ஸ்ரீகண்டன் சாஸ்தா கோயிலில் மாங்கல்யம் சிறக்க சிறப்பு வழிபாடு

நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தக்கலை அருகே பரைக்கோடு ஸ்ரீகண்டன் சாஸ்தா திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மூலவர் கண்டன் சாஸ்தா, தேவி, கணபதி, நாகர், மாடன்தம்புரான், அம்மன் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. கி.பி 1729ம் ஆண்டு வேணாட்டில் ஆட்சி பொறுப்பில் வந்த மன்னர் அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா பல பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்த பகுதிகளை ஒரே அரச மகுடத்தின்கீழ் கொண்டுவந்து திருவிதாங்கூர் சமஸ்தானம் என்ற ஒரே நாடாக ஒருங்கிணைத்து ஆட்சி செய்தார்.

இவரது ஆட்சி காலத்தில் கூட்டுப்படைகளுடன் தான் நடத்தப்போகும் போரில் வெற்றிபெறவும், சேதம் வராமல் தடுக்கவும், தங்களை பாதுகாத்து தீய சக்திகளை முறியடிக்கவும் இந்த பகுதியில் ‘வெட்டு முறி’ வழிபாடு நடத்தியதாக வரலாறு கூறுகிறது. இதனால் சாஸ்தா கோயில் அமைந்துள்ள பகுதிக்கு ‘வெட்டி முறிச்சான்’ என்ற பெயரும் உண்டு. மகாராணி உத்ரிட்டாதி திருநாள் கவுரி பார்வதி பாய் ஆட்சி காலத்தில் 1821ம் ஆண்டு பந்தளம் நாடு திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இணைக்கப்பட்டது. அத்துடன் சபரிமலை உட்பட 48 கோயில்கள் திருவிதாங்கூர் தேவசத்துடன் இணைக்கப்பட்டன.  

பின்னர் வந்த மன்னர் மூலம் திருநாள் ராமவர்மா காலத்தில் புதிதாக கோயில்கள் பிரதிஷ்டை, சாஸ்தா வழிபாடுகள் பிரபலமடைந்தன. பரைக்கோடு கண்டன் சாஸ்தா கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதர்ம சாஸ்தா, சபரிமலையை போல தியான பிந்து ஆசனத்தில் அபய சின் முத்திரையிலும், கிருஷநாரீய பீடாசனத்தில் யோகப்பிராணா முத்திரையிலும், குதபாத சிரேஷ்டாசனத்தில் அபான பந்த முத்திரையிலும், அஷ்டகோண சாஸ்தாசனத்தில் யோக பத்ராசனத்திலும் அருள் பாலிக்கிறார்.

உள்ளம் தூய்மையோடு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டுதல்களை நிறைவேற்றி அருள்பாலிக்கும் தெய்வமாக பரைக்கோடு ஸ்ரீகண்டன் சாஸ்தா இருந்து வருகிறார். பரைக்கோடு என்எஸ்எஸ் கரையோக கட்டுப்பாட்டில் இந்த கோயில் இருந்து வருகிறது. இந்த கோயிலில் தினந்தோறும் வழிபாடுகள், ஆண்டுதோறும் 41 நாட்கள் மண்டல சிறப்பு பூஜைகள், மண்டல பூஜை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பக்தர்களுக்கு வேண்டுதல்கள் நிறைவேற்ற, பெண்கள் மாங்கல்யம் சிறக்க வழிபாடு, குடும்பத்தில் சந்தான விருத்தி வேண்டி வரும் பக்தர்களுக்கு சிறப்பு வழிபாடுகளும் இங்கு நடைபெறுகின்றன.

Related Stories: