×

வள்ளலாருக்கு அமுதளித்த வடிவுடையம்மை

அந்தி சாயும் பொழுது. திருவொற்றியூர் திருக்கோயிலில் தாயம் உருளும் ஒலி கேட்டது. தாயம் விளையாடுவது வேறு யாரும் இல்லை இந்த உலகையே ஆட்டி வைக்கும் அம்மையும் அப்பனும்தான்.

உலகமென்னும் நாடக மேடையில் உயிர்களேன்னும் நடிகர்களை ஏற்றி நித்தம் ஒரு நாடகமாடும் ஈசன் இன்று அம்பிகையோடு தாயம் ஆடிக் கொண்டிருந்தான். அவனோடு தாயம் விளையாடும் ஒற்றியூர் வடிவுடை அம்பிகையின் கருணைக்கு எல்லையே இல்லை என்று சொன்னால் அது மிகையாகாது. ஒரு சிறுவனுக்கு அவள் செய்த அருள் இருக்கிறதே அப்பப்பா... அதை அவளை அல்லால் வேறு ஒருவரால் செய்ய முடியாது.  தினமும் வெகுதொலைவு காலால் நடந்து சென்று ஒற்றியூர் உத்தமனையும், வடிவுடை நாயகியையும் தரிசித்துவிட்டு வருவது அந்தச் சிறுவனுக்கு வழக்கம். இன்றும் அதேபோல் காலால் நடந்துச் சென்று அம்மையப்பனை சேவித்துவிட்டு வீட்டிற்க்கு வந்தான் அந்த சிறுவன்.

இரவு அவன் வருவதற்கு தாமதமானதால் அவனது வீட்டில் இருந்தவர்கள் அவன் கோவிலிலேயே தங்கிவிட்டான் என்று எண்ணி கதவை தாளிட்டு விட்டு உறங்கி விட்டனர்.  அர்த்தராத்திரியில் வந்த அந்த சிறுவனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. தனது வீட்டின் கதவைத் தட்டினான். பதிலில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் திண்ணையில் படுத்துக் கொண்டான். பசி மயக்கத்தில் சற்று கண்ணயர்ந்தான். அப்போது மெல்ல அவனது அண்ணி அவனை எழுப்பினாள். அவனுக்கு வயிறு நிறைய தயிரன்னத்தை ஊட்டிவிட்டு அவனை உறங்க வைத்தாள். அவனும் நன்கு உறங்கினான். மறுநாள் விடிந்ததும் அவனது அண்ணி வாசல் தெளிக்க நீருடன் வந்தார்கள். திண்ணையில் அந்த சிறுவனைக் கண்டதும் அவள் அதிர்ந்து போனாள்.

‘‘இரவு கோயிலிலேயே தங்கிவிட்டான்’’ என்று அவள் எண்ணியிருந்த அவளுடைய கொழுந்தன் வாசலில் திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்தான். பதறிய அவள் அவனைச் சென்று எழுப்பினாள். பின் ‘‘ஏன் தம்பி குரல் கொடுத்து என்னை அழைக்கவில்லை. இரவு உண்டாயா இல்லையா’’ என்று பதறியபடியே கேட்டாள். அந்தச் சிறுவனுக்கோ ஒன்றும் விளங்க வில்லை. நேற்று இரவு அவனுக்கு அன்போடு தயிர் அன்னம் ஊட்டிய அண்ணி இப்போது நீ இரவு உண்டாயா என்று கேட்டால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். அந்தச் சிறுவன் அதிசயித்தபடியே பதிலேதும் சொல்லாமல் தியானத்தில் ஆழ்ந்தான். இளம் வயதிலேயே சகல ஞானமும் பெற்றிருந்த அந்தச் சிறுவனின் மனக் கண்ணில் உண்மை புலப்பட்டது.

சாட்சாத் ஒற்றியூர் வடிவுடை நாயகியே அவனுக்கு அவனது அண்ணியின் வடிவில் வந்து தயிர் அன்னம் ஊட்டியதை அறிந்து அவளை நினைத்து உருகினான்! சரி, இப்படி அம்பிகையின் பூங்கைகளாலே தயிர் அன்னம் உண்டவர் யார்? வேறு யாருமில்லை திருவருட்பிரகாச வள்ளலார் என்கிற ராமலிங்க சுவாமிகள். அன்னவரது இளவயதில் நிகழ்ந்த இந்த சம்பவமானது வடிவுடை அம்பிகையின் கருணைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு இல்லையா? இப்படி அன்பே உருவான ஒற்றியூர் ஈசனும் அம்பிகையும்  தாயம் ஆடிக் கொண்டிருந்த வேளையில் வந்து சேர்ந்தாள் அந்த மாதரசி. தலைவிரி கோலமாக கோபத்தின் மொத்த வடிவமாக, அந்த அம்மையார் கோயிலுக்குள் வந்தாள். வந்தவரின் முகத்தில் அசாத்திய சோகம்.

கணவனை இழந்த எந்த ஒரு பெண்ணுக்கும் அந்த சோகம் இருப்பது நியாயம் தானே? அம்மையப்பன் முன்னிலையில் வந்து கைகுவித்து நின்றாள், அந்தக் காரிகை. ‘‘அம்மா உமாமகேஸ்வரி என் கோபம் அடங்குவதாகத் தெரியவில்லை. என் தர்மாவேசத்தால் மதுரை எரிந்தது தான் மிச்சம். இன்னும் வேறு நாசங்கள் ஏற்படும் முன் கண்ணகி என்னும் இந்த அபலையை அடக்கி ஆட்கொள்ளுங்கள் தாயே. இந்த லோக வாழ்கையை நான் வெறுத்து விட்டேன். போதும் நான் பட்டப் பாடு. இனி தங்கள் திருவடியில் நிலையான இன்பத்தை நான் நுகர வேண்டும். தயை புரியுங்கள் தாயே’’ என்று வடிவுடைய அம்பிகையை முழுவதும் சரணடைந்தாள் கண்ணகி. அவளைக் கண்டதும் வாஞ்சையால் அம்பிகையின் உள்ளம் இளகியது.

‘‘தேவதேவா! தன் கணவனின் இறப்பிற்கு நீதி கேட்டு மதுரையையே எரித்து விட்டு வேறு புகலிடம் இல்லாமல் நம்மிடம் வந்திருக்கிறாள் இந்த கற்பிற்கரசி. மேலும் தாமதிக்காமல் தாயத்தை உருட்டுங்கள். நீங்கள் உருட்டும் தாயம் இந்த அபலையின் தாபத்தைப் போக்க வேண்டும். உருட்டுங்கள் வேதநாயகா!’’ என்றாள் அம்பிகை. அதற்கு பதிலேதும் சொல்லாமல் புன்னகைத்தபடியே தாயத்தை உருட்டினான் மகாதேவன். அவன் உருட்டிய வேகத்தில் தாயம் அருகில் இருந்த கிணற்றில் விழுந்துவிட்டது. ‘‘ஆஹா தாயம் கிணற்றில் விழுந்து விட்டதே!’’ என்று வருத்தப்படுவது போல் நடித்தான் ஈசன். அதைக் கண்ட கண்ணகி ஒரு கணம் கூட தாமதிக்கவில்லை. அந்த தாயத்தை மீட்டெடுக்க கிணற்றுக்குள் பாய்ந்தாள்.

இதற்காகவே காத்திருந்தவன்போல் ஈசன் வட்டவடிவப் பாறை ஒன்றை எடுத்து அந்த கிணற்றை மூடினான்.  ‘‘நம் குழந்தையான இவள் இந்த வையகத்தில் பட்டப்பாடு போதும். இனி இவளது உயிர் உன்னோடு கலந்து அமைதி பெறட்டும். கண்ணகியின் ஆவேச வடிவத்தில் இங்கு காளியாக நீ  காலம் தோறும் பக்தர்களுக்கு நல்லருள் புரிய வேண்டும். திரிபுர சுந்தரியாக, தாயன்பைப் பொழியும். நீ அன்பே வடிவான காளியாகவும் இங்கு காட்சி தரவேண்டும். ஆம் உண்மை. அன்பின் வெளிப்பாடே ஒரு தாயின் கோபம். அது சேய்களின் துயரத்தைப் போக்கி இன்பத்தை அளிக்கும். தாயாக கருணை மழை பொழியும் பெண் சந்தர்ப்பம் வந்தால் காளியாக மாறி வதைக்கவும் வேண்டும். அப்போது தான் இந்த உலகம், ‘‘ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே’’என்பதை உணரும்.

ஆம்... உமா! ஈரேழு உலகத்தையும் நான் படைப்பதும் அழிப்பதும் சக்தியான உன்னால் தானே? ஆகவே தாயாகவும் காளியாகவும் நீ இங்கு காட்சி தரவேண்டும். அதைக் காண்பவர்கள் பெண்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆட்டி வைக்கப்படும் கைப்பதுமைகள் அல்ல என்பதை உணர்வார்கள். என்ன உமா சரிதானே?’’  என்றபடியே அம்பிகையை வாஞ்சையோடு நோக்கினான் மகேசன். தென்றலில் அசைந்தாடும் தாமரைப் பூவைப்போல அம்பிகை தன் சிரத்தை மேலும் கீழும் அசைத்து ஈசன் சொன்னதை ஆமோதித்தாள். பின்பு, கண்ணகியின் உயிரை தன்னோடு கலக்கச் செய்து, கண்ணகியின் ஆவேச வடிவாக வட்டப்பாறை அம்மனாக (காளியாக) மாறினாள். அம்பிகை காளி ரூபத்தில் கொள்ளும் கோபம் அன்பின் ஒரு வெளிப்பாடே.

காளியானாலும் சரி உமையவளானாலும் சரி கருணை செய்ய அவள் தயங்குவதே இல்லை. இதை பின் வரும் சம்பவம் நன்கு எடுத்துக் கூறும். இரவு வேளை இருள் கண்ணைக் கரித்தது. காற்றிடமும் அசாத்திய வேகம். மேகமே பிளந்தது போல இடி ஓசை. வானத்தை வீரன் ஒருவன் வாளால் வெட்டியது போல மின்னல். இவை எதுவும் ஒற்றியூர் கோயில் மண்டபத்தில் ஓலையில் ஏதோ எழுதிக்கொண்டுடிருந்த அந்த நபரின் கவனத்தை கலைக்கவில்லை. அவர் திடச் சித்தராக ஓயாமல் எதையோ எழுதிக் கொண்டிருந்தார். அவருக்கு துணையாக ஒளிவிட்டுக் கொண்டிருந்தது ஒரு தீப்பந்தம். அதுவும் வீசிய காற்றில் அணைந்து விட்டது. ஆனால், ஒளியும் மங்கவில்லை அவர் எழுதுவதையும் நிறுத்த வில்லை. நொடிகள் நிமிடங்களாகி உருண்டோடியது.

ஒருவழியாக அந்த நபர் எழுதி முடித்து ஓலையை மூடிவிட்டு எழுந்து நிமிர்ந்து பார்த்தார். அங்கு, செம்பட்டுடுத்தி, அங்கங்கள் எங்கும் தங்க ஆபரணம் மின்ன, காற்றில் கருங் கூந்தல் அலைபாய ஒரு வஞ்சி நின்றுக் கொண்டிருந்தாள். அவளது நெற்றியில் திருநீறு மின்னியது அதன் மத்தியில் குங்குமம் ஜொலித்தது. அண்டசராசரங்களும் அவளது புன்சிரிப்பில் மயங்கியது. அன்பைப் பொழியும்  அவளது முகம் காண்பவர் மனதைக் கொள்ளைக் கொண்டது. தனது பக்தன் கவிதையை படைக்கும்போது தீப்பந்தம் அணைந்து போனதால், தனது இருகைகளாலும் தீப்பந்தம் ஏந்தியபடி நின்றிருந்தாள் வட்டப்பாறை காளி. அவளைக் கண்டதும், ‘‘அம்மா! தாயே! இந்த நாயேனுக்கு அகிலாண்ட நாயகி நீ தீப்பந்தம் ஏந்துவதா? இது என்னம்மா அபத்தம்’’என்று உருகினார் அந்த அடியவர்.

‘‘கம்பனே நீ எழுதுவது ராமாயணம். ராம சேவையை விட உலகில் சிறந்தது எதுவுமே இல்லை. எனக்கோ அந்த ராமன் அண்ணன் முறை வேண்டும். இது அண்ணனுக்காக தங்கை செய்த சேவை. தமிழுக்காக நான் செய்த சேவை.’’ வீணையின் இன்னொலியைப் பழித்தது தேவியின் குரல். ‘‘தேவி! இருப்பினும் இந்த ராமாயணத்தின் அருமையை இந்த வையகம் உள்ளபடி அறியவில்லையே அம்மா. இதை எழுதும் எனக்கும் எத்தனை தடைகள். நீ அறியாததா’’ என்றார் கம்பர், அதிர்ச்சியில் இருந்து மீளாமலே. அதைக்கேட்டு அம்பிகை முல்லைப்பூ பல்வரிசை தெரிய நகைத்தாள்.  ‘‘கம்பா! ராமாயணம் அறிந்த நீ பகவத்கீதை அறியவில்லையா?  அதில் என் அண்ணன், ‘அவ ஜானன்தி மாம் மூடா’ என்று சொல்கிறான்.

அதாவது அவனை மூடர்களால் உள்ளபடி அறிய முடியாது. ஆகவே கவலையை விடு. இந்த வையகத்தில் எதுவரை நிலவும் சூரியனும் உள்ளதோ அதுவரையில் உன் ராமாயணமும் உன் புகழும் நிலைத்திருக்கும். ஆசிகள்’’ என்று கூறி மின்னலைப்போல மறைந்தருளினாள், அம்பிகை. அவளது அசாத்திய கருணையை எண்ணி கம்பரின் கண்களில் கண்ணீரின் தேக்கம்.  இப்படி வேண்டுவோருக்கு வேண்டியதை அருளும் சென்னை - திருவொற்றியூரில் அருளும் வட்டப்பாறை காளியை ஆதிசங்கரரும் பூஜித்து அருட்பெற்றிருக்கிறார். வரங்கள் அனேகம் தரும் வட்டப்பாறை நாயகியையும் வடிவுடையம்மனையும், ஒற்றீசரின் கோயிலில் சென்று தரிசிக்க மனம் ஏங்குகிறது அல்லவா?

ஜி.மகேஷ்


Tags : Vallalar ,
× RELATED மாற்று இடத்தில் வள்ளலார் சர்வதேச மையம் டிடிவி கோரிக்கை