சுந்தரரை சிவபெருமான் ஆட்கொண்ட தலம் - நினைத்த காரியம் நிறைவேற்றும் கிருபாபுரீஸ்வரர்

சமயக்குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரர் கயிலாயத்தில் அணுக்க தொண்டராக பணியாற்றியபோது அங்கு பணியாற்றி வந்த மகலினி, அனிந்திதை என்ற இரண்டு பெண்கள்மீது காதல் வயப்பட்டாராம். இதைக்கண்ட சிவபெருமான் நீ பூலோகம் சென்று இல்லற வாழ்வை அனுபவித்து வா? என்று அனுப்புகிறார். அப்போது சுந்தரர் சிவனிடம் என்னை தக்க நேரத்தில் தாங்கள் ஆட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். அதை சிவபெருமாள் ஏற்றுகொள்கிறார். இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் பகுதியைச்சேர்ந்த சடையனார், இசைஞானியார் என்பவர்களுக்கு மகனாய் பிறந்தார் சுந்தரர்.

அவர் ஒரு நாள் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் போது நரசிங்கமுனையர் என்ற மன்னன் அவரை எடுத்து சென்று வளர்த்து வந்தார். சுந்தரருக்கு திருமண வயது வந்ததும் கடலூர் மாவட்டம் மணம்தவிழ்ந்த புத்தூர் சடங்க விசிவாச்சாரியார் மகள் கமலஞானபூங்கோதை என்பவரை திருமணம் பேசி முடித்தனர்.  திருமணத்தின்போது சுந்தரர் கமலஞானபூங்கோதை கழுத்தில் தாலிகட்ட முயன்றபோது முதிய அந்தணராய் தோன்றிய சிவபெருமான் திருமணத்தை தடுத்து நிறுத்தினார். சுந்தரர் தனக்கு அடிமை என்றும் அவர் வேறு ஒரு பெண்ணை அடிமையாக்க முடியாது என்றும் வாதம் செய்கிறார். என்னிடம் அவனுடைய பாட்டன் எழுதிகொடுத்த ஓலை உள்ளது என்று காட்டிய சுந்தரர் அதை பிடுங்கி அக்னிகுண்டத்தில் போட்டு எரித்து விடுகிறார்.

இதனால் அந்தணர் ஊர் பெரியோர்களிடம் இவர் எரித்த ஓலை படிதான் என்னிடம் இதன் மூலஓலை உள்ளது என்றும் கூறுகிறார். பின்னர் அரசன் முன்னிலையில் மூலஓலையை காண்பித்துள்ளார். அப்போது சுந்தரர் இந்த ஓலையை என் பாட்டனார் எழுதவில்லை. அவரின் கையழுத்து இல்லை என்றும் அதை ஏற்று கொள்ள மறுத்து விடுகிறார். அதற்கு அந்தணர் திருநாவலூர் பகுதியில் அவரின் பாட்டனார் எழுதிய ஓலையை எடுத்து வந்து காண்பித்துள்ளார். இரண்டும் ஒன்றாக இருந்ததால் நீதிஅரசர்கள் முதிய அந்தணருக்கு, சுந்தரர் அடிமை என்று தீர்ப்பு வழங்கினர்.தொடர்ந்து அந்தணர் மற்றும் சுந்தரர் ஆலயத்திற்குள் சென்றவுடன். ஆலயத்தின் கதவு தானாக தாழிட்டுகொண்டது. முதிய அந்தணர் மறைந்து விட்டார். அப்போது சுந்தரர் நீ யார் என்று கேட்டபோது ஒரு அசரீரி குரல், சுந்தரா நீ பூலோகம் செல்லும் போது தக்க நேரத்தில் வந்து ஆட்கொள்ள வேண்டும் என்று கூறியதால் நான் உன்னை ஆட்கொண்டேன் என்று சொன்னது.  அதிர்ச்சியடைந்த சுந்தரர் பெருமானே தங்களை பித்தன் என்றும் வாய்க்கு வந்தவாறு பேசிவிட்டேனே என்று கூறினார்.

அதற்கு தன்னை பற்றி ஒரு பாடல் பாட சொல்லி சிவபெருமான் சுந்தரரிடம் கேட்டபோது எனக்கு ஏதும் தெரியவில்லை என்றாராம். உடனே சிவபெருமான் பித்தா பிறைசூடி பெருமாளே அருளாள என்று அடி எடுத்து கொடுத்தார். அந்த வகையில் முதன்முதலில் சுந்தரர் தேவாரம் பாடிய திருத்தலம் என்ற பெருமை திருவெண்ணெய்நல்லூருக்கு உண்டு.இவ்வாலயம் 10 ஏக்கர் பரப்பளவில் ஒரு இராஜகோபுரம், இரண்டு பிரகாரங்களுடன் அமைந்துள்ளது. கோபுரம் கடந்து உள்ளே நுழைந்தால் வலது பக்கம், சுந்தரர் வழக்கு நடந்த “வழக்கு தீர்த்த மண்டபம்” உள்ளது. அடுத்து கொடிமரம், கொடிமர விநாயகர், பலிபீடம் உள்ளன. மேலே சுந்தரருக்கு இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி தந்த விமானக் கோயில் உள்ளது.

அதற்கு எதிரில் கீழே சுந்தரர் சந்நிதி உள்ளது. இத்தல மூலவர் சுயம்பு லிங்கமாக கிருபாபுரீஸ்வரர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அம்மன் மங்களாம் பிகை சந்நிதியும் கிழக்கு நோக்கியே உள்ளது. கோவிலின் தென்புறம் தண்டதீர்த்தம் உள்ளது. உட்பிரகாரத்தில் பொல்லாப் பிள்ளையார், முருகன் சந்நிதிகள் உள்ளன. நினைத்த காரியத்தை நடத்தி தரும் வல்லமை கிருபாபுரீஸ்வரருக்கு உண்டு. திருமணத்தடை அகற்றி, குழந்தை பாக்கியம் தருவார் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

செல்வது எப்படி?


சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரத்தை தாண்டியதும் வலது புறம் செல்லும் சாலையில் சென்றால் திருவெண்ணைநல்லூர் ஆலயத்தை அடையலாம்.

Tags : Shiva ,
× RELATED சிவனருள் கிட்டச் செய்யும் திரிசூல வழிபாடு!!