×

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

விடாமுயற்சியே வெற்றி தரும்!

* என் நண்பரின் மகளுக்கு திருமணம் நடந்து விவாகரத்து ஆகிவிட்டது. இரண்டாம் திருமணம் செய்யலாமா? எப்போது செய்யலாம்? இந்த வாழ்க்கையாவது சிறப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?  - அன்பழகன், ஆண்டிமடம்.

உங்கள் நண்பர் மகளின் ஜாதகப்படி லக்னாதிபதி நீசம் பெற்றிருப்பதும், ஏழாம் வீட்டில் சனி அமர்ந்திருப்பதும் பிரச்னையைத் தோற்றுவித்திருக்கிறது. கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகக் கணக்கின்படி தற்போது சுக்கிர தசையில் ராகு புக்தி என்பது நடந்து வருகிறது. ராகு அவருடைய ஜாதகத்தில் மனோகாரகன் சந்திரனுடன் இணைந்து உச்சம் பெற்றிருப்பதோடு கடுமையான மன உளைச்சலையும் தந்திருக்கிறார். அவருடைய ஜாதகத்தில் புதனும், சனியும் வக்ர கதியில் அமர்ந்திருப்பதும் அத்தனை சாதகமான பலனைத் தராது.

திருமண வாழ்வு என்பது ஒரு சில தடைகளைத் தாண்டியே அமையும். இரண்டாம் திருமணத்திற்கு தற்போதைய சூழலில் அவசரப்பட வேண்டாம். எந்த தசாபுக்தியில் திருமணம் செய்யலாம் என்று கேட்டிருக்கிறீர்கள். சுக்கிர தசையில் சனி புக்தியின் காலம் வரும் வரை பொறுத்திருக்க வேண்டும். 04.11.2022ற்கு மேல் அதாவது 29 வயது முடிவடைந்து 30வது வயது நடக்கும்போது இந்த ஜாதகருக்கு மறுமணம் என்பது நடந்து திருமண வாழ்வு என்பது சிறப்பாக அமையும். இவர் பிறந்த ஊரில் இருந்து மேற்கு அல்லது தென்மேற்கு திசையில் இருந்து மாப்பிள்ளை அமைவார். அந்த நேரத்தில் அமைகின்ற மறுமண வாழ்வானது இவருக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற வகையில் சிறப்பானதாக அமையும். அதுவரை பொறுத்திருக்க வேண்டியது அவசியம். திருமண வாழ்வு என்பது சற்று தாமதமாக அமையும் என்பதையே இவரது ஜாதகம் உரைக்கிறது.

* 32 வயதாகும் என் மகன் ஒரு தனியார் ஹோட்டலில் காசாளராக பணிபுரிகிறான். இன்னும் திருமணமாகவில்லை. தாயில்லாத பையன். அவனுக்கு எப்போது திருமணம் ஆகும்? அதற்காக என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?  - சுகுமார், விளாத்திகுளம்.    

உங்கள் மகன் பிறந்த தேதியின்படி அவருக்கு 33 வயது என்பது முடிவடைந்து நான்கு மாதம் ஆகிவிட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தற்போது அவருக்கு 34வது வயது நடந்து கொண்டிருக்கிறது. அவருடைய பிறந்த குறிப்பினை வைத்து கணித்துப் பார்த்ததில் பூரட்டாதி நட்சத்திரம் நான்காம் பாதம் மீன ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது. அவருடைய ஜாதகத்தின் படி தற்போது புதன் தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகனின் ஜாதகத்தில் திருமணத்தையும், வரவிருக்கும் வாழ்க்கைத் துணைவியையும் பற்றிச் சொல்லும் ஏழாம் பாவகம் என்பது சுத்தமாக உள்ளது. என்றாலும் ஜென்ம லக்னத்தில் லக்னாதிபதி செவ்வாயுடன் சனி ணைந்திருப்பதால் இவருடைய வாழ்வில் ஒவ்வொரு முயற்சியிலும் முதலில் ஒரு தடையினைக் கண்டு வருகிறார்.

முதலில் உண்டாகும் தடையினைப் பெரிதாக எண்ணாமல் அதனைத் தாண்டி வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். உத்யோக ஸ்தானாதிபதி சூரியன் மூன்றில் அமர்ந்து தைரியத்தை அளிக்கிறார். தனித்து சுயதொழில் செய்ய முயற்சி செய்யச் சொல்லுங்கள். திருமணத்தைப் பொறுத்த வரை தற்போது நடந்து கொண்டிருக்கும் தசாபுக்தியின் காலம் சாதகமாகவே உள்ளது. தானாகத் தேடி வரும் என்று எண்ணாமல் உறவினர்கள் வழியில் முயற்சி செய்யுங்கள். அவருடைய ஜாதகத்தில் ஏழாம் பாவக அதிபதி சுக்கிரன் நான்காம் வீட்டில் புதன் மற்றும் குருவுடன் இணைந்திருப்பதால் உறவுமுறையில் பெண் அமைவதற்கான வாய்ப்பு நன்றாக உள்ளது.

குறிப்பாக தாயார் வழி உறவினர்கள் மூலமாக இவரது திருமணம் நடப்பதற்கான வாய்ப்பு சிறப்பாக உள்ளது. ஜாதக பலத்தின்படி 02.07.2020 வரை திருமண யோகம் நன்றாக உள்ளதால் தீவிரமாகப் பெண் தேடுங்கள். வருகின்ற வாழ்க்கைத்துணைவி இவரது தொழிலுக்கும் பக்கபலமாக நின்று துணை செய்பவராக அமைவார். வெள்ளிக்கிழமை தோறும் அருகில் உள்ள அம்பாள் கோயிலில் கிழக்கு முகமாக விளக்கேற்றி வைத்து பிரார்த்தனை செய்து வரச் சொல்லுங்கள். ஆடி மாதத்தில் வரும் ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை நாளில் வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண் ஒருவருக்கு போஜனத்துடன் வஸ்திர தாம்பூலம் அளித்து நமஸ்கரிக்க திருமணத்திற்கான முயற்சி கைகூடிவரும். விடாமுயற்சி ஒன்றே வெற்றியைத் தரும் என்பதையே இவரது ஜாதகம் உணர்த்துகிறது.

* 2008ல் என் மனைவியின் பெயரில் வீடு வாங்கி குடியிருந்து வருகிறோம். என் மனைவி கடைசி காலத்தை பிறந்த ஊரில் கழிக்க வேண்டும் என்று எண்ணுகிறாள். அவளது பூர்வீகத்தில் ஒரு வீடு பார்த்து பிப்ரவரியில் அட்வான்ஸ் கொடுத்துள்ளோம். தற்போதிருக்கும் வீட்டினை விற்றால்தான் அந்த வீட்டை வாங்க முடியும். இது வரை இந்த வீட்டை விற்க முடியவில்லை. என் மனைவியின் விருப்பம் நிறைவேறுமா?  - சோமசுந்தரம், நெல்லை.

உங்கள் மனைவியின் ஜாதக பலத்தின்படி அவர் தனது சொந்த ஊரில் வசிப்பதற்கான வாய்ப்பு நன்றாகவே உள்ளது. என்றாலும் நீங்கள் சற்று அவசரப்பட்டிருக்கிறீர்கள். அவரது ஜாதகத்தை கணிதம் செய்ததில் உத்திரம் நட்சத்திரம் இரண்டாம் பாதம், கன்னி ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது. அவரது ஜாதகத்தின்படி தற்போது சனி தசையில் சுக்கிர புக்தி நடந்து கொண்டிருக்கிறது. சுக்கிரன் மூன்றாம் வீட்டில் சந்திரனின் சாரம் பெற்று அமர்ந்திருப்பதால் சற்று தாமதமாகி வருகிறது.

 தற்போது நடந்து வரும் தசாபுக்தியின் காலத்தில் அவர் தனது பிறந்த ஊரில் சென்று செட்டில் ஆவதற்கான அம்சம் அத்தனை சிறப்பாக இல்லை. சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும். என்றாலும் நீங்கள் கொடுத்திருக்கும் அட்வான்ஸ் தொகை என்பது வீணாகாது. தற்போது இருக்கும் வீட்டினை விற்பதன் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு வழியிலோ நீங்கள் பார்த்திருக்கும் அந்த வீட்டினை வாங்கி விட இயலும். ஆனால் அந்த வீட்டிற்கு தற்போது குடிபோக இயலாமல் ஏதேனும் ஒரு தடை உண்டாகிக் கொண்டிருக்கும். 18.09.2021 முதல் அதாவது சனி தசையில் சூரிய புக்தி வரும் காலத்தில் அவரது பிறந்த ஊரில் உங்கள் மனைவி வசிக்க இயலும்.

அதுவரை பொறுத்திருக்க வேண்டியது அவசியம். அந்த நேரத்தில் இடம்மாறினால்தான் அங்கும் இங்கும் அலையாமல் அதாவது அந்திமக் காலம் வரை சொந்த ஊரிலேயே நிரந்தரமாக வசிக்க இயலும். தற்போது குடியிருந்து வரும் வீட்டை விற்க முடியவில்லை என்றாலும் வேறு வழி ஏதேனும் உள்ளதா என்பதை யோசித்து செயல்படுங்கள். உங்கள் மனைவியின் ஜாதகத்தின்படி தற்போது சொந்த ஊரில் புதிய வீட்டினை வாங்க இயலும், ஆனால் அந்த வீட்டிற்குள் குடிபுகுவதற்கு மேற்சொன்ன காலம் வரை காத்திருக்க வேண்டும் என்பதையே அவரது ஜாதகம் உணர்த்துகிறது.

* எட்டு வயதாகும் என் மகள் வயிற்றுப் பேரன் மிகவும் பிடிவாதமாகவும், அடம் பிடிப்பவனாகவும் இருக்கிறான். பள்ளியில் பாடம் நடத்தும்போது சரிவர கவனிப்பதில்லை. ஆனால் மிகவும் சுறுசுறுப்பாகவும், துறுதுறுப்பாகவும் உள்ளான். வீட்டுப்பாடத்தை எழுத வைப்பதற்குள் போதுமென்றாகி விடுகிறது. யார் சொல்லியும் அடங்க மறுக்கிறான். அவனது பெற்றோர் மிகவும் கவலையடைந்துள்ளனர். உங்களது பார்வையில் ஏதேனும் ஒளிக்கீற்று தெரிகிறதா?
 - விஜயராகவன், சென்னை.

ஜெனரேஷன் கேப் என்று சொல்வார்கள். தலைமுறை இடைவெளியே உங்கள் பிரச்னைக்குக் காரணம்.  உங்கள் மகளுக்குத் திருமணமாகி 12 வருடங்கள் கழித்து பிறந்த பிள்ளை என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். 80 வயதினைக் கடந்த பாட்டனார் ஆகிய உங்களாலும், 50வது வயதில் இருக்கும் தாயாராலும், 56வது வயதில் இருக்கும் தந்தையாலும் எட்டு வயது ஆண் குழந்தையின் எண்ணங்களோடு ஒத்துப்போவதில் சற்று சிரமம் இருக்கத்தான் செய்யும். உண்மையில் உங்கள் பேரனின் ஜாதகம் மிகவும் சிறப்பாக உள்ளது. அவருடைய ஜாதகத்தை கணிதம் செய்ததில் திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்பதும் தற்போது சந்திர தசை முடிவுறும் தருவாயில் உள்ளது என்பதும் தெரிய வருகிறது. அடுத்து வர உள்ள செவ்வாய் தசை உங்கள் பேரனின் நடவடிக்கைகளில் இன்னமும் துறுதுறுப்பை அதிகமூட்டும்.

 பெற்றோர்தான் அவருடைய வேகத்திற்கு ஈடுகொடுத்துச் செல்ல வேண்டுமே தவிர, அவருடைய வேகத்தினை கட்டுப்படுத்த முயற்சிக்கக் கூடாது. ஜென்ம லக்னாதிபதி சனியும், புத்தி காரகன் புதனும் வக்ர கதியில் அமர்ந்திருப்பதால் உங்கள் பேரன் சற்று ஏட்டிக்குப் போட்டியாகத்தான் செயல்படுவார். இருந்தாலும் சிறப்பான புத்திகூர்மையும், எதையும் வெகு விரைவாகப் புரிந்துகொள்ளும் திறனும் உண்டு. அதனால் தன்னால் எதையும் செய்யமுடியும் என்ற எண்ணம் அவரிடம் இயற்கையாகவே நிறைந்திருக்கும். இந்த வயதில் வீட்டுப்பாடம் எழுதவைக்க இயலவில்லை என்பதெல்லாம் ஒரு பிரச்னையே அல்ல. அதை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. கல்வியறிவு என்பதும், புத்திகூர்மை என்பதும் அவரிடம் சிறப்பான விகிதாசாரத்தில் இணைந்துள்ளது. அவரோடு பள்ளியில் படிக்கும் நண்பர்கள் எவரேனும் உங்கள் வீட்டிற்கு அருகில் குடியிருந்தால் அவர்களோடு பழக விடுங்கள்.

நண்பர்களோடு இணைந்து படிப்பது என்பது அவருக்கு மிகவும் பிடிக்கும். அவரது வயதினை ஒத்த பிள்ளைகளோடு சேரவிடுங்கள். நினைத்ததை சாதிக்கும் திறன் படைத்தவர் உங்கள் பேரன். அவரைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை. ஜோதிட அறிவியலை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது உங்கள் பேரனின் ஜாதகத்தில் ஒளிக்கீற்று என்பதல்ல, ஒளிவெள்ளமே தென்படுகிறது. ஒளிமயமான எதிர்காலம் அவருக்கு உண்டு என்பதையே உங்கள் பேரனின் ஜாதகம் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது.

* எனது மனைவியின் பெயரில் குடிநீர் உற்பத்தி, மீன் வளர்ப்பு, ஃபேன்சி ஸ்டோர் போன்றவை நடத்த விரும்புகிறேன். அஷ்டமத்துச் சனி முடிந்த பிறகு தொழில் செய்யலாமா? அரசு பணிக்கு முயற்சி செய்வது கைகொடுக்குமா? உங்கள் ஆலோசனையை பெற விரும்புகிறோம். - ராமநாதன், ஒரத்தநாடு.

உங்கள் மனைவியின் ஜாதகத்தை சுத்த வாக்கிய பஞ்சாங்கத்தின்படி கணிதம் செய்து பார்த்ததில் அவர் ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் சனி வக்ரம் பெற்றிருக்கிறார். என்றாலும் லக்னாதிபதி குரு ஏழில் அமர்ந்து தனது பார்வையில் லக்னத்தை வைத்துக் கொண்டிருப்பது நல்ல நிலையே. அதோடு செவ்வாயும், சுக்கிரனும் இணைந்து நான்காம் பாவத்தில் அமர்ந்திருப்பது சுகசௌகரியங்களுடன் வாழ துணைபுரியும். அவருடைய ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது.

உச்ச பலத்துடன் சஞ்சரிக்கும் சுக்கிரன் தனது புக்தியினை நடத்தும் இந்த நேரத்தில் நிச்சயமாக ஒரு நிரந்தரமான தொழிலை அமைத்துத் தருவார். இவருடைய ஜாதக பலத்தின்படி தண்ணீர் சார்ந்த உத்யோகம் அத்தனை சிறப்பாக அமையாது. தண்ணீருக்கு உரிய கிரஹம் ஆன சந்திரன் உச்சம் பெற்றிருந்தாலும் ஆறாம் வீட்டில் சூரியனுடன் இணைந்திருக்கிறார். அதனால் குடிநீர் உற்பத்தி, மீன் வளர்ப்பு போன்ற தொழில்கள் சரியாக வராது. அதே நேரத்தில் சுக்கிரன் உச்சம் பெற்ற நிலையில் ஜீவன ஸ்தான அதிபதி புதனின் சாரத்துடன் அமர்ந்திருப்பதால் ஃபேன்சி ஸ்டோர்ஸ் என்ற தொழில் மிகச்சிறப்பான பலனைத் தரும். இவருடைய ஜாதக பலத்தின்படி அரசு உத்யோகத்திற்கு முயற்சிப்பதை விட சுயதொழிலில் ஈடுபடுவதால் சிறப்பாக சம்பாதிக்க இயலும்.

தற்போது நேரம் நன்றாக இருப்பதால் காலத்தை வீணடிக்காமல் வெகுவிரைவில் சொந்த வியாபாரத்தை துவக்குவது நல்லது. வெள்ளிக்கிழமை நாளில் வியாபாரத்தை துவக்குவது சிறப்பான பலனைத் தரும். உங்கள் மனைவியின் ஜாதகத்தில் ஜீவன ஸ்தானாதிபதி புதனும், லாபாதிபதி சுக்கிரனும் நல்ல நிலையில் அமர்ந்திருப்பதால் ஃபேன்சி ஸ்டோர்ஸ் மட்டுமல்லாது, பெண்கள் சார்ந்த அதாவது பெண்களைக் கவரும் வகையிலான பொருட்களை வியாபாரம் செய்வது என்பது சிறப்பான தனலாபத்தினைப் பெற்றுத் தரும். இந்த நேரத்தில் ஆரம்பிக்கும் தொழில் நிரந்தரமாக அமையும். முதலீடு செய்வதற்கான பணமும் ஏதேனும் ஒரு வழியில் வந்து சேர்ந்துவிடும். பயம் ஏதுமின்றி தைரியமாக சுயதொழிலில் இறங்கச் சொல்லுங்கள். வாழ்வினில் நன்றாக வளர்ச்சி காண்பார்.

சுபஸ்ரீ சங்கரன்

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது,
என் ஜாதகம்?
ஆன்மிகம், தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை - 600 004

Tags :
× RELATED என்ன சொல்கிறது என் ஜாதகம்?