×

ஆசை எனும் அலை கடல்

* இறைச்சுவை இனிக்கும் இலக்கிய தேன் 29

உலக உயிர்கள் அனைத்துமே ஒவ்வொரு விநாடியும் இன்பத்தை நுகர்ந்திடவே விரும்புகின்றது.

இன்பம் எங்கே? இன்பம் எங்கே? என்று தேடு - அது
எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு!

என்பது தான் அனைவரின் விருப்பமாகவும் அமைகின்றது. ‘இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!’ என்று திருமுறை வழங்குகின்றது. ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா! இறைவா! என்று மகாகவி பாரதியார் முரசறைகின்றார். சான்றோர்களும், ஞானிகளும் எப்போதும் சந்தோஷத்தில் சஞ்சரிக்க சாமானியர்களான பொது மக்கள் மட்டும் கவலையிலும், துயரத்திலும் கலங்கி கண்ணீர் விடுவது எதனால்?  அனைத்திற்கும் அடிப்படையான ஆதார மூலசக்தியாகத் திகழும் பரம் பொருள் ஞானத்தைப் பெறாததும். ‘அனைத்தும் அவன் செயலே! என்று உணராததும் தான்!

‘நிலையாமை தான் இவ்வுலகில் நிலைத்தது’
‘மாற்றம் தான் அனைவர் வாழ்விலும் மாறாதது’

இவ்விரண்டையும் இதய பூர்வமாக உணர்ந்து தெளிந்தால் அனைவர் வாழ்விலும் எப்போதும் ஆனந்தம் தான்! தினம் தோறும் திருவிழா தான்!  நிரந்தரமான மகிழ்ச்சியை எப்படிப் பெறுவது? ஆனந்தம் என்பது அங்காடியில் விற்பனையாகும் கடைச் சரக்கா ? அப்படி இருந்தால் அனைவரும் வாங்கி விடுவார்களே!  எல்லோரின் உள்ளத்திற்குள்ளும் அது புதைந்து கிடக்கிறது. இனம் கண்டு அந்த இன்பத்தைப் பெற வேண்டியது அவரவர்கள் எண்ணப் பாங்கில் தான் இருக்கிறது. பழங்காலக் கதை ஒன்றைப் பார்ப்போமா? செல்வாக்கு மிகுந்த அரசன் ஒருவன், தான் செல்லும் இடங்களில் எல்லாம் மெத்தென்ற பட்டுக் கம்பளத்தை விரிக்கச் சொல்லி அதன் மீது தான் நடப்பானாம்.

ஏனென்றால் கல்லிலும், முள்ளிலும் என் கால்கள் படக்கூடாது.  நான் பாதம் பதிக்கும் இடங்கள் எல்லாம் பட்டுப் போன்று இருக்க வேண்டும் என்று விரும்பினானாம்.   இவ்வாறு அவன் போகும் பாதையில் எல்லாம் சேவகர்கள். உடன் சென்று அந்த கம்பளத்தை விரிப்பது வழக்கமாக இருந்தது. வெளியூரில் இருந்து வந்த

குருநாதர் ஒருவர் அரசனைப் பார்த்து

‘‘உன் காலில் ஒரு பட்டுத் துணியைச் சுற்றிக் கொண்டால் போதுமே !
நீ கால் வைக்கும் சாலைகள் அனைத்தும் கரடு முரடு நீங்கி மென்மையாக மாறிவிடுமே ! என்றாராம்.

‘தனது கால் செருப்பு தரையெல்லாம் தோல் மூச்சும் தரம் போல்’   என்று சிவப்பிரகாசர் பாடுகின்றார். அப்படி ஒவ்வொருவர் உள்ளமும் ‘பூரண திருப்தி’ என்ற ஒன்றை மட்டும் பெற்று விட்டால் போதும்! அனைவரின் உள்ளமும் தானே ஆனந்தத்தின் வசம் ஆகும். குமர குருபரர் பாடுகின்றார்.  தம்மின் மெலியாரை நோக்கித் தமது உடைமை அம்மா பெரிது என்று அகம் மகிழ்க! வரைமுறையே இல்லாமல் அது வேண்டும்! இது வேண்டும்!  என்று நாம் ஆசைப் படாமல் நம்மைவிட பொருளாதார வசதி குறைந்தவனைப் பார்த்து நாம் பெற்றுள்ளது அதிகம் என்று மனநிறைவு கொள்ள வேண்டும் என்கின்றார்.

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத்தகுமோ ?

என்று கந்தர் அனுபூதியில் அருணகிரி நாதர் நமக்கு அறிவுரை பகர்கின்றார்.

 ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா - இதில்
 ஆறடி நிலமே சொந்த மடா
 தூங்கையிலே வாங்குகிற மூச்சு - கொஞ்சம்
 சுழிமாறிப் போனாலும் போச்சு

மேற்கண்ட விவரங்கள் எல்லாம் அனைவர்க்கும் தெரிந்திருந்தாலும் ஆசைப்பேய் நம் அனைவரையும் பிடித்து ஆட்டுகிறது என்பது தானே நிதர்சனமான நிலை.  பலூனை ஓரளவு ஊதி, மேலும் பெரிதாக்க ஆசைப்பட்டு இன்னும் இன்னும் காற்றை உள்ளுக்குள் செலுத்தினால் உடைந்து போகும் என்ற உண்மை தெரிந்தும் அதை பெரிதாக்கும் முயற்சியில் தானே பல பேர் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்!

 உண்மை ஞானத்தைப் பெறாத  உலகினரைப் பார்த்து கந்தர் அலங்காரத்தில்  அருணகிரியார் கூறுகின்றார்.

 நீர்க் குமிழிக்கு நிகர் என்பர் யாக்கை
நில்லாது செல்வம் பார்க்கும் இடத்து
அந்த மின் போலும் என்பர்! பரிந்து வந்தே
 ஏற்கும் அவர்க்கு இடு என்னில் எங்கேனும் எழுந்திருப்பர்!
 வேற் குமரர்க்கு அன்பிலாதவர் ஞானம் மிகவும் நன்றே !
 தொடர்ந்து தோன்றும் ஆசை தான் வறுமை!
 ‘இது போதும் என்ற எண்ணம் தான் இன்பம் !
என்று நாம் அனைவரும் உணர்ந்து அந்நிலையை வாழ்வில்

மேற்கொள்ள தொடர் முயற்சி செய்ய வேண்டும். சகல கலா வல்லியின் அருள் பெற்ற குமரகுருபரர் கூறுகின்றார்.

 அல்கா நல்குரவு அவா எனப்படுமே
 செல்வம் என்பது சிந்தையின் நிறைவே!

இவ்வுலக வாழ்வு தோன்றி மறையும் ஒரு நீர்க்குமிழி போன்றது. பலரின் இறப்பை தினந்தோறும் நாளிதழ்கள் மூலமும், நேரிலும் நாம் அனைவரும் தினசரி அறிந்து கொண்டு தானே உள்ளோம்! கோடி கோடியாய் சேர்த்தவர் தன்னுடன் கொண்டு போனது என்ன?

 ஓடி ஒடி பொருள் சேர்த்தாலும் உண்பது ஒரு நாழி தானே!
 உண்பது நாழி! உடுப்பது நான்கு முழம்!
எண்பது கோடி நினைந்து எண்ணுவன!

என்கிறார் ஓளவையார்.   மாளிகைகள் பல கட்டினாலும் ஒருவர் மஞ்சம் விரித்து கட்டிலில் உறங்குவது ஒரு சிறிய இடத்தில் தானே! தானிய வயல்கள் பல இருந்தாலும் சாப்பிடுவது என்னவோ சில ஆழாக்கு அன்னம் தானே பெட்டி நிறைய பட்டுப் புடவைகள் அடுக்கி அடுக்கி வைத்தாலும் அரையில் கட்டி அலங்கரிப்பது ஒருபுடவை தானே !  தரை எல்லாம் நமது எனினும் இருப்பிடம் ஒரு முழமே! நல் தானியங்கள் வரையென்னக் குவிந்து கிடந்தாலும் உண்பது அரைநாழி!என்று ஆன்றோர்கள் கூறும் அறிவுரை ஏடுகளில் மட்டுமே இடம் பெற்றால் போதுமா ?   குருநாதரிடம் சீடன் ஒருவன் கேட்டான்.

‘‘இறைவன் எங்கே எத்தனை தொலைவில் இருக்கின்றான் ?
 அதற்கு குருநாதர் அற்புதமாக ஒரு பதில் சொன்னார்.
ஒவ்வொருவருடைய ஆசைச் சங்கிலியும் எவ்வளவு தூரம்
இருக்கின்றதோ அதன் முடிவில் ஆண்டவன் உள்ளார்.
தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா! நினது அன்பருளால்
ஆசா நிகளம் துகள் ஆயின பின்
பேசா அனுபூதி பிறந்ததுவே!
ஆசை அறுந்தது! அனுபூதி பிறந்தது!

என்கிறார் அருணகிரி நாதர். பேராசையின் காரணமாகத் தான்  பெரும் தவறுகளை, பஞ்சமா பாதகங்களை மனிதகுலம் புரிகின்றது.

 ஆசை என்பது ஒரு தீராத கொடிய நோய்! அதை அண்டி விடாமல் தன் மனத்தை ஒவ்வொரு மனிதனும் பாதுகாக்க வேண்டும். திருமூலர் திருமந்திரத்தில் தீர்மானமாக வரையறுக்கின்றார்.

 ஆசை அறு மின்கள்! ஆசை அறு மின்கள்!
 ஈசனோடு ஆயினும் ஆசை அறு மின்கள்!
 ஆசைப் படபட ஆல் வரும் துன்பங்கள்
 ஆசை விடவிட ஆனந்தம் ஆகுமே !
 
மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை இந்த மூன்று ஆசைகளும் மனித குலத்தை ஆட்டிப் படைக்கின்றன. வாட்டி வதைக்கின்றன என்பதைத் தானே வாழ்ந்து முடிந்தவர்களின் வரலாறுகளும், புராண இதிகாசக் கதைகளும் நமக்கு போதிக்கின்றன. தெளிவாக இவை எல்லாம் தெரிந்தும் நாம் திசை தடுமாறிப் போகலாமா என்று அறிவுரை பகர்கின்றார் அருணகிரியார்.

‘அறம் இலா அதி பாதக வஞ்சத் தொழிலாலே
அடியனேன் மெலிவாகி மனம் சற்று இளையாதே
திறல் குலாவிய சேவடி வந்தித்து அருள் கூடத்
தினமும் மிக வாழ்வுறும் இன்பைத் தருவாயே !

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன் (இனிக்கும்)

Tags : sea ,
× RELATED நாகையில் அலை சீற்றம்: கடல் நீர் புகுந்து 1,500 ஏக்கர் பயிர் சேதம்