×

பாண்டவர்கள் ஆயுதங்களை மறைத்து வைத்த மகிஷாசுரமர்த்தினி கோயில்

குமரி மாவட்டம் வாள்வச்சகோஷ்டம் ஊரில் உள்ளது மகிஷாசுரமர்த்தினி கோயில். அரசன் வாள்கழுவிய இடம் வாள்வச்ச கோஷ்டமானது. இந்த பெயர் 16ம் நூற்றாண்டு கல்வெட்டில் வருகிறது. அரசன் வெற்றி பெற்ற பிறகு ரத்தக் கறை படிந்த வாளைக் கழுவிய இடம் இது. பரசுராமன் சத்ரியர்களை அழித்தபின் துர்க்கைக்குக் கோயில் எடுத்தான். கோயில் அருகே குளமும் அமைத்தான், பின், தான் அமைத்த குளத்தில் பரசுவை(கோடாலி ஆயுதம்) வைத்து வணங்கினான். அது இந்த இடம். ஆதலால் இத்தலத்தைப் பரசுராமருடனும் சேர்த்துக் கூறுகின்றனர்.
இந்த ஊர் கோயிலை மஹாபாரத கதையுடன் இணைத்துக் கூறுகின்றனர்.  பாண்டவர்கள் 14 ஆண்டுகள் வனவாசம் செல்வதற்கு முன்பு, தங்கள் ஆயுதங்களை மறைவான இடத்தில் வைக்க விரும்பினர். அதற்கு சரியான இடம் மகிஷாசுரமர்த்தினி குடிக்கொண்ட கோயிலே என முடிவு கட்டினர். இங்கே தங்கள் ஆயுதங்களை வைத்தனர். அதனால் இந்த தலம் வாள்வச்சகோஷ்டம் ஆயிற்று.

கோயில் இங்கே உருவானதற்கு வாய்மொழி வடிவில் ஒரு கதை வழங்குகிறது. சங்கரவாரியார் என்ற எடத்துவா போற்றி இந்த பகுதியில் வரி பிரிக்கும் பொறுப்பில் இருந்தார். அவர் ஒருமுறை இந்த ஊர்வழியோடு இரவில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அழகான 2 பெண்களைக் கண்டார். ஒருத்தி இவரை அழைத்தாள். தாந்திரீகம் அறிந்த அந்த போற்றி அந்த யட்சிகளை அங்கு நின்ற மருதமரத்தின் கீழ் ஸ்தாபித்தார். இந்த மருதமரத்தின் அருகே பிற்காலத்தில் கோயில் உருவானது. இக்கோயில் உரிமை வாரியர் குடும்பத்திற்கும், நிருவாசம் மகாராஜா குடும்பத்திற்கும் உரியது என்ற வாக்கும் 18ம் நூற்றாண்டிலும் இருந்தது. முகமண்டபத்தில் கொடிமரம் உள்ளது. 45 அடி உயரமுடையது. கி.பி.2000ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. செப்புத்தகடு வேயப்பட்டது. கொடிமரத்தை அடுத்து இருப்பது பலிபீடம். இதன் இருபுறமும் உள்ள தூண்களில் அருமையான சிற்பங்கள் உள்ளன. இம்மண்டபத்தில் சந்தான காளி வாரியார் என்பவரின் அஞ்சலிஹந்த சிற்பம் உள்ளது.

மஹிஷாசுரமர்த்தினி குழந்தையாக வந்து இம்மண்டபத்தைக் கட்டும்படி வேண்டினாள் என்பது ஐதீகம். ஸ்ரீகோயில் என்னும் கருவறையில் முன் ஒற்றைக்கல் மண்டபம் உண்டு. இக்கோயிலில் கட்டுமானம் முன்று காலகட்டங்களில் நடத்திருக்கிறது. ஸ்ரீகோயில் பகுதி பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும். பலிபீட மண்டபம், கதிர் மண்டபம் போன்றவை 16ம் நூற்றாண்டிலும், பிற 18ம் நூற்றாண்டிலும் கட்டப்பட்டவை ஆகும். கோயிலின் விமானம் 32 அடிஉயரமுடையது. குமரி மாவட்ட கோயில்களில் பெரிய அளவிலான மகிஷாசுரமர்த்தினி இவளே. இப்படிவம் தமிழக கேரள பாணியில் அமைந்தது அல்ல. இது ஆரம்பகால விஜயநகரபாணி சிற்பம். கருவறை கட்டப்பட்டகாலத்தில் இச்சிற்பம் சமைக்கப்பட்டிருக்கலாம். பெரும்பாலும் 12ம் நூற்றாண்டாக இருக்கலாம். இதன் ரௌத்ரபாவம் இதன் அழகை கூட்டுகிறது. அம்மனின் படிவம் முழுவதும் மூடிய தங்கக்கவசம் உண்டு.

கி.பி.18ம் நூற்றாண்டில் மார்த்தாண்டவர்மா தன் வெற்றியின் அடையாளமாக இக்கவசத்தைக் கொடுத்திருக்கிறார். கருவறையில் இருந்து ரகசிய அறைக்குச் செல்லும் பாதை இருந்தது. கணபதி, நாகர் ஆகியோரும் பரிகார தெய்வங்களாக உள்ளனர். இக்கோயிலில் பலிக்கல் மண்டபம், கதிர் மண்டபம், நமஸ்காரமண்டபம், முகமண்டபம் ஆகியவற்றில் உள்ள தூண்களில் புடைப்பு சிற்பங்கள் உள்ளன. இக்கோயிலில் நான்கு கல்வெட்டுக்கள் உள்ளன. ஒன்று 1234ம் ஆண்டினது. கருவறையில் தென்பகுதி சுவரில் உள்ள இக்கல்வெட்டு மேல்மரியத்தூரை சார்ந்த காவல் அரங்க நாராயணர் என்பவர் இக்கோயில் கட்டியதைக் குறிப்பிடுகிறது. இது கிரந்தம் கலந்த கல்வெட்டு, 1521ம் ஆண்டு கல்வெட்டு. முல்லைமங்கலம் திருவிக்ரமன் என்பவர் இங்கு முகமண்டபத்தைக் கட்டியதை கூறும். 1622ம் ஆண்டு கல்வெட்டு, இக்கோயில் கட்டுமானத்தைச் செய்த முல்லை மங்கலம் தாமோதரன் இறந்ததைக் கூறும். ஒருவர் இறப்பை பற்றிய இக்கல்வெட்டு விருத்தப்பாடல் வடிவில் அமைந்தது. இதுபோன்ற கல்வெட்டு இம்மாவட்டத்தில் வேறு எங்கும் இல்லை.


Tags :
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்