கன்னியர் குறை போக்குவாள் கன்னி தெய்வம் பாலம்மாள்

நெல்லை மாவட்டம் ராதாபுரத்திலிருந்து கூடங்குளம் செல்லும் வழியில் உள்ள கிராமம் இருக்கன்துறை. இந்த கிராமத்தில் குடியிருப்புகளுக்கு நடுவே கன்னிக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வீற்றிருக்கும் கன்னியம்மன், கன்னியர் குறை தீர்க்கும் அம்மனாய், கன்னிப்பெண்களின் குறைபாடுகள், தீராத வியாதிகள், திருமணத்தடைகள், குழந்தைப்பேறு ஆகியவற்றை கொடுத்து தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருட்பாலிக்கிறார்.இந்த கன்னியம்மன் பாலம்மாளாக இம்மண்ணில் அவதரித்து தனது தந்தை, தாய் மற்றும் அண்ணன்களால் உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்டவள். 1817 ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம்.

அப்போது இருக்கன்துறையில் நாலாயிரம் வீடுகள் இருந்தமையால் அந்த ஊரில் சுயம்புவாக தோன்றிய அம்மனுக்கு நாலாயிரத்து அம்மன் என்று பெயர் உருவாகிற்று. இந்த ஊர் அம்மன் தான் இவ்வூரில் காவல் தெய்வமாக வணங்கப்பட்டாள். இருக்கன்துறையில் தலையாரியாக இருந்தவர் பால்வண்ணத்தேவர். இவரது மனைவி நாலாயிரத்தாள் இவர்களுக்கு மாடக்கண், வில்வநாதன், மாடசாமி, புன்னவனம், புலமாடன், சுப்பையா என ஆறு ஆண் குழந்தைகள். பெண் குழந்தை வேண்டும் என்று நாலாயிரத்தாள், ஊர் தெய்வம் நாலாயிரத்து அம்மனை வேண்டி வழிபட்டதன் பலனாக நாலாயிரத்தாள் அழகான பெண் குழந்தை பெற்றெடுத்தாள்.

அந்த குழந்தைக்கு தனது தாயின் பெயரை வைத்து அழைத்தது மட்டுமல்ல மகளை தன் தாயாக பாவித்து கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுத்து செல்லமாக வளர்த்து வந்தார் பால்வண்ணத்தேவர். உடன் பிறந்த அண்ணன்களும் தங்கையின் மீது அதிக பாசம் காட்டி வந்தனர். பாலம்மாளை குற்றம் கண்டு கண்டிப்பது அவரது தாய் மட்டும் தான். அந்த அளவுக்கு செல்ல மகளாய் வளர்ந்து வந்தாள் பாலம்மாள்.

பருவம் வந்த பாலம்மாள் அழகென்றால் அழகு அப்படி ஒரு அழகு. ஒரு நாள் மாலை பொழுதில் பாலம்மாள் குளித்து முடித்துவிட்டு வீட்டு முற்றத்தில் இருந்து தலை முடியை வாரிக்கொண்டிருந்தாள். அப்போது அவர் தலையிலிருந்து ஒரு முடி உதிரிந்து பறந்தது. அது, வீதியில் வந்து கொண்டிருந்த வெள்ளக்கார துரையின் சேவகர் ரைமண்ட் என்பவர் நகர் வலம் வரும்போது அவரது குதிரையின் காது பகுதியில் வந்து விழுந்தது.

அந்த முடியை எடுத்து பார்த்த ரைமண்ட், குதிரையை உடனே நிறுத்தினார். பின்னோக்கி நகர்த்தினார். கூந்தல் முடியை நீட்டியபடி பார்த்து, அதன் நீளம் கண்டு வியப்புற்றார். இத்தனை நீளம் கொண்ட கூந்தலுடைய பெண் இந்த ஊரில் இருக்கிறாளா? அந்த பெண்ணை உடனே பார்க்க வேண்டும் என்று ஆவல் கொண்டார். வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த ஒரு வயது முதிர்ந்த நபரை அழைத்து இந்த வீட்டிலுள்ள யாரையாவது வரச்சொல்லுங்கள் என்று கூறினார். அப்போது அவர் ஐயா, இது தலையாரி வீடு என்று கூறினார். அப்படியா என்று கேட்ட ரைமண்ட் புறப்பட்டு சென்றார்.

மறுநாள் ராதாபுரத்து கிராம்சை (கிராமஸ் - கிராம நிர்வாக அலுவலர்), தலையாரி (கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்) அழைத்து இருக்கன்துறை தலையாரியிடம் என்னை வந்து பார்க்கச் சொல்லுமாறு கூறினார். அதன்படி பால்வண்ணத்தேவர் மறுநாள் காலையில் சென்று அந்த வெள்ளைக்கார அதிகாரியை பார்த்தார். அப்போது நான் உங்கள் வீட்டுக்கு வருகிறேன். உங்கள் மகளை பார்க்க வேண்டும் என்று கூறினார். வெள்ளைக்கார அதிகாரி ரைமண்ட். மறு நாள் காலை பத்து மணியளவில் அந்த அதிகாரி, தனது சகாக்களுடன் பால்வண்ணத்தேவர் வீட்டுக்கு வருகிறார்.  

பாலம்மாள் பச்சை நிறத்து பட்டாடையில் பளிங்கு சிலையாய் அழகுடன் திகழ்ந்தாள். அவள் அழகைக்கண்டு மனமகிழ்ந்த அந்த வெள்ளைக்கார துரையின் சேவகர், பால்வண்ணத்தேவரிடம் இன்னும் இரண்டு நாளில், எனக்கும், பாலம்மாளுக்கு திருமணம் நடக்க வேண்டும். அதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்யுங்கள். அவளது பெயருக்கு நூறு ஏக்கர் நிலம் கிரயம் செய்து கொடுக்கிறேன். திருமண நிகழ்ச்சிக்கு தேவையான பொருளுதவிகளை தனது சகாக்களும், ராதாபுரம் கிராம்சும் வந்து நின்னு செய்வார்கள் என்று ஆங்கிலத்தில் கூற, உடன் வந்த ஒருவர் அதை தமிழில் பால்வண்ணத்தேவரிடம் கூறினார். மறுப்பு பேச்சு பேச வந்தவரின் பேச்சை கூட கேக்காமல் சகாக்களுடன் அவ்விடம் விட்டு சென்றார்.

அவர்கள் சென்ற பின் தனது மனைவியுடன் பேசிய பால்வண்ணத்தேவர், ‘‘என்னடி செய்வது, பெரும் சோதனையாக இருக்கிறதே, பெண்ணை கொடுத்தால் நாலு மாதமோ, நாலு வருடமோ வாழ்ந்து விட்டு பிரிந்து சென்று விட்டால் என்ன செய்வது. அப்படி கொடுத்தால் நம்ம சாதி சனங்கள் நம்மளை மதிக்குமா, பேசாமல் காடு, கரை, வீடு நிலபுலன்களை விட்டுட்டு ராவோடு ராவ, எங்காச்சும் வடதிசை நோக்கி போய் பொழைச்சுக்கலாம். என்ன நான் சொல்றது. இவங்கள எதுத்துக்கிட்டு இங்க வாழமுடியாது. சட்டுபுட்டுண்ணு ஒரு முடிவு சொல்லு..’’ என்று தனது மனைவியை அதட்டி பதிலை கேட்டார்.

அவர் தனது சேலையின் முந்தானைக்கொண்டு முகத்தை மூடியபடி நாலாயிரத்தம்மா, “நாங்க என்ன பண்ணட்டும்” என்று கதறி அழுதார். அப்போது வீட்டின் பின்புறம் இருந்த பாலம்மாள். ‘‘என்னம்மா, அப்பா, ஏதாச்சும் திட்டுனாங்களா,’’ என்று பால் முகம் மாறாமல் பேசினாள். மகளை தன்னோடு அணைத்துக்கொண்ட நாலாயிரத்தாள் மேலும் உடல் குலுங்க அழுதாள்.

‘‘எனக்கு ஏன், நீ மகளாபிறக்கணும். ஆறு பிள்ளையோட இருந்திருப்பேனே’’ என்று கதறினாள். அப்போது குறுக்கிட்ட பால்வண்ணத்தேவர். ‘‘புள்ளைகிட்ட போய் என்னத்த பேசிகிட்டு இருக்க, சவத்த மூதி, போய் வேற வேலைய பாரு’’ என்று கோபத்துடன் கூறினார். மகள், பாலம்மாளிடம், ‘‘நீ வா தாயி, உன் ஆத்தா கிட்ட உங்க அண்ணன் மாரு சம்பந்தமா பேசிகிட்டுருந்தேன் ஆத்தா, அவ தான், பொசுக்கு, பொசுக்குண்ணு அழுது கண்ணீர் வடிப்பாள, போ ஆத்தா, நீ எத நினைச்சும் கலங்காத..’’ என்று கூறியவாறு திண்ணயில் இருந்து யோசித்துக்கொண்டிருந்தார்.

மாலை பொழுதாகியும் மதிய உணவை கூட பால்வண்ணத்தேவர் சாப்பிடவில்லை. இரவு ஆனது, வெள்ளிக்கிழமை பாயாசம் அப்பளத்துடன் ஏழு வகை கூட்டு வைத்து சமையல் செய்து இரவு உணவை உண்டனர். அப்போது மூத்தமகன் கேட்டான், ‘‘என்னப்பா, இன்னைக்கு விருந்து களை கட்டுது.’’ ‘‘ஏலே. சத்தமா பேசாத, சீக்கிரமா சாப்பிட்டு முடிங்க, யாருக்கும் தெரியாம நாம இன்னக்கு ராவோடு ராவ, இந்த ஊரவிட்டு போறோம். வெள்ளைக்கார துரையை பகைச்சுட்டு இங்க இருக்க முடியுமாலே, ம்.. வேகமாக தயார் ஆகுங்க..’’

என்று குரல் கொடுத்தார் அவர்.

நள்ளிரவு மணி 12 ஆனது, நடு வீட்டுக்குள் ஆறுக்கு நாலு அளவில் ஆறு அடி ஆழத்துக்கு குழியை தோண்டிய பின் தூங்கிக் கொண்டிருந்த மகள் பாலம்மாளை தலையாரி தட்டி எழுப்பினார்.  ‘‘ஏம்பா, இப்போ என்ன எழுப்புற’’ என்றாள் பாலம்மாள். ‘‘மத்தியானம் நீ பாயாசம் சரியா சாப்பிடலண்ணு ஆத்தா சொன்னா அதான்மா அப்பா உன்ன எழுப்பினேன்.’’

 என்று கூறி தனது கையில் வைத்திருந்த பாயாசத்தை கொடுத்தார்.

பாயாசத்தை அருந்தியபடியே வீட்டிற்குள் தோண்டப்பட்ட குழியை பார்த்தாள் பாலம்மாள்.  ‘‘இது எதுக்கும்மா என்று கேட்டாள்’’ பதினெட்டு வயதானாலும் பால் முகம் அவளுக்கு மாறவில்லை. அப்போது தலையாரி கூறினார். ‘‘உனக்கு கல்யாணத்துக்காக சேத்து வச்சது, உன் தாத்தாவும், ஆச்சியும் சேத்து வச்ச செம்பு, வெள்ளி பண்ட பாத்திரங்களையும், நகைகளையும் இந்த குழியில வைச்சு மூடிவிட்டு, வீட்டையும் பூட்டிக்கிட்டு உடுமாத்துக்கு மட்டும் துணிகளை எடுத்துக்கிட்டு ராவோடு, ராவா, நாம ஊர விட்டு போறோம்மா. அதனாலதான் ஆத்தா இந்த குழியை உன் அப்பன் வெட்டியிருக்கிறேன். நீ இதுக்குள்ள இந்த ஏணி மூலம் இறங்கி நான் தருகிற பொருளையெல்லாம் உன் கையால வையும்மா’’

 என்று கூறினார்.

பெத்தவன் பேச்சை நம்பி அந்த குழிக்குள் பிள்ளை அவள் இறங்கினாள். ஏணிப்படியின் கடைசி படியில் இருந்து துள்ளி குதித்து இறங்கி குழிக்குள் நின்றுகொண்டு அப்பாவை பார்த்து சிரித்தாள் பாலம்மாள். அப்போது அவள் கால் குழிக்குள் பட்டதும். அதிலிருந்து வெளியான மண், அவளது அப்பா கண்ணில் பட, அவர் சட்டென்று கண் மீது கை வைத்தார். உடனே ஏணி வழியாக வேகமாக மேலே வந்த பாலம்மாள், தனது தந்தையின் கண்ணில் வாய் வைத்து ஊதி, அந்த மண் துகளை நீக்கினாள்.

‘‘போட்டுப்பா, நான் குதிச்சது நாலதான் உன் கண்ணுல மண்ணு பட்டுட்டு. என்னை மன்னிச்சிருப்பா’’ என்றாள். அப்போது ஓ, வென்று கத்தினார் பால்வண்ணத்தேவர்,

‘‘ஆத்தா, நீ கண்ணில மண் பட்டதுக்கே தாங்கிலியே, உன்னை போய்....’’ என்று கதறினார். அவளது அண்ணன் மார்கள் அப்பா என்று அவரை தாங்கிய படி அவர்களும் அழுதனர். இந்த நிலையில் பாலம்மாள் ‘‘அப்பா நான் குழிக்குள் இறங்கியாச்சு, பண்ட பாத்திரத்த எடுத்து தாங்க...’’  என்றாள்.. (தன் மரணத்தை தானே அழைத்தவளாய்) வெள்ளி விளக்கை எடுத்து முதலில் கொடுத்தான் இரண்டாவது அண்ணன் வில்வநாதன்.

‘‘நான்கைந்து பொருள்களும், நகை நட்டுகளும் விசுக்கு விசுக்கின்னு விருசுல எடுத்து கொடுங்கலே’’ என்று குரல் கொடுத்தார். அப்படியே மண்வெட்டியைக் கொண்டு அவரது தந்தை, சட்டென்று குழியின் கரையில் குவித்து வைத்திருந்த மண்ணை வெட்டி மகள் பாலம்மாள் மேல் கொட்டினார். அண்ணன்கள் தயங்க, ‘‘சீக்கிரமா மண்ணை கொட்டுங்கடா..’’ என்று குரல் கொடுத்தார். அவர்களும் வேகமாக மண்ணை அள்ளி போட்டுக்கொண்டிருந்தனர். மேனி ஈர மண் மூடிக்கொண்டிருக்க குழிக்குள் இருந்த படியே பாலம்மாள் பேசினாள்.

‘‘இதற்கு தான் தவமிருந்து என்னை பெற்றாயோ, பால்வண்ணம். ஊரானுக்கு பயந்து நீ பெத்த பிள்ளைய உயிரோடு மூடுறியே, உன் பிள்ளைக்கும் பிள்ளைக்கும் தலைமுறைக்கும் என் பாவம் போகாது. என் சாபம் தீராது. உன் வம்சத்திற்கு பெண் பிள்ளைகள் பிறவாமல் போகும். மண்ணைக் கொட்டி மூடத்தான், என்ன பொத்தி, பொத்தி வளர்த்தாயோ, குழிக்குள் வைத்து மூடத்தான் நான் குமரி ஆகும் வரை காத்திருந்தாயோ, உயிரோடு சமாதி கட்டத்தான் ஒத்த பிள்ளையா என்னை பெத்தாயோ, தாயே, தாயே என்னை அழைத்தாயே தானே என்னை சாகடிக்கவா, என் உசுரே நீதான்னு சொன்னியப்பா, என் உசுர இப்படி எடுக்கத்தானா, சண்டாளானே என் தகப்பா, உன் சந்ததிக்கு பெண் பிள்ளை பிறவாமல் போகும்.’’

என்று சபித்தபடியே குரல் சத்தம் குறைந்தது. அவள் உயிரும் உடலை விட்டு பிரிந்தது. ஆண்டுகள் பல கடந்த நிலையில் அவர்களது குடும்பத்தில் 6 வது தலைமுறையை சேர்ந்தவர் இருக்கன்துறை சண்முகத்தேவர் இவர்களது மகள்களில் ஒருவராக பிறந்தவர் ராமலட்சுமி இவருக்கும் உறவினர் மாடசாமி என்பவருக்கும் திருமணம் முடிந்து இவர்கள் மும்பையில் வசித்து வந்தனர்.

மணம் முடிந்து ஆண்டுகள் சில கடந்த நிலையில் மழலை வரம் வேண்டி குலதெய்வம் முதல் பல கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்து வந்தனர். ஒருநாள் வெள்ளிக்கிழமை அந்திப்பொழுது நேரம் வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி கொண்டிருந்த ராமலட்சுமி அருள்வந்து ஆடினார். அப்போது அவர் அருகே இருந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் யார், என்ன வேண்டும் என்று கேட்க, அப்போது, தான் பாலம்மாள் என்பதையும், தனது பிறப்பும், வளர்ப்பும், இறப்பும் கூறி, தனக்கு ஆலயம் எழுப்பி, பணிவிடைகள் செய்து வந்தால் உங்கள் குடும்பம் சிறக்கும். மேலும் என்னை நம்பி வரும் பக்தர்கள் எவராயினும் அவர்கள் குறைகளை களைந்து அவர்களுக்கு வேண்டும் வரம் அளிப்பேன். வேதனையை தீர்ப்பேன்.

 காவலாய் துணை நிற்பேன் என்று கூறியது. உடனே ராமலட்சுமி தம்பதியினர் ஊருக்கு வந்து இருக்கன் துறையில் சிறியதாய் கோயில் எழுப்பி விழா எடுத்தனர். அப்போது அருள் வந்து ஆடிய ராமலட்சுமி, மூச்சு திணறுவதை போலவும். தனது மேனி மண்ணால் சூழப்பட்டிருப்பதை போலவும் செயல்பட்டார் அந்த அருளாட்டத்தின் போது, பின்னர் கோயில் பெரிதாக கட்டப்பட்டு கன்னியம்மன் நின்ற கோலத்தில் சிலை வடித்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. கும்பாபிஷேகம் நடத்திய பின் நடந்த விழாவில் அந்த செயலை காட்ட வில்லை அருள்வந்து ஆடிய ராமலட்சுமி.

கோயிலில் நின்ற ரூபத்தில் பாலம்மாள் அருள்புரிகிறாள். எதிரே வேப்பமரம் வளர்ந்தோங்கி நிற்கிறது. இந்த வேம்பு நிற்கும் பகுதியில் தான் பாலம்மாளை அவரது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர் உயிருடன் புதைத்துள்ளனர். இந்த குழியில் அவர் நாககன்னியாக மறு அவதாரம் கொண்டு அங்கே குடியிருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தான், இந்த வேப்பமரம் அருகே நாகர்சிலைகள் வைத்து வழிபடுவதாக கூறுகின்றனர். பூஜையின் போது, நாகர்சிலைகளுக்கு பாலும், முட்டையும் படைத்து பூஜித்து வருகின்றனர்.

இக்கோயிலில் காவல் தெய்வமாக சப்பானி மாடனும், மாடத்தியும் வீற்றிருக்கின்றனர். சப்பானி மாடனுக்கு ஆடும் கோமரத்தாடி நல்ல நிலையில் உள்ளார். ஆனால் ஆடும் போது அவர் கால் ஊனமுற்றவர் போல் செயல்படுவார். இது விழா காணும் பக்தர்களை மெய் சிலிர்க்க வைக்கும். கன்னிமூலையில் கன்னி விநாயகர் அருட்பாலிக்கிறார். இந்த கன்னி கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் வெள்ளிக்கிழமையில் கொடை விழா நடைபெறுகிறது. சிலர் தங்களது வேண்டுதல் நிறைவேறிய சந்தோஷத்தில் தனியாகவும் கொடைவிழா நடத்துகின்றனர். பெண் குழந்தைகளுக்கான பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு அருட்பாலிக்கிறார் இந்த  கன்னியம்மன்.

சு.இளம் கலைமாறன்

படங்கள்: முத்தையா, இருக்கன் துறை

Related Stories: