பயம் போக்கும் தேவிபட்டினம் உலகநாயகி அம்மன்

ராமநாதபுரத்திலிருந்து  15 கிமீ தொலைவில் உள்ளது தேவிபட்டினம். இங்கு மஹிஷாசுரமர்த்தினி என்று  அழைக்கப்படும் உலகநாயகி அம்மன் கோயில் உள்ளது. மூலவராக மஹிஷாசுரமர்த்தினி  வீற்றிருக்கிறார். மூலவர் சன்னதிக்கு மேல் ஏக தள விமானம் அமைந்துள்ளது.  அம்பிகையின் சக்தி பீடங்களில் இது வீரசக்தி பீடமாக வழிபடப்படுகிறது. கோயில்  வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர், நாகர் உள்ளிட்ட சிலைகள் உள்ளன.  கோயில் நுழைவு வாயிலில் 5 நிலைகள், 7 கலசங்களுடன் கூடிய பிரமாண்டமான  கோபுரம் உள்ளது. கோயில் எதிரில் சர்க்கரை தீர்த்தம் அமைந்துள்ளது. கோயில்  உட்புறத்தில் பலிபீடம், கொடிமரம், சிம்ம வாகனம், 16 கால் மண்டபம் மற்றும்  அர்த்தமண்டபம் உள்ளது.

ராவணனை வதம் செய்ய இலங்கை செல்லும் முன்  இங்குள்ள மூலவரை ராமர் வழிபட்டு சென்றுள்ளார். மேலும் தோஷ நிவர்த்திக்காக,  இங்கு நவக்கிரகங்களை ராமர் பிரதிஷ்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவை  கோயிலின் சிறப்புகளாகும். முதலாம் ராஜராஜ சோழனின் பட்டத்து அரசியான  உலகமகாதேவியின் பெயரில் இந்த ஊர் ‘உலக மகாதேவி பட்டினம்’ என்று ஆரம்பத்தில்  அழைக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் ‘உலகமகாதேவி பட்டினம்’ என்பது  ‘தேவிபட்டினம்’ என்று மருவியதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

தல வரலாறு

மகிஷாசுரமர்த்தினி  கோயிலை கட்டியவர் குறித்தும், கட்டிய ஆண்டு குறித்தும் சரிவர விபரங்கள்  தெரியவில்லை. பண்டைய காலத்தில் மகிஷாசுரன் என்ற அரக்கன் இருந்தான். சிறந்த  சிவ பக்தனான அவன், மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் அளவில்லா துன்பத்தை  கொடுத்தான். அவனை யாரும் வெல்ல முடியாத சக்தியை அவன் பெற்றிருந்தான்.  இதனால் பராசக்திக்கு சிவபெருமான் சூலத்தையும், திருமால் சக்கரத்தையும்,  பிரம்மா கமண்டலத்தையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும், அக்னியும், வருணனும்  சக்தியையும், வாயு வில்லையும், ஐராவதம் மணியையும், எமன் தண்டத்தையும்,  நிருதி பாசத்தையும் அளித்தனர்.

மேலும் காலன் கத்தி மற்றும்  கேடயத்தையும், சமுத்திரம் தாமரை மலரையும், குபேரன் பாண பாத்திரத்தையும்,  சூரியன் ஒளிக்கதிர்களையும், ஆதிசேஷன் நாகபரணத்தையும் வழங்கினர். ஹிமவான்  சிம்ம வாகனமானான். இதனால் சர்வ சக்தி பெற்ற பராசக்தி தனது 18 கரங்களிலும்  ஆயுதங்களை ஏந்தி, சிம்ம வாகனத்தில் சென்று மகிஷாசுரனை வதம் செய்தாள்.  இதனால் பராசக்திக்கு மகிஷாசுரமர்த்தினி என்று பெயர் ஏற்பட்டது. மகிஷாசுரனை  அழித்த பின்னர் கோபம் தணிந்த அவள், இப்பகுதியில் வந்து தங்கினாள்.  பிற்காலத்தில் இங்கு மகிஷாசுரமர்த்தினிக்கு கோயில் எழுப்பப்பட்டது என்பது  புராணம்.

நவராத்திரி, பவுர்ணமி ஆகியவை விசேஷ  தினங்களாகும். பயந்த சுபாவம் உள்ளவர்கள்,  எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள்  வீரசக்தி பீடமான இங்கு வந்து மூலவரை பிரார்த்திக்கின்றனர். இதனால் சகல பயங்களும் நீங்கும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். எடுத்த செயலில்  வெற்றி பெற அம்மனை பக்தர்கள் வணங்குகின்றனர். நவராத்திரி நாயகியான அம்மனை  வழிபட்டால் பக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.  வேண்டுதல் நிறைவேறியவர்கள், மூலவருக்கு பலவகையான அபிஷேகங்கள் செய்தும்,  நேர்த்திக்கடன் செலுத்தியும் வணங்குகின்றனர். கோயில் நடை தினமும் காலை 6  மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கிறது.

Related Stories: