×

தர்ப்பையின் மகிமை!

மறைந்திருக்கும் விஷயங்களை கண்டறிவதுதான் இந்து மதத்தின் அடிப்படை விஞ்ஞானமாகும். வெறும் புல் என்று அறுகம்புல்லை விடமுடியுமா என்ன? அதன் மகத்துவம் தெரிந்துதானே பிள்ளையாரே தன் மேனி முழுவதும் சூடிக் கொள்கிறார். எப்பேர்பட்ட மருத்துவ சக்தியும், ஆன்மிக மகத்துவமும் கொண்டது அது. அப்படி இதற்கு இணையான மகத்துவம் கொண்ட இன்னொரு புல்தான் தர்ப்பை. நம்மால் காண முடியாத தீய கதிர்வீச்சுக்களை போக்கடிக்கும் தன்மையையும், நமக்குள் உள்ளே நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் தர்ப்பைக்கு உண்டு. மந்திரங்களை தேக்கி வைத்துக் கொள்ளும் சக்தி கொண்டது.

இந்திரன் விருத்திராசூரனை கொன்றான். ஆனால், அடிப்படையாக விருத்திராசூரன் விஷ்ணு பக்தியில் சிறந்தவன். பரம பாகவதன். போர்க்களத்தில் நின்று மகாவிஷ்ணுவை மிக ஆச்சரியமான துதிகள் கூறி சரணாகதி செய்தவன். அவனை இந்திரனே தயங்கித்தான் கொல்ல முடிந்தது. ஆனால், அந்த ஜீவன் வைகுண்டம் சென்றது. அவனின் தலை நதியில் மிதந்து கரையோரமாக ஒதுங்கியது. அந்த புனிதமான சிரசிலிருந்து புற்கள் நிறைய முளைத்தன. ரிஷிகள் அதன் வீர்யத்தையும் புனிதத்தையும் பார்த்து வியந்தார்கள். அந்தப் புல்லுக்குத்தான் தர்ப்பை என்று பெயரிட்டார்கள். வைதீக காரியங்களின் போது செய்ய வேண்டிய கர்மாவை வேறெந்த சக்தியும் தடுக்காது இருப்பதற்காக தர்ப்பையாலான பவித்ரத்தை அணிகிறோம். சுற்றிலும் இரண்டிரண்டாக தர்ப்பையை வைத்துக் கொள்கிறோம். தர்ப்பை என்பது அக்னியின் பிரதிநிதியாக சொல்லப்படுகிறது.

அக்காலத்தில் அரணிக் கட்டையால் அக்னியை உற்பத்தி செய்வர். அப்படி இயலாத நேரங்களில் நித்யாக்னி ஹோத்ரிகள் என்றழைக்கப்படும் தீக்ஷிதர்கள் தங்களின் யாகத்திற்காக வைத்திருக்கும் அக்னியை எடுத்துக் கொள்ளலாம். இவை இரண்டுமே கிடைக்கவில்லையெனில் தர்ப்ப ஸ்தம்பத்திலேயே ஹோமம் செய்யலாம் என்று வேதங்கள் சொல்கின்றன. தர்ப்பைகளை ஸ்தம்பம்போல சிறு கட்டையாக கட்டி ஹோமமாக செய்யலாம். இவ்வாறு தர்ப்பையிலேயே பூரண அக்னியின் சாந்நித்தியம் இருப்பதை, ‘‘தர்பஸ்தம்பே ஹோதவ்யம் அக்னிவான் வை தர்பஸ்தம்ப’’ என்று வேதம் உறுதிப்படுத்துகிறது.  

கிரகண காலங்களில் ஆதி நாளிலிருந்து பெரியவர்கள் எல்லா உணவுப் பொருட்களிலும் தர்ப்பையை கிள்ளிப் போடுவர். கிரகணத்தின்போது தீய கதிர்வீச்சுக்கள் உணவை பாதிக்காத வண்ணம் பாதுகாக்கிறது. இடிதாங்கி எப்படி தனக்குள் இடியின் அத்தனை சக்தியையும் வாங்கிக் கொள்கிறதோ அதுபோலத்தான் தர்ப்பையும் செயல்படுகிறது. உடல் வலிமையையும் புத்திக் கூர்மையையும் தர்ப்பை வளர்க்கும். பாணிணி என்கிற முனிவர் கௌமுதி என்கிற மாபெரும் நூலை எழுதும்போது பவித்ர பாணியாக விரல்களில் தர்ப்பை பவித்ரத்தை அணிந்து எழுதினார் என்று மகாபாஷ்யம் தெரிவிக்கிறது. புத்தியின் அலைச்சலை நிறுத்தி கூர்மையாக்குகிறது.

ஒரு செயலைச் செய்யும்போது நமக்குள்ளிருந்து வரும் சக்தியை தடைசெய்யாது பிரவாகமாக பொங்கிவர தர்ப்பை உதவுகிறது. அதுபோல சக்தியை பரிமாறச் செய்யும்போதும் தர்ப்பையின் பங்கு மகத்தானது. ஒருவர் தனக்கு பதிலாக புரோகிதருக்கு காரியங்களை செய்ய அதிகாரத்தை மாற்றும்போதும், பெண்கள் பித்ரு காரியங்கள் செய்ய நேரிடும்போதும் மற்றவருக்கு தன் கையாலேயே தர்ப்பையை கொடுக்கலாம் என்று வேதங்கள் வழிமுறைகள் வைத்திருக்கின்றன. காரியங்கள் செய்பவர் வேறு. ஆனால், காரிய கர்த்தாவின் அம்சமாக அங்கு தர்ப்பையே விளங்குகிறது. தன்னுடைய பிரதிநிதியாகவே தர்ப்பை செயல்படுகிறது. தர்ப்பைகள் அஸ்திரங்கள் போன்றவை. மந்திரங்களை ஏற்றி ஏவினால் ஏவுகணைபோல பாயும் வீர்யம் கொண்டவை. தர்ப்பைப் பாயில் அமர்ந்து தியானம் செய்ய மிக எளிதில் தியானம் சித்திக்கும்.

- கிருஷ்ணா

Tags :
× RELATED சுந்தர வேடம்