×

பிரிந்த தம்பதிகள் சேர அருள் தரும் கூடல் அழகிய பெருமாள்

தேனியில் இருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது கூடலூர். இங்கு பழமையான கூடல் அழகிய பெருமாள் கோயில் உள்ளது. மூலவர் கூடல் அழகிய பெருமாள், தாயார்களுடன்  நின்ற கோலத்தில் அஷ்டாங்க விமானத்தின் கீழ் காட்சியளிக்கிறார். அஷ்டாங்க விமானம் ராமாயணம் மற்றும் கிருஷ்ணரின் லீலைகளை விளக்கும் சிற்பங்களுடன் மிகுந்த வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. இதன் காரணமாக விமானத்திற்கு ராமாயண விமானம் என்ற பெயரும் உண்டு. இங்கு மூலவருக்கு திருமஞ்சனம் கிடையாது. வெள்ளிக்கிழமைகளில் வாசனை திரவியம், நல்லெண்ணெய் சேர்த்த கலவையால் காப்பிட்டு, மூலவருக்கு பூஜை செய்கின்றனர். கோயில் முன்மண்டபத்தில் மகாலட்சுமி, கையில் வெண்ணெயுடன் நவநீத கிருஷ்ணர் மற்றும் திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், ராமானுஜர் சிலைகள் உள்ளன. இந்த மண்டபத்தில் மேல் சுவரில் உள்ள ராசி சக்கரத்தின் மத்தியில் மகாலட்சுமி வீற்றிருக்கிறாள். இந்தப் பகுதியில் நின்று மூலவரை தரிசித்தால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

தல வரலாறு:

சிவபெருமானிடம் வரம் பெற்ற அசுரன் ஒருவன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். அசுரனிடமிருந்து தங்களைக் காக்கும்படி மகாவிஷ்ணுவிடம் தேவர்கள் வேண்டினர். அசுரனை அழிப்பது குறித்து ஆலோசிக்க, தற்போது கோயில் உள்ள பகுதிக்கு வரும்படி தேவர்களை மகாவிஷ்ணு அழைத்தார். அசுரனை அழித்த பின்னர், தேவர்களின் வேண்டுதலையேற்று மகாவிஷ்ணு அப்பகுதியில் எழுந்தருளினார். பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட, சிற்றரசர் ஒருவர், மதுரை கூடலழகர் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். தினமும் பெருமாளை தரிசித்துவிட்டு, தனது பணியைத் துவக்குவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அரசருக்கு தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில், கூடலழகருக்கு கோயில் எழுப்ப வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனால் எங்கு கோயில் அமைப்பது? சிலையை எப்படி அமைப்பது? என அரசருக்குத் தெரியவில்லை. பெருமாளிடம் அரசர் வேண்டினார். அவரது கனவில் தோன்றிய கூடலழகர், இந்தப்பகுதியை காட்டி, இங்கு கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்படி தாயார்களுடன் பெருமாளுக்கு சிலை அமைத்து, அரசர் இங்கு கோயிலை எழுப்பினார். மூலவருக்கு, கூடல் அழகிய பெருமாள் என்று திருநாமம் சூட்டினார் என்பது புராணம்.

********
சித்ரா பவுர்ணமி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகளில் கருடசேவை, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம் உள்ளிட்டவை இக்கோயிலின் விசேஷ தினங்கள். சித்ரா பவுர்ணமியன்று மூலவருக்கு விசேஷ திருமஞ்சனம், பூஜைகள் நடக்கிறது. இரவில் வீதியுலா செல்லும் உற்சவர், மறுநாள் அதிகாலையில் மீண்டும் கோயிலுக்குத் திரும்புவார். திருக்கார்த்திகையன்று சுவாமி சன்னதி எதிரில் மூலவருக்கு தீபமேற்றி, விசேஷ பூஜை செய்கின்றனர். பிரிந்த தம்பதியர் இணைய, எடுத்த காரியங்களில் வெற்றி பெற, குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்க, திருமணத் தடை நீங்க மூலவரிடம் பக்தர்கள் வேண்டுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் மூலவருக்கு துளசி மாலை மற்றும் வஸ்திரம் அணிவித்தும், சர்க்கரைப் பொங்கல் படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். தலைமை பதவி, கவுரவமான வேலை கிடைக்க விரும்பும் பக்தர்கள் மூலவருக்கு அங்கவஸ்திரம் அணிவித்து வழிபடுகின்றனர். கோயில் நடை தினமும் காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கிறது.

Tags :
× RELATED சாய் சத்சரிதத்தை எத்தனை நாட்களுக்குள் படித்து முடிக்க வேண்டும்..?