சென்னையில் திரைப்பட உதவி இயக்குனராகப் பணியாற்றும் அசோக் செல்வன், தனியார் மருத்துவமனையில் நர்சாகப் பணிபுரிந்து வரும் அவந்திகா மிஸ்ராவை நேரில் கண்டதும் காதல் கொள்கிறார். இந்நிலையில், தனது தோழிக்கு உதவி செய்யும் அசோக் செல்வன், இதனால் தனது காதலுக்கு சிக்கலை ஏற்படுத்திக்கொள்கிறார். அவரது காதலைச் சேர்த்து வைக்க நண்பர்களும், குடும்பத்தினரும் களமிறங்குகின்றனர். பிறகு என்ன நடந்தது என்பது மீதி கதை.
பல படங்களில் பார்த்த காதல் கதை என்றாலும், அதை காமெடியுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாலாஜி கேசவன். ஒரு பொய், அதை மறைக்க இன்னொரு பொய் என்று, அடுக்கடுக்கான பொய்களின் மூலம் என்னென்ன நடக்கிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார். சில காட்சிகள் சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கின்றன. ஆஸ்கர் விருது கனவு டன் இருக்கும் உதவி இயக்குனர் கேரக்டருக்கு அசோக் செல்வன் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். காதல் உணர்வுகளை அவந்திகா மிஸ்ரா சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
தந்தை வேடத்தில் அழகம்பெருமாள் கோபப்பட்டு நடித்துள்ளார். தாயாக வரும் ஊர்வசி, தனது டிரேட் மார்க் நடிப்பை வெளிப்படுத்தி ரகளை செய்திருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், பக்ஸ் உள்பட மற்றவர்களும் அந்தந்த கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளனர். ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா, இசை அமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா ஆகியோர், கதைக்கு தேவையான அளவு உழைத்திருக்கின்றனர். ஹீரோவை சந்தேகப்படும் ஹீரோயின், அதைச் சமாளிக்க பொய் சொல்லும் ஹீரோ உள்பட வழக்கமான பல காட்சிகளை இயக்குனர் மாற்றி யோசித்திருக்கலாம்.