சகல செல்வங்களை அருளும் கங்கையம்மன்

- கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல்

Advertising
Advertising

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசலில் அமைந்துள்ளது கங்கையம்மன் கோயில். இங்கு கங்காதேவி சாந்த சொரூபினியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். சிவபெருமானை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக பூலோகத்தில் தட்சன் யாகம் செய்தான். சிவனை அழைக்காமல் யாகம் நடத்திய தன் தந்தையான தட்சனுக்கு அறிவுரை கூறி யாகத்தை நிறுத்த பூலோகம் செல்ல தன் கணவன் ஈசனின் அனுமதி கேட்டாள் தேவி தாட்சாயணி. தன்னைப்போல் தன் மனைவியும் அவமானப்படக்கூடாது என்பதற்காக அனுமதி மறுத்தார் சிவன்.

சிவன் வாக்கை மீறி பூலோகம் சென்றாள் தாட்சாயணி, தன் மனைவி தன்னை மதிக்கவில்லையே என்ற ஆதங்கம், தனிமைத்துயர், பிரிவுத்துயர், தட்சனால் தன் மனைவி அவமானப்பட நேருமே என்ற கோப உணர்வு ஆகியவற்றால் குழம்பிப் போன சிவன் பூலோகம் வர எண்ணி தனது வலது பாதத்தை பூமியிலுள்ள ராஜகம்பீர மலையில் வைத்தார். (இந்த மலை கண்ணமங்கலம் அருகே படவேடு செல்லும் வழியில் உள்ளது). ஈசனின் வெப்பம் தாளாது மலை எரிந்தது; பாரம் தாங்காது மலை பூமியில் இறங்கியது.

எனவே அடுத்த அடியை மலைமீது வைக்காமல் தரையில் வைக்க எண்ணிய சிவன், வலது பாதத்தை திருவண்ணாமலை அருகே உள்ள அடிஅண்ணாமலையில் தரையில் வைத்தார். அப்பாத சுவடு அடி அண்ணாமலையில் உள்ள குளத்தில் காணப்படுகிறது. ஈசனின் வலது பாதசுவடு உள்ள மலை ‘மிதி மலை’ என்று வழங்கி வருகிறது. இன்றும் பாத சுவடு மிதிமலையில் அழியாமல் உள்ளது. வலது பாதம் பட்ட ஊர் அடி அண்ணாமலை இன்றும் வழிபாட்டுத் தலமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஈசன் தலையில் இருந்த கங்கை, தீயை அணைத்து பிரளயத்தைத் தடுக்க தன் தமயன் மகாவிஷ்ணுவிடம் வேண்டினாள். அவ்வேண்டுதலுக்கு இணங்க ராஜகம்பீர மலையை சுற்றி ஏழு நீர்நிலைகளை ஏற்படுத்திய விஷ்ணு அந்நீரால் தீயை அணைத்தார். இன்றளவும் இம்மலையைச் சுற்றி விஷ்ணுவின் பெயரில் (1. பெருமாள் குளம், 2. ஊற்றுபெருமாள் குளம், 3. காட்டு பெருமாள் குளம், 4. வாணிய பெருமாள் குளம், 5. கோமுட்டி பெருமாள் குளம், 6. குட்டக்கரை குளம், 7. வெறும் குளம்) என ஏழு குளங்கள் உள்ளன.

இதனால் மகிழ்ந்த கங்கை தன் தமயனை நன்றியுடன் வழிபட்டாள். கங்கை வழிபட்ட இடத்தில்தான், பெருமாள் கோயிலும், கங்கையம்மன் கோயிலும் இருந்தது. காலப்போக்கில் பெருமாள் கோயில் அழிந்துவிட, அம்மன் கோயில் சிதிலமடைந்து காணப்பட்டது. அதற்கு சான்றாக கோயிலில் சங்கு, சக்கரம், கருடன், ஆஞ்சநேயன் உருவங்கள் பொறிக்கப்பெற்ற கல் தூண் ஒன்றும், கல்வெட்டுகளும் உள்ளது. திருவண்ணாமலை தீபம் போல விஷ்ணு கார்த்திகை அன்று ராஜகம்பீர மலையில் இன்றளவும் விஷ்ணு தீபம் ஏற்றப்படுகிறது. கருவறையில் கங்காதேவி இடது காலை மடித்து, வலக்காலை தொங்க விட்டபடி, 5 தலை நாகத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். கீழே சிம்ம வாகனம் இருக்கிறது. கையில் தண்டம், உடுக்கை மற்றும் அமுத கலசம் உள்ளது. பிரதான அம்பிக்கைக்கு பின்புறம் சுதை வடிவில் கங்காதேவி அருள்பாலிக்கிறாள்.

கங்காதேவிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தையே இங்கு பிரசாதமாக தருகின்றனர்.  தண்ணீர் வடிவ தெய்வமான கங்கைக்கே, பூஜை செய்த தீர்த்தம் என்பதால் இதை  மிகவும் புனிதமாக கருதுகின்றனர். இந்த தீர்த்தத்தை சிறிது வாங்கி சென்று வீட்டில் வைத்துக்கொண்டால் சகல ஐஸ்வர்யமும் உண்டாகும் என்பது நம்பிக்கை. தீர்த்த வழிபாட்டிற்கு முக்கியத்துவம் உள்ள தீபாவளி மற்றும் மாசி மகம் ஆகிய நாட்களில் இங்கு கங்காதேவிக்கு விஷேச பூஜை நடக்கும். நவராத்திரி, விஜயதசமி நாளன்று அம்மனுக்கு ஏகதின இலட்சார்ச்சனை பெருவிழா நடைபெறும். திருவண்ணாமலை-வேலூர் சாலையில், திருவண்ணாமலையில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவிலும், வேலூரில் இருந்து 32 கி.மீ. தொலைவிலும் உள்ளது சந்தவாசல். அங்கிருந்து 1 கி.மீ. நடந்து சென்றால் கோயிலை சென்றடையலாம்.

Related Stories: