வேள்வியிலும் பெரிது கேள்வி ஞானம்!

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது 23

ஞானம் என்பது பல வகைப்படும். கல்வி ஞானம், கலை ஞானம் அனுபவ ஞானம் போன்றவற்றின் வரிசையில் கேள்வி ஞானம் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. மற்றவகை ஞானங்கள் எல்லாம் மண்ணில் பிறந்த பிறகு வளரக்கூடியவை ஆனால் கேள்வி ஞானம் என்பது கருவில் இருக்கும் போதே தொடங்கக்கூடிய ஞானம்.தாயின் கருவில் இருக்கும் போது நாராயண மகிமையை கேட்டதால் பிரகலாதன் பிறக்கின்ற போதே பக்த பிரகலாதன் ஆக பிறந்தான் என்பதை நம்முடைய புராணங்கள் சொல்கின்றன. இத்தகைய முயற்சிகள் இன்றும் திகழ்வதோடு அவற்றால் பலனும் விளைகின்றன. இதைக் கேள்விப் படும்போது, கருவுற்ற நிலையில் தினமும் தொலைக்காட்சி தொடர்களை பார்க்கும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் என்ன விதமான தன்மைகளுடன் தோன்றும் என்பதை எண்ணும்போதே கதி கலங்குகிறது.

வாய்மொழியாக குருவால் சொல்லப்பட்டு சீடனால் சிரத்தையோடு கேட்கப்பட்டு தலைமுறைகளைத் தாண்டி வந்தவை தான் வேதங்கள் என்று காண்கிறோம். அதற்காக வேதங்களை ஒலிப்பதிவுக் கருவியில் ஒலிக்கவிட்டு அதை செவிமடுத்து ஒருவர் வேத விற்பன்னர் ஆகிவிட முடியுமா என்றால் இல்லை.எந்த வித்தையும் குருமுகமாக கற்கும்போதுதான் பலிதமாகும். ஏனென்றால் நீண்டகால தவ பலனும் மந்திர பலனும் கொண்ட குரு மந்திரங்களை உச்சரிக்கும் போது அவருடைய சங்கல்பமும் அருளும் கலந்து சீடனின் செவியில் நுழைந்து அவன் மனதில் அந்த வேதங்கள் நிலை கொள்கின்றன.இதுபோன்ற சூட்சுமமான உபதேசங்களுக்கு மட்டுமின்றி புறவயமான வாழ்வில் எந்த ஒன்றை கற்றுக் கொள்வதற்கும் கேள்வி ஞானம் மிகச்சிறந்த வழியாகும்.

“கற்றிலன் ஆயினும் கேட்” க என்கிறார் திருவள்ளுவர்.வெளிநாடுகளில் ஓட்டுனர் போன்ற பணிகளுக்கு போகிறவர்கள் அதிகம் கல்வி கற்காதவர்களாக இருப்பார்கள். ஆனால் மற்றவர்கள் பேசுவதை கேட்டு கேட்டு அந்த நாட்டினுடைய மொழி அவர்களுக்கு எளிதில் கை வந்து விடும். இது கேள்வி ஞானத்தின் பலம் ஆகும்.இசைத்துறையில் ஒரு குழந்தை ஈடுபட விரும்பினால் குருமுகமாக இசை கேட்பது போலவே பலரின் கச்சேரிகளையும் இடைவிடாமல் கேட்கிறபோது அதன் விளைவாக கூடுதல் ஞானத்தைப் பெறமுடியும்.சொற்பொழிவுக் கலையில் கேள்வி ஞானத்தின் வழி வளரலாம் என்பதை நான் என் சொந்த அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

கேள்வி ஞானத்தைப் பொறுத்தவரை கற்றுக்கொள்ள முற்படுபவர்களின் கட்டுக்கடங்காத ஆர்வமும் அர்ப்பணிப்பும் மிக மிக முக்கியம். முறைசாராக் கல்வி  என்பதன் முறையான தொடக்கம் கூட கேள்வி ஞானம் என்று கூறலாம்.ஒருவகையில் ஏகலைவன் கற்றுக்கொண்ட வில்வித்தை கூட கேள்வி ஞானம் என்னும் இவ்வகையில் அடங்கும். சீடனிடம் கட்டுக்கடங்காத ஆர்வம் இருக்குமேயானால் குரு கற்றுக்கொடுக்க மறுத்தாலும் கூட அவரிடம் இருக்கும் வித்தையை சீடனால் கற்றுக்கொள்ள முடியும் என்பதற்கான பெருமை மிக்க உதாரணம்தான் ஏகலைவன் வாழ்க்கை.தான் கற்றுக்கொள்ள விரும்புவதை எங்கெங்கோ தேடி உள்வாங்கிக் கொள்கிற இயல்பு என்பது கூர்மையான மாணவருக்கு இருக்கவேண்டிய இன்றியமையாத  இயல்பாகும்.

உபநிஷதங்கள் என்பவை குருவுக்கும் சீடனுக்குமான உரையாடலில் மலர்ந்த உன்னதங்கள்.ஒருவன் அறிவாளி என்பதை உணர்த்துவதற்கு அவன் கல்வி கேள்விகளில் சிறந்தவன் என்று சொல்வதை நாம் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். நல்ல கேள்வியறிவு உள்ளவர்களுக்குத்தான் பணிவான சொற்களை பேசுகிற பக்குவம் வாய்க்கும் என்பது திருக்குறள் தரும் தீர்ப்பு.

“நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய

வாயினர் ஆதல் அரிது.”

இந்த இலக்கணத்துக்கான இலக்கியமாக ராமாயணத்தில் காணப்படுகிற அறிவார்ந்த பாத்திரம்தான் அனுமன். அதனால் தான் ராமன் அனுமனை நோக்கி கேள்வி நூல் மறைவல்லாய் என்று  அழைக்கிறான். காரணம்  என்னவென்றால் கேள்வி வழியாக கற்கக்கூடிய மறைகளை ஓதிய மாணவன் வடிவத்தில்தான் அனுமன் முதன் முதலாக ராம லட்சுமணன் முன்பு தோன்றுகின்றான். தோன்றிய தோற்றம் வேடமாக இருந்தாலும் தன்மையில் அனுமன் அப்படிப்பட்டவன் தான் என்பதை ராமன் பின்னர் அறிந்து கொள்கிறான்.இதனால்தான் திருஞானசம்பந்தர் நிறைந்த அறிவு கொண்டவர்களின் அடையாளங்களில் ஒன்றாக கேள்வி ஞானத்தை குறிப்பிடுகிறார்.

கேள்வியர் நாடொறு மோதுநல் வேதத்தர் கேடிலா

வேள்விசெ யந்தணர் வேதியர் வீழி மிழலையார்

வாழியர் தோற்றமுங் கேடும்வைப் பாருயிர் கட்கெலாம்

ஆழியர் தம்மடி போற்றியென் பார்கட் கணியரே.

என்னும் திருவீழிமிழலை தேவாரத்தில் நாள்தோறும் வேதம் ஓத கூடியவர்கள் முறையாக வேள்வி செய்யக்கூடியவர்கள் ஆகிய அந்தணர்களைப் பற்றி சொல்லும்போது அவர்களின் முதல் தகுதியாக கேள்வி ஞானத்தை குறிக்கும் விதமாய் அவர்களை கேள்வியர் என்று அழைக்கிறார்.அதற்காக கேள்வி ஞானம் என்பது கற்றறிந்த பண்டிதர்கள் சொல்பவற்றை கேட்பது என்று மட்டும் பொருள் அல்ல. எளிய மனிதர்களின் அனுபவ அறிவைக் கூட கற்றறிந்த பலரும் கேள்வி ஞானத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.இந்த  அறிவைத்தான் திருவள்ளுவர் உண்மை அறிவு என்கிறார்.

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும் தன்

உண்மை அறிவே மிகும்.

இது  பட்டறிவால் வருவது. புத்தகங்களை பயில்வதன் மூலம் நாம் கற்றுக் கொள்வதைக் கூட வெறும் தகவல் என்றுதான் சொல்ல முடியும். அப்படி  நாம் சேமிக்கும் தகவல்களையும் தரவுகளையும் நமக்குள் இருக்கும் இயல்பான அறிவு உள்வாங்கி அதனை அறிதலாக மாற்றுகிறது.இப்படி தகவல்களை அறிதல்கள் ஆக மாற்றுவது நூல்களைப் படிப்பதன் மூலமும் நிகழும். ஒவ்வொரு மனிதனும் உலவும் புத்தகம்.

ராமனின் தம்பியர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்.  அவர்களில் ராமனை விட பெருமை வாய்ந்தவன் என்று சிறப்பிக்கப்படும் பரதன் ஒரு வித்தியாசமான  பாத்திரம்.பரதனை வசிஷ்டர் மூன்று ராமன்களுக்கு இணையானவன் என்று பாராட்டுகிறார்.  குகன் பரதனை ஆயிரம் ராமர்களுக்கு நிகரானவன் என்கிறான். ராமனின் அன்னை கோசலையும்,

எண்ணில் கோடி ராமர்கள் ஆயினும்

அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ

- என்கிறாள்.

இந்த பெருமை எல்லாம் பரதன், தன் களங்கமற்ற அன்பை நிரூபித்த பின்னர்தான் அவனை வந்து சேர்கிறது. ஆனால் அடிப்படையிலேயே அவன் பதவியாசை அற்றவன்  என்பதையும் ராமன் மீது எல்லையில்லாத பக்தி உற்றவன் என்பதையும்  சத்துருக்கனனை தவிர யாரும் அறிந்திருக்கவில்லை .பரதன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்வான் என்றுதான் கைகேயி நினைத்தாள். அந்த சதிக்கு பரதனும் உடந்தை என்பதுதான் தசரதன் கோசலை லட்சுமணன் உள்ளிட்ட எல்லோருக்கும் இருந்த எண்ணம்.ராமனை அழைத்து வரும் விருப்பத்தோடு படைகள் துணை வர பரதன் கானகம் நோக்கி போகிறபோது அவன் பெருமையை எல்லோரும் உணர்ந்தார். கானகத்திலும் இரண்டு பேர் தவறாக நினைத்தார்கள். ஒருவன் லட்சுமணன். இன்னொருவன் குகன்.பரதனின் அன்பு  நெஞ்சை ராமன் அறிந்திருந்தான். இதில் எந்த வியப்பும் இல்லை.

ஆனால் பரதனை முன்பின் பார்த்திராதவர்கள் குகன் படையில் இருந்த ஆயிரக்கணக்கான வீரர்கள். பரதனை குகன் சந்தேகப்படுகிறபோது  படிப்பறிவு இல்லாத அந்த வேடர்கள் தங்கள் தலைவனாகிய குகனிடம்” அவர்களைப் பார்த்தால் போர் தொடுக்க அவர்களைப் போல் தெரியவில்லையே” என்று பேசுகிறார்கள். கள்ளமில்லாத அந்த வேடர்களால் பரதனின் பேரன்பை புரிந்து கொள்ள முடிந்தது என்றால் புத்தகங்களைப் படிப்பது போல அவர்கள் மனிதர்களை படித்ததுதான் அதற்கான காரணம் என்பது நமக்குப் புரிகிறது. உண்மையில் கல்வி என்பது ஒரு கருவி. அறிவு என்பது கல்வியை பயன்படுத்தும் மென்பொருள். ஞானம் என்பது இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்ட தன்மை. அன்னை சாரதாதேவியின் தென்னக யாத்திரை குறித்த புத்தகம் ஒன்றை ஸ்ரீ  ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த சுவாமி பிரபானந்தர் தொகுத்திருக்கிறார்.

அதில் அவர் குறிப்பிடும் ஒரு செய்தி மிகவும் சுவாரசியமானது. தமிழகத்தில் இருக்கும் பக்தர்கள் அன்னையை தரிசிக்கும்போது அவர்கள் சொல்வதை புரிந்து கொள்ள அவருக்கு மொழிபெயர்ப்பாளரின் உதவி தேவைப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த பக்தர்களுக்கு தீட்சை தரும் போதும், அவர்களுக்கு தியானம் செய்யும் முறையை விளக்கும் போதும் அன்னை சாரதா தேவிக்கு எந்த உதவியும் தேவைப்படவில்லை. அவரால் நேரடியாக மிக சுலபமாக பக்தர்களுக்கு தீட்சை தர முடிந்தது என்னும் செய்தி இந்த நூலில் பதிவாகியிருக்கிறது.ஒருவர் சொல்லக் கேட்கும்போது சொல்பவர்கள் அறிவு மட்டுமின்றி அவர்களின் ஞானம் அவர்களின் தவ ஆற்றல் ஆகியவையும் ஒன்றிணைந்து கேட்பவர்களை வந்தடைகிறது.

கல்விச் செல்வத்தை விட மேம்பட்டதாக கேள்வி ஞானத்தை திருவள்ளுவர் பரிந்துரைப்பது இதனால் தான் செல்வத்துள் செல்வாம் செவிச்செல்வம் என்கிறார்.ஒவ்வொரு மனிதனும் தனக்குள் இருக்கும் நுண்ணறிவை பெருக்கிக் கொள்வதற்கு முதலில் முயல வேண்டும். தியானம் யோகம் போன்றவை அதற்கு பெரிதும் துணை நிற்கும்.அதன் பின்னர் எங்கே எதை கேட்டாலும் அதை மனதில் இருத்தி அந்த தகவலை அறிவால் சுத்திகரித்து ஞானமாக மாற்றிக் கொள்கிற போது அது பயன்படும் கல்வியாய் சித்திக்கும்.கண்டதை கற்றவன் பண்டிதன் ஆவான் என்பது நம் நாட்டில் உள்ள பொன்மொழி. கேட்க வேண்டியவற்றை கேட்பவனும் பண்டிதனாக பரிமளிப்பான் என்பது நிச்சயம்.

(தொடரும்)

மரபின் மைந்தன் முத்தையா

Related Stories: