×

சகல தோஷங்கள் நீக்கும் நவசித்தி, நவகிரஹ கோயில்

பொன்னை அருகே அருள்பாலிக்கிறார்

ஒருமுறை சிவபெருமான் தவத்திற்கு சென்ற சமயத்தில், பார்வதிதேவி மஞ்சளை உருட்டி ஒரு மகனைச்செய்து அந்தப்புரத்தில் அச்சிறுவனை காவலுக்கு வைத்துவிட்டு தனது அனுமதியில்லாமல் யாரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாது என்று கட்டளையிட்டு குளிக்கச்சென்று விட்டார். அச்சிறுவன்தான் விநாயகர். சிவபெருமான் தவத்திலிருந்து திரும்பி, பார்வதிதேவியை பார்க்கும் நோக்கில் அந்தப்புரத்திற்கு செல்லும்போது விநாயகர், அன்னையின் அனுமதியின்றி யாரும் உள்ளே செல்லக்கூடாது என்று தடுத்துவிட்டார். அதனைக் கேட்டு சினம் கொண்ட சிவபெருமான், பார்வதிதேவியின் மகன் என்று அறியாது அச்சிறுவனுடன் சண்டையிட்டு முடிவில் சிறுவனின் தலையைக் கொய்துவிட்டார்.

உயிரற்ற விநாயகர் உடலைப் பார்த்த பார்வதிதேவி மிகவும் கவலையுற்றார். அதனைக் கண்ட சிவபெருமான், பார்வதிதேவியின் கவலையைப் போக்குவதற்காக, வடக்கு நோக்கி தலை வைத்து உறங்கும் ஜீவராசியின் தலையை கொய்து வருமாறு தனது பூதகணங்களுக்கு உத்தரவிட்டார். அவர்கள் வடக்கு நோக்கி தலை வைத்து உறங்கிய யானையின் தலையினை கொய்து வந்து சிவபெருமானிடம் தர, சிவபெருமான் உயிரற்ற விநாயகர் உடலில் அத்தலையைப் பொருத்தி உயிர் கொடுத்தார். மேலும் எந்த ஒரு காரியத்தைத் தொடங்கும் போதும் விநாயகரை வழிப்பட்டு தொடங்க அக்காரியம் எந்தவிதமான தடங்கல் இன்றி செவ்வனே முடிவடைந்துவிடும் என்று அருளினார். அன்று முதல் விநாயகரே முழுமுதற் கடவுளாக விளங்குகிறார்.

வினைகளை தீர்க்கும் விநாயகர் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை அருகே சின்னஞ்சிறிய  கிராமம் ஓட்டனேரியில் தவழ்ந்து வரும் தென்றல் காற்று சிறு ஓடைகளின் சலசலப்பு மிக ரம்மியமான சூழ்நிலையில் நவசித்தி சுயம்பு விநாயகராக அருள்பாலித்து வருகிறார். அருகிலேயே நவகிரக கோயிலும் அமைந்துள்ளது. கோட்டை வடிவில் இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு கால பைரவர் அம்சமான  நாய் ஒன்று இங்குள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்ற ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அமர்ந்து வந்துள்ளது. இதைக்கண்ட பக்தர் ஒருவர், அங்கு சென்று பார்த்தபோது மண்ணில் புதைந்த நிலையில் சுயம்பாக விநாயகர் உருவம் இருப்பதை கண்டு அதிசயத்து போனார். தெய்வத்தின் அருள் வாக்கின்படி உடனே அந்த பக்தர் சுயம்பு விநாயகர் இருந்த இடத்தில் கோயிலை கட்டினார்.

அனைத்து சக்திகளையும் உள்ளடக்கிய அந்த விநாயகர், தற்போது நவசித்தி விநாயகராக, பக்தர்களுக்கு சகல செல்வங்களையும் வாரி வழங்கி வருகிறார். பக்தர்களின் பல்வேறு தோஷங்கள் நீங்க, நவக்கிரக கோயில் அமைக்கப்பட்டுள்ளது. நவக்கிரகங்களுக்கு தனித்தனியாக கோயிலும் தலவிருட்சமும் அமைக்கப்பட்டுள்ளது தனிசிறப்பாகும். நவகிரக தோஷங்களால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு பரிகாரம் செய்தால் தோஷ நிவர்த்தி பெற்று வளமான வாழ்வு பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நவசித்தி விநாயகருக்கு நான்கு கால பூஜையும், நவகிரஹ யாகமும் அன்றாடம் நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் ஆந்திர எல்லை பகுதியில் அமைந்து இருப்பதால் இரு மாநிலங்களையும் சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வந்து தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்துகிறார்கள்.

Tags :
× RELATED காமதகனமூர்த்தி