×

நீயே! எந்தன் மெய்யருளே!

அபிராமி அந்தாதி c-46

ஆகம சாத்திரத்தின் வழி அமைக்கப்பட்ட அபய வரத முத்திரையையே அபிராமி பட்டர் ‘‘அஞ்சல் என்பாய்’’ என்று தமிழ்படுத்தி பாடலில் மூலம் விளக்கியுள்ளார்.
 
‘‘அத்தர் சித்தம் எல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே ’’

அத்தர் என்ற வார்த்தை சிவ பெருமானைக் குறித்தது சிவபெருமான் மிகுந்த கோபமுடையவன் என்பதை வேதங்கள் ‘‘ருத்ரமன்யவ’’ என்று கூறுவதால் அறியலாம் குருக்கை வீரட்டானத்தில் - சிவபெருமான் தவத்தினால் புலன்களை அடக்கி யோகத்தில் தனக்குள்ளே தன்னைப் பார்த்து அமர்ந்திருக்கும் திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றார். இவர் பெண்களை முற்றிலும் விலக்கி தூய பிரம்மச் சர்ய விரதத்தால் மனமடக்கியவராக உள்ளார். அத்தகைய கடுமையான தவம் செய்யும் இரும்பு போன்ற உறுதியான இதயத்தை உமையம்மையானவர் தன் கடுமையான தவத்தால் மலர் போன்று மென்மையான குழையும் தன்மையுடையதாய்  மாற்றி உலக உயிர்கள் அனைத்திற்கும் போகத்தை அருளும்படி செய்தாள் என்கிறது குமார சம்பவம் என்னும் காவியம். அந்த கருத்தையே ‘‘அத்தர் சித்தம்’’ எல்லாம் குழைக்கும்’’ என்கிறார் அபிராமி பட்டர்.

‘‘களபக்குவி முலை’’:  
    
என்பதனால் உமையம்மையின் வயதை மறைமுகமாக குறிப்பிடுகின்றார். உமையம்மையை ஏழுபருவத்தில் உள்ளவளாய் தியானித்து வழிபடுவது என்பது வெவ்வேறு  பலனை தரும் என்பதை கீழ்க்கண்ட பாடல் வரிகளால் அறியலாம். அந்த வகையில் உமையம்மை (அழியாத கன்னிகை) - 8 ‘‘அந்தை துணைவி’’- 8 , பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள் கூர். திருத்தன பாரமும் -9 என்ற வரிகளால் உமையம்மையை வெவ்வேறு நிலைகளில் பாடியுள்ளார். பண்டை காலத்தில் ஒன்பது வயது முதல் பதிமூன்று வயதுக்குள் பருவமடையாத பெண்கள் மார்க்கச்சு அணிவதில்லை, அதை தவிர்ப்பதற்கு சந்தனத்தை மார்பில் முழுவதுமாய் பூசி இருப்பார்கள். இத்தகைய பருவத்திலுள்ள பெண் குழந்தைகள் தோழிகளுடன் விளையாட்டில் ஆர்வமுடையவர்களாய் இருப்பர். இப்பருவத்தில் உள்ளவளாய் உமையம்மை சரஸ்வதி, லட்சுமி என்னும் தன் தோழியருடன்  பாலாம்பிகை என்ற பெயரிய கால சம்ஹாரமூர்த்தியுடன்  எழுந்தருளியிருப்பதை இன்றும் காணலாம்.

‘‘யாமளைக் கோமளமே’’

யாமளை என்பது யாமம் என்கிற நடு இரவு பொழுதில் துதிக்கப்படுவதனால் காளியைக் குறித்தது. இதை அபிராமி பட்டர் ‘‘யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது -73 என்று கூறிப்படுவதிலிருந்து அறியலாம். சக்தி உபாசகர்கள் உமையம்மையை இரவு, பகல். இவை இரண்டும் இணையும் பொழுதாகிய சந்தியா என்ற மூன்று காலங்களிலும் வழிபடுவார்கள். காலையில் வழிபடுவதினால் ஞானத்தையும் இரவு வழிபடுவதினால் மோட்சத்தையும் அடைவார்கள் என்கிறது ஆகமம். அந்த வகையில்  யாமளை  என்கிற  உமையம்மையானவள்  தன்னை  இரவு  பொழுது வணங்குகிறவருக்கு உலகியல்  செல்வங்களாகிய போகம் என்ற  அகிலமதில்  நோயின்மை  கல்விதனம்  தானியம். அழகு, புகழ்,  பொறுமை, இளமை, அறிவு, சந்தானம்,  வலிதுணிவு, வாழ்நாள் வெற்றி ஆகும் நல்லூழ் நுகர்ச்சி தொகை தரும் பதினாறு பேறும் - (பதிகம்) பெறுவர் என்பதையே ‘‘யாமளை’’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார்.

கோமளமே :- மனமகிழ்ச்சி தருகின்ற களிப்பற்ற மாறிக்கொண்டேயிருக்கக் கூடிய அழகுத் தன்மையைப் பெற்று திகழ்வதால் திருக்கடையூரில் உள்ள உமையம்மைக்கு அபிராமி என்று  பெயர். அந்த அபிராமி என்ற வடசொல்லைத் தமிழ் படுத்தி ‘‘கோமளமே’’ என்று குறிப்பிடுகின்றார். ‘‘கோமளமே ’’ என்ற வார்த்தைக்கு மான் என்பது பொருள். இந்த மான் லட்சுமியை குறிக்கும் இதையே சிவபெருமான் மானாக கையில் தாங்கி அருட் பாலிக்கின்றார். ‘‘கோமளம்’’ என்ற வார்த்தைக்கு நீர் என்றும் பொருள் நீரையே அமுதம் என்கிறது வேதம். ‘‘அமிர்தமே போ’’ திருக்கடையூரில் அபிராமி நீராகவும் சிவ பெருமான் அந்த நீர் இருக்கும் குடமாகவும் எண்ணி வழிபடுகின்றார்கள் அந்த கருத்தையே அமிர்தகடேஸ்வரர் என்று அவர் பெயரில் வழங்குவதிலிருந்து அறியலாம். அந்த நீராகிய உமையம்மையை ‘‘கோமளமே’’
என்கிறார் அபிராமி பட்டர்.

‘‘உழைக்கும் பொழுது’’

உழைக்கும் என்ற சொல்லிற்கு ஐந்திற்கு மேற்ப்பட்ட பொருட்கள் உள்ளன. அவை அத்துணைப் பொருளிலும் அபிராமி பட்டர் அந்த சொல்லை பயன் படுத்துகின்றார்.

வருத்தப்படுதல் :- என்ற பொருளில் ‘‘இதுவோ உந்தன் மெய்யருளே’’ - 57 என்று தான் வேண்டியது கிடைக்காத போது வருந்துகின்றார். அப்படி வருத்தப்படுகின்ற போது சொல்லால் எழும் ஒலி என்று பொருள், இது ஜபத்தை குறிக்கும். அப்படி ஜபம் செய்கின்ற பொழுது.
    
வருத்தப்படுவது :- என்ற பொருளில் ‘‘பொய்யும் மெய்யும் இயம்பவைத்தாய் இதுவோ உந்தன் மெய்யருளே ’’- 57 சொல்லால் எழும் ஒலி என்ற பொருளில் ‘‘மன்னியது உன் திரு மந்திரம்’’ - 6 என்று மந்திரத்தை குறிப்பிடுகின்றார். முயற்சி செய்தல் என்ற பொருளில் ‘‘முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் - 25. வேலை செய்தல்  என்ற பொருளில் ‘‘பன்னியது உன் தன் பரமாகம பத்ததியே’’ - 6 ‘‘பத்ம பதயுகம் சூடும் பணி ’’- 27 வழிபாடு செய்து வைக்கும் பணியை குறிப்பிடுகின்றார். சேகரித்தல் என்ற பொருளில் தான் சேகரித்த வினைப் பயனின் வழியாக ‘‘வினையேன்’’- 66 வினையை சேகரித்த ஆன்மாவாக தன்னைக் குறித்துக் கொள்கிறார்.

இந்த அறுவகை பொருளாலும் வினை சேகரித்ததால் வருத்தல். அதை நீக்குவதற்கு அவள் திருநாமத்தை சொல்லுவதாகிற ஜபமும், ஜபத்தை இடை விடாமல் தொடர்ந்து செய்த முயற்சியால், அவருக்கு கிடைத்து இறையருட்பணி. அதை தான் ‘‘உழைக்கும் பொழுது’’ பணி செய்யும் பொழுது என்று குறிக்கின்றார். மேலும் ‘‘உழைக்கும் பொழுது’’ என்ற வார்த்தையால் மனிதர்கள் துன்புறுகின்ற    பொழுது எல்லாம் அதை நீக்குவதாக. கருதுபவர்களை சரணடைவதை நாம் காண்கிறோம். அந்த வகையில் அபிராமி பட்டர் தனக்கு துன்பம் வருகிற போது அதை நீக்குபவள் என்ற முறையில் அபிராமி அம்மையையே குறிப்பிடுகின்றார்.

‘‘உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே ’’

‘‘உன்னையே’’ என்ற வார்த்தையால் அபிராமியைத் தவிர முருகன் விநாயகர் போன்ற பிற தெய்வங்களை நீக்கி. அபிராமி ஒருத்தியையே வணங்குவேன் என்று ‘‘உன்னையே’’ என்ற கடைசியில் உள்ள ‘‘ஏ’ கார்த்தினால் வலியுறுத்தினார். ‘‘அன்னையே’’ என்ற வார்த்தையால் அன்னுதல், அருகிலிருந்தல், விலகாதிருத்தல் சாந்திருத்தல் தனித்திருத்தல், அல்லது சேர்ந்திருத்தல்  என்கிற பொருளையுடைய, பிறந்த குழந்தையின் தாயைப் போல், பிறந்த குழந்தைக்கு எதுவும் தெரியாது என்ற காரணத்தால், அதற்கு துன்பம் வரும் என்று அஞ்சி தாயானவள் விலகாதிருப்பதாலும், பிறந்த குழந்தையானது உணவிற்காக முழுவதும் தாயின் முலைப்பாலையே சார்ந்திருத்தலால்.

தாயைத் தவிர பிற உறவுகளாகிய அண்ணன், தந்தை போன்ற உறவுகளை சார்ந்து இருக்காமல் குழந்தையானது தான் மட்டுமே தாயிடம் தனித்து பிற உறவுகளை நீக்கி ஒன்றியிருத்தலால். பிற உறவுகள் போல், உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் குளியல் மற்றும் மல ஜலம் நீக்கல், போன்ற இயல்பான செயல்களில்  நீங்கியிருக்காமல். சேர்ந்தே இருக்கும்.  இத்துணை  நெருக்கத்தை  உமையம்மையினிடத்து  அபிராமி பட்டர் பெற்றிருப்பதனாலேயே  இவ்வளவு பொருட்கள் படும் ஒரே வார்த்தையால் ‘‘அன்னையே ’’ என்றார். மாணிக்கவாசகரும் ‘‘உன் கைபிள்ளை’’ உனக்கே அடைக்கலம் என்று கூறுகிறார்.

வழவூரில் - வேளம் உரித்த பிரான் அருகில் இருக்கும் பால குசாம்பிகா என்ற உமையம்மை தன் கையில் குழந்தையை தூக்கி இருப்பதால் திருவெண்காட்டில் பிள்ளையிடுக்கியம்மன், என்னும் அம்மன் உள்ளது. திருக்கடையூரிலும் அவ்வாறு உள்ளது என்பதை பாடலின் மூலமாகவும், கோயிலின் வழி குறிப்பிடப்படும் விக்ரஹம் மூலமாகவும் நன்கு அறியப்படும். ‘‘என்பன் ஓடி வந்தே’’- பிறர் அடிக்கவோ, துன்புறுத்தவோ செய்தால் குழந்தையானது தாயிடத்து அஞ்சி ஓடி வந்து கால்களை கட்டிக் கொள்ளும் அது போலவே அபிராமி பட்டரானவர் தான் துன்புறும் காலத்திலும், எமனால் அச்சுறுத்தப்படும் காலங்களிலும் உமையம்மையின் திருவடி தழுவிக்கொள்கிறார்.

அந்த துன்பத்தின் மிகுதியை காட்டவே ‘‘ஓடி வந்தேன்’’ என்கிறார். ‘‘உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே’’ என்ற தொடரால் வேறொருவரிடம் சரண்புகுதல் என்பது இல்லை, உன் திருவடி மட்டுமே புகலிடம். அதை மனதில் கொண்டு என்னை காத்தருள வேண்டும் என்கிறது தேவி மகாத்மியம். இதையே ‘‘கண்ணியது உன் புகழ்’’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார். சைவமானது இறைவனிடத்தும் பக்தன் செலுத்தும் அன்பை தோழமை நெறி, மகன்மை நெறி, குரு நெறி அடிமை நெறி, என்று நால்வகையாக பிரிப்பதைப் போல் சாத்தியமானது இறைவனிடத்து அன்பு செலுத்துவது.

‘‘வாத்ஸல்ய பாவம்’’ என்ற தாயாக கருதி அன்பு செலுத்துவது.‘‘ஸ்வஸ்ரு  வாத்ஸல்யம் ’’- தன் புதல்வியாக என்ற நெறி உள்ளது. இதை தான் தன்னுடைய வழிபாட்டு நெறியானவும். இறைவியை அடைவதற்கு உண்டான வழியாகவும். அபிராமி அந்தாதியை வலியுறுத்துவதற்காகவும்.  ‘‘உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே’’ என்று தன் உள் உணர்வை அபிராமியிடம் முன்னமே கூறிவைத்தார்.

(தொடரும்)

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?