×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்

185. ஸ்ரீநிவாஸாய நமஹ (Shreenivaasaaya namaha)

பாற்கடல் கடையப்பட்டபோது, அதிலிருந்து மின்னல் போலத் தோன்றினாள் மகாலட்சுமி. தாமரையில் அமர்ந்திருந்த அவள், தனது இரு கரங்களிலும் தாமரைகளை ஏந்தியிருந்தாள். முனிவர்கள் வேத மந்திரங்களாலும், கந்தர்வர்கள் இன்னிசையாலும் அவளைத் துதித்தார்கள். திக்கஜங்கள் தங்கப் பானைகளால் அவள் மேல் பன்னீர் சொரிந்தன. இந்திரன் அவளுக்குச் சிம்மாசனமும், கடலரசன் பட்டு வஸ்திரமும், வருணபகவான் மாலைகளும், விஸ்வகர்மா நகைகளும் அளித்தார்கள். இவளே அனைத்து உலகுக்கும் அரசி என்று சொன்ன தேவர்களும் ரிஷிகளும் அவளுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்தார்கள்.அங்கேயே தனது சுயம்வரத்தை நடத்த விரும்பினாள் மகாலட்சுமி. தேவர்களும் முனிவர்களும் ஆவலுடன் வரிசையில் நின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தன்னிடம் அனைத்து நற்பண்புகளும் இருப்பதாகவும், மகாலட்சுமி தன்னையே தேர்ந்தெடுப்பாள் என்றும் கருதினார்கள்.

முதலில் துர்வாச முனிவர் நின்று கொண்டிருந்தார். அவர் பெரிய தபஸ்வியாயினும் கோபம் மிகுந்தவர். அதனால் அவரை நிராகரித்தாள் மகாலட்சுமி. அடுத்து நின்ற சுக்ராச்சார்யார் மகா ஞானி. ஆனால் புலனடக்கம் இல்லாதவர். அடுத்து நின்ற சந்திரனோ, அளவில்லாத ஆசை உடையவர். கார்த்தவீர்யார்ஜுனன் பெரும் வீரன். ஆனால் நிலையில்லாத செல்வங்களை நிலையென எண்ணி வாழ்பவன். சனத்குமாரர் போன்றோர் எப்போதும் தவத்தில் ஈடுபட்டிருப்பதால், மனைவியைக் கவனிக்க மாட்டார்கள். இவ்வாறு ஒவ்வொரு காரணத்தைச் சொல்லி தேவர்களையும் முனிவர்களையும் நிராகரித்து வந்து மகாலட்சுமி, இறுதியாகத் திருமாலின் முன்னே வந்து நின்றாள்.

அவரிடம் அனைத்துக் கல்யாண குணங்களும் பரிபூர்ணமாக நிறைந்திருப்பதைக் கண்டாள் மகாலட்சுமி. திருமால், “திருமகளே வருக!” என்று மகாலட்சுமியைப் பார்த்துச் சொன்னார். “வருக” என்ற அந்த ஒரு வார்த்தையில் அவளது இதயத்தையே திருமால் கடைந்து விட்டார். திருமாலின் அழகாலும், நற்பண்புகளாலும், இளமையாலும், கருணையாலும், “வருக!” என்ற வார்த்தையாலும் ஈர்க்கப்பட்ட மகாலட்சுமி அவருக்கு மாலையிட்டாள். மாலையிட்டதோடு மட்டுமின்றி, அவரது மார்பில் ஏறி அமர்ந்து கொண்டாள். “டோலா தே வனமாலயா” - அது வரை திருமாலின் மார்புக்கு ஆபரணமாக இருந்த வனமாலை அன்று முதல் மகாலட்சுமிக்கு ஊஞ்சலாக மாறிவிட்டது என்று ஸ்ரீகுணரத்ன கோசத்தில் பராசர பட்டர் தெரிவிக்கிறார்.

மகாலட்சுமிக்கும் திருமாலுக்கும் திருக்கல்யாணம் நடந்த பின், தொடர்ந்து பாற்கடல் கடையப்பட்டது. அப்போது அதிலிருந்து அமிர்த கலசத்தைக் கையில் ஏந்தியபடி தன்வந்திரி பகவான் தோன்றினார். அமுதம் வருவதைக் கண்ட தேவர்கள் திருமாலிடம், “இந்த அமுதம் அசுரர்களின் கையில் கிடைக்காதபடி நீங்கள் தான் மீட்டுத்தர வேண்டும். அசுரர்கள் அமுதத்தை உண்டு விட்டால் அவர்களும் நீண்ட ஆயுள் பெற்று விடுவார்கள்!” என்று பிரார்த்தித்தார்கள்.அவர்களின் பிரார்த்தனையை ஏற்று, அசுரர்களை மயக்கும் பொருட்டு மோகினி என்னும் பெண்ணாக அவதரிக்கத் திட்டமிட்டார் திருமால். அப்போது தன் திருமார்பில் இருந்த மகாலட்சுமியிடம், “நீ இந்த மார்பிலிருந்து சற்றே விலகி இரு. நான் மோகினி வேடமணிந்து அசுரர்களை ஏமாற்றி விட்டு வருகிறேன்.

மோகினி அவதாரத்தில் நீ என் மார்பில் இருப்பது அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது!” என்றார் திருமால்.ஆனால் மகாலட்சுமியோ, “ஒரு நொடி கூட இந்த மார்பை விட்டு நான் அகலமாட்டேன். நீங்கள் பெண் வேடமிட்டாலும், ஆண் வேடமிட்டாலும் இந்த மார்பை விட்டு நான் நீங்க மாட்டேன்!” என்றாள். அதனால் திருமால் மார்பிலுள்ள மகாலட்சுமியை மேலாடையால் மறைத்துக் கொண்டு மோகினி அவதாரம் எடுத்தார்.ஏன் திருமாலின் திருமார்பை விட்டு அகல மறுத்தாள் மகாலட்சுமி? ஏனெனில், திருமாலை நாடி பக்தர்கள் வரும்போது, திருமார்பில் உள்ள மகாலட்சுமி அந்த பக்தர்களுக்கு அருள்புரியும்படித் திருமாலிடம் பரிந்துரைக்கிறாள். அவளது பரிந்துரை இல்லாவிட்டால் பக்தர்களால் திருமாலின் அருளைப் பெற முடியாமல் போய்விடும். எனவே பக்தர்களுக்குத் திருமாலின் அருளைப் பெற்றுத் தருவதற்காக “அகலகில்லேன் இறையும்” என்று அவன் திருமார்பில் திருமகள் உறைகிறாள்.

இன்றும் பெருமாள் கோயில்களில், பெருமாள் மோகினி வேடம் அணிந்து கொள்ளும் போது கூட, திருமார்பில் மகாலட்சுமி விட்டுப்பிரியாமல் இருப்பதைக் காணலாம். மகாலட்சுமிக்கு ‘ஸ்ரீ:’ என்று பெயர். அந்த ஸ்ரீ எப்போதும் திருமாலின் திருமார்பில் வசிப்பதால் திருமால் ‘ஸ்ரீநிவாஸ:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் பக்தர்களுக்கு எல்லாச் செல்வங்களும் நிறையும்.

186. ஸதாம் கதயே நமஹ (Sathaam gathaye namaha)

வனவாசத்தில் இருக்கும் பாண்டவர்களின் குடிலுக்குச் சென்று விருந்து அருந்தச் சொல்லி, துர்வாச முனிவரை அனுப்பி வைத்தான் துரியோதனன். அவரும் தமது ஆயிரக்கணக்கான சீடர்களுடன் ஒரு மாலைப் பொழுதில் பாண்டவர்களின் குடிலுக்கு வந்தார். அவர்களை வரவேற்ற தர்மபுத்திரர், திரௌபதியிடம் விருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். ஆனால் வீட்டில் எந்த உணவுப் பண்டங்களும் இல்லை என்பது தர்மபுத்திரருக்குத் தெரியாது.“நீராடி விட்டு விருந்துக்கு வருகிறோம்! விருந்தைத் தயார் செய்யுங்கள்!” என்று சொல்லி விட்டுத் துர்வாசரும் அவரது சீடர்களும் அருகிலுள்ள குளத்துக்குச் சென்றார்கள். திரௌபதிக்கோ என்ன செய்வதென்றே புரியவில்லை. கோபக்காரரான துர்வாச முனிவர் நம்மைச் சபித்து விடுவாரோ என அஞ்சிய அவள், கண்ணனை மனதாற தியானித்தாள்.அடுத்த நொடியே அவள் முன்னே வந்து நின்றான் கண்ணன். “திரௌபதி! எனக்கு மிகவும் பசிக்கிறது உணவு இருக்கிறதா?” என்று கேட்டான். “வந்தவர்களுக்கு விருந்தளிக்கவே ஒன்றுமில்லை.

நீயும் பசி என்றால் நான் எங்கே செல்வே?” என்று கேட்டாள் திரௌபதி. “அட்சய பாத்திரம் வைத்திருக்கிறாயே! அதில் தான் உணவு வற்றாமல் இருக்குமே!” என்று கேட்டான் கண்ணன். “தினமும் நான் சாப்பிடும் வரை அட்சய பாத்திரத்தில் உணவு இருக்கும். நான் சாப்பிட்ட பின் அதில் உள்ள உணவு தீர்ந்து விடும். நானும் அதைக் கழுவி வைத்துவிடுவேன். இன்று மதியமே அதைக் கழுவி வைத்து விட்டேன். இனி நாளை தான் அதைப் பயன்படுத்த முடியும்!” என்றாள் திரௌபதி.“அட்சய பாத்திரத்தைக் காட்டு!” என்றான் கண்ணன். திரௌபதி எடுத்துக் காட்டினாள். அதன் விளிம்பில் ஓர் அகத்திக் கீரை இலை ஒட்டிக் கொண்டிருந்தது. “ஆஹா! இது போதுமே எனக்கு!” என்று சொல்லியபடி அதை உட்கொண்டான் கண்ணன். கண்ணனின் பசி அடங்கியது. கண்ணபெருமானுக்கே வயிறு நிரம்பி விட்டதால், உலகிலுள்ள அனைத்து உயிர்களின் வயிறுகளும் நிரம்பின.

துர்வாசருக்கும் அவரது சீடர்களுக்கும் பசி ஆறிவிட்டது. அதனால் குளத்தில் நீராடியபின் விருந்துக்கு வராமல் அவர்கள் அப்படியே ஓடி விட்டார்கள். வரவிருந்த பேராபத்தாகிய துர்வாசரின் சாபத்திலிருந்து பாண்டவர்களை இவ்வாறு காப்பாற்றினான் கண்ணன்.அவன் உட்கொண்ட அகத்திக்கீரை கண்ணனின் வயிற்றினுள் சென்றபின், “கண்ணா! உனது லீலையில் அடியேனையும் ஒரு கருவியாகப் பயன்படுத்தியமைக்கு நன்றி!” என்றது. “அடியார்களைக் காகும் பணியில் எனக்கு உதவியாக இருந்த உனக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும்!” என்று சொன்ன கண்ணன், “இனி எனது பக்தர்கள் விரதம் இருந்தால், அந்த விரதத்தை நிறைவு செய்கையில் அகத்திக் கீரையை உட்கொண்டு நிறைவு செய்வார்கள்!” என வரமும் அளித்தான்.

ஆனால் அத்துடன் திருப்தி அடையாத அகத்திக் கீரை, “எனக்கு முக்தி வேண்டும்!” என்று கேட்டது. “முக்தி என்பதை நான் நேரடியாகத் தர மாட்டேன். ஒரு நல்ல குருவின் மூலம் என்னிடம் வந்தால் தான் முக்தி கிட்டும்!” என்றான் கண்ணன். “நடப்பது யாவும் உனது லீலைகளே! நான் உன் கையில் கருவி தானே? அந்தக் குருவையும் நீ தானே காட்டியருள வேண்டும்!” என்றது அகத்திக் கீரை. “நிச்சயம் காட்டுகிறேன்!” என்றான் கண்ணன்.சில நூற்றாண்டுகள் கடந்தன. கண்ணனின் அருளால் வேதாந்த தேசிகனின் இல்லத்தில் அந்த அகத்திக் கீரை செடி முளைத்தது. வேதாந்த தேசிகன், ஏகாதசி போன்ற விரதம் முடிக்கும் நாட்களில் அதன் இலைகளை உட்கொண்டு வந்தார். ஒருநாள் அந்த அகத்திக் கீரை செடி வாடி இருப்பதைக் கண்ட தேசிகன், அதற்கு முக்தியளிக்க வேண்டுமென்று பிரார்த்தித்துத் திருமாலிடம் சரணாகதி செய்தார். நல்ல குருவின் பரிந்துரை கிட்டிவிட்டதால், அகத்திக் கீரைக்குத் திருமால் முக்தியும் அளித்தார்.

அந்த அகத்திக் கீரை, தனக்கு எது நன்மையோ அதைத் திருமாலே செய்வார் என்ற உறுதியோடு, உலகில் நடப்பது அனைத்தையும் திருமாலின் லீலையாகவே எண்ணி வாழ்ந்தது. இறுதியில் அதற்கு நல்ல குருவையும் திருமாலே காட்டிக் கொடுத்து, அவர் மூலம் முக்தியும் பெறும்படிச் செய்தார். இவ்வாறு இறைவனே கதி என்று வாழும் அடியவர்களுக்கு ‘ஸத்’ என்று பெயர். அந்த ஸத் ஆகிய அடியார்களுக்குக் கதியாக இருப்பதால், திருமால் ‘ஸதாம் கதி:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ர நாமத்தின் 186-வது திருநாமம். “ஸதாம் கதயே நமஹ” என்று தினமும் சொல்லி வருபவர்களுக்குத் தேவையான அனைத்து நலன்களையும் திருமால் அருள்வார்.

187. அநிருத்தாய நமஹ (Aniruddhaaya namaha)

தமது குருவான கோவிந்த பகவத்பாதரின் ஆணைப்படி, உபநிஷத்துக்களுக்கு விரிவுரை எழுத நினைத்தார் ஆதி சங்கரர். தமது சீடர் ஒருவரை அழைத்துத் தமது நூலகத்தில் இருந்து உபநிஷத் ஓலைச் சுவடிகளை எடுத்து வரச் சொன்னார். சீடரும் எடுத்து வந்து சங்கரரிடம் கொடுத்தார். அதைப் பிரித்துப் பார்த்தார் சங்கரர். அது உபநிஷத் ஓலைச் சுவடி அல்ல, விஷ்ணு ஸஹஸ்ரநாம ஓலைச்சுவடி.மீண்டும் சீடனை அழைத்து, “உபநிஷத் ஓலைச்சுவடியைக் கேட்டால், விஷ்ணு ஸஹஸ்ரநாமச் சுவடியைக் கொண்டு வந்து விட்டாயே! உபநிஷத்துக்களுக்குத் தான் விளக்கவுரை எழுதப் போகிறேன். அதனால் அந்த ஓலைச் சுவடியைக் கொண்டு வா!” என்று கூறினார் சங்கரர்.மீண்டும் நூலகத்துக்குச் சென்ற சீடன், நன்றாகத் தேடி, உபநிஷத் ஓலைச் சுவடியைக் கொண்டு வந்து தந்தான். சங்கரர் பிரித்துப் பார்த்தால், அது விஷ்ணு ஸஹஸ்ரநாம ஓலைச் சுவடியாகவே இருந்தது. “உனக்கு நான் சொல்வது புரியவில்லையா உபநிஷத்தைக் கொண்டு வரச் சொன்னால் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக் கொண்டு வருகிறாயே!” என்று சீடனிடம் சொன்ன சங்கரர், இனி சீடனை நம்பிப் பயனில்லை என்று தாமே நூலகத்துகுச் சென்றார்.

நூலகத்தில் நன்றாகத் தேடி உபநிஷத் ஓலைச் சுவடியை எடுத்துக் கொண்டு வெளியே வந்து அமர்ந்தார் சங்கரர். பிரித்துப் பார்த்தால், அது விஷ்ணு ஸஹஸ்ர நாமமாக இருந்தது. “நாம் எத்தனை தடவை உபநிஷத்தைத் தேடி எடுத்தாலும், அது விஷ்ணு ஸஹஸ்ரநாமச் சுவடியாகவே வருகிறதென்றால், உபநிஷத்துக்களுக்கு விளக்கவுரை எழுதும் முன் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்துக்கு முதலில் நாம் விளக்கவுரை எழுதவேண்டும் என்று திருமால் கருதுகிறார் போலும். அவர் ஒன்றை முடிவு செய்து விட்டால், அதை யாரால் மாற்ற முடியும்? எனவே திருமாலின் விருப்பப்படி ஸஹஸ்ரநாமத்துக்கே முதலில் விளக்கம் எழுதுவோம்!” என்று கருதிய சங்கரர் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்துக்கு அழகான விளக்கவுரையை முதலில் எழுதிவிட்டுப் பின் உபநிஷத்துக்களுக்கு விளக்கவுரை எழுதினார்.

இதைக்கண்ட ஸ்ரீரங்கநாயகி, திருவரங்க நாதனிடம், “சிவபெருமான் சங்கரராகப் பிறந்து உங்களது ஆயிரம் திருநாமங்களுக்குச் சிறப்பான விளக்கவுரை எழுதிக் கொண்டிருக்கிறார். நீங்கள் இப்படித் தூங்கிக் கொண்டிருக்கிறீர்களே! இது சரியா?” என்று கேட்டாள். “நான் இப்போது என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார் திருவரங்க நாதன். “நீங்கள் இப்படி வெறுமனே சயனித்திருக்காமல், உங்களது ஆயிரம் நாமங்களுக்கு நீங்களும் ஓர் உரை எழுத வேண்டாமா?” என்று கேட்டாள் ஸ்ரீரங்கநாயகி. “நான் ஏற்கெனவே ஸஹஸ்ரநாமத்துக்கு விரிவுரை எழுத வேண்டும் என முடிவெடுத்து விட்டேன். அதற்கு முன் சங்கரரை ஓர் உரை எழுத வைக்க வேண்டும் என்பதற்காகவே அவரது கையில் உபநிஷத் ஓலைச் சுவடிக்குப் பதிலாக ஸஹஸ்ரநாம ஓலைச்சுவடி கிடைக்கும்படிச் செய்தேன். பொறுத்திருந்து பார்! நானும் ஒரு விளக்கவுரை எழுதுவேன்!” என்றார் திருவரங்கநாதன்.

சில காலம் கழிந்தது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் திருவரங்கநாதனே, கூரத்தாழ்வானின் மகனான பராசர பட்டராக அவதரித்தார். ‘பகவத் குண தர்ப்பணம்’ என்ற மிக உயர்ந்த விளக்கவுரையை எழுதி ஸஹஸ்ரநாமத்தின் பொருளை விளக்கினார் பராசர பட்டர். அந்நூலை ஸ்ரீரங்கநாயகித் தாயாரிடம் சமர்ப்பித்தார்.அதைக் கண்டு மகிழ்ந்த ஸ்ரீரங்கநாயகி, திருவரங்கநாதனைப் பார்த்து, “சுவாமி! நீங்கள் ஒரு முடிவெடுத்து விட்டால், அதை யாராலும் தடுக்க முடியாது. உம்முடைய ஆயிரம் நாமங்களுக்கு இரண்டு சிறப்பான விளக்கவுரைகள் வர வேண்டுமென நீங்கள் முடிவெடுத்து விட்டீர்கள். அதற்காக, சங்கரர் கையில் ஸஹஸ்ரநாமச் சுவடி கிடைக்கும்படிச் செய்து அவர் மூலம் ஓர் உரை உருவாகும்படிச் செய்தீர்கள். மற்றோர் விளக்கவுரையை நீங்களே பராசர பட்டராக அவதரித்து வழங்கிவிட்டீர்கள்!” என்றாள்.

இவ்வாறு யாராலும் தடுக்க முடியாதவராக இருந்து கொண்டு, தான் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றுபவராகத் திருமால் விளங்குவதால், அவர் ‘அநிருத்த:’ என்றழைக்கப்படுகிறார். ‘அநிருத்த:’ என்றால் யாராலும் தடுக்க முடியாதவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 187-வது திருநாமம்.“அநிருத்தாய நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்கள் மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களும் தடையின்றி நிறைவடையத் திருமால் அருள்புரிவார்.

188. ஸுரானந்தாய நமஹ (Suraanandhaaya namaha)

(188-வது திருநாமமான ஸுரானந்த என்பதிலிருந்து 194-வது திருநாமமான ஸுபர்ண வரையிலான 7 திருநாமங்கள், அன்னப்பறவை வடிவில் திருமால் தோன்றிய ஹம்ஸாவதாரத்தின் பெருமைகளைச் சொல்கின்றன.)சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனத்சுஜாதர் ஆகிய நான்கு முனிவர்களும் பிரம்மாவின் மனதிலிருந்து தோன்றியவர்கள். இவர்கள் நால்வரும் குள்ளமான தோற்றத்துடன் இருப்பார்கள். மிகச்சிறந்த ஞானிகளாக விளங்கினார்கள். அந்த நால்வரும் ஒருமுறை தங்கள் தந்தையான பிரம்மாவிடம் சென்று, “பக்தியோகத்தைப் பற்றி நாங்கள் அறிய விரும்புகிறோம்!” என்று கூறினார்கள்.

 “பக்தியோகத்தைப் பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?” என்று கேட்டார் பிரம்மா.“மனிதனின் மனம் ஏன் உலகியல் சிற்றின்பங்களையே நாடுகிறது? பேரின்பமாகிய இறையனுபவத்தில் ஏன் மக்களுக்கு நாட்டம் வருவதில்லை? முக்தி அடைய விரும்புபவன் இந்தச் சிற்றின்பங்களில் உள்ள ஆசையை அறுப்பதற்கு என்ன வழி?” என்று கேட்டார்கள் முனிவர்கள்.“மகன்களே! நீங்கள் கேட்ட கேள்வி சரி தான். ஆனால் இதற்கான பதில் எனக்குத் தெரியவில்லை!” என்றார் பிரம்மா.“தந்தையே! என்ன சொல்கிறீர்கள்? தாங்கள் திருமாலின் உந்தித் தாமரையில் இருந்து நேராகத் தோன்றியவர். உலகை எல்லாம் படைப்பவர். உங்களுக்கே விடை தெரியாதா? மகன்களுக்கு எழும் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டியது தந்தையி டமையல்லவா?” என்று கேட்டார்கள் முனிவர்கள்.

“என்ன செய்வது? என் மனதையே என்னால் அடக்க முடியவில்லை. அப்படியிருக்க மனதை அடக்க என்ன வழி என்று கேட்டால் நான் என்ன சொல்வேன்?” என்றார் பிரம்மா. “அப்படியாயின், எங்கள் கேள்விக்கு யார் தான் பதிலளிப்பார்?” என்று கேட்டார்கள் முனிவர்கள். “அனைத்துலகுக்கும் தந்தையாக விளங்கும் திருமால் ஒருவரால் தான் இதற்கு விடையளிக்க முடியும். ஞானம் தரும் குருவும், பசியில் உணவளிப்பவரும், ஆபத்தில் காப்பவரும் தந்தைக்குச் சமம் என்பார்கள். இப்போது என் தந்தையாகிய திருமாலே வந்து, அடியேனுக்கு ஞானமும் தந்து, நம் அறிவுப் பசியையும் போக்கி, ஆபத்திலிருந்தும் காக்க வேண்டும்!”  என்று சொன்ன பிரம்மா, திருமாலிடம் மனதாற பிரார்த்தனை செய்தார்.அப்போது திருமாலே அன்னப் பறவை வடிவில் அவர்களுக்குக் காட்சி அளித்தார். வடமொழியில் ‘ஹம்ஸம்’ என்றால் அன்னப்பறவை என்று பொருள். அன்னப்பறவை வடிவில் திருமால் தோன்றியதால் இந்த அவதாரம் ‘ஹம்ஸாவதாரம்’ என்று போற்றப்படுகிறது.

முனிவர்களுக்கு எழுந்த ஐயத்தை அன்னத்தின் வடிவிலுள்ள திருமாலிடம் விண்ணப்பித்தார் பிரம்மா. அதற்குத் திருமால், “மனதை அடக்க வேண்டுமென்றால், முதலில் நாம் இந்த உடல் அல்ல, அதற்குள் இருக்கும் ஜீவாத்மா என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாமே உடல் என்று தவறாக எண்ணுவதால் தான் உடலைச் சார்ந்த பொருட்களின் மேல் நமக்குப் பற்று உண்டாகிறது. மேலும், ஜீவாத்மாவின் உண்மையான சொரூபத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஜீவாத்மா சுதந்திரமானவன் அல்ல, இறைவனுக்கே ஆட்பட்டவன், இறைவனை விட்டுத் தனித்திருக்க முடியாதவன் என்பதை உணர வேண்டும். இறைவனைத் தவிர பிற விஷயங்களில் நாட்டம் கொள்வது ஜீவாத்மாவின் சொரூபத்துக்கு ஏற்றதல்ல என்பதையும் உணர வேண்டும். இந்த ஞானத்தை மெல்ல மெல்ல வளர்த்தோமாகில், நமது மனம் சிற்றின்பங்களில் நாட்டம் கொள்ளாமல், இறைவன் பால் பக்தி
செலுத்தத் தொடங்கும்!” என்று கூறினார்.

மேலும், “இந்த எண்ணத்துடன் பக்தியோகம் செய்து, இடைவிடாமல் என்னையே தியானிப்பவன் என்னை வந்தடைவான்!” என்றும் கூறினார் திருமால். இவ்வாறு திருமால் கூறிய விளக்கங்களைக் கேட்டு தேவர்களும் முனிவர்களும் மகிழ்ந்தார்கள். “நீ முந்தைய யுகத்தில் உபதேசித்த இந்தக் கருத்துக்களை எல்லாம் நாங்கள் மறந்து, துன்பக் கடலில் வாடி வந்தோம். இப்போது மீண்டும் இவற்றை எமக்கு உபதேசம் செய்து, நாங்கள் இழந்த ஞானத்தை மீட்டுத் தந்து விட்டாய்!” என்று சொல்லித் தேவர்களும் முனிவர்களும் திருமாலுக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்கள். திருமங்கையாழ்வாரும் “அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமுறையை வெளிப்படுத்த அம்மான்” என்று பாடினார். தேவர்களுக்கு ‘ஸுர:’ என்று பெயர். அன்னப்பறவை வடிவில் வந்து வேதத்தின் சாரத்தை விளக்கித் தேவர்களுக்கு ஆனந்தம் தந்தமையால், ‘ஸுரானந்த:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ர நாமத்தின் 188-வது திருநாமம். “ஸுரானந்தாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் இழந்தவை அனைத்தும் விரைவில் திரும்பக் கிடைக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)
திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்
படங்கள் மது ஜெகதீஷ்

Tags :
× RELATED சுந்தர வேடம்