×

தும்மல் எனும் நிமித்தம்?

குறளின் குரல்-110

நம்மிடம் பல நம்பிக்கைகள் இருக்கின்றன. மதம் சார்ந்த நம்பிக்கைகள், தொன்று தொட்டு வந்த மரபு சார்ந்த நம்பிக்கைகள். இப்படிப் பல. இந்த நம்பிக்கைகள் வாழ்க்கைக்கு அழகு சேர்க்கின்றன. இயந்திர மயமான வாழ்வில் கொஞ்சம் சுறுசுறுப்பைத் தோற்றுவிக்கின்றன. இத்தகைய பல நம்பிக்கைகள் உளவியல் ரீதியாக மனிதன் சோர்ந்து போகாமல் இருக்க உதவுகின்றன. வள்ளுவர் காலம் தொட்டு அப்படிப்பட்ட நம்பிக்கைகள் தமிழர் வாழ்வில் ஆழமாக ஊடுருவியிருக்கின்றன.  

அத்தகைய நம்பிக்கைகளில் ஒன்று தும்மல் சார்ந்தது. தும்மலை ஒட்டி மூன்று வகையான நம்பிக்கைகள் நம்மிடையே தற்போது நிலவுகின்றன. ஒன்று, தும்மினால் நம்மை ஒருவர் நினைத்துக் கொள்கிறார் என்று கருதுவது. (புரையேறினாலும் அப்படிக் கருதுவது உண்டு.) இரண்டாவது, ஒற்றைத் தும்மலானால் நாம் போகிற காரியம் வெற்றி பெறாது, அது அபசகுனம் எனக் கருதுவது. மூன்றாவது, இரட்டைத் தும்மலோ அதற்கு மேற்பட்ட தும்மலோ என்றால் நாம் போகிற காரியம் நிச்சயம் வெற்றி பெறும் என நம்புவது. தும்மல் தொடர்பான இந்த மூன்றுவித நம்பிக்கைகளில் தும்மினால் நம்மை  ஒருவர் நினைத்துக் கொள்கிறார் என்ற நம்பிக்கை சார்ந்து வள்ளுவர் காமத்துப் பாலில் பல குறட்பாக்களை எழுதியுள்ளார். இலக்கிய இன்பத்தை மிகுவிக்கும் வகையில் அந்த நம்பிக்கையை அவர் அழகுறக் கையாள்கிறார்.

‘நினைப்பது போன்று நினையார்கொல்
தும்மல் சினைப்பது போன்று கெடும்.’(குறள் எண் 1203)

‘எனக்குத் தும்மல் வருவதுபோலத் தோன்றி ஆனால் வராமல் அடங்கி விடுகிறது. அதனால் என் காதலர் என்னை நினைப்பது போல் இருந்து பின் நினையாமல் விட்டுவிடுகிறாரோ?’ எனத் தன் காதலர் பற்றி சந்தேகப்படுகிறாள் தலைவி.

‘மறைப்பேன்மன் காமத்தை யானோ
குறிப்பின்றித்தும்மல் போல் தோன்றி விடும்.’(குறள் எண் 1253)

‘நான் என் ஆசையை மறைத்துவைக்கத்தான் முயல்கிறேன். ஆனால் அது திடீரென்று என் கட்டுப்பாட்டையும் மீறித் தும்மலைப் போல் வெளிப்பட்டுவிடுகிறது!’ என்று கூறுகிறாள் தலைவி.

‘ஊடியிருந்தோமா தும்மினார் யாம் தம்மை
நீடுவாழ் கென்பாக்கு அறிந்து.’(குறள் எண் 1312)

‘காதலரோடு ஊடியிருந்தோம். நம்மைப் பேசவைக்க எண்ணினார் அவர். எனவே தும்மினார். நாம் அவரை நீடு வாழ்க என வாழ்த்துவோம் என்பது அவர் எண்ணம்.‘ எனத் தோழியிடம் சொல்கிறாள் தலைவி. ஒருவர் தும்மினால் அவர் அருகில் இருப்பவர் அவரை நீண்ட காலம் வாழ்க என வாழ்த்துவது அக்கால வழக்கம்.

‘வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழு
தாள்யாருள்ளித் தும்மினீர் என்று.’(குறள் எண் 1317)

‘நான் தும்மினேன். அவள் வாழ்க என்று வாழ்த்தினாள். உடனே அதை மாற்றி யார் நினைக்க நீர் தும்மினீர் என அழத் தொடங்கினாள்’ என்கிறான் தலைவன்.

‘தும்முச் செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.’(குறள் எண் 1318)

‘தும்மல் வந்தால் அவள் பிணங்குவாளே என நினைத்து தும்மலை நான் அடக்கினேன். மற்றவர் உம்மை நினைப்பதை நான் அறியலாகாது எனத் தும்மலை மறைக்கிறீரோ என்று அழுதாள் அவள்’ என்கிறான் தலைவன். இப்படித் தலைவன் கூற்றாகவும் தலைவி கூற்றாகவும் ஒரு சாதாரணத் தும்மல் அழகிய இலக்கிய உத்தியாகப் பயன்பட்டு திருக்குறளின் கவிதையழகை மேம்படுத்துகிறது. தும்மலை மையமாக வைத்து மட்டுமல்ல, இன்னும் பல வகையான நம்பிக்கைகள் தமிழர்களிடையே இருந்திருக்கின்றன. தும்பி வந்து காதருகே சுற்றினால் அன்று ஏதாவது ஒரு நல்ல சேதி வந்துசேரும் என்பது ஒரு நம்பிக்கை.

கம்பராமாயண சுந்தர காண்டத்தில் அசோக மரத்தடியில் சோகத்தோடு வீற்றிருக்கிறாள் சீதாப் பிராட்டி. ராமபிரான் தன்னைத் தேடுகிறாரா, அல்லது கைவிட்டு விட்டாரா, அவரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லையே எனப் பரிதவிக்கிறது அவள் உள்ளம். அவள் அருகே அமர்ந்திருக்கிற வீடணன் மகளான திரிஜடை அவளையே பரிவோடு பார்த்துக் கொண்டிருக்கிறாள். அப்போது ஒரு பொன்னிறத் தும்பி சீதையின் காதருகே வந்து ரீங்கரித்து விட்டுச் செல்கிறது. அதைக் கண்ட திரிஜடை உற்சாகமடைகிறாள். ‘தாயே! உன் காதருகே ஒரு தங்க நிறத் தும்பி வந்து ஊதிச் சென்றதைப் பார்த்தேன். கவலைப்படாதே. இன்று கட்டாயம் உனக்கு ஒரு நல்லசேதி வரும்!’ என்று சொல்லி சீதைக்கு நம்பிக்கை ஊட்டுகிறாள்.

‘உன் நிறம் பசப்பு அற உயிர் உயிர்ப்பு உற
இன்நிறத் தெனஇசை இனிய நண்பினால்
மின்நிற மருங்குலாய் செவியில் மெல்ல ஓர்
பொன்நிறத் தும்பி வந்து ஊதிப் போயதால்!
‘ஆயது தேரின் உன் ஆவிநாயகன்
ஏயது தூது வந்து எதிரும் என்னுமால்
தீயது தீயவர்க்கு எய்தல் திண்ணம்!என்
வாயது கேள் என மறித்தும் கூறுவாள் ’

திரிஜடை சொன்னவாறே அன்றுதான் அனுமன் வந்து சீதைக்கு நல்ல சேதி சொல்கிறான். அடையாளப் பொருளாக ராமன் அனுப்பிய கணையாழியையும் கொடுக்கிறான்....

*இந்துக்களிடையே சகுனம் பார்க்கும் பழக்கம் இருக்கிறது. சிலவற்றை நல்ல சகுனம் என்று கருதி உடனே செயலில் இறங்குவார்கள். வேறு சிலவற்றைக் கெட்ட சகுனம் என்று கருதி தாம் செய்யவிருந்த செயலைத் தாமதப் படுத்துவார்கள். சவரம் செய்யும் நாவிதர் எதிரே வந்தால் கெட்ட சகுனம். ஆனால் துணிவெளுக்கும் வண்ணான் வந்தால் அது நல்ல சகுனம். பால்குடம் எதிரே வந்தால் மங்கலம். எண்ணெய்க் குடம் எதிரே வந்தால் அமங்கலம். கருவுற்றிருக்கும் பெண் எதிரே வந்தால் மங்கலம்.

விறகுச் சுமை எதிரே வருவது அமங்கலம். வீணை, புல்லாங்குழல், சங்கு, ஆலய மணி இவற்றைப் பார்ப்பதும் இவற்றின் ஒலிகளைக் கேட்பதும் சுப சகுனம். நீர் நிரம்பிய குடம், கன்னிப் பெண்கள், விளக்கு, தாமரைப் பூ, நாய் தன் உடலைச் சிலிர்ப்பது போன்றவற்றைப் பார்ப்பது நல்ல சகுனம். செருப்பு அறுந்து போவது, உடுத்திய ஆடை கிழிவது, மரக்கிளை முறிவது போன்றவை அப சகுனங்கள். பேசிக் கொண்டிருக்கும்போது பல்லி இடும் சப்தம் அது எந்தத் திக்கிலிருந்து வந்தது என்பதைப் பொறுத்து சுப மற்றும் அசுப பலன்கள் கூறப்படுகின்றன. பஞ்சாங்கங்களில் பல்லி சொல்லுக்குப் பலன், பல்லி விழுதலின் பலன் ஆகியவை தனியே கொடுக்கப்பட்டுள்ளன.

இப்படி சகுனம் சார்ந்து எத்தனையோ நம்பிக்கைகள். எதிரில் வரும் சகுனங்கள் பற்றி மட்டுமல்ல, உறக்கத்தில் காணும் கனவுகள் பற்றியும் பலவித நம்பிக்கைகள் உள்ளன. சில கனவுகளைக் கெட்ட கனவுகளாகவும் வேறு சில கனவுகளை நல்ல கனவுகளாகவும் சொல்வதுண்டு. ராவணன் எண்ணெய் தேய்த்து முழுகுவதாகவும் கழுதையும் பேய்களும் இழுக்கும் தேரில் ஏறி ரத்த ஆடை அணிந்து தென்திசை நோக்கிச் செல்வதாகவும் திரிஜடைக்குக் கனவு வந்தது. துயிலாததால் கனவு காணாத சீதையிடம் தான் கண்ட கனவைப் பற்றிச் சொல்கிறாள் திரிஜடை.

‘துயிலலை ஆதலில் கனவு தோன்றல!
அயில்விழி அன்னை! யான் அமைய நோக்கினேன்பயில்வன பழுது இல! பரிவின் ஆண்டனவெயிலினும் மெய்யன! விளம்பக் கேட்டியால்!
எண்ணெய் தன் முடிதொறும் இழுகி ஈறுஇலாத் திண்நெடும் கழுதை பேய் பூண்ட தேரின்மேல் அண்ணல்வேல் ராவணன் அரத்த ஆடையன்
நண்ணினன் தென்புலம் நவைஇல் கற்பினாய்’

சீதையைக் காவல் காத்துக் கொண்டிருந்த திரிஜடை, தன் கனவைப் பற்றி சீதையிடம் மட்டுமல்லாமல், சுற்றி அமர்ந்து அவளை பயமுறுத்திக் கொண்டிருந்த அரக்கிகளிடமும் சொல்கிறாள். சீதைக்கு உரிய மரியாதையைக் கொடுக்கத் தவறினால் எதிர்காலத்தில் அந்த அரக்கிகள் அல்லல்பட நேரிடும் என திரிஜடை அவர்களை எச்சரிக்கிறாள். ராமாயணத்தின் தொடக்கத்தில் பரதனும் சத்துருக்கனனும் கேகய நாட்டிற்கு பரதனின் மாமா வீட்டிற்குச் செல்கிறார்கள். அப்போது பரதனுக்குப் பல துர்ச்சொப்பனங்கள் வருகின்றன. தந்தை தசரதர் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதாக வந்த கனவைக் கண்டு அவன் அஞ்சுகிறான். தந்தைக்கு ஏதேனும் கெடுதல் வரக்கூடும் என சத்துருக்கனனிடம் சொல்லி வருந்துகிறான். அதே நேரத்தில் அயோத்தியில் அவன் தந்தை தசரதர் காலமாகி விடுகிறார் என்கிறது ராமாயணம்...

‘திருவள்ளுவர் சொல்லும் தும்மல் சார்ந்த நம்பிக்கை போன்றவற்றை மூட நம்பிக்கை என ஏளனம் செய்து புறக்கணிப்போர் உண்டு. உண்மை என்று ஏற்றுக்கொண்டு உடன்படுவோரும் உண்டு. இத்தகைய நம்பிக்கைகளைப் பற்றி விரிவாக எழுதிய கண்ணதாசன் தம் ‘அர்த்தமுள்ள இந்துமதம்‘ என்ற நூலில், இந்த நம்பிக்கைகளை விமர்சிப்பவர்களைப் பற்றியும் தம் கருத்தைத் தெரிவித்துள்ளார். ‘இதை மூட நம்பிக்கை என்பார் சிலர். அவர்களை அவர்களுடைய பகுத்தறிவு காப்பாற்றட்டும். எங்களை எங்களது நம்பிக்கை காப்பாற்றட்டும்!’ என்பது கண்ணதாசன் கருத்து!

கண்ணதாசனது நம்பிக்கை, வள்ளுவர் வழியில் வழிவழியாகத் தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை என்பதை நாம் கவனத்தில் கொள்வது நல்லது. நம்பிக்கை என்பது உண்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உண்மையாக இருந்தால் அதை உண்மை என்றே சொல்வோமே? நம்பிக்கை என்று ஏன் சொல்ல வேண்டும்? நம்பிக்கை உண்மையாகவும் இருக்கலாம் அல்லது உண்மையில்லாமலும் போகலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நம்பிக்கை உண்மையை விட வலுவானது!

(குறள் உரைக்கும்)
திருப்பூர் கிருஷ்ணன்

Tags :
× RELATED சுந்தர வேடம்