திருவரங்க செல்வி

* செய்துங்கநல்லூர், தூத்துக்குடி மாவட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்குட்பட்டது செய்துங்கநல்லூர். இங்கு தான் திருவரங்க செல்வி கோயில் கொண்டு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருட்பாலிக்கிறாள். செய்துங்கநல்லூர் அடுத்துள்ள விட்டலாபுரத்தில் வசித்து வந்த செண்பகம், தனது கணவர் இறந்த பின் மகன்கள் ரத்தினவேல், சண்முகவேல் இருவரையும் கஷ்டப்பட்டு வளர்த்து வந்தாள். மகன்கள் வளர்ந்து ஆளாகினர். வேலைக்கு எதுவும் செல்லவில்லை. தகுந்த படிப்பும் அவர்களுக்கில்லை. தாய் செண்பகம் தினமும் மகன்களிடம் அறிவுரை கூறுவாள்.

ஒரு சமயம் பேசும்போது, ‘‘நான் இருக்கிற வரைக்கு கிராம்ஸ் வீட்டுல வேலை பார்த்து கஞ்சி ஊத்துவேன். என் காலத்துக்கு பிறகு நீங்க எப்படிலே பொழைக்க போறீங்க, உங்க வயசுல உள்ள மற்ற பையலுகளெல்லாம் ஏதாவது சோலிக்கு போயி, கைநிறைய சம்பாதிக்கானுங்க, வீடு, பொஞ்சாதி, புள்ளன்னு குடும்பமா இருக்கானுங்க, நீங்க ஏம்லே இப்படி கோயிலு, குளம், காடு கரைன்னு, பொறுப்பே இல்லாம சுத்திகிட்டிருக்கீங்க, நான் செத்தா, காரியம்பண்ணதுக்கு கூட வழியில்லாத துப்புகெட்டவனா இருக்கீங்களடா’’ என்று பேசிய படி அழுதாள்.

தாயின் கண்ணீரைக் கண்டதும். ரத்தினவேல், சொன்னான் ‘‘ஆத்தா, இந்த ஊருல எங்கள மதிச்சு ஒரு வேலையையும் ஒருத்தனும் தரல, அதனால மலையாள தேசம் போயி எந்த சோலியா இருந்தாலும் பார்த்து சம்பாதிச்சு கொண்டாரேன். ஏலே, தம்பி நீ ஆத்தாவ பாத்துக்க, இனி துட்டு இல்லாம உன் முகத்தில முழிக்க மாட்டேன் ஆத்தா’’என்று கூறியபடி புறப்படத் தயாரானான். அப்போது குறுக்கிட்ட சண்முகவேல் ‘‘அண்ணே, நானும் வாரேன்’’ என்று கூற, பின்னர் இருவரும் புறப்பட தயாரானார்கள். அப்போது செண்பகம் கூறினாள்.

‘‘என்னை வேல வேணும்ன்னாலும் பார்க்கலாம் அது குத்தமில்ல, கௌரவ குறைச்சலுமில்ல. ஆனா, உங்க அப்பன், பாட்டன் பண்ணின களவு மட்டும் பண்ணிடாதீங்கல, சரி போயிட்டு வாங்க...’’ என்று கூறி அனுப்பி வைத்தாள். ரத்தினவேலும், சண்முகவேலும் மலையாளதேசம் செல்கின்றனர். நாட்கள் பல கடந்த நிலையில் இருவரும் தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குட்பட்ட காளியின்காடு என்றழைக்கப்படும் பகுதிக்கு வருகிறார்கள். (இது தற்போது களியங்காடு என்றழைக்கப்படுகிறது. இது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கிறது) அங்கிருந்த காட்டுமடத்தில் தங்குகின்றனர். அப்போது அங்கு பேசிக்கொண்டிருந்தவர்களின் உரையாடலை கேட்கின்றனர்.

‘‘ஓய்,பணிக்கரே, என்ன! கப்பல் கவிழ்ந்து போன மாதிரி இருக்கேரு’’ என்றதும் உடனிருந்தவர் பேசலானார்.

‘‘நாயரே, விதைச்ச காணமெல்லாம் பெஞ்ச மழையிலே காணாமா போயி,  வருஷம் முழுதும் பாடுபட்டும் ஒண்ணும் மிச்சமில்லா..’’

‘‘பணிக்கரே, பத்மநாபபுரம் கொட்டாரம் போயி, கிடாரத்தை களவு எடுத்து வச்சுக்கிறும். கவலையே வேண்டாம். ஆயுசு முழுக்க உக்காதிருந்து உண்ணலாம்’’ என்றார். இதைக்கேட்டதும் ரத்தினவேல், தம்பியிடம் ‘‘ஏலே, நாம பத்மநாபபுரம் கோட்டைக்கு போவோம்’’ என்று கூறிய படி பயணத்தை தொடர்கின்றனர்.

பத்மநாபபுரம் கோட்டையில் பொன்னும், பொருளையும் களவெடுத்த அண்ணன் தம்பி இருவரும் அதை துணியில் மூட்டையாக கட்டி சலவைத்தொழிலாளி போல கோட்டையை விட்டு வெளியேறுகின்றனர். அந்த காலத்தில் அரண்மனைகளில் புலவர், குருக்கள், வைத்தியர் என்று இருப்பது போல மாந்திரீக வாதிகளையும் பணியில் வைத்திருந்தனர். மறுநாள் காலையில் கோட்டையில் களவு போனது மன்னனுக்கு தெரிய வருகிறது. காவலாளிகளை உஷார்ப் படுத்தினார்.  அரண்மனை மாந்திரவாதியை அழைத்தார். அவர் வந்த தனது உதவியாளன் மேல் வாதையை ஏவி அருள் வரவைத்தார்.

‘‘கள்ளனை கண்டு வரணும் என்று ஆணையிட்டபடி, நாழி நெல்லை எடுத்து அதை முறத்தில்(சொளவு) பரப்பி அதன் மந்திரித்த தேங்காயை வைத்து அதை ஏந்தியபடி, வாதை அருள் வந்த மாந்திரவாதியின் உதவியாளர் முன் நடந்து செல்ல, அதை பின் தொடர்ந்து கோட்டை காவலாளிகள் 2 பேர் சென்றனர். வாதையின் பிடியோடு வரும் அவர்கள் நெல்லை சீமைக்கு வருகின்றனர். இங்கே அண்ணன், தம்பி இருவரும் ஊருக்கு வந்து. தாங்கள் கொண்டு வந்ததை வீட்டின் கொல்லபுறத்தில் மண்ணில் புதைத்து வைக்கின்றனர். சிறிதளவு பொருளை எடுத்துக்கொண்டு போய் தனது தாயிடம் கொடுக்கின்றனர்.

பிள்ளைங்க கஷ்டப்பட்டு கொண்டு வந்ததாக கருதி ஆனந்தத்தில் திகழ்ந்தாள் செண்பகம்மாள். ரத்தினவேல், தம்பியை அழைத்துக்கொண்டு அடுத்த ஊரான விட்டலாபுரத்தில் பெயர்பெற்று திகழ்ந்த மந்திரவாதியை சந்தித்து நடந்ததை கூறினான். ஆனால் மண்ணில் புதைத்ததை கூறவில்லை. தனது தாயிக்கு அது களவு செய்து கொண்டுவந்து செல்வம் என்று தெரிந்தால் உயிரை மாய்த்துக்கொள்வாள். எங்களுக்கும் அவமானம் நேர்ந்து விடும் என்ன செய்வது என்று கேட்க,  மந்திரவாதி ‘‘மத்த நாடு போல அல்ல மலையாள நாடு, அங்கு களவெடுத்தவர்களை எப்படி கண்டுபிடிப்பார்கள் என்பதையும், கண்டிப்பாக உங்கள் வீட்டு முன் அந்த முறத்தேங்காய் வந்து நிற்கும். நிச்சயம் உங்கள் தலையை காவலாளிகள் துண்டித்துவிடுவார்கள்’’ என்று கூறினார்.

அஞ்சிய அண்ணன் தம்பிகள் இருவரும் என்ன செய்யலாம் என்று கேட்க, இதை தடுக்க என்ன வழி என்று பரிகாரமாக பதில் கேட்டனர் இருவரும்.  அதற்கு அந்த மந்திரவாதி ‘‘எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. உங்களை காப்பாத்தவும் முடியாது’’ என்று சொல்லிவிட்டான். உடனே ரத்தினவேலும், சண்முகவேலும் மேலகால்வாய் கிழக்குகரையில் வடக்கு பார்த்து வெட்டா வெளியில் வீற்றிருந்த அம்மன் முன் வந்தனர். ‘‘தாயே நாங்கள் அறியாது செய்துவிட்டோம். எங்களை மன்னித்து காத்தருளவேண்டும். இனி எந்த நிலையிலும் களவு கொள்ள மாட்டோம். எங்களை காப்பாற்று.

இல்லையேல் மானம் போயி, மன்னன் காவலாளிகள் கையால் சாவதை விட, உன் முன்னே செத்துப் போகிறோம்.’’ என்று கூறியபடி, அங்கு தேங்காய் உடைக்க வைத்திருந்த கல்லில் இருவரும் தலையை முட்டுகின்றனர். உதிரம் கொட்டிய நிலையில் அம்மன் அவர்கள் முன் தோன்றி அரங்கு(அறை) அமைத்து இதனுள் இருங்கள் என்று கூறினாள். கோட்டை மந்திரவாதி அனுப்பிய அந்த வாதை அருள் வந்தவரும் காவலாளிகளும் செய்துங்க நல்லூர் வந்தனர். அதன் பின் திக்கு (திசை) தெரியவில்லை, மாந்திரீகத்தை மிஞ்சி ஒரு சக்தி அதை தடுக்கிறது என்பதை உணர்ந்து திரும்பிச் சென்றனர்.

தவற்றை உணர்ந்த அண்ணன் தம்பி இருவரையும் மனம் இறங்கி மன்னித்து அரங்கு அமைத்து காத்தாள்.  அரங்கு அமைத்து காத்ததால் அம்பாள் அன்று முதல் அரங்கு அமைத்து காத்த செல்வி என்று அந்த அம்மன் அழைக்கப்பட்டாள். அந்த பெயரின் முன்பு திரு சேர்த்து திரு அரங்கு அமைத்தச் செல்வி என்றானது. அதுவே சுருங்கி திருவரங்க செல்வி என்றானது. பின்னர் அந்த அம்மன் திருவரங்கச் செல்வி என்று அழைக்கப்பட்டாள். செய்துங்கநல்லூர் மருதூர் மேலக்கால்வாயின் கிழக்குகரையில் வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் அம்பாள் அருட்பாலிக்கிறாள்.

படங்கள். முத்தாலங்குறிச்சி காமராசு

Related Stories: