×

ஐஸ்வர்யம் அருளும் அஷ்ட செல்விகள் 4 : பேராத்து செல்வி

வண்ணார்பேட்டை, திருநெல்வேலி

திருநெல்வேலி நகரில் வண்ணார்பேட்டையில் அருட் பாலிக்கிறாள் பேராத்து செல்வி அம்மன். நெல்லைச் சீமையின் நிலக்கிழார்களில் ஒருவரான காசி விஸ்வநாதர் வீட்டு வேலைக்காரனும், அவரது  வண்டிக்காரனுமான கருப்பன். சிந்து பூந்துறையிலுள்ள செல்வி அம்மன் கோயிலுக்கு சென்று அம்பாளை பார்க்க எண்ணினார். அந்த காலத்தில் இருந்த சாதி ரீதியான ஏற்றத்தாழ்வு காரணமாக வண்டிக்காரன் கருப்பன் கோயிலின் வாசலில் நின்ற வாறு சந்நதியை நோக்கிப்பார்த்தான். கோயிலில் கூடியிருந்த கூட்டத்தால் அம்மன் சிலை உருவம் அவனது கண்ணுக்கு எட்டவில்லை.

அப்போது அவனுக்குள்ளேயே பேசிக்கொண்டான். ‘‘ஆத்தா, உன் முகம் காண வந்தேன். முடியவில்லை. வசதி படைத்தவர்களுக்கு மட்டும் தான் காட்சி கொடுப்பாயோ, என் போன்ற ஏழைகள் உன்னை காண முடியாதோ’’ என கண்ணீர் சிந்தி மனம் உருகி வேண்டினான். பின்னர் பொறுத்திருந்த கருப்பன், கூட்டம் எப்போ குறைவது. இனி அம்பாள் முகத்தை எப்படி பார்ப்பது. என்று வருந்தியபடி அவன் தனது வீட்டுக்கு சென்றான். அன்றிரவு அம்பாள் மேல் கொண்ட பக்தியால் உணவருந்தாமலே படுக்கைக்கு சென்றான். அயர்ந்து தூங்கிய கருப்பனின் கனவில் தோன்றினாள்.

‘‘கருப்பா, என்னை பார்க்க முடியாமல் மனம் வருந்தினாய், நான், நாளை காலை வண்ணான்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் மூன்று அத்திமரங்கள் ஒன்றாக நிற்கும் கசத்தில் (ஆழமான பகுதி) இருப்பேன்.’’ என்று கூறினாள். கண் விழித்து பார்த்தார். வீட்டு முற்றத்தில் கோரப்பாயில் படுத்திருந்தது தெரிந்தது. எழுந்தார், உடனே ஆற்றுக்கு போகவேண்டும். ஆத்தா என்கிட்ட பேசிட்டா, என் கனவில வந்திட்டா, என்று ஆனந்தம் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் ஆற்றின் கரையை நோக்கி ஓடினார். ஆற்றில் நீராடினார். ஈரத்துணியோடு அம்பாளை பார்க்கத் தயாரானார்.

கசத்தில் இறங்க அச்சம் இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் வலையை கொண்டு வந்து கசத்தில் வீசினார். வலையில் அழகான அம்மன் சிலை. அந்த சிலையை அதே கரையில் வைத்து ஓலையால்் குடிசை அமைத்து வழிபட்டார். அவரது நிலை உயர, கோயிலும் உயர்ந்தது. ஆனால் குடிசையின் தன்மை மாறியதே தவிர பெருங்கோயிலாகவில்லை. அவரது காலத்திற்கு பிறகு கோயில் பராமரிப்பு இல்லாமல் போக, அதே பகுதியில் வசித்த மற்றொருவர் கனவில் சென்ற அம்மன், தான் வந்ததைக் கூறி, தனக்கு பூஜை செய்து வழிபட்டு வந்தால் நலமும் வளமும் அளிப்பதாக கூறினாள்.

அதன் பிறகு அவர் தான் வசிக்கும் பகுதியை சேர்ந்தவர்களோடு இணைந்து கோயிலில் தொடர்ந்து பூஜை செய்து வந்தார். மாவட்டத்தில் கிளை ஆறுகள் பல ஓடினாலும், தாமிரபரணி ஆறு தான் பெரிய ஆறு என்று கூறுவர். அத்தகைய பெரியாற்றில் கண்டெடுக்கப்பட்டதால் இந்த செல்வி அம்மன். பேராற்று செல்வி என்றும் பேராத்து செல்வி அம்மன் என்றும் அழைக்கப்பட்டாள். அது தற்போது மருவி பேராச்சியம்மன் என்று அழைக்கப்படலானாள். கோயிலில் மூலவராக இருக்கும் பேராத்து செல்வி அம்மன் வலது காலை குத்துக்கால் இட்டு, இடது காலை தொங்கவிட்டு எட்டு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கிறாள்.

சித்திரை மாதம் 3ம் செவ்வாய் கொடை விழா நடைபெறுகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒரு முறை கொடை விழா நடந்து கொண்டிருக்கும்போது, சுற்றுலா மாளிகையில் ஒய்வெடுத்த பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர், ‘‘தூங்கவிடாமல் என்ன சத்தம்,’’ என்று சிப்பாயிடம் கேட்க, சிப்பாய், ‘‘பேராச்சி அம்மனுக்கு கோயில் கொடை நடக்குது’’ என்று கூறினார். அந்த அதிகாரி, சிப்பாயை கோயிலுக்கு அனுப்பி, மேளதாளங்கள் அடிப்பதை உடனே நிறுத்துமாறும்,  கொடை விழா நடத்துவதற்கு தடைவிதித்திருப்பதாகவும் கூறுமாறு அனுப்பினார். சிப்பாய் நடுங்கினான்.

‘‘அய்யா, அது சக்தி வாய்ந்த தெய்வம். அம்மன் கிட்ட விளையாடப்புடாது துரை.’’ ‘‘ஏய், மேன், நான் உனக்கு அதிகாரியா, அந்த அம்மன் உனக்கு அதிகாரியா, சொல்றது செய்மேன்’’ என்று சினத்துடன் கூறினார். சிப்பாய் கோயிலுக்கு வந்து விழா கமிட்டி நிர்வாகிகளிடம் எச்சரித்தான். உடனே கொடைவிழா நடுநிசியில் நின்றது. மறுநாள் காலையில் எழுந்த பிரிட்டிஷ் அதிகாரியின் கண்கள் தெரியவில்லை. கத்தினார், கதறினார், சிப்பாய் வந்து கூறினான். ‘‘துரை, உடனே கோயிலுக்கு வாங்க, எல்லாத்துக்கும் அந்த அம்மன் தான் காரணம்’’ என்று அழைத்து வந்தான்.

பிரிட்டிஷ் அதிகாரி தவறை உணர்ந்து விழா நடத்த அனுமதித்தார். பார்வையற்றவராய், சிப்பாய் உதவியுடன் கோயிலில் நின்று கொண்டிருந்தார். இரவில் நின்ற விழா, காலையில் தொடர்ந்தது. அம்மன் அருள் வந்து ஆடியவர் கூறினார். ‘‘துரையை எட்டாம் கொடைக்கு மரகத கண்மலர் எனக்கு வாங்கி வைக்கச்சொல் அதன் பின்னர் அவனுக்கு கண் பார்வை வரும்’’ என்றார். அதன் படி எட்டாம் கொடைக்கு மரகத கண்மலர் இரண்டு வாங்கி பிரிட்டிஷ் அதிகாரி கோயிலுக்கு கொடுத்தார். பூஜையின் போது அந்த கண்மலர்கள் அம்பாளுக்கு சாத்தப்பட்டது.

அந்த நேரம் பிரிட்டிஷ் அதிகாரிக்கு கண் பார்வை வந்தது. மீண்டும் பார்வை பெற்ற பிரிட்டிஷ் அதிகாரி ஆனந்தம் கொண்டார். மனம் உருகி சிரமேல் கரம் கூப்பி வணங்கினார். அந்த மரகத கண்மலர்கள்தான் தற்போதும் அம்பாளுக்கு சாத்தப்படுகிறது. செங்கோட்டையில் இருந்த ஆங்கிலேய பிரபு ஒருவர் குஷ்ட நோயால் (தொழுநோய்) அவதிப்பட்டார். அவரை சந்தித்தபோது இந்த அதிகாரி பேராத்து அம்மனின் பெருமைகளை எடுத்துக்கூற, செங்கோட்டை பகுதியை கவனித்து வந்த ஆங்கிலேய பிரபு.

அவர் தினமும் காலை, மாலை இருவேளை தாமிரபரணி ஆற்றில் குளித்து அம்பாளை பூஜித்து வந்ததன் பலனாக 108 வது நாள் அவருக்கு குஷ்ட நோய் நீங்கியது. அவர் அம்பாளுக்கு தனது சொந்த செலவில் கொடை விழா நடத்தினார். இதன் காரணமாக அப்பகுதி குட்டந்துறை என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் ஆடி மாதம் 3ம் செவ்வாய்கிழமை நடைபெறும் முளைப்பாரி திருவிழாவும், புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழாவும் முக்கிய விழாக்களாகும்.

படங்கள்: ஆர். பரமகுமார்.

Tags :
× RELATED ALP ஜோதிடம் ஓர் அறிமுகம்