×

மண் குளிர வான் மழையே வா!

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகர்ந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

ரிஷ்ய சிருங்கர், விபாண்டகர் என்ற ரிஷிக்கும் ஒரு கலைமானுக்கும் பிறந்தவர். பாகவதத்தில் இவரைப் பற்றிப் பேசப்படுகிறது. விபாண்டகர், மகனை பெண் வாசனையே தெரியாதபடி வளர்த்தார். தன் ராஜ்யத்தில் பல்லாண்டுகள் மழை இல்லாது இருக்கையில் மன்னன் ரோமபாதன், தன்  குருவின் அறிவுரையை ஏற்று, ரிஷ்யஸ்ருங்கரை தன் நாட்டிற்கு வரவழைக்க, அவர் பாதம் பட்டதுமே அங்கே பெருமழை பெய்து, அரசனின் துயர் தீர்ந்தது. அரசனும் மகிழ்ச்சியுற்று, தன் மகள் சாந்தையை ரிஷ்யஸ்ருங்கருக்கு விவாகம் செய்து கொடுத்ததாகக் கதை. இந்த  ரிஷ்யஸ்ருங்கரே தசரதனுக்கு, குலகுரு வசிஷ்டரின் ஆலோசனையின் பேரில் புத்ரகாமேஷ்டி யாகம் நடத்த உதவியவர். இவர் கலைக்கோட்டு  முனிவர் என்றும் அழைக்கப்படுகிறார். பஞ்சமும் பட்டினியும் உயிர் இழப்பும் தமிழகத்துக்குப் புதியதில்லை. பண்டைய அரசர்கள் நீதி  தவறாமல் கோலோச்சிய காலத்திலேயே பாண்டிய நாட்டில் பஞ்சம் ஏற்பட்டதாகவும் அது பன்னிரண்டு ஆண்டுகள் நீடித்தது என்பதற்கு  இலக்கியச் சான்றுகள் உள்ளன.

‘‘அக்காலத்துப் பாண்டிய நாடு பன்னீரியாண்டு வற்கடஞ் சென்றது. செல்லப் பசி கடுகுதலும், அரசன் சிட்டரையெல்லாங் கூவி, ‘வம்மின்,  யான் உங்களைப் புரந்தரகில்லேன். நீர் போய்... நாடு நாடாயின ஞான்று என்னை-்யுள்ளி வம்மின்’ என்றான்’’   - என்கிற பாடல் பிரசித்தமானது.

சூரியனைத் தன் காவியத்தில் சிறப்பாகப் பாடிய இளங்கோவடிகளும் மழைக்கு முக்கியத்துவம் தந்து,  ‘‘மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்’’ என்று பாடுவார். மழை ஏன் பொழிகிறது என்ற கேள்விக்கு ஒளவையாரின் விடை சற்று  யோசிக்க வைப்பது.

‘‘தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை’’
- என்கிறார், திருக்குறளில்,
‘‘தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை’’

- என்று திருவள்ளுவர் வித்தியாசமாகச் சொல்கிறார்.

தேவார முதலிகள் தங்கள் பல பாடல்களை மேகராகக் குறிஞ்சி என்ற பண்ணில்  பாடியுள்ளனர். இசையுடன் மழை மேகத்தையும் இவை கொண்டு வருவன என்பார்கள். சுந்தரர் திருப்புன்கூர் தலத்தை அடைந்தபோது, அங்கு  மழை இன்றி மக்கள் வாடுவதைக் கண்டார். அவ்வூர் மக்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு பதிகம் பாட, மழை பொழிய, அந்த  சாதனைக்காக ஐந்து வேலி நிலம் அளிக்கப் பெற்றார். அனா விருஷ்டி அதி விருஷ்டி ஆனபோது, அதை மக்கள் அவரை மழையை நிறுத்தப்  பாடச்சொன்னார்கள். செய்தார். மழை நின்றது. இன்னொரு ஐந்து வேலி நிலம் கிடைத்தது. ஆனால், அவரோ எல்லா நிலங்களையும்  ஆலயத்திற்கே கொடுத்தார்.

சுந்தரர் பாடிய திருப்புன்கூர் மழை வேட்டல் பதிகத்திலிருந்து ஒரு பாடல்:

‘‘வையக முற்று மாமழை மறந்து
வயலில் நீர்இலை மாநிலம் தருகோம்
உய்யக் கொள்க மற்(று) எங்களை என்ன
ஒலிகொள் வெண் முகிலாய்ப் பரந்(து) எங்கும்
பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்து
பெயர்த்து பன்னிருவேலி கொண்(டு) அருளும்
செய்கை கண்டு நின் திருவடி அடைந்தேன்
செழும்புனல் திருப்புன்கூர் உளானே’’

தம்பிரான் தோழர் என்று அறியப்பட்ட இவர், திருவாரூரில் மழை பொய்த்தபோது, அங்கு உயிர்களைக் காக்க இறைவனிடமே  முறையிட்டார். சற்று அருகாமையில் இருந்த குண்டையூர் என்ற ஊரில் இருந்து திருவாரூர் மக்களின் பசிபோக்க நெல் மூட்டைகளை  பிள்ளையாரே சுந்தரர் கோரிய இடத்திற்குக் கொண்டு சேர்த்தார் என்பது வரலாறு. நாட்டில் அவ்வப்போது ஏற்பட்ட பஞ்சத்தைத் தீர்க்க,  திருஞானசம்பந்தருக்கும், திருநாவுக்கரசருக்கும் இறைவன் பொற்காசு தந்து இடர்களைந்திருக்கிறான். சம்பந்தரின் ‘வாசி தீரவே காசு நல்குவீர்’  என்ற திருவீழிமிழலைத் திருப்பதிகம் இதனை விளக்கும். பல தலங்களில் இறைவனை வணங்கி விட்டு, சம்பந்தர் தன் தாயாரின் சொந்த  ஊரான புஞ்சை என்ற திருநனிபள்ளிக்குச் சென்றார்.

இவ்வூர்ச் சிவன் கோயில் நாயகனான நற்றுணையப்பர். நல்ல ஆகிருதியுடன் உள்ளார்.  கருவறையின் வாயில் ஒரு யானை உள்ளே செல்லும் அளவு பெரிதாக உள்ளது! கர்ப்பக்கிரகத்தை ஒரு யானை சுற்றிவரும் அளவு பிராகாரம்  அகலமாக அமைந்துள்ளது. இத்தல கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியைப் போல் அழகான திருவுரு வேறு எங்கும் இல்லை. நல்ல  சிவப்புக் கல்லால் அமைக்கப்பட்டது. சம்பந்தர் இங்கு வந்தபோது இத்தலம் முற்றிலும் பாலையாய், வறண்ட பூமியாய்க் காட்சி தந்தது.  மனம் பொறுக்காத சம்பந்தர், இறையருளை வேண்டி ஒரு பதிகம் பாடி, பாலை நிலத்தை முதலில் நெய்தல் நிலமாகவும், பிறகு மருத  நிலமாகவும் ஆக்கினார் என்கிறது வரலாறு. அதில் ஒரு பதிகம் வருமாறு:

‘‘காரைகள் கூகை முல்லை களவாகையீகை
 படர்தொடரிகள்ளி கவினிச்
சூரைகள் பம்மி விம்மு சுகாடமர்ந்த
சிவன்மேய சோலை நகர்தான்
தேரைக ளாரைசாய மிதகொள்ள வாளை
குதிகொள்ள வள்ளை துவள
நாரைக ளாரால்வாரி வயன்மேதிவைகு
நனிபள்ளி போலு நமர்காள்’’

இத்தலம் மயிலாடுதுறையை அடுத்த செம்பொனார் கோயில் அருகில் உள்ளது. இதே போல ஆண்டாள் நாச்சியாரின் ‘ஆழி மழைக்கண்ணா’  என்ற திருப்பாவைப் பாசுரமும் பாடப்பட்டு வந்தது. அப்பாடலில் வரும் ‘‘...சாரங்கம் உதைத்த சரமழை போல் வாழ உலகினில்  பெய்திடாய்...’’ என்ற அடி பெருமழை கோரி விண்ணப்பிக்கிறது. முருகனைத் துதிக்கும் மழைப் பதிகம் ஒன்று திருப்போரூர் சந்நதி  முறையில் சிதம்பரஸ்வாமிகளால் பாடப் பெற்றுள்ளது. அதிலிருந்து சில வரிகள்:

‘...கதிமில் உயிர்கள் வாடிடா(து) அருளால் -
கன மழை கொடுத்த அற்புதமே’’,
‘‘...அம்புயல் மழை கொடுத்துத் தாய்க்குக்
கொனைவுறு கைம்மாறு ஏது...’’,
‘‘...கருணையால் மாரி தந்து காத்தளித்த...’’,
‘‘... காதுறு பசியால் உயிர் தவியாமல் கனமழை
தந்து காத்தளித்த’’,
‘‘...உயிர்கள் தழைத்திட மாரி வளத்தை நீ
கொடுத்த(து) அற்புதமே...’’
‘‘ஆருயிர் வாடுறும் தருவாயில் விண் மழை
தந்து காத்தளித்தாய்...’’,

- முருகனிடம் கெஞ்சிக் கேட்டால் நாம் வேண்டுவதைத் தருவான் என்பதைப் புலப்படுத்துகின்றன. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீக்ஷிதர் அமிர்த வர்ஷணி ராகத்தில் ‘ஆனந்தாம்ருத வர்ஷிணி’ என்ற பாடல் இயற்றியுள்ளார். இவர் எட்டயபுரம் சென்றிருந்தபோது, அங்கு கடும் வறட்சி நிலவியதாகவும் பஞ்சத்தால் மக்கள் செத்து மடிந்தார்கள் என்பதையும் கேட்டு, அந்த மகான் இக்கீர்த்தனையைப் பாடி முடித்தார். அதில் வரும் ‘வர்ஷய வர்ஷய, வர்ஷய!’ என்ற இசையைக் கேட்ட அம்பாள் மழையோடு தன் கருணை வெள்ளத்தையும் சேர்த்தே வர்ஷித்தாள், நாடும் சுபிட்சம் அடைந்தது. திருக்கோயிலூருக்கு அருகில் உள்ளது ரிஷிவந்தியம் என்ற சிற்றூர். இங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயில் பிரசித்தமானது. இத்தலம் மழை மறைவுப் பிரதேசத்தில் உள்ளதால் அவ்வப்போது மழைவளம் குன்றி  மக்களைப் படுத்தும், அப்படித்தான் நூறு வருடங்களுக்கு முன் இங்கு மழை முற்றிலும் அற்றுப் போனபோது, இங்கு வந்த அடியார் ஒருவர் மழை வரப் பண் பாடினார். மழையும் நன்றாகப் பெய்ததாக வரலாறுண்டு.

தமிழகத்தில், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்வரை, மழை பொய்த்தாலோ அல்லது மிகவும் குறைவாகப் பெய்தாலோ, மகாபாரதத்தில்  இடம்பெற்றுள்ள விராட பர்வம் என்ற பகுதியை வாசிப்பது வழக்கமாக இருந்தது. பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டு, விராடன்  என்ற அரசனின் கீழ் மாறுவேடங்களில் பணியாட்களாய் வேலை செய்தனர். இந்த சர்க்கத்தைப் படித்தால் வருணபகவான் மனம் ஒப்பி மழை  பொழியச் செய்வான் என்பது நம்பிக்கை. அதைப்போல, அந்தணர்கள் பலர் நீர் நிலைகளில் இறங்கி, வருண ஜபம் செய்வது சமீபகாலம் வரை வழக்கில் இருந்தது. இந்த ஜபத்திற்கு பர்ஜன்ய சாந்தி என்ற பெயரும் உண்டு மழை வரவேண்டி ஜபம் செய்ய வேண்டிய மந்திரங்கள்:

‘‘சந்திரபிபம் பங்கஜஸன்னி விஷ்டம்
பாசாங்குசாபீதி வரான் ததானம்
முக்தாகலாபாஞ்சிதர்வ காத்ரம்
த்யாயேத் பிரஸன்னம் வருணம் ஸுவ்ருஷ்யை’’
மற்றும்,
‘‘ஜூம்பகாய வித்மஹே பாசஹஸ்தாய தீமஹி
தன்னனோ வருண: ப்ரசோதயாத்’’

காரீரீஇஷ்டி என்பது கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு வேத விற்பன்னர்கள் யாகம் செய்வதாகும். அந்த ஜபத்தின் மூலமும் மழை வரும். சில சிவத் தலங்களில் வான் மழை பொய்த்துப் போனால் நந்தீஸ்வரரை கழுத்து வரை தண்ணீரில் முக்கி வைப்பார்கள்; பிள்ளையாருக்குத் தண்ணீர் கட்டி வைப்பார்கள். உடனே மழை பொழிந்திருக்கிறது. தேவார நிறைவுப் பாடலாக, ‘வாழ்க அந்தணர், வானவர், ஆவினம், வீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக’ என்றார் திருஞானசம்பந்தர். கந்தபுராணம் இயற்றிய கச்சியப்ப சிவாச்சாரியார்...

‘வான் முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க
மன்னன் கோன் முறை அரசு செய்க குறைவிலாது     
உயிர்கள் வளர்க நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க’’
- என்று வேண்டுகிறார்.
 
- ஜி.கிருஷ்ண ரத்னம்

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?