×

வீட்டிற்கு ஒரு மகாலட்சுமி!

?கட்டிய வீட்டை வாங்கிய என் மகன் அந்த வீட்டை தற்போது வாஸ்து சாஸ்திரப்படி சீரமைத்து வருகிறான். இந்த நேரத்தில் என் மகனுக்கு விபத்து உண்டாகி காலில் பலத்த அடிபட்டு ஒரு மாதமாக வீட்டில் உள்ளான். நான் வீடு கட்ட ஆரம்பித்த நேரத்திலும் விபத்தில் சிக்கி கால் எலும்பு முறிந்து
8 மாதம் கழித்து எழுந்து நடக்க ஆரம்பித்தேன். அந்த வீட்டை விற்றுவிட்டு தற்போது புது வீடு வாங்கி சீரமைக்கும்போது இவ்வாறு நடந்துள்ளது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
 - சங்கர், ஆற்காடு.

பரணி நட்சத்திரம், மேஷ ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சந்திர திசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகப்படியும், அவிட்டம் நட்சத்திரம், மகர ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படியும் வீடு சம்பந்தமான தோஷம் ஏதும் இல்லை. உங்கள் இருவரின் ஜாதகங்களின்படி கிரஹங்கள் சார்ந்த தோஷம் ஏதும் கிடையாது. அதே நேரத்தில் பரம்பரையில் முன்னோர்கள் வழியில் யாரேனும் ஒரு தவறு செய்திருந்தால், அதாவது தெரிந்தே ஒருவருக்கு துரோகம் செய்திருக்கும் பட்சத்தில் அந்த மனிதரின் சாபம் இதுபோன்ற பிரச்னைகளைத் தருவதற்கான வாய்ப்பு உண்டு. உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் மூலம் உண்மையைத் தெரிந்துகொண்டு அதற்கான பிராயச்சித்தம் தேட முயற்சியுங்கள். உங்கள் மகன் எழுந்து நடப்பதற்கும், அவரது திருமணம் குறித்த நேரத்தில் நடைபெறுவதற்கும் தடையேதும் உண்டாகாது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததும் வீட்டில் குடியேறுவதற்கு முன்னால் சதுஷ்ஷஷ்டி பைரவர் பூஜை, யோகினி பலி முதலான பூஜைகளை முறையாகச் செய்து அதன்பின் புதுமனை புகுவிழா நடத்துங்கள். வீட்டினில் வளர்ப்புப் பிராணியாக ஒரு நாயை வளர்த்து வருவது நல்லது. பைரவர் வழிபாடு ஒன்றே இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து உங்களைக் காக்கும் என்பதால் தொடர்ந்து பைரவர் வழிபாட்டினை மேற்கொள்ளுங்கள். உங்கள் மகனின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

?என் மகளின் திருமணம் காதல் விவகாரத்தால் தள்ளிப் போகிறது. நாங்கள் காதல் திருமணத்தை விரும்பவில்லை. வீட்டில் குழப்பம் நிகழ்கிறது. என் மகள் மனம் மாறி என் விருப்பப்படி எங்கள் ஜாதியில் திருமணம் செய்துகொள்ள உரிய பரிகாரம் கூறுங்கள்.
 - லட்சுமணன், ராஜகீழ்பாக்கம்.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் திருமணத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் நீசம் பெற்று மூன்றாம் வீட்டில் அமர்ந்துள்ளதால் கடுமையான களத்ர தோஷத்தினைப் பெற்றுள்ளார். தற்போது நடந்து வரும் நேரத்தின்படி திருமணத்தைப் பற்றிப் பேசுவது அத்தனை உசிதமல்ல. தற்போதைய கிரஹ நிலையின்படி அவர் தனது உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஜென்ம லக்னத்திலேயே மூன்று கிரஹங்களின் இணைவும், ஜென்ம லக்னாதிபதி சுக்கிரன் 11ல் உச்சம் பெற்றிருப்பதும் அவருக்கு எதையும் சாதிக்கும் திறனை அளிக்கும். நினைத்ததை எப்படியாவது நடத்திமுடித்துவிட வேண்டும் என்ற உறுதியைக் கொண்டிருப்பார். என்றாலும் இந்தத் திறன் அனைத்தும் அவரது உத்யோகத்திற்கு உதவி புரியுமே தவிர திருமண வாழ்விற்கு துணை புரியாது. தாமதமான திருமணமே இவருக்கு நல்வாழ்வினைத் தரும். 01.08.2020க்குப் பின் உங்கள் மகள் தனது மனக்
குழப்பத்திலிருந்து விடுபடுவார். செவ்வாய்க்கிழமை தோறும் ராகு கால வேளையில் துர்க்கையம்மன் சந்நதியில் விளக்கேற்றி வழிபட்டு வருவது நல்லது. உங்கள் மகளின் விவகாரத்தில் நீங்கள் மிகவும் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம். உங்களது பொறுமை ஒன்றே அவரை நல்வழிப்படுத்தும் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள். குடும்ப கௌரவம் குறையாமல் உங்களது மகளின் திருமணம் நல்லபடியாக நடக்கும்.

?தாத்தா எழுதி வைத்த உயிலில் உள்ளபடி பாகப்பிரிவினை செய்து கொள்ள எங்கள் சித்தப்பா மறுக்கிறார். அவரது அனுபவத்தில் உள்ள சொத்தில் சிறிது பாகம் எங்களுக்கு வரும் என்பதால் சர்வேயரை இருமுறை திருப்பி அனுப்பிவிட்டார். அவருக்கு அரசியல் பலம் உள்ளதால் எங்களால் எதுவும் செய்ய இயலவில்லை. சொத்து பாகப்பிரிவினை சுமூகமாக ஏற்பட கோர்ட்டிற்கு செல்லலாமா? ஒரு நல்ல வழி காட்டுங்கள்.
 - முரளி, ஈரோடு.

மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சனி தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. பிதுரார்ஜித சொத்துக்களைப் பற்றிச் சொல்லும் ஒன்பதாம் பாவத்தில் சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோர் இணைந்திருப்பதால் நிச்சயமாக பரம்பரைச் சொத்தில் உங்களுக்கு உரிய பாகம் என்பது வந்து சேரும். அதிலும் தற்போது நடந்து வரும் நேரம் மிகவும் நன்றாக உள்ளது. சுக்கிரன் உச்ச பலத்துடன் சஞ்சரிப்பதால் தனலாபம் என்பது நிச்சயம் உண்டு. இடைத்தரகர் யாருமின்றி நீங்கள் நேரடியாகச் சென்று உங்கள் சித்தப்பாவிடம் நியாயத்தைக் கேளுங்கள். உங்களுடைய நேரம் நன்றாக இருப்பதால் அவர் எந்தவிதமான பிரச்னையுமின்றி உங்களுக்கு உரிய பாகத்தை பிரித்துக் கொடுப்பார். உங்களது பரம்பரை கௌரவம் நிறைந்தது என்பதால் அவர் உங்களிடம் இருந்து தனக்குரிய மரியாதையையும், கௌரவத்தையும் எதிர்பார்ப்பதாகவே தோன்றுகிறது. இளம் வயதிலேயே தந்தையை இழந்த நீங்கள் சித்தப்பாவை அவருக்கு உரிய மரியாதையோடு எதிர்கொள்ளுங்கள். சாட்சிக்காரரிடம் போவதை விட சண்டைக்காரரிடம் போவதே மேல் என்பதைப் புரிந்துகொண்டு நேரடியாக சித்தப்பாவிடம் சென்று கேளுங்கள். நீதிமன்றத்தை அணுக வேண்டிய அவசியமோ அல்லது வேறு வழிகளைக் கையாள வேண்டிய அவசியமோ உண்டாகாது. சித்தப்பாவிடம் செல்வதற்கு முன்பாக உங்கள் குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிரச்சினை சுமுகமாக முடிவிற்கு வரும்.

?பிரசவத்திற்குப் பின் எனது மனைவிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டாள். ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் எனக்கு 2ல் சனி இருப்பதால் என் ஜாதகம் சரியில்லை என்றும் என் ஜாதக தோஷத்தால்தான் மனைவி இறந்து விட்டாள் என்றும் கூறுகிறார். நானும் என் மனைவியும் மிகவும் மகிழ்ச்சியுடன்தான் குடும்பம் நடத்தினோம். மறுமணத்தில் எனக்கு சிறிதும் விருப்பமில்லை. அடுத்த ஜென்மத்திலாவது என் மனைவியுடன் நீண்ட நாள் வாழ வேண்டும். உரிய பரிகாரம் கூறுங்கள்.
- அருண், கோபி.

உங்கள் மனைவியின் மீது நீங்கள் கொண்டிருக்கும் அளவற்ற அன்பினை கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளீர்கள். ஒருவருடைய ஜாதகம் மற்றொருவரின் ஆயுளைத் தீர்மானிக்காது என்பதை முதலில் மனதில் நிலைநிறுத்துங்கள். உங்கள் ஜோதிடர் சொன்னது முற்றுலும் உண்மை என்றே வைத்துக்கொள்வோம். அதாவது உங்களுக்கு களத்ரதோஷம் உள்ளது, மனைவி இறந்துவிடுவாள் என்று விதி இருந்தால் அது நடந்துதானே தீரும், அதற்காக திருமணமே செய்யாமல் இருக்க முடியுமா? திருமணமே செய்துகொள்ளாமல் இருந்தால் ஜாதகத்தில் உள்ள விதி என்னவாகும்? திருமணம் என்ற ஒன்று நடந்தால்தானே மனைவி வருவாள், மனைவியே இல்லாதவனுக்கு களத்ரதோஷம் என்ற ஒன்று எப்படி வரும்? கிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் உங்கள் மனைவி இறந்த நேரத்தில் ராகு தசையில் சனி புக்தி நடந்திருக்கிறது. மேலும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி ஆகிய செவ்வாய் மூன்றில் அமர்ந்து தோஷத்தைத் தந்திருக்கிறார். இந்தக் காரணங்களைக் கொண்டு உங்கள் ஜாதக தோஷத்தினால்தான் அவர் இறந்துவிட்டார் என்று சொல்ல முடியாது. உங்கள் மனைவியின் ஜாதகம் பலவீனமானதாக இருந்திருக்க வேண்டும். அவரது ஆயுள்பாவத்தின் பலவீனத்தால் மரணம் என்பது சம்பவித்திருக்கும். நடந்ததைப் பற்றி எண்ணி கவலைப்படுவதை விட்டுவிட்டு உங்கள் மனம் சொல்வதைக் கேட்டு நடந்துகொள்ளுங்கள். மறுமணத்தில் ஆர்வம் இல்லாத நீங்கள் பசுமடத்தில் ஓய்வுநேரத்தை செலவிடப்போவதாக எழுதியுள்ளீர்கள். அவ்வாறே தொடர்ந்து செய்து வாருங்கள். பசுமடத்தில் செய்யும் சேவையானது முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் செய்யும் சேவையாகும். இதனைவிட வேறு பெரிய பரிகாரம் ஏதும் அவசியமில்லை. உங்கள் மகனை நல்லவிதமாக வளர்ப்பதோடு அவனை வாழ்வில் உயர்ந்த நிலைக்கும் கொண்டு வருவீர்கள். இறைவனின் செயல் ஒவ்வொன்றிலும் ஏதேனும் காரணம் இருக்கும். இதனைப் போக போக அனுபவத்தில் உணர்வீர்கள். கவலை வேண்டாம்.

?என் பேரனுக்கு சிறுவயதில் இருந்து நல்லது - கெட்டது எதுவும் சொல்லித் தரவில்லை. செல்லமாக வளர்த்து அவன் கேட்கும் பணத்தை செலவு செய்ய அனுமதித்து விட்டோம். இப்பொழுது அவன் சம்பாதிக்கிறான். ஆனால் முன் செய்த செலவைவிட பல மடங்கு செலவு செய்கிறான். தொட்டில் பழக்கம் இறுதி வரை பாதிக்குமே என்று கவலைப்படுகிறோம். பரிகாரம் சொல்லவும்.
 - தங்கவேலு, கோயமுத்தூர்.

ரேவதி நட்சத்திரம், மீன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேரனின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. ஜென்ம லக்னத்திற்கு அதிபதி ஆகிய புதன் 12ம் இடமாகிய விரய ஸ்தானத்தில் சூரியன் மற்றும் கேதுவுடன் இணைந்திருப்பதால் செலவாளியாக இருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. இருந்தாலும் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல அவருக்கு எந்தவிதமான தீயபழக்கமும் கிடையாது. அவருடைய ஜாதகத்தில் சந்திரனும், உச்சம் பெற்ற சுக்கிரனும் இணைந்து பத்தில் அமர்ந்திருப்பது சிறப்பான வருமானத்தை ஆயுள் முழுவதும் பெற்றுத் தரும். வாழ்க்கைத்துணையைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி ஆகிய குரு நான்கில் அமர்ந்திருப்பதும் நல்ல நிலையே. தற்போது நடந்து வரும் நேரம் அவருடைய திருமணத்திற்கு ஏற்ற நேரம் என்பதால் உறவு முறையில் காத்திருக்கும் பெண்ணை அவருக்கு மணம் முடித்து வையுங்கள். திருமணத்திற்குப் பின் அவருடைய நடவடிக்கையில் சிறிது மாற்றத்தைக் காண்பீர்கள். அவருடைய கையில்தான் காசு தங்காது, அதே நேரத்தில் அவரது மனைவியின் பெயரில் சேமிப்பும், சொத்துக்களும் சேரும். கடன் வாங்கி செலவழிக்க அவருக்கு வரும் மனைவி அனுமதிக்கமாட்டார். கையில் காசு இருந்தால்தானே செலவழிக்க முடியும் என்ற உண்மையை உணர்ந்து மனைவியின் சொல்லுக்கு உங்கள் பேரன் மதிப்பளித்து நடந்துகொள்வார். வெள்ளிக்கிழமை தோறும் வீட்டினில் மகாலக்ஷ்மி பூஜை செய்து வழிபட்டு வாருங்கள். வரும் வருடத்தில் உங்கள் பேரனுக்கு திருமணம் நடந்து வீட்டிற்கு ஒரு மகாலக்ஷ்மி வரக் காண்பீர்கள்.

Tags : Mahalaxmi ,
× RELATED வீட்டில் கொள்ளை