×

ஆற்றில் பவனி கிரிவலம் வரும் நடராஜர்

ஈரோடு அருகில் உள்ள காங்கேயம்பாளையத்தில் அமைந்துள்ளது ஸ்ரீநட்டாறீஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் காவேரி ஆற்றின் நடுவே தானாகவே தோன்றிய பாறையின் மீது அமைந்துள்ளது தனிச்சிறப்பு ஆகும். இத்திருக்கோயிலில் மார்கழி திருவாதிரைத் திருநாளில் இங்கு எழுந்தருளியுள்ள நடராஜரும், சிவகாமியம்மையும் பரிசலில் எழுந்தருள்வார்கள். இன்னொரு பரிசலில் மேள, தாளங்கள் முழங்க ஆற்றிலேயே கோயிலைச்சுற்றி வலம் வருவது எங்கும் தரிசிக்க இயலாது என்று கூறப்படுகிறது.

நவ நடராஜ தரிசனம்

தில்லை சிதம்பரத்தில் அருள்புரியும் இறைவன், பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்காக திருநடனம் புரிந்த அற்புதத் திருநாள் மார்கழி திருவாதிரைத் திருநாள் என்கிறது புராணம். இந்நாளில் தில்லை சிதம்பரத்திற்குச் சென்றால் ஒரு நடராஜரின் திருநடனக் கோலத்தை மட்டும்தான் தரிசிக்கலாம். ஆனால், அதேசமயம் சென்னை முத்தியால்பேட்டையில் ஒன்பது நடராஜர்களை ஒரே சமயத்தில் தரிசனம் செய்யும் பாக்கியத்தைப் பெறலாம். இந்த நவ நடராஜர்கள் சந்திப்புக்காக சென்னை முத்தியால் பேட்டை பகுதியில் கோயில் கொண்டுள்ள மண்ணடி மல்லிகேஸ்வரர், கச்சாலீஸ்வரர், காளத்தீஸ்வரர், மண்ணடி செல்வ விநாயகர் கோயில், மூக்கர் நல்லமுத்து பிரசன்ன விநாயகர் கோயில், லிங்கி செட்டித்தெரு சிதம்பரேஸ்வரர் கோயில், ஷண்முக செல்வ விநாயகர் கோயில், செங்கழுநீர் பிள்ளையார் கோயில், நைனியப்பன் தெரு முத்துக்குமாரசுவாமி கோயில் ஆகிய ஒன்பது கோயில்களில் அருள்புரியும் நடராஜ மூர்த்திகள், சிவகாமி அம்மை சமேதராக ஊர்வலமாக வந்து, இந்த ஒன்பது கோயில்களுக்கும் பொது இடமான மண்ணடி கிருஷ்ணன் கோயில் சந்திப்புத் தெருவில் ஒன்பது நடராஜர் மூர்த்திகளும் ஒரே நேரத்தில் எழுந்தருளி, நவநடராஜர் சந்திப்பு நடைபெறும். ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் ஒன்பது நடராஜர்களைத் தரிசிப்பது ஓர் அற்புதம் ஆகும். இதனால், பக்தர்கள் வாழ்வில் என்றும் வசந்தம் வீசும் என்பது ஐதீகம்.

கிரிவலம் வரும் நடராஜர்

கரூர் அருகில் உள்ள ‘புகழிமலை’ வேலாயுதம்பாளையத்தில் அமைந்துள்ளது பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு மார்கழி திருவாதிரை திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும்.மலை அடிவாரத்தில் நடராஜப் பெருமானுக்கும் சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். பிறகு நடராஜப் பெருமானும், சிவகாமி அம்மையும் கிரிவலம் வருவார்கள். அப்போது, தம்பதி சமேதராகக் காட்சி தரும் நடராஜரையும், சிவகாமி அம்மையாரையும் தரிசித்தால் சுமங்கலிகள் நீண்ட சுமங்கலி பாக்கியம் பெறுவார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

திருவாதிரையில் திருமலை

திருப்பதி திருமலையில் எழுந்தருளியிருக்கும் வேங்கிடாஜலபதிக்கு தினமும் துளசி தளத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். ஆனால் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று மட்டும் துளசி தளத்திற்குப் பதில் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வார்கள். இதுபோல் வேறு எந்தக் கோயிலிலும் இல்லை என்று சொல்லப்படுகிறது.

- டி.ஆர்.பரிமளரங்கன்

Tags : river ,Natarajar ,
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை