வாக்கில் நயமருளும் நகுலீ

பராசக்தி எடுத்த தசமகா வித்யா அவதாரங்களில் ஒன்பதாவதான மாதங்கி, உபாசகர்களால் பெரிதும் போற்றி வணங்கப்படுகிறாள்.வாக்வாதினி, நகுலீ என இவளுக்கு இரு தோழிகள். வாக்வாதினி தேவி நம்மை நன்றாகப் பேச வைக்கும் சக்தி. இவளின் அருளால் பக்தன் இனிமையான பேச்சை வாரி வாரி வழங்குவான். பெரிய சாஸ்திர விஷயங்களையும் சாதாரண  மக்களுக்கு சுலபமாகப் புரியும் வகையில், அலுப்பு தட்டாமல் பேசுவது இவளின் தயவால்தான். குருவிடம் சந்தேகங்களை நேரில் கேட்டுத் தெரிந்து கொள்வதே வாக்வாதினி என்ற வார்த்தையின் அர்த்தம். அவள் மூல மந்திரத்தில் உள்ள ‘வத  வத’ என்பது, குருவை அடிக்கடி சென்று தரிசிப்பதன் அவசியத்தைக் குறிக்கும்.

Advertising
Advertising

குருநாதர்கள் பல அரிய விஷயங்களை பலமுறை கோரினால் அன்றி உபதேசிக்க மாட்டார்கள். சில விஷயங்கள் பலமுறை கேட்டால்தான் மனதில் பதியும். நகுலீயின் சக்தி எதிரிகளின் வாக்கை அடைத்து, பிறரை விட ஆயிரம் மடங்கு  இனிமையாக, தெளிவாகப் பேசி, தன் வயமாக்குவதே. ஞானம் பெற்றாலும் தவறுகள் செய்ய வாய்ப்புகள் உண்டு. அத்தவறுகள் விஷம் போன்றவை. நகுலம் எனில் கீரிப்பிள்ளை. தவறுகள் என்ற விஷத்தால் பாதிக்கப்படாமல் இருக்க இவள் தயவு  அவசியம்.

நகுலீ தேவி கருடனின் மேல் ஆரோகணித்து பச்சை நிறம் கொண்டவளாய் சங்கு, சக்கரம், வில், அம்பு, கத்தி, அபயம் தரித்த திருக்கோலம் கொண்டவள். குலம் என்ற குண்டலினி சக்தி பாம்பின் வடிவமாகக் கூறப்படுகிறது. அந்த சக்தியை  யோக சக்தியால் தட்டி எழுப்ப வேண்டும். குலம் பாம்பு என்றால், நகுலம் என்பது பாம்புக்கு விரோதியான கீரிப்பிள்ளை. கீரியைக் கண்டால் சோம்பிக் கிடக்கின்ற பாம்பும் உத்வேகம் கொண்டு கிளம்பத்தானே வேண்டும்? ஆகவே, குண்டலினி  சக்தி விழுத்தெழச் செய்யவே இவள் கீரியை வைத்துள்ளதாக தேவி  உபாசனையில் சொல்லப்பட்டுள்ளது.

Related Stories: