கண்ணென காத்து நிற்கும் கண்ணனூர் மாரியம்மன்!

தமிழகத்தில் சிற்பக்கலையின் நுட்பமாக திகழும், சேலம் தாரமங்கலம் கைலாசநாதர் கோயிலுக்கு அருகாமையில் அமைந்திருக்கிறது கண்ணனூர் மாரியம்மன் கோயில். பிரகாரத்தில் விநாயகர் மற்றும் நாகர் சன்னதிகள் உள்ளன. தாரமங்கலத்தை சுற்றியுள்ள 18 பட்டி கிராம மக்களும், இந்த மாரியம்மனை குலதெய்வமாக கொண்டாடி வழிபட்டு வருகின்றனர். ஒரே பீடத்தில் வலது புறத்தில் மாரியம்மனும், இடது புறத்தில் காளியம்மனும் இருப்பது வியப்பு. ஆரம்பத்தில் இங்கு மாரியம்மன் விக்ரகம் மட்டுமே இருந்தது. கோயிலுக்கு வந்த அம்மனின் தீவிர பக்தர் ஒருவர், அயர்ந்து தூங்கினார்.

அப்போது அவரது கனவில் வந்த அம்மன், எனக்கு அருகே எனது சகோதரிக்கும் விக்ரகம் வைத்து வழிபட வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து மாரியம்மனுக்கு இடது புறத்தில் காளியம்மன் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பது சிலிர்ப்பூட்டும் தகவல். கேரள கோயில்களின் சாயல்களில் இந்த கோயில் இருப்பது கூடுதல் சிறப்பு. ‘‘பல்லாண்டுகளுக்கு முன்பு, கேரளத்தில் உள்ள கண்ணனூர் அம்மன் சிலையை பக்தர்கள் குதிரையில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது சேரநாட்டில் இருந்த இந்த பகுதிக்கு வந்தபோது இருட்டி விட்டது.

இதனால் ஓய்வெடுப்பதற்காக சிலையை இறக்கி வைத்த பக்தர்கள், மரத்தின் அடியில் அம்மன் சிலையை வைத்தனர். அன்றிரவு பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அம்மன், தன்னை அமர்த்தியிருக்கும் இடத்திற்கு அடியில் சுயம்புவாக வீற்றிருப்பதாகவும், எனவே இந்த இடத்தில் கோயில் கட்டுமாறும் கூறினாள். இதனால் மெய்சிலிர்த்த பக்தர், கனவில் அம்மன் கூறியதை ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளார். அனைவரும் சேர்ந்து தேடிப்பார்த்தபோது அம்மன் சிலை இருந்தது. இதையடுத்து கனவில் அம்மன் கொடுத்த உத்தரவுப்படி, ஊர் மக்கள் ஒன்றிணைந்து கோயில் கட்டினர்.

கண்ணனூரில் இருந்து அம்மனை கொண்டு வரும்போது, கிடைக்கப் பெற்ற விக்ரகம் என்பதால் கண்ணனூர் மாரியம்மன் என்று வழிபடத் துவங்கினர்’’ என்பது தலவரலாறு. கண்ணென பக்தர்களை காத்து துயரங்களை தீர்ப்பவள் கண்ணனூர் மாரியம்மன் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதிலும் குறிப்பாக குழந்தைவரம் கேட்டு, இங்கு பெண்கள் வேண்டுதல் வைத்து செல்வது பிரதானமாக உள்ளது. குழந்தை பாக்கியம் வேண்டு பவர்கள், அம்பாள் முன்பு தொட்டில் கட்டி, அதில் கோயில் முன்புள்ள சஞ்சீவி தீர்த்தத்தை தெளிக்கின்றனர். இப்படி நீர் தெளித்து தொட்டிலை ஆட்டி வழிபட்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இவ்வாறு வேண்டுதல் வைத்து குழந்தை வரம் பெற்ற பெண்கள், பூக்குழி இறங்கி தீமிதித்து அம்மனுக்கு ேநர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இப்படி பூக்குழி இறங்கும் நேரத்தில் அம்மனுக்கு அபிஷேகம் செய்த பாலை, அக்னி குண்டத்தில் நின்று கொண்டே குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். இப்படி செய்வதால் அந்த குழந்தைகள் நோய் நொடியில்லாமல், நீண்ட ஆயுளுடன் வாழும். அம்பாள் எப்போதும் அவர்களுக்கு துணை நிற்பாள் என்பதும் செவிவழித் தகவலாக உள்ளது. இதேபோல் பேச்சுக்குறைபாடு உள்ளவர்கள், மாவிளக்கு எடுத்து மணி கட்டி, அம்மனை வழிபட்டால் அதற்கு தீர்வு கிடைக்கும் என்பதும் கண்ணனூர் மாரியம்மன் கோயிலில் திரளும் பக்தர்களிடம் தொடரும் நம்பிக்கையாக உள்ளது.

Related Stories: