×

துன்பங்கள் விலக்கும் துவாரகா கிருஷ்ணன்

இந்த பூவுலகில், அற்புதங்கள் நிகழ்த்தும் ஆலயங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று தான் சுசீந்திரத்தில் உள்ள துவாரகை கிருஷ்ணன்கோவில். நாகர்கோவில் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலுக்கு செல்லும் சாலையில் துவாரகை கிருஷ்ணன்கோவில் அமைந்துள்ளது. இந்த கோயில் துவாரகை கிருஷ்ணன்கோவில் என்று அழைக்கப்பட்டாலும், கோவிலில் மூலவராக காட்சி தருபவர் எம் பெருமானாகிய மகா விஷ்ணுவே. நான்கு கரங்களோடு சங்கு, சக்கரத்துடனும்,  நான்காவது கரத்தில் அமிர்தத்தை ஏந்தியபடி காட்சி தருகிறார். கருவறையின் விமானத்தில் முன், ஐராவதம் யானையில் இந்திரனும், தென்புறம் ஸ்ரீதட்சிணாமூர்த்தியும், மேற்கு புறம் மகா விஷ்ணுவும், வடக்குபுறம் பிரம்மாவும் காட்சி தருகிறார்கள். இதுவே இத் திருக்கோவிலின் முக்கிய அற்புதமாகும்.

அனைத்து வைணவ  திருக்கோவில் விமானங்களில் காணப்படும் சின்னங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட சின்னமாக இத் திருக்கோவில் விமானம் காட்சி தருகிறது. சுசீந்திரம் பழையாற்றின் கரையில் அமைந்துள்ள இந்த கோயில் சாலையின் தளத்தில் இருந்து சுமார் 6 அடி பள்ளத்தில் அமைந்துள்ளது. முன் மண்டபம் ஓடு கட்டிடத்தால் ஆனது. கற்களால் ஆன சுற்று சுவர் இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் முன்புறம் பலி பீடம் அமைந்துள்ளது. கொடி மரம் இல்லை. கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மண்டப வடிவங்களும், சிற்பங்களும் சுந்தர சோழன் என்ற அரசனால் 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருப்பதாக, இங்கு காணப்படும் கல்வெட்டுகள் கூறுகின்றன. மகா மண்டபத்தின் முன்புறம் இரண்டு யாழிகளின் கற்சிற்பங்கள் காணப்படுகின்றன.

இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த திருக் கோயிலில் ஸ்ரீமத் துவாரகை என்றும், மூலவர் துவாரகை கிருஷ்ணர் என்றும் அரசு ஆவணங்களில் குறிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுமார் 1000ம் வருடங்களுக்கு பழமையான இத் திருக்கோவிலின் முன்புறமுள்ள ஓட்டுப்பணி 1963ம் ஆண்டு கட்டப்பட்டது. திருக்கோவிலில் 1993ம் ஆண்டுக்கு முன்பு வரை பக்தர்களின் வருகை இல்லாமலேயே இருந்துள்ளது. 1993ம் ஆண்டு சில பக்தர்களின் முயற்சியால் ஸ்ரீ துவாரகை கிருஷ்ணன் பக்தர்கள் சங்கம் தொடங்கப்பட்டு திருக்கோவிலில் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு நான்கு கால வழிபாடுகள் நடக்கின்றன. இத் திருக்கோவிலில் சுற்றுப்புற மண்டபம் 1996ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதே ஆண்டில் ஸ்ரீ கணபதி சன்னதி கன்னி மூலையிலும், அதை தொடர்ந்து ஸ்ரீ சாஸ்தா சன்னதிகளும் அமைக்கப்பட்டன.

திருக்கோவிலுக்கு உற்சவர் சன்னதி  2001ல் அமைக்கப்பட்டது. ஸ்ரீ துவாரகை கிருஷ்ணன் அறக்கட்டளையின் முயற்சியால் திருக்கோவிலின் முன் கலையரங்கம் ஒன்றும் 2003 ல் அமைக்கப்பட்டது. அதே ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 26 ஆண்டுகளாக இந்த கோவிலில் வழிபாடுகள், பண்டிைக கால சிறப்புபூஜைகள், திருவிழாக்கள் முதலிய அனைத்து வழிபாடுகளும் இந்து  அறநிலையத்துறையின் அனுமதியோடு  துவாரகை கிருஷ்ணன் அறக்கட்டளை மூலம் நடக்கிறது. 1994ம் ஆண்டு அரசால் தொடங்கப்பட்ட ஜெயயோகம் என்னும் கூட்டு பிரார்த்தனை நாம வழிபாடு குமரி மாவட்டத்தில் இந்த திருக்கோவிலில் மட்டுமே தினசரி இரவு 7 மணி முதல் 7.30 மணி வரை இடைவிடாது தொடர்ந்து 26 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த திருக்கோவிலில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்து இருக்கும்.

Tags :
× RELATED சகலமும் தரும் லலிதா சகஸ்ரநாமம்