்டு மேரு மலையை வில்லாக வளைத்த வில்லி, துளை அமைந்த பல்லுடைய விஷப்  பாம்பையே கச்சு ஆக அணிந்த மார்பு, வளைகள் அணிந்த கையில் சூலம், யானைத்தோல் போர்வை, புலித்தோல் மேகலை, இடப்புற காலில் சிலம்பு, வலப்புறக் காலில் கழல், வெற்றி கொடுக்கும் வாள் ஏந்திய கை, எருமைக்கடாவின் தலையில்  நிற்பவள், எல்லோரும் தொழும் குமரி, கறுப்பி, போரின் அதிதேவதை, சூலம் ஏந்திய பெண், நீல நிறத்தவள், எம் தலைவி, செய்யவள், தடக்கையில் கொடிய வாளேந்திய நங்கை, பாயும் மான் மீது ஏறி வருபவள், மலைமகள், கலைமகள், திருமகளின்  உருவம், இளங்குமரி என்பன போன்ற தோற்றப்பொலிவினைக் கொண்டவளாய் இருப்பாள் என்று சிலப்பதிகாரம் நமக்கு அடையாளம் காட்டுகிறது.

கொற்றவைக்கு மான் வாகனம் என்ற குறிப்பு சிலம்பில் வருகிறது. பிற்காலத்தில் நால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தரும் மான் வாகன தேவியை ‘கலையதூர்தி’ என்று தன் பதிகத்தில் பதிவு செய்கிறார். ஆனால் சிங்கத்தின் மீதும்,  புலியின் மீதும் காட்சி தரும் தற்கால துர்க்கை, மான் வாகனத்தில் அமர்ந்த காட்சி எங்கேயும் காணக் கிடைக்கவில்லை; இளங்கோ பாடிய சிலம்பிலிருந்து, சம்பந்தர் பாடிய தேவாரம் வரை காணப்படும் கொற்றவையின் மான் வாகன நிலை  ஞானசம்பந்தர் காலத்திற்குப் பிறகு வழக்கிழந்தது எனலாம். சிலப்பதிகாரத்தின் வழக்குரை காதையும் கொற்றவை பற்றிக் குறிப்பிடுகிறது. தென்னவனாகிய பாண்டியனால் கோவலன் கொலைக் குற்றம் சாட்டப்பெற்று கொலைக்களத்தில் கொல்லப்பட்டான் என்பதனைத் தெரிந்து கண்ணகி நியாயம் வேண்டி இணையரிச் சிலம்பு ஒன்றினை ஏந்திய கையளாக மதுரை மாநகரின் வீதிகளில் நடந்து வந்து  மன்னவன் அரண்மனை வாயிலை அடைந்தாள்.

கண்ணகியின் தலைவிரி கோலத்தைக் கண்ட வாயிற்காப்போன், பாண்டிய மன்னனிடத்தில் சொல்லுகையில் வாசலில் வந்து நிற்கும் பெண் கொற்றவை அல்லள், காளி அல்லள், பிடாரி அல்லள் என்று பல பெண் தெய்வங்களின் பெயர்களை எல்லாம் குறித்துச் சொல்லுகிறான். இதனை, அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந்துணிப் பிடர்த்தலை பீடம் ஏறிய மடக்கொடி வெற்றிவேல் தடக்கை கொற்றவை அல்லள் அறுவர்க்கு இளையநங்கை இறைவனை ஆடல் கண்டு ஆருளிய அணங்கு சூர்உடைக் கானகம் உகந்த காளி, தாருகன் பேர் உரம் கிளித்த பெண்ணும் அல்லள்.- என்ற சிலப்பதிகார அடிகள் விளக்கி நிற்கின்றன. சிலப்பதிகாரத்தின் மேலும் சில அடிகள் கொற்றவை யானைத்தோல் போர்த்தி, புலியின் தோலினை உடுத்தி எருமைக் கருந்தலைமேல் நிற்பவள் என்று குறிப்பிடுகின்றன. இதனை, ஆனைத் தோல் போர்த்துப் புலியின் உரி உடுத்துக்கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால்—வானோர் வணங்க, மறைமேல் மறையாகி,ஞானக் கொழுந்தாய், நடுக்கு இன்றியே நிற்பாய்! - என்ற சிலப்பதிகார அடிகள் எடுத்துரைக்கும்.

இத்தகைய செய்தியானது தற்காலத்து வணங்கப்படும் மகிஷாசுரவர்த்தினி கொற்றவையே என்பதனை உறுதி செய்திடும்.புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலும் கொற்றவையின் தோற்றத்தினை விளக்கியுரைக்கும். இவள் சிங்கக் கொடியும், பசுங்கிளியும் ஏந்தியவள். கலைமானை வாகனமாக உடையவள். பேய்களைப் படையாகப் பெற்றவள். ஒளியோடு  வெற்றிமிக்க சூலப்படையை உயர்த்தியவள். எள்ளுருண்டை, பொரி, அவரை, மொச்சை இவற்றின் புழுக்கல், சுண்டல், அவல், நிணம், குருதி என்பவற்றால் நிறைந்த மண்டையை வலக்கையில் ஏந்தியவள். மறவன் ஒருவன் பகைவரின்  பசுக்கூட்டத்தைக் கவரக் கருதுவானாயின் அவனுக்கு அருளவும், பகைவர் தமது பகை நீங்கவும் முற்பட்டு வருவாள். அரசனொருவன் படையெடுக்கும்போது அவனது பகைவர் கெடுமாறும் முற்பட்டு வருவாள் என்பது அவ் இலக்கணநூலின்  வழித் தெரியலாகும் உண்மை ஆகும்.

கொற்றவையை வழிபடும் தன்மைகள்
 
 பாவை, கிளி, காட்டுக்கோழி, மயில், பந்து, கிழங்கு ஆகியவற்றைக் கொடுத்து மான் மீது கொற்றவையை உலாவரச் செய்வர். கொற்றவை உலாவின் பின்னால் வண்ணக் குழம்பு, சுண்ணப் பொடி, மணமுள்ள சந்தனம், அவரை, துவரை, எள்ளுருண்டை, இறைச்சியுடன் கூடிய சோறு, புகை முதலியவற்றைத் தாங்கியபடி பெண்கள் வருவர். வழிப்பறியின் போது கொட்டும் பறை, சூறையாடும்போது ஊதப்படும் சின்னம், கொம்பு, புல்லாங்குழல் என்பவை முன்னால்  இசைத்துக்கொண்டு வருவர் என கொற்றவைக்குரிய வழிபாட்டுப் பொருள்களைத் தருகிறது சிலப்பதிகாரம்.

பெண்ணுக்குக் கொற்றவை வேடம்  
மறவர் குடிப் பெண் ஒருத்தியை கொற்றவை போல அலங்காரம் செய்து வணங்கியதையும் சிலப்பதிகாரம் குறிக்கும். அப்பெண்ணின் தலைமுடியை உயர்த்திப் பொன்கயிற்றினால் கட்டினர். காட்டுப் பன்றியின் கொம்பை பிறைச் சந்திரன் போலச்  செய்து அதனை அவளுக்கு அணிவித்தனர். புலிப்பல் தாலியை அணிவித்தனர். புலித்தோலை ஆடையாகப் போர்த்தி, அவளை மான் மீது ஏற்றி ஊர்வலம் வரச்செய்தனர். அவள் கையில் கிளி, கோழி முதலியவற்றைக் கொடுத்து வழிபட்டனர்.  அவளைத் தொடர்ந்து பெண்கள் பலர், சோறு, எள்ளுருண்டை, நிணச் சோறு, நறுமணப் பொருட்கள் ஆகியவற்றைச் சுமந்து வந்தனர். பெரிய வாத்தியங்கள் முழங்கின என்பன போன்ற செய்திகளையும் சிலப்பதிகாரம் வெளிப்படுத்தி நிற்கும்.  மேலும் கொற்றவையின் அருள்பெற்ற இம் மறவரின் குலத்தில் பிறக்க இப்பெண் என்ன தவம் செய்தாளோ என்றும் மறவர்கள் போற்றி வணங்கினர் என்றும் குறிப்பிடுவார் இளங்கோவடிகள். இதனை,கொற்றவை கொண்ட அணி கொண்டு நின்றஇப்பொன் தொடி மாதர் தவம் என்னைகொல்லோ?பொன் தொடி மாதர் பிறந்த குடிப் பிறந்தவில் தொழில் வேடர் குலனே குலனும்!என்ற சிலப்பதிகார அடிகள் விளக்கி நிற்கும்.கொற்றவை ஆடிய மரக்கால் ஆடல்:
 
சிலப்பதிகாரம், மாதவி அரங்கேற்றுக் காதையில் நடனம் ஆடியதாய்ப் பதினோர் வகை ஆடலைக் குறிப்பிடும். ஆவற்றுள் மரக்கால் நடனம் கொற்றவை ஆடியதாகக் குறிக்கப்படுகிறது. கொற்றவை அழகிய பொன்னாற் செய்த பரல்களும் சிலம்பும்  வளையும் மேகலையும் ஒலிப்ப, வஞ்சம் புரிகின்ற வாள் போரில் சிறந்த அசுரர்கள் அழியுமாறு மரக்காலின்மீது நின்று வாட்கூத்தினை ஆடினாள். வஞ்சம் செய்யும் வாளினையுடைய அசுரர் ஒழிய அவள் மரக்காலின்மீது ஔவாள் அமலை  ஆடியபோது அவளுடைய காயாம்பூப் போன்ற மேனியைப் போற்றித் தேவர்கள் தம் கைகளாற் சொரியும் மலர்கள் மழையைப் போன்று தோற்றம் தந்தன என்கிற செய்தியினை,
 
ஆய்பொன் னரிச்சிலம்பும்சூடகமும் மேக லையும்ஆர்ப்ப வார்ப்ப மாயஞ்செய் வாளவுணர்வீழ நங்கை மரக்கான்மேல்வாளமலை யாடும் போலும்மாயஞ்செய் வாளவுணர்வீழ நங்கை மரக்கான்மேல்வாளமலை யாடு மாயின்காயா மலர்மேனி யேத்தி வானோர் கைபெய் மலர்மாரிகாட்டும் போலும்என்ற சிலம்பின் அடிகள் எடுத்துரைத்து நிற்கும்.இருபத்தேழு நட்சத்திரங்களுள் பரணி நட்சத்திரம் கொற்றவைக்கு உரியதாகும். இதன் சிறப்பினைப் பாடுதலாலே இவ்விலக்கியங்கள் பரணி இலக்கியங்கள் எனப்பட்டன. கலிங்கத்துப் பரணியில் இடம்பெற்றுள்ள கோயில் பாடியது, தேவியைப்  பாடியது, இந்திர சாலம், காளிக்குக் கூளி கூறியது ஆகிய நான்கும் காளியைப் பற்றியவை ஆகும். இவ்வாறு  கொற்றவைக்குப் பரணியில் கொண்டாடப் பெறும் விழாவில் பெண்கள் கூழும் துணங்கையும் வழங்கி காடுகெழு செல்வியாகிய  கொற்றவையை வழிபடுவது என்பது தமிழர்தம் பண்டைய வழக்கம் ஆகும். அவ்விழாவின்பொழுது துணங்கை, குரவை முதலிய கூத்துக்களையும், அம்மானை, பந்து, ஊசல் முதலிய ஆட்டங்களையும் மேற்கொண்டு தம் அரசனைப் பாட்டுடைத் தலைவனாக்கி அவன் வெற்றித்திறன்களைக் கொண்டாடுவர் என்பதனைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துரைக்கும்.

இவ்வாறு சங்க காலம் தொடங்கித் தமிழர் வாழ்வியலில் பெண் தெய்வங்களைப் போற்றும் வழிபாடு, அதிலும் குறிப்பாகக் கொற்றவை வழிபாடு, சிறப்புற்று இருந்தமையை அறிய முடிகிறது. இத்தகைய வழிபாட்டின் வளர்ச்சி நிலையே  தற்காலத்திய நவராத்திரி வழிபாடு எனலாம். எனவே சிறப்பும் செல்வமும் சேர்ந்து நல்கிடும் தாய்தெய்வமாம் கொற்றவை வழிபாட்டினை உளமுருக மேற்கொண்டு கலையாத கல்வி, குறையாத வயது, கபடு வாராத நட்பு, கன்றாத வளமை,  குன்றாத இளமை, கழுபிணி இலாத உடல், சலியாத மனம், அன்பு அகலாத நல்மனைவி, தவறாத சந்தானம், தாழாத கீர்த்தி, மாறாத வார்த்தை, தடைகள் வாராத கொடை, தொலையாத நிதியம், கோணாத கோல், துன்பமில்லாத வாழ்வு என்னும் பேறுகளை எல்லாம் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாரில் உயர்ந்து மேன்மையுறுவோமாக!

கொற்றவையின் வேறுபெயர்கள்

சிலப்பதிகாரத்தில் கலையமர் செல்வி, அணங்கு, கொற்றவை, அமரி, குமரி, கவுரி, சூலி, நீலி, ஐயை, கண்ணுதல் பாகம் ஆளுடையாள், திங்கள் வாழ்சடையாள், திருவமாற் கிளையாள், பாய்கலைப் பாவை முதலான பெயர்களில்  கொற்றவையைக் குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள். சிலப்பதிகாரம் தவிர தமிழில் பல்வேறு கால கட்டங்களில் எழுந்த இலக்கியங்களில் கொற்றவைக்குப் பல பெயர்கள் காணப்படுகின்றன அவை முறையே அமரி, எண்டோளி, வெற்றி, அந்தரி,  அம்பணத்தி, சமரி, ஆளியூர்தி, பாலைக் கிழத்தி, வீரச் செல்வி, வராகி, மகிடற்செற்றாள், குமரி,   கலையதூர்தி, கொற்றவை, சக்கிரபாணி, விமலை, கலையானத்தி, விசயை, அரியூர்தி, நாரணி, விந்தை, நீலி,   காத்தியாயனி, சுந்தரி, யாமலை, சயமகள், மேதிச் சென்னி, மிதித்த மெல்லியல், மாலினி, கௌரி, ஐயை, பகவதி, கொற்றி, சக்கராயுதத்தி, மாலுக்கிளையநங்கை, சூலி, வீரி, சண்டிகை, கன்னி, கார்த்திகை, நாராயணி, தாருக விநாசினி என்பனவாகும்.

முனைவர் மா. சிதம்பரம்

Tags :
× RELATED சுந்தர வேடம்