அழகன் நவநீதன்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள மேலக்கடையநல்லூர் வடக்குத்தெருவில் அமைந்துள்ளது நவநீதகிருஷ்ண சுவாமி திருக்கோயில். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் வாழ்ந்த ஆயர்கள் தங்கள் குலக்கடவுளான கிருஷ்ணனுக்கு கோயில் எழுப்பி வழிப்பட்டு வந்தனர். இத்தல கிருஷ்ணன் குழந்தை பாக்யம் வேண்டி வரும் பக்தர்களின் குறையை போக்கி குழந்தை பாக்யம் அருள்கிறார். அப்பலன் பெற்ற பக்தர்கள் நவநீதகிருஷ்ண சுவாமிக்கு பால் பாயாசம் நைவேத்தியம் வைத்து அதை பக்தர்களுக்கு வழங்குகின்றனர்.

கடையநல்லூர் பெயர் வரக்காரணம் முன்பொரு சமயம் அப்பகுதிக்கு வந்த அகத்திய பெருமான் தற்போது கடகாலீஸ்வரர் கோயில் இருக்கும் பகுதிக்கு வந்திருந்தார். அங்கு ஆயர்கள் வசித்து வந்தனர். இவரை கண்டதும் ஒரு மூங்கில் கடகாலீல் பால் விட்டு அகஸ்தியர் முனிவரிடம் கொடுத்துவிட்டு தங்கள் வேலையை கவனிக்க சென்றுவிட்டனர். அகத்தியர் குளித்து சிவபூஜை செய்வதற்காக இந்த கடகாலை கவிழ்த்தி சிவனாக பாவித்து பூஜைகள் செய்துவிட்டு தமது பயணத்தை தொடர்ந்தார். மாலையில் அவ்விடம் வந்த ஆயர்கள் இந்த கடகாலை நிமிர்த்தி பார்த்துள்ளனர். அது வராததால் கோடாரியால் வெட்டி எடுக்க முயன்றுள்ளனர். ரத்தம் வந்துள்ளது. பயந்துபோய் ஆயர்கள் அந்த பகுதியை ஆண்ட வல்லப பாண்டியனிடம் சென்று முறையிட்டனர். அவருக்கு பார்வை குறைபாடு உண்டு. தாம் வந்து பார்த்து கடகாலை தடவி கண்களில் ஒற்றிக் கொண்டதும் பார்வை கிடைத்துள்ளது.

கண் கொடுத்த கமலேஸ்வரா என போற்றி சிவாலயம் அமைத்து கொடுத்துள்ளார். இச்சிவாலய தேவனின் பெயராலே கடகால்நல்லூர் என்ற பெயருடன் இந்த நகர் உருவாகி பின்னர் கடையநல்லூர் என மருவியது. அந்த காலத்தில் சிவாலய பராமரிப்புக்கென்று அந்தணர்களை இந்த பகுதியில் குடியமர்த்தினார் அரசர். இந்த கிருஷ்ணர் கோவில் சந்நதி தெருவில் அந்தணர்கள் குடியேறினர். பொதுவாக அக்ரஹாரத்தின் மேற்கே விஷ்ணுவும், வடகிழக்கில் சிவாலயமும் இருப்பதுதான் ஐதீகம். இங்கே மாற்றாக சிவனுக்கு வடமேற்கில் கிருஷ்ணன் இருப்பதால் சிவனுக்கு கன்னிமூலையில் கணபதிக்கு தெற்கில் ஒரு கிருஷ்ணர் விக்கிரகம் அமைத்து கொடுத்தார் வல்லபபாண்டியர்.

இவ்வளவு பழம்பெருமை வாய்ந்த இந்த கிருஷ்ணருக்கும், கிராம தேவதையான கருமாஷி (கருவை காக்கும் தேவி) அம்மனுக்கும் திருப்பணி செய்ய மகான்கள், பெரியோர்கள் ஆசியுடன் ஏற்பாடு செய்து வருகின்றனர் அந்த பகுதி ஆஸ்தீக ஆன்மிக மெய்யன்பர்கள். இத்திருக்கோயில்களின் கும்பாபிஷேகத்தை தலைமை ஏற்று நடத்தி தர சென்னை பரத்வாஜ் சுவாமிகள் (பண்பொழி திருமலைக்குமார சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்கு தலைமை ஏற்றவர்) உத்தேசித்துள்ளார்.ஒவ்வொரு மாத திருவோண நட்சத்திரத்தன்றும் ஸ்ரீநவநீதகிருஷ்ண சுவாமி கோயிலில் குழந்தை வரம் வேண்டுபவர்களுக்காக சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. பாயாசம் நைவேத்யம் செய்து தம்பதிகளுக்கு வழங்கப்படும். இங்கு வந்து பிரார்த்தனை செய்து குழந்தை பாக்கியம் அடையப்பெற்றோர் எண்ணற்றவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படம்: ரா.பரமகுமார்

Related Stories: