ஆடியில் அம்மன் தரிசனம்!

நாகப்பட்டினம் - நெல்லுக்கடை மாரியம்மன்

காரிருள் வேளை. எங்கும் அடைமழை. அதுவோ நெல்லுக் கடை. வணிகர் ஒருவர் நெல்லுக் கடையை மூடிவிட்டு வீடு திரும்ப தயாரானார். ஒரு பெண் சட்டென்று கடையருகே ஒதுங்கினாள். இன்று இரவு நான் இங்கேயே தங்கிக் கொள்கிறேன் என்றாள். முதலில் வணிகர் முடியாது என்றார். நான் வேறெங்கும் செல்ல முடியாது என்று பணிவோடு கேட்டாள். எப்படி ஒரு பெண்ணை நம்பி தனியே கடையை விட்டு என்று வணிகர் யோசித்தார். அந்தப் பெண்மணியிடம், ‘‘நான் கடையை பூட்டி விட்டுத்தான் போவேன்’’ என்றார். அந்த பெண்ணும் சரியென்றாள். மறுநாள் காலையிலேயே வணிகர் கடையைத் திறந்தார். அந்தப் பெண்மணியை காணவில்லை. அதிர்ந்தார். ஆனால், சற்றே கடைக்குள் பார்வையைத் திருப்ப ஆச்சரியத்தில் உறைந்தே போனார். வந்த பெண்ணே அம்மன் சிலையாக காட்சி தந்தாள். அம்மனே இப்படி தன் கடைக்கு வந்து லீலையை நடத்தியிருக்கிறாளே என்று குலுங்கி அழுதார். நெல்லுக் கடையை அப்படியே ஆலயமாக்கினார்கள். எனவே, இந்த கோயிலை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் என்றழைத்தார்கள். இக்கோயிலில் நடைபெறும் செடில் திருவிழா மிகவும் பிரபலமானது. அப்போது செடிலில் குறைந்தது 5000 குழந்தைகளாவது ஆசி பெறும் ஆச்சரிய நிகழ்வை காணலாம். நாகை நகரத்தின்
மையத்திலேயே இந்த ஆலயம் அமைந்துள்ளது.

திருவாமாத்தூர் மாரியம்மன்

அண்ணன் ஒருவன் தன் தம்பியை ஏமாற்றி பணத்தையெல்லாம் ஏமாற்றி மூங்கில் கைத்தடிக்குள் தங்கமாக்கி மறைத்து வைத்துக் கொண்டான். ஊர் மக்கள் அண்ணனை கோயிலில் வந்து சத்தியம் செய்யச் சொன்னார்கள். மாரியம்மனின் முன்பு நான் ஏமாற்றவில்லை என்று சத்தியம் செய்தான். கோயிலை விட்டு வெளியே ஊர் எல்லையில் நடந்து கொண்டிருந்தபோது, ‘‘நான் பொய் சொல்லியும் உங்க மாரியாத்தா என்னை ஒன்னும் செய்யலையே. இதுதானா உங்க ஆத்தா சக்தி’’ என்று அருகே இருப்பவரிடம் சொல்லி முடிக்கும் முன்பே காலை பெரிய நாகமொன்று தீண்டியது. சடேரென்று விழுந்தவன் கையிலிருந்த மூங்கில் குழல் பாறை மீது பட்டு தெறித்து தங்கக் கம்பிகள் சிதறின. ஊர் பெரியவர்கள் அதிர்ந்தார்கள். அந்த திருவாமாத்தூர் மாரியம்மனே பாம்புருவில் வந்திருக்கிறாள் என்று ஆச்சரியமானார்கள். அதற்கு சாட்சியாக இன்றும் அம்மன் கோயிலில் பாம்பின் வால் பகுதியும், மூன்றாவது மைலில் தலையும் கல்லிலேயே தெரிகிறது. நியாயமான தீர்ப்புகளை இவள் வழங்குவதால் எப்போதும் மக்கள் தங்கள் குறைகளை கூறிய வண்ணம் உள்ளனர். விழுப்புரத்திலிருந்து 15 வது கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

பருத்தியூர் சந்தன மாரியம்மன்

பச்சை வயல்களின் நடுவே அருள் பூக்கும் திருமுகத்தோடு சந்தன மாரியம்மன் வீற்றிருக்கிறாள். காவல் தெய்வமான இவள் நிகழ்த்தும் லீலைகள் அனேகம். பாவாடை என்பவன் ஏழை விவசாயி. செல்வந்தர் ஒருவரிடம் கடன் பெற்றான். கடனை மீண்டும் செலுத்தியும் பத்திரத்தை கொடுக்க மறுத்தார், செல்வந்தர். ஆங்கிலேயே நீதிபதி முன்பு வழக்கு வந்தது. பாவாடையோ ‘‘ஐயா... எங்க ஊரு சந்தன மாரியம்மனே சாட்சி’’ என்றான். அன்றிரவே ஆச்சரியமாக நீதிபதியின் கனவில் மாரியம்மன் சிறுமியின் வடிவில் தோன்றினாள். சிலரின் பெயர்களை குறிப்பிட்டு இவர்களை அழைத்து விசாரித்து நீதி வழங்கு என்று சொல்லி மறைந்தாள். கனவு கலைந்தது. காலையில் அவள் சொன்ன பெயர்களை வைத்து விசாரிக்க உண்மை வெளிப்பட்டது. பாவாடை நிரபராதி என்று தீர்ப்பு சொன்னார். செல்வந்தருக்கு சம்மன் அனுப்பினார். இன்றுவரை இதுபோன்ற விஷயங்கள் நிறைய நடக்கின்றன. சந்தனமாரி தவறு செய்தவர்களை தண்டிக்கிறாள். மக்களை நல்வழியில் நடக்க வைக்கிறாள். திருவாரூர் மாவட்டத்தில் குடவாசலுக்குக் கிழக்கே 5 கி.மீ. தொலைவில் குடமுருட்டி ஆற்றின் வடகரையில் இக்கோயில் அமைந்துள்ளது.


தஞ்சை கருந்தட்டான்குடி - கோடியம்மன்

தஞ்சையின் காவல் தெய்வங்களில் முக்கியமானது. இக்கோயிலின் கருவறையில் கோடியம்மன் வலது கால் பீடத்தின் மேல் தூக்கி மடக்கிய நிலையிலும், இடது கால் தஞ்சாசுரனை மிதித்த நிலையிலும் காணப்படுகிறது. கருவறைக்கு வெளியே பச்சைக்காளி, பவளக்காளி என்று இருதிருமேனிகள் காணப்படுகின்றன. விஜயாலயச் சோழன் நிறுவிய கோயில்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள். ஆதியில் சோழ தேசத்தில் வளம் குன்றியதால் மக்கள் துயருற்றனர். இதற்குக் காரணமே சந்துருகோபன் எனும் ஒழுக்கம் குறைந்த அந்தணனே என்று முனிவர் கூறினார். இந்த காளியே அவனை கொன்று தர்மத்தை நிலைபெறச் செய்தாள் என்று தலவரலாறு கூறுகிறது. மிகப் பழமையான இந்த தெய்வம் தஞ்சையின் கருந்தட்டான்குடி எல்லையில் அமைந்துள்ளது.


தொட்டியம்மதுரைகாளியம்மன்


சின்னான் என்பான் மதுரை காளிதேவியின் வாசலில் வைக்கப்பட்டிருந்த பறையினை அடிக்கத் தொடங்கினான். காளியின் நினைவில் உருகினான். பறையடியின் வேகம் கூடியது. பறை இசையில் மயங்கிய மதுரை காளி, அவனுடன் தொட்டியத்திற்கு வர சித்தம் கொண்டாள். உடனே ஈ வடிவெடுத்து சின்னானுடன் தொட்டியத்தை வந்தடைந்தாள். சின்னான் மாடுகள் மேய்க்கும் பொழுது அடிக்கும் பறை இசையை தினமும் ஆனந்தித்துக் கேட்டாள். ஒருநாள் அப்பகுதியை ஆண்ட குறுநில மன்னரின் சகோதரன் குதிரையில் வேகமாக வந்தபோது குதிரையின் குளம்படி பட்டு புதரிலிருந்த புற்று சிதைந்தது. கோபமுற்ற அன்னை காளி உற்று நோக்கினாள். மன்னனின் சகோதரன் அந்த கணமே மதி இழந்தான். செய்வதறியாது திகைத்த மன்னரின் கனவில் தோன்றிய மதுரை காளி மதுரையில் இருந்து இசைக்கு மயங்கி வந்து தொட்டியத்தில் தான் சங்கமித்துள்ளதை சொன்னாள். அதிர்ந்துபோன அரசன் காளிக்கு திருக்கோயில் எழுப்பி உற்சவம் நடத்தினான். சகோதரனின் சித்தமும் தெளிந்தது. பறையடிக்கும் தொழிலை மேற்கொண்டு வந்த சின்னானுக்கும், செல்லானுக்கும் கோயிலினுள் சிலை அமைத்தான். எதிரிகளால் ஏற்படும் துயரம் நீங்க தொட்டியம் மதுரை காளியம்மனை வடைமாலை சாத்தி வழிபடலாம். திருச்சியிலிருந்து முசிறி வழியாக நாமக்கல் செல்லும் சாலையில் தொட்டியம் அமைந்துள்ளது.

கோவை தண்டு மாரியம்மன்

ஒருசமயம் திப்பு சுல்தானின் படை வீரர்கள் கோவை கோட்டை மதிலுக்குள் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். அப்படை வீரர்களில் ஒருவனின் கனவில் அன்னை காட்சி அளித்தாள். நீர்ச்சுனையும், வேப்ப மரங்களும், செடி கொடிகளும் நிறைந்திருந்த ஒரு வனப் பகுதியின் நடுவே காட்சியளித்த அன்னையின் உருவம் வீரனின் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. பொழுது விடிந்ததும், கனவில் வந்த அம்மனை தேடி அலைந்தான். அவர்களின் அலைச்சல் வீண் போகவில்லை. ஒரு வேப்ப மரத்தின் அடியில் அன்னையைக் கண்டான். உவகை மிகுதியால் ஆனந்தக் கூத்தாடினான். அங்கேயே ஒரு மேடை அமைத்து அன்னையை எழுந்தருளச் செய்தான். தான் கூடாரத்தில் உறங்கியபோது கனவில் தோன்றிய அன்னை என்பதால் தண்டு மாரியம்மன் என்றழைத்தான். ‘தண்டு’ என்றால் படைவீரர்கள் தங்கும் கூடாரம் என்று பொருள். அங்கேயே ஆலயமும் அமைந்தது. கருவறையில் அன்னை தண்டு மாரியம்மன் வடக்கு திசை நோக்கி அமர்ந்த நிலையில் புன்னகை தவழும் இன்முகத்துடன் அருட்பாலிக்கிறாள். மேல் இரண்டு கரங்களில் கதையையும் கத்தியையும் தாங்கி, கீழ் கரங்களில் சங்குடனும், அபய முத்திரையுடன் திகழ்கிறாள். இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்ட நிலையில் காட்சி தருகிறாள். கோவை காந்திபுரம் பஸ் நிலையத்திலிருந்து அவினாசி சாலையில் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.

- ஆர்.ஜெ.அபிநயா

Tags :
× RELATED கார்த்திகை தீபமும் விளக்கேற்றும் சரியான முறையும்