என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பியவரையே புறக்கணிக்கிறார்

கிறிஸ்துவம் காட்டும் பாதை

‘‘இயேசு எழுபத்திரண்டு பேரை நியமித்து அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும், இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார். அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது;  ‘‘அறுவடை மிகுதி, வேலையாட்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்’’. புறப்பட்டுப் போங்கள், ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப்பையோ, வேறு பையோ, மிதியடிகளோ எதுவும் எடுத்துச் செல்ல வேண்டாம். வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.

நீங்கள் எந்த வீட்டிற்குள் சென்றாலும், ‘‘இந்த வீட்டிற்கு அமைதி உண்டாகுக’’ என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால் நீங்கள் வாழ்த்திக்கூறிய அமைதி அவரிடம் தங்கும். இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கி இருங்கள். ஏனெனில், வேலையாள் தம் கூலிக்கு உரிமை உடையவரே. வீடு வீடாய்ச் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல்நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதன் வீதிகளில் சென்று, எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த்தூசியையும் உங்களுக்கு எதிராக உதறி விடுகிறோம். ஆயினும், இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்துகொள்ளுங்கள் எனச்சொல்லுங்கள்.

‘‘உங்களுக்குச் செவி சாய்ப்பவர் எனக்குச் செவி சாய்க்கிறார். உங்களைப் புறக்கணிப்பவர் என்னைப் புறக்கணிக்கிறார். என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பியவரையே புறக்கணிக்கிறார்.’’ பின்னர் எழுபத்திரண்டு பேரும் திரும்பி வந்து, ‘‘ஆண்டவரே! உமது பெயரைச் சொன்னால், பேய்கள் கூட எமக்கு அடிபணிகின்றன’’ என்றனர். அதற்கு அவர், வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப்போல விழக்கண்டேன். பாம்புகளையும், தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கின்றேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது. ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பதுபற்றி மகிழ வேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பதுபற்றியே மகிழுங்கள் என்றார்’’ - (லூக்கா 10: 1-11, 16-20)நம்மிடம் ஏதுமில்லை என்று நினைப்பது ஞானம். நம்மைத்தவிர ஏதுமில்லை என நினைப்பது ஆணவம். ஞானம் பணிந்து பணிந்து வெற்றி மேல் வெற்றி பெறுகின்றது. ஆணவம் நிமிர்ந்து நின்று அடிவாங்குகிறது.

‘நான்’ என்னும் எண்ணம் ஒருவனுக்குத் தோன்றுகிறதென்றால் அவன் தோல்விகளைச் சந்திக்கத்தயாராகிக்கொண்டிருக்கிறான் என்று பொருள். அறிவு குறைவானவர்களுக்கே ஆணவம் வருகிறது. நிறை குடங்களுக்கு அலை வருவதில்லை. வெற்றி மயக்கம் ஏற ஏற அறிவு தடுமாறி முட்டாள்தனமான தைரியம் தோன்றி ‘எல்லாம் நாமே’ என்ற எண்ணம் பிறந்து, தடுமாறிக் காரியம் செய்யத் தொடங்கியதும் ஒவ்வொரு தோல்வியாகத் தொடர்ந்து வந்து ஆணவக்காரனைக் கூனிக்குறுகச் செய்கின்றன. மனிதன் உடம்பு மிகவும் பலவீனமானது. அதில் ஒரு நரம்பைத் தட்டினால் பல நரம்புகளிலும் சங்கீதம் கேட்கிறது. ஒரு வெற்றி கண்ணுக்குத் தெரிந்துவிட்டால் வரப்போவதெல்லாம் வெற்றியே என்ற எண்ணம் வருகிறது. அந்தத்திமிர் யாரையும்

அலட்சியப்படுத்தச் சொல்கிறது.

- ‘‘மணவைப்பிரியன்’’

ஜெயதாஸ் பெர்னாண்டோ

Related Stories: