எண்ணியதை ஈடேற்றும் எண்கரத்தாள்

பெருமாநல்லூர்

கொங்கு மண்டலத்தில் பண்ணாரி, பாரியூர் அம்மன், சூலக்கல் மாரி, வனபத்ரகாளி, ஆனைமலை மாகாளி, கோணியம்மன், அங்காளம்மன், பெரிய நாயகி, தண்டுமாரியம்மன், கண்டியம்மன், மாங்கரை அம்மன் என்று பல அம்சங்களாக பராசக்தி நிறைந்திருக்கிறாள். தீயவற்றை அழிக்க அம்பிகை எடுத்த அவதாரங்களில் காளி வடிவமும் ஒன்று. அவ்வாறு கொண்டத்துக் காளி என்ற பெயருடன் பக்தர்களை பாதுகாக்கும் அம்மன் ஆலயம், கோவை மாவட்டம் திருப்பூர் அருகில் கோவை-ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தலத்தின் பெயர் - பெருமாநல்லூர்.

முன்பு ஒரு காலத்தில் இந்த கொங்குப் பகுதியில் வாமனரிஷி என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் படை வீரர்களுக்கும், அரச குமாரர்
களுக்கும் போர் பயிற்சியளித்து வந்தார். அனைத்து கலைகளிலும் தான் சிறந்த தேர்ச்சி பெற எண்ணிய ரிஷி, தான் வழிபடும் சக்தி சொரூபமான காளியை நோக்கிக் கடுந்தவம் செய்தார். அப்போது அசுரர்கள் அவரை மிகவும் துன்புறுத்தினர். அவர்களில் திக்கரன் என்பவன் அவரை மிகவும் கொடுமைப்படுத்தினான். தன் பக்தன் வேதனைப்படுவது கண்டு பொறுக்காத காளி திக்காசுரனை அழித்து ரிஷிக்கு காட்சி அளித்தாள். அப்போது ரிஷி தனக்கு சகல கலைகளிலும் வல்லமை தரவேண்டும் எனும் வரத்தை அம்மனிடம் பெற்றுக்கொண்டார். அதோடு தான் பெற்ற சகலகலா வித்தையைப் பிறருக்குப் பயிற்றுவிக்க, காளியம்மன் தனக்கு உறுதுணையாக இருந்து அருட்பாலிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அம்மனும் சம்மதித்தாள்.
  முனிவர் தான் பெற்ற அறிவையும், ஆற்றலையும் படை வீரர்களுக்கு கற்றுக் கொடுத்தார். வீரர்கள் போர்முனைக்குப் போகுமுன் காளியம்மனுக்கு குண்டம் அமைத்து அதில் இறங்கி அன்னையின் சக்தியை பெற்று அதன் பின் போர்முனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார். இவ்வாறு குண்டம் இறங்கியவர்கள் ‘வீர மக்கள்’ என்று அழைக்கப்பெற்றனர்.

இந்தக் கோயிலில் குண்டம் அறுபது அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இப்போதும் இந்த குண்டத்தில் இறங்குபவர்கள் வீரமக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மிகவும் கடுமையான விரதம் மேற்கொண்டுதான் குண்டம் இறங்குகிறார்கள். அம்மனும் ‘குண்டத்து காளியம்மன்’ என்றே அழைக்கப்படுகிறாள். இந்த கோயிலில் குண்டத்துடன் தேர்த்திருவிழாவும் நடைபெற்று வருகிறது.இந்த காளியம்மன் முகத்தில் லட்சுமி கடாட்சத்தையும், நெஞ்சில் வீரத்தையும், எட்டுக் கரங்களில் சக்கரம், சூலம், கத்தி, உடுக்கை, அக்னி சட்டி, மணி, அன்னப்பறவை மற்றும் சரஸ்வதி அம்சமாக சுவடி ஆகியவற்றை ஏந்தியபடி காட்சியளிக்கிறாள்.காளியம்மனின் அருள், தன்னை நாடி வரும் பக்தர்களின் பில்லி, சூனிய கெடுவினைகளை விரட்டுகிறது; அவர்தம் பகைவர்களை அழிக்கிறது; கல்வி, வீரம் ஆகியவற்றில் சிறந்து விளங்க வைக்கிறது; அவர்கள் பஞ்சம், பட்டினியைப் போக்குகிறது என்று உறுதியாக நம்புகிறார்கள் பக்தர்கள். கருணை மிகுந்த இந்த காளியம்மன் ஊரையே காக்கும் தெய்வமாகவும்
விளங்குகிறாள்.

துர்க்கையின் அம்சமான இந்த கொண்டத்துக்காளி, வடதிசை நோக்கி கொலுவிருக்கிறாள். கோயிலின் முன் மிக நீண்ட அக்னி குண்டம் அமைக்கப்பட்டுள்ளது. அன்னையின் மகாமண்டபம் முன்பாக ஆண், பெண் பூதங்கள் சிற்பங்களாக நிற்கின்றன. அன்னைக்கு யாளி வாகனம். காலை 6 முதல் பகல் 1 மணி வரையிலும் மாலை 4 முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். தினசரி 2 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. செவ்வாய் வெள்ளிக் கிழமைகள், அமாவாசை, பௌர்ணமி தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

Tags :
× RELATED ஈசனின் அடிமுடி காண முயன்றபோது திருமால் வணங்கிய திருமாமுடீஸ்வரர்