×

முத்தாய் பொழிவாள் முத்தாலம்மன்

அது பதினாறாம் நூற்றாண்டு. இன்றிலிருந்து கிட்டத்தட்ட ஐநூறு ஆண்டுகள் முந்தைய காலம். அந்த அழகான கிராமத்திற்குப் பெயர் கருவம்பாக்கம். கருவமுட்கள் நிறைந்த காடுகளை எல்லையாய் அமைத்து அதன் நடுவே கண்ணுக்கெட்டும் தொலைவு முழுவதும் வயல்கள் நிறைந்த எழில் கொஞ்சும் பூமி. ஏகாம்பரேஸ்வரர் எனும் ஈசன் உறையும் அற்புதக் கிராமம். ஊரிலுள்ளோர் ஈசனையும், உமையன்னையையும் உள்ளத்தில் நிறுத்தி கனிந்த பக்தியோடு விளங்கினர். ஆனால், காலம் எனும் தேவன் சுழற்காற்றாய் அவ்வூரை சுற்றி வந்தான். கார்மேகங்கொண்டு அவ்வூரை அடைத்து நின்றான். வெறும் தூறலாய் தொடர்ந்த மழை பலமாகியது. அசுரபலம் பெற்ற மழை பெரும் வெள்ளமாய் பெருகியது. மெல்ல ஊர் மூழ்க ஆரம்பித்தது. ஊரிலுள்ளோர் எல்லைக்கு ஓடினர். மெல்ல அந்த ஏகாம்பரேஸ்வரர் எனும் கோயிலை நீர் அடைத்து நின்றது. அருகேயுள்ள் மண்மேடுகள் கரைந்து அந்தக் கோயிலை குடையாய் கவிழ்த்து மூடிக்கொண்டது. ஊர் மக்கள் உறைந்து போனார்கள். ஊரிலுள்ளோர் அனைவரும் ஒன்றாய் குழுமினார்கள். துக்கம் தாங்காது வாய் விட்டு அழுதார்கள்.

ஊரின் மத்தியிலிருந்து தள்ளி சற்று வெளியே வீடுகள் அமைத்து தங்கினர். மெல்ல மழையும் நின்று போனது. அன்று முழு பவுர்ணமி. சந்திரன் தன் அமிர்தமான கிரணங்களை பொழிந்தபடி உச்சியில் வெண்மையாய் பிரகாசித்தான். ஊரிலுள்ள வேதியர்களும், மக்களும் அடுத்து என்ன செய்வது என்று அமர்ந்து யோசித்தனர். மெல்ல அங்குள்ள மக்களை பால் வெண்மையாய் பொழியும், முத்து போன்று மின்னும் கண்களையுடையவளுமான அம்மன் தன் அருள் எனும் கரங்களால் அணைத்துக் கொண்டாள். சட்டென்று எல்லோர் சித்தத்திலும் மாரியம்மன் கோயில் கட்டுவோம் என்ற எண்ணம் எழுந்தது. எல்லோரும் ஒரே குரலாய் சொல்ல ஊர் குதூகலித்தது. எல்லோர் மனதிலும் ஆனந்தம் தளும்பி நின்றது. அம்மன் பெயர் என்ன வைக்கலாம் என்று மக்களைக் கேட்க, அந்த ஊர் அண்ணாந்து உச்சியைப் பார்த்தது. முத்தியாலு என்று தெலுங்கு பேசும் வேதியர் ஒருவர் கூற, ஊர் அப்பெயரையே மீண்டும் மீண்டும் உச்சரித்தது. முத்தியாலு என்றால் என்ன என்று கேட்டது. முத்து என்று வேதியர் சொல்ல ஊர் இரண்டையும் சேர்த்து முத்தாலம்மன் என்று திருப்பெயர் சூட்டி மகிழ்ந்தது. மிக வேகமாய் மறுநாளே கோயில் கட்டும் வேலையை ஆரம்பித்தது.

சிறிது காலத்திலேயே கட்டியும் முடித்தது. முத்தாலம்மனை பிரதிஷ்டை செய்து அருகே கணபதியையும், நாகர் சிலையையும் அமைத்து மாபெரும் விழாவாய் கொண்டாடியது. கோயிலைச் சுற்றிலும் சிவலிங்கத்தை நிறுவி தனி சந்நதியில் அமர்த்தியது. சக்தி வழிபாடு உச்சத்தில் இருந்த காலமாதலால் நிறைய நாகர் சிலைகளையும், அம்மன் சிலைகளையும் கோயிலை சுற்றி பிரதிஷ்டை செய்தது. அக்கோயிலைச் சுற்றி ஊர் மெல்ல வளர்ந்தது. அவளருளால் எல்லா வளங்களோடு பிரமாண்டமாய் திகழ்ந்தது. இன்றும் ஊரின் சுடுகாட்டுப் பகுதிக்கு அருகில் முன்பு பூமிக்குள் புதைந்திருந்த கோவிலைச் சேர்ந்த சிவலிங்கமும் இன்னும் கோயிலின் பல சிதிலமடைந்த பாகங்களும் காணப்படுகின்றன். அக்கோயிலின் குளமாக இருந்த இடம் இன்றும் உள்ளது. இது சிறிய கோவில்தான். ஆனால் சக்தி வாய்ந்த கோவில். இன்றும் அவ்வூர் மக்கள் முத்தாலம்மா...முத்தாலம்மா...என்று உருகுகிறார்கள். நின்றாலும், நடந்தாலும் எந்த வேலையைச் செய்தாலும் அவர்கள் நாவினில் முத்தாலம்மா எனும் நாமத்தை உச்சரித்தபடி உள்ளனர். காலையில் அவள் முத்துபோல் பிரகாசிக்கும் முகம் பார்த்து அன்றைய வேலையைத்தொடங்குகின்றனர்.

அம்பாளின் முகம் சற்று உக்கிரமாகவும், அதேசமயம் உதட்டில் மெல்லிய புன்னகையோடும் காட்சியளிக்கும் அற்புதம் பார்க்க காண கண்கோடி வேண்டும். அவள் ஆணையிடுவதுபோல் அமர்ந்திருக்கும் கம்பீரத்தோற்றத்தின் முன்பு அவ்வூர் மக்கள் கைகட்டி நிற்கின்றனர். முத்துமாரியம்மன் எனும் முத்தாலம்மனைப்பற்றி இரண்டு சிறப்பு அம்சங்கள் சொல்ல ஆச்சரியத்தில் கண்கள் விரிகின்றன. அக்காலத்தில் முதலாவதாக யார் வீட்டிலாவது திருமணத்திற்கு மாப்பிள்ளையோ, பெண்ணையோ தேர்ந்தெடுப்பதாய் இருந்தால் அம்மனுக்கு அலங்காரம் செய்து ஐந்துதலை  நாகத்தின் மேல் எலுமிச்சம்பழத்தை வைத்து தாயே உத்தரவு கொடு என்று வேண்டினால் நல்ல உத்தரவாக இருந்தால் எலுமிச்சம்பழம் முன்பக்கமாகவும், தீய சகுனமாக இருந்தால் அம்மனுக்குப் பின்பக்கமாகவும் விழுமாம். இதில் அதிசயம் என்னவென்றால் எலுமிச்சம்பழம் ஐந்து தலை நாகத்தின் மீதிருந்து உடனே விழாது நாகத்தின் தலைக்கு மேல் சற்று உயரே கிளம்பி பின்புதான் ஏதாவது ஒருபக்கமாக விழுமாம்.

பிரார்த்தனை செய்பவர்கள் அம்மனுக்கு எதிரே அமர்ந்து கேட்கும்போது பழம் நல்ல உத்தரவு கொடுப்பதானால் மடியில் வந்து விழுமாம். இதற்கு அம்மன் மடிப்பிச்சை என்று சொல்வார்களாம். இரண்டாவது அம்மனுக்கு உற்சவம் செய்யும்போது அம்மன் வீதி உலா புறப்படும் சமயம் எங்கிருந்தோ மேகங்கள் ஒன்று சேர்ந்து மழை கொட்டித்தீர்த்துவிடும். அம்மன் மெல்ல மூன்று தெருக்களையும் திருவுலாவாய் சுற்றித் திரும்பி வந்தவுடன் ஒரு தூறல்கூட இருக்காது. இக்கோயிலில்  சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் செய்யும் முன்பு நவக்கிரக சன்னதி கட்டுவதற்காக நிலத்தை தோண்டியபோது மிக அருமையான சிற்ப வேலைப்பாடு உள்ள விக்கிரகங்கள் கிடைத்தன. அவைகள் இன்னும் கோயிலில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கற்சிலைகளும் தொடர்ச்சியாய் கிடைத்தன. அன்றிரவே தோண்ட வேண்டாம் என்றும் அதற்குரிய கால நேரம் இன்னும் வரவில்லை என்று அருள்வாக்கு சொல்லப்பட்டது.

அத்தோடு தோண்டும் பணி நிறுத்தப்பட்டு பின்னமாய் கிடைத்த அந்த கற்சிற்பங்கள் கோயிலின் ஈசான்ய மூலையில் புதைக்கப்பட்டன. இன்னும் என்னென்ன பூமியில் புதையுண்டு இருக்குமோ அந்த மர்மங்களும் ரகசியங்களும் முத்தாலம்மனுக்குத்தான் தெரியும். கோயிலின் கருவறையில் உள்ள அம்பாளின் அற்புதத் திருமேனி, உற்சவ மூர்த்திகள், கம்பீரமாய் உள்ள பிள்ளையார், நாகர் போன்றவை தரிசனம் செய்வோரை மெய்சிலிர்க்க வைக்கும். அதிலிருந்து பிரவாகமாய் பெருகும் தெய்வீக அலைகள் உள்ளத்தையும் உடலையும் பரிசுத்தப்படுத்தும், அம்பாளை வேண்டுபவர்களுக்கு வேண்டியன எல்லாம் தருவாள். கருவம்பாக்கம் முத்தாலம்மன் திருவிழா நடந்தால்தான் அப்பகுதியில் நன்கு மழை பெய்யும் என்று சுற்றுப்புற கிராமங்களில் உள்ளவர்கள் எப்போதும் பேசுவார்களாம். மழை கொடு தாயே என்று வேண்டி நிற்பார்களாம். இத்தலத்திற்குச் செல்ல திண்டிவனம் & வந்தவாசி சாலையில் கோவிந்தாபுரம் எனும் ஊரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் உள்ளே செல்ல வேண்டும்.  கருவம்பாக்கம் செல்லுங்கள். பெருக்கெடுத்து ஓடும் முத்து மாரியம்மனின் அருளைப் பருகிடுங்கள்.

Tags :
× RELATED சுந்தர வேடம்