தமிழகம்-கர்நாடகம் தேர்வடம் பிடிக்கும் தேன்கனிக்கோட்டை பேட்டராயசுவாமி கோயில்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் யானைகள் நடமாட்டம் மிகுந்த பசுமையான வனப்பகுதியில் இருக்கிறது ஆயிரமாண்டு பழமைவாய்ந்த பேட்டராய சுவாமி கோயில். போசளக் கட்டிடக்கலையில் அமைந்துள்ள இந்த கோயில், விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் சொல்கிறது.பேட்டே என்ற கன்னட சொல்லுக்கு வேட்டை என்று பொருள். தமிழக மக்கள் சுவாமியை வேட்டையாடிய பிரான் என்று போற்றுகின்றனர். ஆந்திரம், தமிழகம், கர்நாடக மாநிலங்களின் எல்லைப்பகுதி, இது என்பதால் 3 மாநில மக்களும் திரண்டு வந்து வழிபட்டுச் செல்லும் பெருமையும் பேட்டராய சுவாமிக்கு உண்டு.

Advertising
Advertising

வேட்டையாடிய பிரான் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். ராமர், லட்சுமணன், சீதை, அனுமன் ஆகியோருக்கும் தனிச்சன்னதி அமைந்துள்ளது. வேணுகோபாலன், ருக்மணி, சத்யபாமாவுடன் அருள்பாலிக்கிறார். ஆழ்வார்கள் சன்னதியும், ராமானுஜருக்கு ஒரு தனி சன்னதியும் உள்ளது. திருப்பதியை போலவே இக்கோயிலில் அச்சு அசலாக மூலவர் காட்சியளிப்பதும், அங்கு  நடக்கும் அனைத்து உற்சவங்களும் இங்கு நடப்பதும் கூடுதல் சிறப்பு. இதனால் வேண்டுதல் வைத்து  திருப்பதிக்கு செல்ல முடியாத பக்தர்கள், இங்கு வந்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்திச் செல்கின்றனர்.

கண்வ முனிவர், இந்த பகுதியில் அமர்ந்து திருமாலை வேண்டி தவம் செய்தார். அப்போது தேவகண்டன் என்ற அரக்கன் புலியுருவில் வந்து அவரது தவத்துக்கு இடையூறு செய்தான். முனிவரின் வேண்டுதலுக்கு செவிசாய்த்து, வேடன் உருவில் வந்த சுவாமி, தன்னுடைய ‘டேங்கினி’ என்ற கட்கத்தை எறிந்து அவனைக் கொன்றார். இப்படி தன்னை வேண்டிய முனிவரின் துயரம் போக்க அரக்கனை வேட்டையாடிய திருமாலை ‘வேட்டையாடிய பிரான்’ என்று தேவர்களும், முனிவர்களும்  கொண்டாடினர். கன்னட மக்கள், வேட்டையாடிய பிரானை பேட்டராய சுவாமி என்று வழிபட்டு வருகின்றனர் என்பது தலவரலாறு.

இக்கோயிலில் கன்னட பஞ்சாங்கத்தின்படி திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் சைத்ர மாதத்தில் 3 நாட்கள் நடக்கும் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி ெபற்றது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத பேட்டராயசுவாமியின் உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு, தேர்மீது அமர்த்தி சிறப்பு பூஜைகள் செய்யப்படும். தொடர்ந்து சவுந்தரவல்லி தாயார் தேர் முன்னால் செல்ல, பெரிய தேர் ஆடி அசைந்து தெப்பக்குளம் வரை ெசல்லும் காட்சியை காண கோடிக்கண் வேண்டும். இதில் தமிழகம், கர்நாடகம் என்று 2 மாநில மக்களும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து செல்வது இன்று வரை தொடர்கிறது.தேரோட்டத்தின் போது, பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றவும், நினைத்த காரியங்கள் நடக்கவும் தேர் மீது உப்பு மிளகு தூவியும், வாழைப்பழம் மற்றும் பூக்களை வீசியும் வழிபடுவர்.

இப்படி வழிபட்டால் எந்த காரியத்தையும் நிறைவேற்றி தருவார் பேட்டராயசுவாமி என்பது ஆண்டாண்டு காலமாய் தொடரும் நம்பிக்கை. இதேபோல் தேரோட்ட விழாவையொட்டி நீர்மோர், அன்னதானம், இன்னிசை கச்சேரி, வாணவேடிக்கை, விடியவிடிய பல்லக்கு ஊர்வலம் என்று திரும்பிய திசையெல்லாம் களை கட்டும்.மேலும் வைகுண்ட ஏகாதசி அன்று இங்கு சொர்க்க வாசல் திறப்பு வெகு விமரிசையாக நடக்கும். கிருஷ்ண ஜெயந்தியன்று நடக்கும் திருமஞ்சன உற்சவமும், மறுநாள் நடக்கும் உறியடி உற்சவமும் கவனம் ஈர்த்து வருகிறது. மேலும் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு பிரமோற்ச விழாவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: