தோவாளையில் பக்தர்களின் குறை தீர்க்கும் கிருஷ்ணண்

நாஞ்சில் நாட்டின் கிழக்கு பகுதியில் பசுமை நிறைந்த கிராமம் தான் தோவாளை. புராண காலத்தில் தேவேந்திரன் தன் சாபம் தீர சுசீந்திரத்தில் மும்மூர்த்திகளை வழிபட வேண்டி தோவாளையில் நந்தவனம் அமைத்து இங்குள்ள மலர்களை கொண்டு பூஜை செய்து வந்தான். அதன் காரணமாக தோவாளையில் மலரும் பூக்களுக்கு மணம் அதிகம்.இத்தகைய பெருமை வாய்ந்த தோவாளையின் மையப்பகுதியில் உள்ள இக்கோவில் பிரசித்திப் பெற்றது. இங்கு கிருஷ்ணன் இரு கைகளிலும் வெண்ணெய் ஏந்தியவாறு நின்ற கோலத்தில் சிறு குழந்தை வடிவில் காட்சி தருகிறார். இந்த கோவில் கி.பி. 1494ல் வேணாட்டை ஆண்ட பூதலவீரஸ்ரீ உதயமார்த்தாண்ட வர்மன் என்ற மன்னரால் கட்டப்பட்டது.

பெரும்பாலும் கிருஷ்ணன் கோவில்கள் தரைமட்டத்திற்கு சமமாக அல்லது உயரத்தில் கட்டப்பட்டு இருக்கும். ஆனால் இங்கு தரைமட்டத்திலிருந்து மிகவும் தாழ்வாக கோவில் கட்டப்பட்டுள்ளது. பல படிகள் இறங்கி சென்று தான் மூலவர் குழந்தை கிருஷ்ணனை தரிசிக்க முடியும். தரிசனம் முடிந்து அதேபோல் பல படிகள் ஏறித்தான் மேலே வரவேண்டும்.இதன் அர்த்தமாவது என்னை இறங்கி வந்து வழிபட்டால், நான் உங்களை மேலேற்றி விடுவேன் என்பதாகும். கோவிலை சுற்றி நந்தவனம் உள்ளது.  சிப்பியால் செய்யப்பட்ட காளிங்கநர்த்தன கிருஷ்ணர், வில்வமரத்தடி சிவன்,  கோசலை, நவக்கிரக மண்டபம் உள்ளது. கோவில் முன்பு ஸ்ரீஅனுமான், ஸ்ரீராமர்,  ஸ்ரீலெட்சுமனர், சீதாதேவி சிலைகளும் உள்ளன.

இந்த கோவிலில் சித்திரை விஷூ கணி காணுதல், கிருஷ்ண ஜெயந்தி உறியடி என்று 10 நாள் விழா, புரட்டாசி சனிக்கிழமை மலர்முழுக்கு விழா, கார்த்திகை ரோகிணி தீபம், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு, ஆருத்ரா தரிசனம், ஆஞ்சநேயர் ஜெயந்தி, தினசரி காலை கோபூஜை, தமிழக அரசின் அன்னதானதிட்டமும் நடந்து வருகிறது. கோவிலுக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். குறைகளை பக்தர்கள் பயபக்தியுடன் தெரிவித்து சென்றால் குறைகள் அனைத்தும் நீங்கிவிடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

Tags : Krishnan ,devotee ,
× RELATED அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம்...