×

காத்தருளும் காட்டழகியசிங்கர்

நலம் தரும் நரசிம்மர் தரிசனம்-13

ஸ்ரீரங்கம், திருச்சி


ஸ்ரீமந் நாராயணன் கொண்ட திரு அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் மிக முக்கியமான ஒன்றாகும்.  தன்னுடைய பக்தனின் திட பக்தியினைப் போற்றும் வண்ணம், அந்த உயரிய பக்திக்கு இம்மியளவும் குறையாது வரங்களை வாரி வழங்கிய வள்ளல் அந்த நரசிம்மன். ஹிரண்ய கசிபுவின் அட்டகாசங்கள் அனைத்திற்கும் அமைதியான ஒரு சாட்சியாக மட்டுமே இருந்தவன், தன்னுடைய பக்தனாம் ப்ரஹ்லாதன் ‘எங்கேயும் 108  திவ்ய தேசங்களுள் தலையாயதான ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாளின் கோயிலைச் சேர்ந்ததுதான் ஸ்ரீ காட்டழகிய சிங்கப்பிரான் கோயில்.

மேற்கு திசை நோக்கி அமைந்த இந்த திருக்கோயில் உயர்ந்த விமானத்துடன் கூடிய கருவறை மற்றும் அந்தராளம், முக மண்டபம், மகா மண்டபம், கருடன் சந்நதியும், நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட பல மண்டபங்களும் கொண்டு விளங்குகிறது. ஸ்ரீரங்கம் சித்திரை வீதியை நிர்மாணித்த வீரபாண்டியனான கடாவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1297) புனர்நிர்மாணம் செய்து பல திருப்பணிகள் செய்ததாக கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. மாதந்தோறும் சுவாதி நட்சத்திரத்தன்று காட்டழகியசிங்கருக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெறுவதுடன் ஒவ்வொரு மாத பிரதோஷ தினமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நரசிம்மர் பிரதோஷ காலத்தில் அவதரித்தபடியாலும், மூன்று கண்களையுடையவராதலாலும் பழைய காலத்தில் சிங்கபிரானுக்கு பிரதோஷகாலத்தில் நடத்தி வந்த பூஜைகள் தற்போதும் தொடர்கின்றன.

பிரதோஷ காலங்களில் வழிபாடு செய்தால் உத்யோகம், மகப்பேறு கிட்டும். திருமணத் தடை நீங்க வைக்கும் வரப் பிரசாதியாகவும் திகழ்கிறார் ஸ்ரீரங்கம் காட்டழகியசிங்கர். ஸ்ரீநரஸிம்ஹர் கோயிலில் பிரதோஷ வழிபாடா? எப்படி சாத்தியம்? நரஸிம்மரும் மூன்று கண்களை உடையவர். பிரதோஷ காலத்தில் இவரை வழிபட்டால் விசேஷ பலன்கள் கிட்டும். ஆனால், இவர் ருத்ர அம்சம் இல்லை. பகவான் விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒரு அவதாரம். ஆனால், ஸ்ரீந்ருஸிம்ஹ ஸ்வாமி அவதாரம் செய்தது, பிரதோஷ காலத்தில்தான்! காரணம், ஹிரண்யகசிபு கேட்டுப் பெற்ற வரம் அது. பகலிலும் அல்லாமல் இரவிலும் அல்லாமல் பிரதோஷ காலத்தில் அந்த வரத்தை அனுசரித்து நரசிம்ஹ அவதாரம் நிகழ்ந்தது. அதனால், இங்கே பிரதோஷ சிறப்பு வழிபாடு உண்டு.

இந்தக் கோயிலுக்கு இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. மகான் ஸ்ரீராமானுஜருக்குப் பின்னர் வந்த பிள்ளைலோகாசார்யர் ஸ்வாமி, ஸ்ரீவசனபூஷணம் என்ற அற்புத கிரந்தத்தை அருளிச் செய்தார். அப்படி அவர் அருளிச் செய்து, அதற்கான ரஹஸ்ய அர்த்தங்களையும் தம் சீடர்களுக்கு உபதேசித்த இடம் இந்தக் காட்டழகியசிங்கர் திருக்கோயிலே! ஆகவே, வைணவர்களுக்கு மிகவும் முக்கியமான இடமாகத் திகழ்கிறது இந்தக் கோயில். சிங்கர் கோயில், காட்டழகியசிங்கர் சந்நதி எனப்படும இந்த சந்நதி, திருவரங்கம் அரங்கநாதர் ஆலய பிராகாரத்தைச் சுற்றி பாதுகாவலாக எட்டுத் திசை தேவதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பிரதோஷ காலங்களில் வழிபாடு செய்தால் உத்யோகம், மகப்பேறு கிட்டும். திருமணத் தடை நீங்க வைக்கும் வரப் பிரசாதியாகவும் திகழ்கிறார் ஸ்ரீரங்கம் காட்டழகியசிங்கர்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர்... இந்த இடம் அடர்ந்த காட்டுப் பகுதியாகத்தான் இருந்தது. திருவானைக்காவுக்குப் பிறகு திருவரங்கம் வரும் வழி எங்கும் யானைகளும் இதர கொடிய மிருகங்களும் உலவும் இடமாகத் திகழ்ந்ததாம். இந்தப் பகுதியில் அடிக்கடி யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து, விவசாயத்தைப் பாழ்படுத்தி, மக்களுக்கும் பெரும் பய நெருக்கடியைத் தந்திருக்கிறது. அந்த நிலையில், யானைகளின் தொல்லையில் இருந்து தன் எல்லை மக்களைப் பாதுகாக்க, பெரியாழ்வாரின் சீடராகத் திகழ்ந்த நெடுமாறன் என்ற சீர்ப் பெயர் பெற்ற வல்லபதேவ பாண்டியன், லக்ஷ்மி நரஸிம்மப் பெருமாளை இங்கே எழுந்தருளச் செய்து, கோயிலையும் கட்டுவித்தான். அப்படி உருப்பெற்றதுதான் இந்தக் கோயில். இதன் பின்னர் யானைகளின் தொந்தரவு குறைந்தது.

காட்டுக்குள் குடியிருந்ததால் பெருமாள் காட்டழகிய சிங்கரானார். கிட்டத்தட்ட பதினைந்து நூற்றாண்டுகள் பழைமையான ஆலயமாகத் திகழ்கிறது. இருந்தபோதும், கி.பி.1297 வாக்கில், வீரபாண்டியனான ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் இந்தக் கோயிலை எடுத்து புனர்நிர்மாணம் செய்து, கோயில் அழகுறத் திகழ வழி ஏற்படுத்தினான். இந்த மன்னனே, திருவரங்கம் சித்திரை வீதியை அமைத்து பொலிவுபடுத்தியவன். இவனுக்கு கலியுகராமன் என்றும் பெயர் உண்டு. இவன் பெயரிலேயே வேதியர் குடியிருப்பான, கலியுகராமன் சதுர்வேதிமங்கலம் இங்கே அமையப் பெற்றது. ஸ்ரீரங்கம் கோயிலின் ஆயிரம் கால் மண்டபம் இருக்கும் கிழக்கு ராஜ கோபுரத்தின் வழியாக வெளியே வந்து, கீழ அடையவளஞ்சான் தெரு வழியாக நேர் கிழக்கே செல்லும் சிறு சாலையில் சுமார் ஒரு கி.மீ. தொலைவு சென்றால் இந்தக் கோயிலை அடையலாம்.

முகப்பில் வரவேற்பு வளைவு உள்ளது. கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழையும்போதே இடப்புறத்தில் அழகான பெரிய மண்டபம் ஒன்றைக் காண்கிறோம். திருவரங்கம் நம்பெருமாள் விஜயதசமி அன்று பல்லக்கில் எழுந்தருளி இந்த மண்டபத்துக்கு வருகிறார். இங்கே நம்பெருமாளுக்கு திருவாராதனம், அமுதுபடிகள் ஆன பிறகு தங்கக் குதிரையில் ஏறி பார்வேட்டைக்குக் கிளம்புகிறார். இந்தக் கோயிலில் உள்ள வன்னி மரத்துக்கு திருவாராதனம் ஆனபிறகு, வேட்டை உற்ஸவம் தொடங்குகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மண்டபம் இது. இந்த நிகழ்ச்சி நடந்த பின்னர் நம்பெருமாள் திருவீதிகளில் புறப்பாடு கண்டருளி பெரிய கோயிலில் உள்ள காயத்ரி மண்டபத்தில் உபயநாச்சியார்களுடன் திருமஞ்சனம் ஏற்கிறார்.

பின்பு தனது கருவறைக்கு எழுந்தருள்கிறார். திருவரங்க திருத்தலத்தில் உள்ள ரங்கமண்டபமே காயத்ரி மண்டபம் எனப்படுகிறது. அந்த மண்டபத்தில் உள்ள 24 தூண்களும் காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களாக கூறப்படுகின்றன. கோயிலின் உள்ளே செல்கிறோம். பலிபீடத்தைத் தாண்டி, கோயிலின் முன் மண்டபத்துக்குள் செல்கிறோம். மேலே பார்த்தால், அழகான திருவுருவப் படங்கள். திருச்சுற்றில் வலம் வருகிறோம். பரிவார தேவதைகளாக விஷ்வக்சேனரின் படைத்தலைவரான கஜானனர் தரிசனம் முதலில்! இதில் யோகஅனந்தர், யோக நரஸிம்மர் ஆகியோருடைய தரிசனமும் கிட்டுகிறது. காயத்ரி மண்டபத்தில் யோக நாராயணர், யோக வராஹர் ஆகியோரின் தரிசனம் கிடைக்கிறது.  வலப்புறத்தில் வன்னிமரம் மற்றும் நாகப் பிரதிஷ்டையோடு கூடிய மரங்களையும் காண்கிறோம்.

உயர்ந்த விமானத்தோடு கூடிய கர்ப்பக்ருஹம். முகமண்டபம், மஹாமண்டபங்கள்  போன்றவை பொலிவோடு திகழ்கின்றன. எதிரே கருடனுக்கு சந்நதி உள்ளது. கருவறை, அந்தராளம், முகமண்டபம், மஹாமண்டபம், கருடன் சந்நதி ஆகியவை ஒன்றாக சீராக அமைந்துள்ளன. இன்னும் பல மண்டபங்கள், உத்தமநம்பி வம்சத்தில் உதித்த சக்ரராயராலும்,நாயக்க மன்னர்களாலும் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் சுவர்களில் உள்ள ஓவியங்கள் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. பிளந்த தூணிலிருந்து நரஸிம்மர் வெளிப்படும் தோற்றம், ஹிரண்யகசிபுவுடன் போர் செய்யும் தோற்றம், உக்ர நரஸிம்மராக, ஹிரண்யகசிபுவை தன் மடியில் கிடத்தி வதம் செய்யும் கோலம், பிரஹலாதன் நரஸிம்மரிடம் வேண்டிக் கொண்டு சாந்தப் படுத்தும் தோற்றம், லக்ஷ்மி நரஸிம்மர், யோக நரஸிம்மர், அனந்த நரஸிம்மர் என்று பல்வேறு வடிவங்களில் நரஸிம்மரின் தரிசனம் இங்கே நமக்குக் கிடைக்கிறது.

குலசேகரன் திருச்சுற்றான துரை பிரதட்சிணத்தில் உள்ள தூண்களிலிலுள்ள தசாவதார உருவங்கள் அழகுற அமைந்துள்ளன. அதிலும் ஸ்ரீநரஸிம்மரின் உருவம் அவ்வளவு அழகு; தெளிவு! சடையவர்மன் சுந்தர பாண்டிய மன்னனுக்குப் பின்னர் காட்டழகிய சிங்கர் கோயில் திருப்பணிகள் பலவற்றை பெரியாழ்வாரின் பிரதான சிஷ்யர்களில் ஒருவரான வல்லபதேவ பாண்டியன் நிறைவேற்றினார். மேற்கு திசை நோக்கி அமைந்துள்ள சிங்கப்பிரானின் சந்நதியின் முன்புறம் கருடன் சந்நதியானது அமைந்துள்ளது. சிங்கப் பிரானின் சந்நதி ஒரு கணிசமான உயரத்தில் படிக்கட்டுகள் ஏறி அடையும்படி கட்டப்பட்டுள்ளது. கோயிலின் கிழக்குப் புறம் தல புராணம் அமையப் பெற்றிருக்கின்றது. காட்டழகியசிங்கர் மூலவர் நான்கு திருக்கரங்களை உடைவராக சேவை சாதிக்கின்றார்.

மேலே உள்ள இரண்டு திருக்கரங்களில் சங்கு மற்றும் சக்கரத்தினை ஏந்திய வண்ணம் வீற்றிருந்த கோலத்தில் இருக்கும் மூல மூர்த்தியானவர், தனது கீழ் வலது கையினால் பக்தர்களுக்கு அபயம் அளித்தவாறு இடது கையினால் தன் மடிமீது அமர்ந்திருக்கும் தாயாரை அணைத்த வண்ணம் வீற்றிருக்கின்றார். இரண்டு அடுக்குகளாக அமைக்கப்பட்டிருக்கும் சிங்கப்பிரானின் சந்நதியானது மிகவும் விஸ்தாரமானதாக உள்ளது. சிங்கப்பிரான் சந்நதிக்கு ஏறிச் செல்வதற்கும் இறங்கி வருவதற்கும், சந்நதியின் இரு புறங்களிலும் சீராக அமைக்கப்பட்ட பாறையினாலான படிக்கட்டுகள் உள்ளன. சிங்கப்பிரானின் தரிசனம் முடிந்து படிக்கட்டுகள் இறங்கி கோயிலை வலம் வரும்பொழுது, கிழக்கே வலது மூலையில், ஒன்பது துளசி மாடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொன்றிலும் துளசிச் செடிகள் பசுமையாக வளர்ந்திருக்க, இவற்றை வலம் வந்தால் நவகிரஹங்களை வலம் வருவதாக இங்கே ஒரு நம்பிக்கை நிலவுகின்றது. இந்த துளசி மாடங்களுக்கு நேரெதிரே கிழக்கே இடது மூலையில், சிங்கப்பிரானுக்கு நைவேத்தியம் செய்வற்கென  தனியாக திருமடப்பள்ளி அமைந்துள்ளது.  இங்கு சிங்கப்பிரானுக்கு நித்தம் நைவேத்தியம் செய்வதற்கும், அந்தப்பரமனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு பக்த கோடிகள் சமர்ப்பிக்க விரும்பும் அமுது வகைகளும் சமைக்கப்படுகின்றன. இந்த திருமடைப்பள்ளியில் செய்யப்படும் உணவே காட்டழகிய சிங்கப்பிரானுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது சுற்று வலம் வந்து, சந்நதிக்குள் செல்கிறோம். பழைமையின் கம்பீரம் உள் மண்டபத்தில் தெரிகிறது.

உக்ரம்வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோமுகம்; ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யோர் ம்ருத்யும் நமாம்யஹம் என்று ஜொலிக்கும் மின்விளக்கு அலங்காரம் நம்மை நரஸிம்மப் பெருமானைக் குறித்த தியானத்துக்கு தூண்டுகிறது. கருவறையில், மஹாலக்ஷ்மியை மடியில் இருத்தி, ஆலிங்கனம் செய்த கோலத்தில் லக்ஷ்மி நரஸிம்ஹராக காட்டழகிய சிங்கப் பெருமானை தரிசிக்கிறோம். மிகப் பெரிய உருவம். சுமார் எட்டு அடி உயரம். திருத்தமான அமைப்பு. வெள்ளியில் அமைந்த பற்கள் அமைப்பு நரஸிம்ஹப் பெருமானின் தத்ரூப தரிசனத்தை மனக்கண்முன் நிறுத்துகிறது. காட்டழகிய சிங்கர் கோயிலுக்கென பல சிறப்பம்சங்கள் உள்ளன. அவற்றுள் சிலவற்றை பார்க்கலாம்.

நரசிம்மரது இடது தொடையின் மீது மிகவும் சாந்தமாக அமர்ந்த கோலத்தில் இருக்கும் தாயாரின் கண்மலர்கள் முழுவதுமாக திறந்த வண்ணம் காட்சியளிக்கின்றன. இது மிகவும் விசேஷமான ஒரு அமைப்பானதினால், இந்த திவ்ய தம்பதிகளை தரிசனம் செய்பவர்களுக்கு அவர்களது பரிபூர்ண கடாக்ஷம் கிடைக்கப் பெறுகின்றது. காட்டழகிய சிங்கர் மூல மூர்த்தியின் இடது தொடைதனில் அமர்ந்திருக்கும் தாயாரின் திருவடிகள் இரண்டும் தெள்ளத் தெளிவாக சேவையாவது கிடைத்தற்கரிய ஒரு வரமாகும். இந்தப் ப்ரபஞ்சத்திற்கே படியளக்கும் லோகமாதாவின் திருவடிகள் தானே நமக்கெல்லாம் மங்கலத்தையும் எல்லா விதாமான சுபங்களையும் அளிக்க வல்லது ! அப்படிப்பட்ட சக்திவாய்ந்த தாயாரானவள் தனது திருவடிகளை, அழகிய தாமரை பீடத்தின் மேல் பாந்தமாக ஊன்றிய வண்ணம்  திருவருட்பாலிக்கிறாள்.

காட்டழகிய சிங்கருக்கு உத்ஸவ மூர்த்தி கிடையாது. இது இந்தக் கோயிலின் தனிப்பெரும் சிறப்பாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாளுக்கு காவலாக வீற்றிருக்கும் தெய்வம் ஆதலால், இவரது உத்ஸவராக அந்தப் பெரிய பெருமாளே (ரங்கநாதப் பெருமாள்) அமைகிறார். காட்டழகிய சிங்கரின் பெருமையினையும் சக்தியையும் இந்த உலகிற்குப் பறைசாற்றும் விதமாக, பிரதி வருடமும் விஜயதசமியன்று நம்பெருமாள் (ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள்) விசேஷ பல்லக்கில் இந்தக் கோயிலுக்கு எழுந்தருளுகிறார். கோயிலின் முன் மண்டபத்தில் பீடத்தில் இருந்த வண்ணம் சேவார்த்திகளுக்கு காட்சி தருகின்றார். விசேஷ திருவாராதனம் (பூஜைகள்) மற்றம் அமுதுபடிகள் (நைவேத்தியம்) ஆகியவை அவருக்கு நடக்கும்.

முன்பே சொன்னபடிமுன்னொரு காலத்தில் யானைகளும் கொடிய காட்டு மிருகங்களும் வசித்து வந்த வனமாக இருந்த இந்த இடத்திலிருந்து தங்கக் குதிரை வாகனத்தில் ஏறி ஸ்ரீரங்கநாதர் வேட்டைக்குப் புறப்பட்டு செல்வதாக ஐதீகம். இது ‘வேட்டை உத்ஸவம்’ என்று இன்றளவும் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. ரஹஸ்யம் விளைந்த மண் ஆதலால், இந்த சிங்கப் பிரானை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு உயர்ந்த ஞானம் சித்திக்கும் என்பது ஐதீகம். வைஷ்ணவ சம்பிரதாயத்தின் முதன்மையான திவ்யதேசப் பெருமானான ஸ்ரீரங்கநாதனுக்கே ரக்ஷையாக இந்த சிங்கப்பிரான் அமைவதால், இவரை வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு இவர் பெரும் காப்பாக அமைகின்றார். சகல நலன்களையும் வாரி வழங்கும் ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்மரை தரிசித்து வளம் பெறுவோம்.

இந்தக் கோயிலில் மாதந்தோறும் ஸ்வாதி நட்சத்திரத்தன்று விசேஷ  திருமஞ்சனம் நடக்கிறது. அதுபோல்,பிரதோஷ தினங்களிலும் சிறப்பு வழிபாடுகள் உண்டு. சிங்கப்பெருமானின் வருஷத் திருநட்சத்திரம் ஆனி மாதத்திலும், ஜ்யேஷ்டாபிஷேகம் ஆடி மாதத்திலும் நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் உற்ஸவர் தனியாக இல்லையென்பதால். எனவே, மற்ற உற்ஸவங்கள் அதாவது பிரம்மோற்ஸவம், ஊஞ்சல் உற்ஸவம் போன்றவை நடைபெறுவதில்லை! ‘அழகிய சிங்கர்’ என்றாலே ஸ்வாதி நட்சத்திரம் மிகவும் விசேஷமான ஒன்றுதான். பிரதி மாதமும் ஸ்வாதி நட்சத்திரத்தன்று காட்டழகிய சிங்கபிரானுக்கு பானகம் செய்வதற்கு வெல்லம் சமர்ப்பிப்பது மிகச் சிறப்பான பிரார்த்தனையாகக் கருதப் படுகின்றது.

நினைத்த கோரிக்கைகளை நிறைவேற்றிவைக்கும் நரசிம்மப் பெருமாளுக்கு மிகவும் பிடித்தமான பானக நைவேத்தியம் இங்கே சிறப்பு. வெல்லம், சுக்கு, ஏலக்காய் முதலியவற்றை பெருமாள் சந்நதியில் நைவேத்தியத்துக்குக் கொடுத்தால், சந்நதியில் அர்ச்சகர்கள் பெருமாளுக்காக எடுத்து வைத்த தீர்த்தத்தில் பானகம் கரைத்து அதை பெருமாளுக்கு நிவேதனம் செய்து தருகிறார்கள். அந்த பானக பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கினால், பிரார்த்தனை நிறைவேறுவது கண்கூடு. காட்டழகிய சிங்கப்பிரானுக்கு வேண்டுதல்கள் செய்து கொண்டு, சர்க்கரைப் பொங்கல் மற்றும் இதர பிரசாதங்கள் செய்வதற்கு. கோயில் அலுவலகத்தினில் கட்டணம் கட்டுவது பழக்கத்தில் இருக்கும் மற்றொரு பிரார்த்தனை யாகும். இத்தகைய பிரசாதங்கள் கோயிலின் திருமடப் பள்ளியிலேயே செய்து தரப்படும்.

காட்டழகிய சிங்கரின் இடது மடியில் அமர்ந்திருக்கும் தாயாருக்கு திருமாங்கல்யம் வாங்கிச் சமர்ப்பிப்பது திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு கல்யாண யோகம் கை கூடவும், திருமணம் முடித்த பெண்களுக்கு சுமங்கலி யோகம் கூடுவதற்கும் சிறந்ததொரு பிரார்த்தனையாகும். காட்டழகிய சிங்கபிரான் திருவடிகளின் வியாபார நிமித்தமான கணக்குப் புத்தகங்களை வருட ஆரம்பங்களிலும் இறுதியிலும் சமர்ப்பிப்பது, வியாபாரத்திற்கு ரக்ஷையாக (காப்பாக) இருக்கும் என்பது பலரது நம்பிக்கை. பிறந்த நாள் மற்றும் திருமண நாள் போன்ற முக்கியமான நாட்களில் காட்டழகிய சிங்கருக்கும், அவனை ஆலிங்கனம் செய்தபடி அவனது மடிதனில் அமர்ந்திருக்கும் தாயாருக்கும், வஸ்திரம் வாங்கிச் சமர்ப்பிப்பது உயர்ந்த ஒரு பிரார்த்தனையாகக் கருதப்படுகின்றது.

ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யரான பிள்ளை லோகாச்சார்யார் தனது நூல்களை விஸ்தாரமாக விளக்கிய ‘ரஹஸ்யம் விளைந்த மண்’ ஆதலால். பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள் தத்தம் படிப்பினில் வெல்லுவதற்கு இங்கு பிரார்ததனை செய்து கொண்டு 18 ப்ரதக்ஷிணங்கள் நித்தம் செய்து வர ஞானம் மேம்படும். காட்டழகிய சிங்கரை தரிசிக்காமல் ஸ்ரீரங்கத்திற்கு மேற்கொண்ட யாத்திரையானது பூர்த்தியாவது இல்லை. மேலும் ஸ்ரீரங்க நாதனின் திருவருள் இல்லாமல் காட்டழகிய சிங்கரின் தரிசனம் கிடைக்காது என்பதும் திண்ணம். லக்ஷ்மி ந்ருஸிம்ஹரைத் துதித்தபடி கோயிலில் இருந்து வெளியே வருகிறோம். என்றும் எல்லோருக்கும் காட்டழகிய சிங்கப் பெருமானின் திருவருள் கிடைப்பதாக! காட்டழகியசிங்கர் மட்டுமா? மேட்டழகிய சிங்கரும் இங்கு உண்டே! வைணவர்களுக்கு பெரிய கோயில் என்று போற்றத்தக்க திருவரங்கம் பெரிய கோயிலில் தாயார் சந்நதிக்கு அருகில் உள்ளது மேட்டழகிய சிங்கர் கோயில்.

திருவரங்கத்தில் மேட்டழகிய சிங்கர், காட்டழகிய சிங்கர் சந்நதிகள் மிகப் பெருமை வாய்ந்தவை. அதிலும் மேட்டழகிய சிங்கர், திருவரங்கம் திருக்கோயிலிலேயே சந்நதி கொண்டிருப்பதால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலானோரும் தரிசிக்க வாய்ப்பு உண்டு. ஆனால், காட்டழகிய சிங்கர் சற்று தொலைவில், கோயிலில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ளதால், பலரும் அறியாத நிலை உள்ளது. கம்பரின் ராமாயண அரங்கேற்றம், மேட்டழகிய சிங்கர் சந்நதிக்கு எதிரில் உள்ள மண்டபத்தில்தான் நடந்ததாம். அரங்கேற்றத்தின்போது அழகியசிங்கர் சிரித்த ஒலி இடியென அனைவருக்கும் கேட்டதாம். அழகிய சிங்கரைப் பாட எண்ணியே கம்பர் தம் ராமாயணத்தில் சிங்கப் பெருமானின் பெருமையையும் பக்தன் பிரகலாதனின் மூலம் நாராயண மந்திரப் பெருமையையும் சொல்ல எண்ணி, இரணியன் வதைப் படலம் என்ற ஒன்றையே வைத்துப் பாடினாராம்.

மூல நூலான வால்மீகி ராமாயணத்தில் இது இல்லை என்றாலும், கம்பர் இந்த மேட்டழகிய சிங்கருக்காகவே பாடியதுதான் இரணியன் வதைப் படலம் என்பர். காட்டழகிய சிங்கர் கோயில் பெரிய கோயிலில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ளது. ஸ்ரீரங்கம் கோயிலின் ஆயிரம் கால் மண்டபம் இருக்கும் கிழக்கு ராஜ கோபுரத்தின் வழியாக வெளியே வந்து, கீழ அடையவளஞ்சான் தெரு வழியாக நேர் கிழக்கே செல்லும் சிறு சாலையில் சுமார் ஒரு கி.மீ. தொலைவு சென்றால் இந்தக் கோயிலை அடையலாம். கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.

(தரிசனம் தொடரும்)

ந.பரணிகுமார்

Tags :
× RELATED தெளிவு பெறுவோம்