×

மதுரை பொற்றாமரைக் குளம்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அல்லது மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் என்பது தமிழகத்தின் மதுரை நகரின் மையத்தில் அமைந்துள்ளது.  இருப்பினும் இத்தலத்தில் மீனாட்சி அம்மன் சந்நதியே முதன்மை பெற்றது. ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாட்சியை வணங்கிவிட்டு அதன் பிறகு சுந்தரேஸ்வரர் சந்நதிசென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது. தேவியின் சக்தி பீடங்களுள் இது மந்த்ரிணீ பீடமாகத் திகழ்கிறது. தன்னை வேண்டிய பக்தைக்கு அருள்பவளாக மீனாட்சி அம்பிகை இத்தலத்தில் மிளிர்கிறாள். இதனால் தான் பெண்களின் தெய்வமாக இவள் கருதப்படுகிறாள். தங்கள் மஞ்சள் குங்குமம் நிலைக்கவும், தைரியமாகப் பேசவும் மீனாட்சியே கதியென பக்தைகள் தவம் கிடக்கின்றனர். ஒரு வீட்டில் பெண்களின் ஆதிக்கம் நடக்கிறது என்றால் அவ்வீடு “மதுரை’ என பெயர் பெறும் அளவுக்கு மீனாட்சி அம்மனின் புகழ் கொடிகட்டிப்பறக்கிறது.  

இத்தலத்தில் எட்டுகாலங்களில் முறையே மஹா க்ஷோடசி, புவனை, மாதங்கி, பஞ்சதசாட்சரி, பாலா, சியாமளா, க்ஷோடஸீ ஆகிய திருக்கோலங்களில் அம்பிகையை பாவித்து வழிபடுவது இத்தலத்திற்கே உரிய ஒன்றாகும். இப்பூஜைகள், திருமலை நாயக்கரின் அமைச்சராகப் பணிபுரிந்த நீலகண்ட தீட்சிதர் வகுத்து வைத்தபடி நடந்து வருகிறது. இங்கு காரண, காமிக ஆகமங்கள் பின்பற்றப்படுகின்றன. மீனாட்சியம்மன் சித்திரைத்திருவிழாவில் பட்டாபிஷேகம், திக்விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய வைபவங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. இக்கோவிலின் தல மரம்: கடம்பம், புனித நீர்: பொற்றாமரைக்குளம் மற்றும் வைகை. பல நூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப் பெற்ற ஸ்படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது.

கோயிலுக்குள் அமைந்துள்ள பொற்றாமரைக் குளத்தில் ஒரு காலத்தில் தங்கத்தாமரைகள் பூத்ததாகவும் இதைக்கொண்டு இந்திரன் சுந்தரேஸ்வரரை பூஜித்ததாகவும் சொல்வர். இதன் அகலம் 165 அடி. நீளம் 240 அடி. பரப்பரளவு ஒரு ஏக்கர். மீனாட்சிஅம்மன் கோயில் கட்டுவதற்கு முன்பே இந்த குளம் அமைந்துவிட்டது. சுந்தரேஸ்வரருக்கு கருவறை கட்டிய பாண்டியனின் உருவம் இந்த குளத்தின் வடகரையில் உள்ள தூணில் பொறிக்கப் பட்டுள்ளது. எனவே, இந்தப் படித்துறை “பாண்டியன் படித்துறை” எனப்படுகிறது. இந்த குளத்தில் தவளையும் மீனும் இருப்பதுஇல்லை. குளத்தின் தென்கிழக்கு மூலையிலிருந்து சுவாமி மற்றும் அம்மன் சந்நதிகளின் தங்க கோபுரங்களை வழிபடலாம். மந்த்ரிணீ சக்தி பீட நாயகியாம் மங்கலங்கள் அருளும் மீனாட்சியை தரிசித்து வாழ்வில் வளங்கள் பெறுவோம்.

Tags : Madurai Pottamarai Pond ,
× RELATED காமதகனமூர்த்தி