×

திருப்பங்கள் தருவாள் திரிபுரசுந்தரி!!

* திருக்கழுக்குன்றம் - சங்கு தீர்த்தம்

வேதங்கள் மலை வடிவில் வந்து தவம் செய்ய, அந்த மலையின் மீதே சிவன் லிங்க ரூபமாக அருள்பாலிக்கும் தலமே திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில். முனிவர்கள் 8 பேர் கழுகு உருவில் வந்து வழிபட்டதால் ‘திருக்கழுக்குன்றம்’ என்று பெயர் பெற்றது. செங்கல்பட்டில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம். மூலவர் வேதகிரீஸ்வரர், அம்பாள் சொக்கநாயகி. இங்கு தஞ்சாவூரில் நடைபெறும் மகாமகம் போல், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘சங்கு தீர்த்த புஷ்கர மேளா’ என்னும் விழா நடைபெறுகிறது. பொதுவாக உவர்நீரில்தான் சங்கு தோன்றும். ஆனால் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஆலயத்தில் உள்ள நன்நீர் நிறைந்த குளத்தில், ஒரே ஒரு சங்கு பிறந்து வெளி வருகிறது. அவ்வாறு தோன்றும் சங்கைதான், சங்குதீர்த்த புஷ்கர மேளாவின் போது, இறைவனை அபிஷேகம் செய்ய பயன்படுத்துவார்கள்.

மிருகண்டு முனிவர்- மருத்துவதி தம்பதியருக்கு நீண்ட காலமாக குழந்தைஇல்லை. அவர்கள் ஈசனை நோக்கி தவம் புரிந்தனர். அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான், ‘உங்களுக்கு நீண்ட காலம் வாழும் புத்தி குறைவான மகன் வேண்டுமா?, நிறைந்த புத்தியோடு குறைந்த காலம் வாழும் மகன் வேண்டுமா?’ எனக் கேட்டார். இறைவனிடம் புத்தியோடுள்ள குறைந்த காலம் வாழும் மகனை வேண்டினர். மகன் பிறந்தான். அவனுக்கு மார்க்கண்டேயன் என பெயரிட்டு வளர்த்து வந்தனர். மார்க்கண்டேயனுக்கு 16 வயது ஆனபோது அவரது உயிரைப் பறிக்க எமன் வந்தான். எமனைக் கண்டதும் மார்க்கண்டேயர், சிவலிங்கத்தை இறுக தழுவிக்கொண்டார்.

 எமன், பாசக்கயிறை வீச, அந்த கயிறு மார்க்கண்டேயரோடு சிவலிங்கத்தையும் சுற்றி வளைத்துக் கொண்டது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், உக்கிரமூர்த்தியாய் தோன்றி எமனை எட்டி உதைத்தார். எமதர்மன் மூர்ச்சையாகி விழுந்தான். பின்னர் மார்க்கண்டேயரை என்றும் 16 வயதுடன் இருக்க அருள்புரிந்தார். இதையடுத்து மார்க்கண்டேயர் பல சிவதலங்களுக்கு சென்று வழிபட்டார். அப்படி அவர் வந்த திருத்தலத்தில் ஒன்றுதான் திருக்கழுக்குன்றம்.அவர் இந்த ஆலயத்திற்கு, குரு பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் நேரத்தில் வந்தார்.

குளத்தில் நீராடினார். சிவனுக்கு அபிஷேகம் செய்ய, நீர் எடுக்க பாத்திரம் எதுவும் இல்லாததால், சிவபெருமானை நினைத்து வேண்டினார் மார்க்கண்டேயர். இதையடுத்து அங்குள்ள நன்நீர் குளத்தில் ஒரு சங்கு உருவாகி வெளிவந்தது. இறைவனால் தரப்பட்ட அந்த சங்கை கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்தார். இறைவனுக்காக சங்கு உருவானதால் அந்தக் குளத்திற்கு ‘சங்கு தீர்த்தம்’ என்று பெயர் உண்டானது. இந்த நிகழ்வே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருக்கழுக்குன்றம் திருத்தலத்தில் ‘சங்கு தீர்த்த புஷ்கர மேளா’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

தொகுப்பு: ந.பரணிகுமார்

Tags :
× RELATED சுநந்தாபீடம் – சுநந்தா