×

புரட்டாசி மாதத்தில் புது வீட்டில் குடியேறாததற்கான காரணங்கள் என்ன தெரியுமா?

திருப்பதி வெங்கடாசலபதி என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது “புரட்டாசி” மாதத்தில் விரதமிருந்து அவரை வழிபடுவது தான். வழிபடும் பக்தர்கள் அனைவரின் விருப்பங்களை நிறைவேற்றுபவராக இருக்கும் பெருமாளை வழிபடும் தெய்வீகமான புரட்டாசி மாதத்தில் “கிரகபிரவேசம்” அல்லது “புதுமனை புகுவிழா”, வேறு புது வீட்டில் வசிக்க மாறி செல்லுதல் போன்ற சுப காரியங்கள் செய்யபடுவதில்லை. அதற்கான காரணங்கள் என்ன என்பதை பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.தனது மிக பெரும் பராக்கிரமத்தால் பூலோகம் மற்றும் தேவலோகத்தையும் வென்று அக்கிரமங்கள் பலவற்றை செய்து வந்தவன் அசுர குல மன்னன் “ஹிரண்யகசிபு”. ஹிரண்ய கசிபுவின் அதர்ம செயல்களை தடுக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும் திருமாலின் மாதமாகிய இந்த புரட்டாசி மாதத்தில் தான் “நரசிம்ம அவதாரம்” எடுத்து, ஹிரண்யகசிபுவை அவனது சொந்த அரண்மனையிலேயே வதம் புரிந்தார்.

சாமானிய மக்களாகிய நாமும் அன்றாடம் பல விதமான தர்ம மீறல்களை தெரிந்தோ, தெரியாமலோ செய்து கொண்டுதான் இருக்கிறோம். எனவே பண்டைய காலம் முதலே புரட்டாசி மாதத்தில் புதுமனை புகுவிழா நடத்தி குடிபுகுந்தால், நாம் அதுவரை செய்து வந்த பாவங்களுக்குகாக, ஹிரண்யகசிபுவை தண்டித்தது போல் தங்களையும் பெருமாள் தண்டித்து விடக்கூடாது என்ற ஒரு வித அச்சம் கலந்த தயக்கத்தினால் பெரும்பாலானோர் இம்மாதத்தில் கிரகப்பிரவேசம் அல்லது புதுமனை புகுவிழா, வசிப்பதற்கு வேறு வீட்டிற்கு மாறி செல்வது போன்றவற்றை செய்வதில்லை.

மேலும் இந்த புரட்டாசி மாதத்தில், சூரியன் “கன்னி” ராசியில் பெயர்ச்சியாகி தென் திசையை நோக்கிய தனது பயணத்தை தொடங்கும் மாதமாக இருக்கிறது. தென் திசை என்பது “எம தர்மன்” இருக்கும் திசையாகும். மறைந்த நம் முன்னோர்களை வழிபடுவதற்குரிய திசை. இப்புரட்டாசி மாதத்தில் தான் பித்ருக்களை வழிபடுவதற்கு சிறந்த தினமான “மகாளய அமாவாசை” தினமும் வருகிறது. மோட்ச பதவியை அளிக்கும் நாராயணனை விரதமிருந்து வழிபடுவதற்கும், மறைந்த நமது முன்னோர்களை வழிபடுவதற்கும் சிறந்த மாதமாக புரட்டாசி மாதம் இருப்பதால் “கிரகப்பிரவேசம்” எனப்படும் புதுமனை புகுதல், வசிக்கின்ற வாடகை வீட்டிலிருந்து வேறு வீட்டிற்கு மாறி சென்று சென்று குடிபுகும் போது செய்யபடும் “பால் காய்ச்சுதல்” போன்ற சுப நிகழ்ச்சிகள் செய்யாமல் தவிர்க்கின்றனர். இது காலப்போக்கில் ஒரு சம்பிரதாயமாக கருதப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது.


Tags : house ,
× RELATED ஏட்டு வீட்டில் திருடிய 2 பேரை காவலில் எடுத்து விசாரணை