பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம் பஞ்சபூதேஸ்வரத்தில் அமைந்துள்ளது பிரத்யங்கிரா திருக்கோயில்.இந்த ஆலயம் மானாமதுரை இளையாங்குடி சாலையில், வேதியரேந்தல்விலக்கு பகுதியில், மானாமதுரையில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அம்பாள் பஞ்சமுகத்தில் அமைந்து ஐந்து பக்கங்களிலிருந்தும் வரும் அனைத்து மக்களுக்கும் அளவற்ற அருட்பாலித்து வருவதால் இந்த புனிதத் தலம் ‘பஞ்சபூதேஸ்வரம்’ என்று அழைக்கப்படுகிறது.

ஆலயம் தற்போது இருக்கும் இடத்தில்தான் புராண காலத்தில், அகஸ்தியர் தன் தர்ம பத்தினி லோபாமுத்திரையோடு ராமபிரானுக்கு ஆதித்ய ஹிருதயம் உபதேசம் செய்ததாக தலபுராணம் கூறுகிறது. இத்தகைய பெருமை வாய்ந்த இடத்தில் பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி அமர்ந்து அனைவருக்கும் அளவற்ற அருட்பாலித்து வருகிறாள். தினமும் அம்பாளுக்கு சிறப்பான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தினமும் அன்னதானமும் அளிக்கப்படுகிறது.

மாதம் தோறும் அமாவாசை தினத்தில் விசேஷ யாகங்களுடன் பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த பூஜையில் பல மாநிலங்களிலிருந்தும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். மழலைப் பேறு இல்லா பக்தர்கள் தங்களுக்கு அந்த பாக்கியம் வேண்டி நேர்ந்து கொள்கின்றனர். அவர்களுக்கு உடனேயே மகப்பேறு பெறுவதில் உள்ள குறையை நீக்கியருள்கிறாள் இந்தத் தாய் என பக்தர்களால் நம்பப்படுகிறது. இங்கு அமைந்துள்ள அம்பாள் 12 அடி உயரத்தில் அபய கரங்களுடன் காட்சியளிக்கிறார்.  பிரத்யங்கிரா தேவி பஞ்சமுகங்களோடு அருட்பாலிப்பது உலகிலேயே இங்கு மட்டும்தான் என்று கூறுகின்றனர்.

Tags :
× RELATED ஞானக் கனலாகி நின்ற அருணாசலம்