×

தம்பதி ஒற்றுமைக்கு அருள்புரியும் கல்யாண வெங்கடரமண சுவாமி

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா ஜோலார்பேட்டை அருகே சுற்றுலா தலமாக விளங்குகிறது ஏலகிரிமலை. இங்குள்ள அத்தனாவூரில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் ஏலகிரி தாயார்  சமேத கல்யாண வெங்கடரமண சுவாமி. விவசாய நிலத்தில் ஏர் உழுது கொண்டிருந்தபோது ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீஏலசரோவரப் பெருமாள் சுயம்புவாக காட்சியளித்தனர். சிலைகளை பார்த்த விவசாயி மற்றும் மலைவாழ் மக்கள் சுவாமியை பிரதிஷ்டை செய்து பூஜித்து வழிபட்டு வந்தனர். சுவாமிக்கு கல்யாண வெங்கட்ரமணா என்ற மற்றொரு திருநாமமும் உள்ளது.

பின்னர் தீவிர பெருமாள் பக்தர் ஒருவர் ஏலகிரிக்கு வந்தபோது ஏலசரோவர பெருமாளை தரிசித்து பெருமாளின் அருளை பெற்றார். பின்னர் திருப்பதியில் அருள்பாலித்து வரும் வெங்கடேஸ்வர பெருமாளுக்கு உள்ளதுபோல், இங்கும் சுவாமிக்கு கோயில் எழுப்ப வேண்டும் என கூறி கோயிலை கட்டி சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டு வருகின்றனர். கோயிலுக்குள் நுழைந்தவுடன் பலிபீடமும், கொடிமரமும் அடுத்து பெரியாழ்வார் சன்னதியும் உள்ளது. கருவறையில் சுவாமி அருள்பொங்கும் முகத்துடன், சங்கு சக்கரம் ஏந்தி, அபய, வரத முத்திரையுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறார்.

தாயார் ஆண்டாள் தனி சன்னதியில் ஏலகிரி தாயார் என்ற திருநாமத்துடன் கருணையே உருவாக அருள்பாலித்து வருகிறார். மகாலட்சுமி ஏலகிரி மலையில் பிறந்து வளர்ந்ததும், வெங்கடேச பெருமாள் மலைக்கு வந்து மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டு இங்கேயே அருள்பாலித்து வருவதாக பக்தர்களின் நம்பிக்கை. கல்யாண வெங்கடரமண சுவாமியை வழிபட்டால் திருமணத்தடையை நீக்கி மாங்கல்ய வரம், குழந்தை பாக்கியம், தொழில் விருத்தி, கணவன்-மனைவி ஒற்றுமை போன்ற வேண்டுதல்கள் நிறைவேறும் என்பதும் பக்தர்களின் தீராத நம்பிக்கை. இதனால் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்களும் இங்கு வந்து சுவாமியை வழிபட்டு செல்கின்றனர்.

இவ்வாறு வணங்கி செல்லும் பக்தர்கள், தங்களின் பிரார்த்தனை நிறைவேறியதும்  ஏலகிரி தாயார், கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துகின்றனர். மேலும் பசுக்களையும் தானமாக வழங்கி வருகின்றனர். ஏலகிரி தாயாருக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமையிலும், மாதந்தோறும் உத்திர நட்சத்திரத்திலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் பூர நட்சத்திரத்தில் தாயாருக்கு நடைபெறும் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தாயாரை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிட்டும்,  நினைத்த காரியம் கைக்கூடும் என்பது ஐதீகம்.  புரட்டாசி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் நடக்கும். அப்போது கருடன் கோயிலை வட்டமிட்டு, பெருமாளை வணங்குவது தனி சிறப்பு. திருப்பதியில் நடக்கும் உற்சவம்போல், இங்கும் கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் செய்யப்பட்டு சிறப்பு தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.


Tags : Kalyana Venkataramana Swami ,
× RELATED தாந்தோணிமலை பெருமாள் கோயிலில் தேரோட்டம்