×

தடைகள் நீக்கும் தாணுமாலயன் - சுசீந்திரம் (பிரபஞ்ச தீர்த்தம்)

கன்னியாகுமரி அருகேயுள்ளது சுசீந்திரம். சுசி + இந்திரன் = இந்திரன் சாபம் நீங்கப்பெற்ற இடம். இத்தலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் ஒருங்கே காட்சி கொடுக்கும் (தாண்+மால்+அயன்) தாணுமாலயன் ஆலயம் மிகவும் பிரசித்தமானது. இவ்வாலய திருக்குளம் சகல பாவங்களையும் நீக்க வல்லது. இந்த திருக்குளத்தில் நீராடி தாணுமாலயனை பூஜித்து வந்ததால் தான் இந்திரன் சாப விமோசனம் பெற்றான். பின்னர் இவ்வாலயம் இருந்த இடம் கானகமாக இருந்தபோது இவ்வழியே சென்று பால், மோர் விற்கச்சென்ற இடைக்குலப்பெண் ஒருவரை  ஒரு மரத்தின் வேர் கால் இடறிவிட, தான் கொண்டு வந்த பால், தயிர் பானங்கள் பானைகளோடு உடைந்து போக, தனது கணவனை அழைத்து வந்து அந்த வேரை வெட்ட, அதிலிருந்து குருதி பீறிட்டது. அடுத்த கனமே அம்மரத்தில் மும்மூர்த்திகளும் ஒரு சேர காட்சி அளித்தனர். அதன் பின்னரே லிங்கமாக தாணுமாலயன் அருட்பாலித்தார். இவ்வாறு கோயில் உருவானது குறித்து வரலாறு சொல்லப்படுகிறது. பிரம்மன் இவ்வாலயத்தில் பூஜை செய்து வருவதாக இன்றும் நம்பப்படுகிறது. இதன் காரணமாகவே, இங்கு அர்த்த ஜாம பூஜை கிடையாது. இந்திரன், நந்தியையும், விக்னேஸ்வரரையும் ஒருங்கே தியானித்ததால் ஆலயத்தில் இந்திர விநாயகர் என்ற ஓர் விநாயகர் சந்நதியும், அவர் முன் நந்திதேவரையும் பார்க்க முடியும். சுசீந்தரம் கன்னியாகுமரியிலிருந்து 14. கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

வளங்கள் அருளும் பிரம்ம வித்யாம்பிகை. (அக்கினி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்)

காவிரிக் கரையில் உள்ள 6 சிவ ஸ்தலங்கள் காசிக்கு சமமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவெண்காடு தலமும் ஒன்றாகும். சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது. சூரியனும் சந்திரனும் இங்குள்ள மூலவரை வழிபட்டுள்ளனர். இத்தலத்தில் உள்ள மூர்த்திகள் மூன்று - சுவேதாரண்யேஸ்வரர், நடராஜர், அகோரமூர்த்தி. சக்திகள் மூன்று - பிரம்ம வித்யாநாயகி, காளிதேவி, துர்க்கை தீர்த்தங்கள் மூன்று - சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம் தலவிருட்சங்கள் மூன்று - வடவால், வில்வம், கொன்றை. இக்கோயிலில் உள்ள சந்திர தீர்த்தம் அருகில் உள்ள ஆலமரத்தின் அடிப்பகுதியில் ருத்ரபாதம் இருக்கிறது. இங்கே சிவபெருமானின் திருவடிகள் வரையப்பட்டுள்ளன. இந்த ஆலமரத்தின் அருகில் நமது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணங்கள் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

 திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அக்கினி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், என்னும் முக்குளங்களிலும் முறையே நீராடி மூலவர் சுவேதாரண்யேஸ்வரை வழிபட்டால் பெரும் பலனும் நன்மக்கட்பேறும்  கிடைக்கும். திருவெண்காடரின் சக்தியாகப் பிரம்ம வித்யாம்பிகை என்ற பெரிய நாயகி எழுந்தருளி இருக்கிறார். திருநாங்கூரில் உள்ள மதங்காசிரமத்தில் மதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி, மாதங்கி என்ற திருப்பெயருடன் திருவெண்காடரை நோக்கித் தவமிருந்து, அவரைத் தனது  நாதராக அடைந்தார் என்று பத்மபுராணம் கூறுகிறது. பிரம்மனுக்கு வித்தைகளை கற்பித்ததால் பிரம்ம வித்யாம்பிகை என்னும் திருப்பெயர் பெற்றாள். சம்பந்தர் அம்பாளை நின்று கூப்பிட்ட குளக்கரை குளம் ‘கூப்பிட்டான் குளம்’ என்று அழைக்கப்பட்டு, இன்று ‘கோட்டான் குளம்’ என்று மறுவிவிட்டது.

உமையவள் ஆசைப்பட்டபடி நடராஜர் இங்கே ஆடினாராம். அப்போது அவருடைய ஆனந்தக் கண்ணீராகச் சிந்திய மூன்று துளிகள் மூன்று திருக்குளங்களாக மாறியதாகவும் சொல்லுகிறார்கள். சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழித்தடத்தில், சீர்காழியில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் திருவெண்காடு சிவஸ்தலம் இருக்கிறது. நவக்கிரஹ ஸ்தலங்களில் திருவெண்காடு புதன் ஸ்தலமாக விளங்குகிறது.

தன்னிகரற்ற தரணி பீடம். (சிவகங்கை, வட அருவி, சித்ரா நதி)

கயிலையில் மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தின்போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இறைவன், அகத்தியரிடம் தென்திசைக்குச் சென்று இரண்டு திசையையும் சமமாக வைக்குமாறு ஆணையிட்டார்.ஆனால், இறைவனின் திருக்கல்யாணத்தையும், திருநடனத்தையும் காண இயலாதே என வருந்தினார் அகத்தியர். இறைவன் திரிகூடமலையின் மகிமையைக் கூறி அங்கு விஷ்ணுவாக இருந்த தம்மை சிவலிங்கமாக்கி மகுடாகமப்படி பூஜித்து வழிபட தம் கல்யாண வைபவத்தையும் நடனத்தையும் காணலாம் என்று கூறி அனுப்பி வைத்தார். அகத்தியரும் அவ்வாறே சென்று வைணவர் வேடம் பூண்டு கோயிலுக்குள் சென்று திருமாலைக் குறுக்கி வேதமந்திரத்தால் சிவலிங்கமாக்கி வழிபட்டார், அன்று முதல் இக்கோயில் சிவத்தலமாகியது.

வைணவர்கள் விஷ்ணு மூர்த்தியை காணாது திகைத்து அகத்தியரை நிந்தித்தனர். அவர் அவர்களிடம் கோயிலின் தென்மேற்கு மூலையில் விஷ்ணு மூர்த்தத்தை வைத்து பூஜை செய்யுமாறு அறிவுறுத்தினார். அதன்படி அவர்கள் சிவனுக்கும் திருமாலுக்கும் பொதுப் பெயர்களைச் சொல்லி பாடி ஆலயத்திற்குள் சென்றனர். அகத்தியர் திருமாலை சிவனாக்க தன் கைகளால் தொட்டதால் சிவலிங்கத்தின் தலைப்பாகத்தில் ஐந்து விரல்களும் பதிந்த வடு உள்ளது. முனிவர் தொட்டு அமுக்கியதால் உண்டான தலைவலி நீங்கவே இன்றும் சிவலிங்கத்திற்கு தைலாபிஷேகம் நடைபெறுகிறது என்கிறார்கள். அபிஷேகிக்கப்பட்ட மகா சந்தனாதித் தைலம் கோயில் அலுவலகத்தில் விற்பனை செய்யப்படுகின்றது. இது பல மூலிகைகள், வேர்கள் மற்றும் மருந்துகள் சேர்த்து மருத்துவ முறைப்படி பக்குவமாக காய்ச்சப்படுவது.தலைவலி, வயிற்று வலி க்ஷயரோகம் (எலும்புருக்கி) முதலான கொடிய நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன் படுகின்றது.

இங்கு பராசக்தியானவள் அரி, அயன், அரன் மூவரையும் படைத்து அருளினாள். இவளின் சந்நிதானத்தில் தாணுமாலயப் பூந்தொட்டில் ஆடிக்கொண்டே இருக்கிறது. திரிகூடமலை என்றும் இத்தலம் அழைக்கப்படுகின்றது.இங்கு பராசக்தி, ஸ்ரீ சக்ரமேரு அமைப்பிலுள்ள பீடத்தின் வடிவிலேயே அருட்சுடரை பரப்புகிறாள். பூமாதேவியாக இருந்தவளே இந்த அம்பிகை என்பதால் பூமி எனும் பொருளிலேயே தரணி பீடம் எனும் பெயர் பெற்று விளங்குகின்றது. பௌர்ணமி, நவராத்திரி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரணி பீடத்திற்கு பன்னீர் கலந்த குங்கும அர்ச்சனையோடு விசேஷ பூஜைகள் நிகழ்த்தி வழிபட்டால் எண்ணியது ஈடேறும். ஐப்பசி மாத பூர நட்சத்திரத்தன்று நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தின்போது குற்றாலநாதர், குழல்வாய்மொழி இருவரும் அகத்தியர் சந்நதிக்கு அருகே எழுந்தருளி, அகத்தியருக்கு திருமணக்காட்சி தந்தருள்கின்றனர்.

தலதீர்த்தங்களாக சிவகங்கை, வட அருவி, சித்ரா நதி ஆகியவை விளங்குகின்றன. குற்றாலநாதர் கோயிலில் இருந்து 1 கி.மீ.தொலைவில் தனிக்கோயிலாக உள்ளது. இதன் எதிரே தெப்பக்குளம் இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் இடையே தென்காசியில் இருந்து தென்மேற்கே 5 கி.மீ. தொலைவிலும், செங்கோட்டையிலிருந்து  7 கி.மீ. தொலைவிலும் குற்றாலம் அமைந்துள்ளது.

மங்கலங்கள் பெருக்கும் உமையம்மை (கல்யாண தீர்த்தம்)

அசுர குருவான சுக்ராச்சாரியாரின் மகன் துவஷ்டா என்பவனை குருவாக ஏற்றான் இந்திரன். ஒரு சமயம் துவஷ்டா அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார். இதனை அறிந்த இந்திரன் அவரை கொன்று விட்டான். இதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான். வியாழ பகவான் இந்திரனிடம், இத்தலத்தில் உள்ள சுவாமியை வணங்கினால் தோஷம் நீங்கும் என்றார். அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைக்கு வந்தபோதே பாவம் நீங்கப்பெற்றான். இந்திரனின் பாவத்தை நீக்கிய சிவன் என்பதால் இவரை “பாபநாசநாதர்’ என்கின்றனர். இத்தலத்திற்கு “இந்திரகீழ க்ஷேத்திரம்’ என்ற பெயரும் இருக்கிறது.

அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்யவும், அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரைமலர்களை தாமிரபரணியில் வீசும்படியும், அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட, 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை “நவ கைலாய தலங்கள்’ எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. நவ கயிலாயங்களில் முதல் தலமான பாபநாசம் முதல் கிரகமான சூரியனுக்குரியதானது. சூரிய தலம் என்றும் சூரிய கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள தீர்த்தத்திற்கு ‘கல்யாண தீர்த்தம்’ என்று பெயர்.

Tags :
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்