திருமணத் தடை நீக்கும் மானாமதுரை சோமேஸ்வரர்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள சோமேஸ்வரர் கோயில் மிகவும் பழமையானது. இங்கு மூலவராக சோமேஸ்வரர் என்று அழைக்கப்படும் சிவபெருமான் வீற்றிருக்கிறார். மூலவர் வெள்ளை சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆனந்தவல்லி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. விநாயகர், நாக சுப்பிரமணியர் உள்ளிட்ட சிலைகள் உள்ளன. சந்திர பகவான் தனது மனைவிகள் ரோஹிணி, கார்த்திகை ஆகியோருடன் தனி சன்னதியில் காட்சியளிக்கிறார். தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது. சந்திரபுஷ்கரணி தீர்த்தம் உள்ளது. கோயிலின் ராஜகோபுரத்தில் இத்தலத்தில் நடந்த அற்புதங்களை விளக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

தல வரலாறு
Advertising
Advertising

ஒரு முறை சந்திரன், தனது 27 நட்சத்திர மனைவிகளில் ஒருவரான ‌ரோகிணியின் மீது மட்டும் கூடுதல் அன்பு செலுத்தினார். மற்ற மனைவிகளை அலட்சியப்படுத்தியதால், அவர்கள் மிகுந்த துன்பமடைந்தனர். இது குறித்து தங்களது தந்தையான தட்சனிடம் அவர்கள் முறையிட்டனர். இதனால் கோபமடைந்த தட்சன், தனது தவ வலிமையால் சந்திரனுக்கு தொழுநோய் உண்டாகும்படி சாபம் அளித்தார். இதன் காரணமாக தொழுநோயால் பாதிக்கப்பட்ட சந்திரன், நாளடைவில் பொலிழிவிழந்து சிறிது, சிறிதாக ‌தேய்ந்து வந்தார். இதனால் அச்சமடைந்த அவர், தனது சாபத்திலிருந்து விடுபட அகத்தியரிடம் வழி கேட்டார்.‘‘வைகை  நதிக் கரையில் உள்ள வில்வ வனத்தில் காட்சி தரும் லிங்கத்திற்கு கோயில் எழுப்பி பூஜித்தால் உனது நோய் நீங்கும்’’ என்று சந்திரனிடம் அகத்தியர் தெரிவித்தார். அகத்தியர் கூறியபடி இப்பகுதியில் லிங்கம் அமைந்திருப்பதை கண்ட சந்திரன் தீர்த்தம் ஒன்றை உருவாக்கி அதில் நீராடினார். பின்னர் வைகையில் நீராடி சிவபெருமான‌ை வில்வ இலைகளால் பூஜை செய்து வழிபட்டார்.

இதனால் மகிழ்ந்த சிவபெருமான், சந்திரனின் நோயை போக்கினார். மேலும், சந்திரனின் வேண்டுகோளை ஏற்று அந்த தலத்தில் ஆனந்தவல்லி சமேத சோமேஸ்வராக காட்சி அளிக்கிறார். பிற்காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தால் இந்த ‌கோயில் அழிந்தது. கனவில் சோமேஸ்வரர் கூறியபடி ஸ்தூல கர்ண மகாராஜா மீண்டும் இந்த கோயிலை புதுப்பித்து கட்டினார் என்பது புராணம்.சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் இக்கோயிலில் தலா 10 நாட்களுக்கு திருவிழா நடக்கிறது. ஆருத்ரா தரிசனம், அன்னாபிஷேகம், பிரதோஷம் ஆகியவை விசேஷ தினங்கள். இத்தலத்தில் உள்ள சந்திரபுஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி மூலவரை மனம் உருகி வேண்டினால் ‌தொழுநோய் குணமாகும். ஆடித் தபசு தினத்தில் மூலவருக்கு அணிவித்த மாலையை அணிந்து ‌கொண்டால் திருமணத் தடை நீங்கும். புத்திரபாக்கியம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்கின்றனர். கோயில் நடை தினமும் காலை 6 முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கிறது.

Related Stories: