×

குமரி கிராதமூர்த்தி கோயிலில் பூஜையில் ஒலிக்கும் புல்லாங்குழல்

பன்னிரு சிவாலயங்களில் 6வது கோயில் கிராதமூர்த்தி. 5ம் கோயிலான ெபான்மனையில் இருந்து சித்திரங்கோடு குமாரபுரம், முட்டைக்காடு செல்லும் வழியில் சுமார் 12 கிலோ மீட்டர் தொலையில் உள்ளது. நாகர்கோவில்-திருவனந்தபுரம் சாலையில் தக்கலையில் இருந்து சுருளக்கோடு செல்லும் வழியில் முட்டைக்காடு சந்திப்பில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலையில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் தொடர்பான தலபுராணக் கதை மகாபாரதத்துடன் தொடர்பு உடையது. பாசுபதாஸ்திரம் வேண்டித் தவம் செய்த அர்ஜூனன் கிராதனாக (வேடன்) இருந்த சிவனுடன் மோதி தோற்ற நிகழ்வுடன் தொடர்புடையது.
முட்டைக்காடு சந்திப்பிலேயே இந்த கோயிலின் தோரணவாயில் உள்ளது. கோயில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது.உயரமான பெரிய மதில் வெளிப்பிரகாரம், திறந்த வெளி உள்பிரகாரம், கருவறையைச்சுற்றிய உட்பிரகாரம், முன்மண்டபம், நந்தி மண்டபம், திருச்சுற்று மண்டபம், விமானம் என்னும் அமைப்புடையது. கோயிலில் சென்று நீராடும் குளம் உண்டு. மூலவரான மகாதேவர் கிராதமூர்த்தி இருக்கும் கருவறை மூன்று சிறு மண்டபங்களைக்கொண்டது. கல்லால் ஆனது கருவறை விமானம் மூன்று அடுக்குகள் உடையது. விமானத்தில் தட்சிணாமூர்த்தி, வீணா தட்சிணாமூர்த்தி, விஷ்ணு நரசிம்மர், யோக நரசிம்மர், பிரம்மா ஆகியோர் உள்ளனர். மூலவர் லிங்க வடிவினர். ஆவுடையில் இருக்கிறார்.

வெளிபிரகாரத்தில் பலிபீடம் உள்ளது. தெற்கு பிரகாரத்தில் சிறிய விநாயகர் கோயில், இதன் அருகே 2 சமாதிகள். விங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டவை. இரண்டும் அண்ணன், தம்பி ஆகிய இரு யோகிகளுக்குரியது. இச்சமாதிகளுக்கருகே கிளிமரம் என்ற மரம் உள்ளது. இது தலவிருட்சம் ஆகும். வடக்கு வெளிப்பிரகாரக் கோயிலில் காலபைரவர் இருக்கிறார். கம்பீரமான தோற்றம். குமரி மாவட்டக் கோயில்களில் உயரமான காலபைரவர் இவர். கருவறையை ஒட்டி கிழக்கில் சாஸ்தா இருக்கிறார். அமர்ந்த கோலம், வடக்கு உள்பிரகார நடுப்பகுதியில் நிர்மால்ய தேவர்.

லிங்க வடிவம், கேரள மாந்திரீக ஆகம முறைப்படி நிர்மால்ய தேவருக்கு வழிபாடு கிடையாது. இந்த கோயில் 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. நந்தி மண்டபத்தில் உள்ள 1559ம் ஆண்டுக் கல்வெட்டு கோயிலில் மூன்று நேரமும் புல்லாங்குழல் வாசிக்க கொடுத்த நிபந்தம் பற்றி கூறும். குமரி மாவட்டக்கோயில்களில் பூஜையில் போது புல்லாங்குழல் இசைத்த ஒரே கோயில் இது ஒன்றுதான். கோயிலில் தினசரி காலை 6 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. 6.30 மணி, 9 மணிக்கு பூஜை, மாலை 5 மணிக்கு நடைதிறப்பு. 7.30 மணிக்கு பூஜை. இந்த கோயிலில் மகா சிவராத்திரி விழா ஒன்றுதான் இங்கே நடக்கும் சிறப்பு விழா. பிற விழாக்கள் இல்லை.

Tags : Kumari Grathamoorthy ,
× RELATED சுந்தர வேடம்