அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய்

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் 45

இழைக்கும் வினை வழியே அடும் காலம் எனை நடுங்க

அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுனை யாமளைக் கோமளமே
உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே.           (பாடல் எண்  - 33)

உலக வழக்கில் ஒருவரின் ஆலோசனையின் அடிப்படையில் ஒரு செயலை மேற்கொண்டால் அச்செயலால் வரும் நன்மைகளை அந்த ஆலோசகருக்கு உரித்தாக்க மாட்டோம். நானே செய்தேன் என்று பெருமையாக கூறிக்கொள்வோம். அதே சமயத்தில் தோல்வி வந்தால் அந்த  ஆலோசகரையே சாரும் என்னை சாராது என்று எல்லோரிடத்திலும் ஆலோசனை சொன்னவரைப் பற்றி கூறை கூறுவோம் இது ஒரு வகை மனிதர்கள் உலகில் துன்பம் தரும்  செயல்களை செய்வதில்லை, இன்பம் கருதியே  செயல்களை செய்ய விழைகிறார்கள். ஆனால் ஒரு செயலின் விளைவு துன்பம், இன்பம், என்று இரண்டில் எது வேண்டுமானாலும் வரலாம். அதில் இன்பத்தை மட்டுமே விரும்புகின்றார்கள், துன்பத்தை விலக்க நினைக்கிறார்கள் அது இயலாது.

ஆனால் அபிராமி பட்டரோ தான் செய்த செயலில் விளைவாய் துன்பம் தன்னை நோக்கி வரும் என்று தெளிவாகத் தெரிகிறது தெரிந்தே தவறு செய்கிறார். அதன் விளைவு வரப்போகும் துன்பத்தைக் கண்டு அஞ்சி முன்பாக இறைவியிடத்து என்னை காக்க வேண்டும் என முறையிடுகிறார். உண்மையில் அபிராமி பட்டர் எந்த தவறும் ெசய்யவில்லை, பின் பாடலில் ஏன் அவ்வாறு குறிப்பிடுகின்றார் என்றால் உலக மக்களின் சார்பில் தான் தன்னை முன்னிலைப் படுத்தி, தான் அந்த தவற்றை செய்ததாக கருதி உலகிற்கு அறிவுறுத்துகிறார்.

நாம் செய்த நல்ல செயலை எல்லோரும் புகழ்வர் பாராட்டுவர். அதன் பயனை அனுபவிப்பர். ஆனால் தீயவிளைவை யார் செய்தார்களோ அவர்கள் மட்டுமே அனுபவிக்க வேண்டும். ஒருவர் செய்யாத குற்றத்திற்காக தண்டனையை அன்பின் காரணமாக பிறர் பகிர்ந்து கொள்ள முடியாது. கடவுள் மட்டுமே அத்தகைய விளைவில் காப்பாற்றவோ, துன்பத்தை தீர்க்கவோ நல்ல அருள் செய்ய முடியும். என்பதனால் அபிராமி பட்டரோ இறைவியைக் குறித்து தன்னைக்காக்கும் படி சரணடைகிறார்.

மேலும் துன்பம் வரும் காலத்தில் உன்னிடம் மட்டும் துன்பத்தை நீக்கிக் கொள்ள வருவேன் என்று துன்பம் வருவதற்கு முன் எச்சரிக்கையாக வருவேன் என்று அபிராமி இடத்து அறிவிக்கிறார். அதன் இனிமையின் பொருள் உணர பாடலுக்குள் புகுவோம்.

‘‘இழைக்கும் வினை வழியே அடும் காலன் ’’ வினை என்பது உயிர் உடலோடு கூடிய பொழுது துவங்கி உடலை விட்டு உயிர் நீங்குவது வரை பிறப்பிலிருந்து இறப்பு வரை உள்ள இடைப்பட்ட காலத்தில், செயலற்ற ஆன்மாவானது உடலை செயல்படுத்துவதனால் தோன்றும் விளைவே செயல் எனப்படும்.

இந்த வினையானது மூன்று விதமாகும். 1.   அகவினை, 2. புறவினை, 3. அகப்புறவினை.

அகவினை :- என்பது மூச்சுக்காற்றினால் உடல் இயங்குவதைக் குறிக்கும்.

புறவினை :- என்பது புலன்கள் பிறவற்றை தீண்டுவதற்காகவும். முகர்வதற்காகவும். பருகுவதற்காகவும் காண்பதற்காகவும். கேட்பதற்காகவும் , அதற்கான பொருள்களை நாடி செயல்படுவது புறவினையாகும்.

அகப்புறவினை :- என்பது ஐந்து கருவி கரணங்களால் ஆரோக்கியமான உடலில் தோன்றும் செயல்பாடுகளாகும் (உதர பேசுவது, நடப்பது பற்றுவது போன்றவை இந்த மூன்று வினைகளால் தோன்றுவது, சுகம், துக்கம், சமம் என்ற விளைவாகும். இந்த மூன்று விளைவின் அடிப்படையிலேயே மனிதனுக்கு பாவ, புண்ணியம், வருகிறது பாவபுண்ணியத்தின் கணக்கை வைத்தே காலன் நம்மை அணுகுவான் என்பதை அபிராமி பட்டர் ‘‘இழைக்கும் வினை வழியே அடும் காலன்’’ என்ற வரிகளால் குறிப்பிடுகின்றார்.

‘‘எனை நடுங்க அழைக்கும் பொழுது’’ யமனானவன் உடலை விட்டு உயிரைப்பிரிக்க வருகின்ற பொழுது, மிக கொடிய நடுங்கத்தக்க ஐந்து செயலை செய்வான் என்கிறது சாத்திரம்.

1.   உடலுக்கு வியாதி, 2. அறிவிற்கு குழப்பம், 3. உள்ளத்திற்கு அச்சம், 4. ஆன்மாவிற்கு தயக்கம். 5. எண்ணத்திற்கு மறதி இவையாவும் தோன்றும்.இந்த ஐந்தையும் எம தூதுவர்கள் இந்த அறிகுறிகளையே ‘‘நடுங்க அழைக்கும் பொழுது’’ என்ற வரியால் குறிப்பிடுகின்றார்.  காலதேவனுக்கு , காலன், எமன், தர்ம ராஜன் என்ற பெயர்கள் காரண, காரிய அடிப்படையில் அமைந்துள்ளது. அதில் தர்மராஜன் என்ற பெயரானது இறந்த உயிர்களை அவர்கள் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப அறத்தின் வழி நின்று வேண்டுதல், வேண்டாமை என்பது இல்லாமல் ஆன்மாக்கள் உடலோடு கூடிவாழும் போது செய்த பாவத்திற்கு ஏற்ப ஆன்மாக்களை நரகம் என்ற அவரது கருங்காவல் சிறையிலிட்டு வருத்துவார். பாவம் செய்தவரை நடுங்க செய்வதனால் ‘‘நடுங்க அழைக்கும்’’ என்கிறார் அபிராமி பட்டர்.

‘‘பொழுது’’ என்ற சொல்லால் உடலோடு கூடிய மானுடர்களுக்கு மகிழ்ச்சியான பொழுது, துன்பமுற்ற பொழுது, மகிழ்ச்சியும் துன்பமும் இல்லாத உறங்கும் பொழுது என்று பல பொழுதுகள் உள்ளன. அவற்றை நீக்கி நடுங்க அழைக்கும் பொழுது என்ற வார்த்தையால் உடல் பிறந்ததிலிருந்து, வளர்ந்து, வாழ்ந்து, வினைகளைச் செய்து அவற்றின் வழியாக இன்ப துன்பங்களை நுகர்ந்து அவற்றின் அடிப்படையில் எமனவன் இறுதியாக உடலிலிருந்து உயிரை விட்டு நீக்குகிற பொழுதை ‘‘அழைக்கும் பொழுது’’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார்.

அதையே ‘‘குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவிவெங்கூற்றுக்கிட்ட வரம்பை. அடுத்து மறுகும் அப்போது’’ - 49 என்ற வரிகளால் மிக தெளிவாக வரையறுக்கின்றார். மானுட வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை சூட்டுவதற்கு ‘‘நடுங்க அழைக்கும் பொழுது’’ என்று குறிப்பிடுகின்றார். அப்பொழுது கூட மனிதனுக்கு இறப்பச்சம் வருவதில்லை என்பதனால் தனக்கு வந்த அந்த இறுதிப் பொழுதை (அச்சத்தை) இங்கே நினைவூட்டுகின்றார். கீழே நெருப்பும், மேலே உரியும் அதன் மேல் அவர் அமர்ந்து பாடுகின்றார்.  உரியிலிருந்து ஒவ்வொரு கயிராக அறுக்கப்படுகிறது.

உமையம்மையானவர் காட்சிக் கொடுத்து அன்றிருந்த அமாவாசையை பௌர்ணமி ஆக்கவில்லையேல், தான் நெருப்பில் வீழ்ந்து மாய்வது உறுதி, 100 கயிற்றில் 32 கயிறுகள் அறுக்கப்பட்ட நிலையில் நிலவு வராமையால் அவருக்கு இறப்பச்சம் சூழ்ந்து கொள்கிறது. அதனாலேயே ‘‘எனை நடுங்க அழைக்கும் பொழுது’’ என்று தன்னை முன்னிலைப் படுத்தி அபிராமி அந்தாதி உருவான பொழுதை குறிப்பிடுகின்றார். இதே போன்று ஒரு சூழலில் மார்க்கண்டேயருக்கு எமனைக் குறித்த நடுக்கம், இறப்பச்சம் வந்தது அதை காஞ்சியிலுள்ள கம்பகரேஸ்வரரையும் திரு நீலக் குடியிலுள்ள நடுக்கம் தீர்த்த நாதரையும் கொண்டு உணரலாம்.

தான் அனுபவித்த நடுக்கத்தை பிறர் அனுபவிக்கக் கூடாது என்ற கருணையினால் ‘‘எனை நடுங்க அழைக்கும் பொழுது’’ என்று பாடலாக்கினார்.வந்து அஞ்சல் என்பாய் சக்தி உபாசகர்கள் உமையம்மையை குறித்து பல்வேறு வடிவை மனதில் எண்ணி தியானிக்கின்றார்கள். அந்த வடிவங்களில் உள்ள ஆயுதம், நின்ற, அமர்ந்த நிலை கிரீடம், தலை அலங்காரம் இவற்றை வைத்து, இது இந்த தேவதை இது இந்த அடையாளம் என்று ஒவ்வொன்றையும், பிரித்துத் தெரிந்து கொள்வதற்கு உதவுவது ஆகமங்களில் சொல்லப்படும் ரூபத்தியானம் என்ற வடிவை குறித்த வரையரைகளை செய்யும் வடமொழி வடிவிலுள்ள செய்யுளாகும். அந்த வகையில் அபிராமி பட்டர் பல்வேறு  உமையம்மையின்  ரூபதியானத்தை  மறைமுகமாகச்  சூட்டி விளக்கியுள்ளார், உதாரணத்திற்கு ‘கரி உரி போர்த்த செஞ்சேவகன்’’ 62 என்ற சிவபெருமானையும்,‘‘உமையும் உமையொரு பாகரும்’’ 31 என்ற சோமாஸ் கந்தரையும் ‘‘ஏக உருவில் வந்து’ 31 என்று அர்த்த நாரீயையும் இது போன்று பல்வேறாக உமையம்மையை எண்ணி வழிபாடு செய்துள்ளார், அவ்வாறு செய்ததால் வெவ்வேறான பலனையும் தான் அடைந்திருக்கிறார் அந்த வகையில்  இப்பாடலில் ‘‘அஞ்ேசல் என்பாய்’’ என்ற சொல்லினால் தமிழகத்தில் சிவாகம முறைகளில் அமைக்கப்பட்ட அனைத்து கோயில்களிலும் சிவன் உடனுறை உமையம்மையாக திகழும் மனோன்மணி எனப்படும், அந்தந்த கோயில்களில் எழுந்தருள்வித்து வணங்கப்படும் சக்தியின் பெயரை குறிப்பிடுகின்றார்.

இந்த சக்தியானவர் நான்கு கரங்களை கொண்டவளாக மேல் கரங்களில் தாமரை அக்ஷமாலை, இவற்றை தாங்கியோ, அல்லது அக்ஷமாலை, நீர் கரகபாத்திரம், அல்லது பாசம் அங்குசம், இவைகளில் ஏதேனும் ஒன்றை தரித்தும் மற்ற இரண்டு கையை நாட்டிய சாத்திர படி அபய முத்திரை வரத முத்திரை என்ற முத்திரை பதித்து அருள் புரிகிறாள். அபயம் என்பது உள்ளங்கையை மேல் நோக்கி காட்டுவதும், வரதம் என்பது கீழ் நோக்கி, உள்ளங்கையை காட்டுவதும், அபய வரதம் என்று ரூபதியானத்தில் கூறிய வண்ணம் அமைந்திருக்கும். இவ்வாறு நான்கு கையுடன் அபய வரத முத்திரை தாங்கிய சக்தியே திருக்கடையூர் அபிராமியாவார்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

(தொடரும்)

Related Stories: