பகோடா மலையில் அருள்பாலித்து சங்கடங்கள் தீர்க்கும் ஓசூர் சந்திரசூடேஸ்வரர்

தமிழக-கர்நாடக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூரில் இருக்கிறது பிரசித்தி பெற்ற ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோயில். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3120 அடி உயரத்தில் உள்ள பகோடா மலையின் மேல் இக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒரே நேர்க்கோட்டில் கிழக்கு, மேற்காக திருவேங்கட மலை, ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலை, பிரம்மா மலை என்று சரித்திர புகழ் வாய்ந்த மலைகள் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. புராணங்கள் போற்றும் இந்த கோயிலில் மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வரராக சிவன் அருள்பாலிக்கிறார்.

Advertising
Advertising

இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். மூன்று மாநில மக்களுக்கும் குலதெய்வமாகவும் சந்திரசூடேஸ்வரர் இருக்கிறார். ‘‘சிவபெருமான் ஒருநாள், பார்வதியை சோதிக்க எண்ணி திடீரென்று பார்வதிக்கு தெரியாமல் ஒரு மரப்பல்லியாக உருவம் எடுத்துக்கொண்டு காட்டில் ஓடி மறைந்தார். சிவபெருமானை காணாது துக்கமடைந்த பார்வதி பசி, தூக்கமில்லாமல் அவரை தேடிக்கொண்டு அலைந்தாள். அவ்வாறு தேடிக்கொண்டு வரும்போது, அங்கிருந்த செண்பக காட்டில் பல வர்ணங்களுடன் அழகாக பிரகாசித்து கொண்டிருந்த ஒரு மரப்பல்லியை பார்த்து, அதை பிடிப்பதற்காக ஆவலுடன் அதன் வாலை பற்றிக் கொண்டாள்.

ஆனால் அந்த பல்லியோ அவள் கையிலிருந்து நழுவி ஓடிவிட்டது. அந்த பல்லியை பற்றிய மாத்திரத்திலேயே பார்வதியின் உடல் முழுவதும் பச்சையாக மாறியது. உடனே அருகில் இருந்த ஒரு குளத்தில் பார்வதி குளித்துவிட்டு தனது பழைய உடலை அடைந்தாள். எனவே, பார்வதிக்கு மரகதவள்ளி என்ற பெயரும், அந்த குளத்திற்கு மரகத சரோவணம் என்ற பெயரும் ஏற்பட்டது. சிவன் பல்லியாக உருவெடுத்து ஒளிந்து, மறைந்து விளையாடிய மலையில், மைசூரை ஆண்ட மன்னர் கிருஷ்ணகாந்தர்வராயர் கோயில் கட்டி, அதில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். அப்படி உருவானது தான் சந்திரசூடேஸ்வரர் கோயில்’’ என்பது தலவரலாறு. இதேபோல் செவிடை நாயனார் என்ற தமிழ் பெயரே சந்திரசூடேஸ்வரர் என்று மருவியது.

சந்திரசூடேஸ்வரர், செவிடை நாயனார் என்ற பெயரில் இருந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. ராஜேந்திர சோழன் மற்றும் முதலாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டும், ஒய்சாள அரசர்களான வீரவிஸ்வநாதன், வீரநரசிம்மன், வீரராமநாதன் போன்ற அரசர்கள் கோயிலுக்கு வழங்கிய நிலதானங்கள் பற்றியும், கொடைகள், பூஜைக்கு வேண்டிய பொருட்கள் குறித்தும் இந்த கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கங்கர்கள், நுளபர்கள், சோழர்கள், ஒய்சாளர்கள், விஜயநகர பேரரசர்களின் காலத்தில், இக்கோயில் வளர்ச்சி பெற்றுள்ளது. கி.பி. 10ம் நூற்றாண்டில் செவிடபாடி என்றும், 13ம் நூற்றாண்டில் முரசு நாடு என்றும் அழைக்கப்பட்ட ஊரே, 16ம் நூற்றாண்டில் ஓசூர் என மாறியுள்ளது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். பங்குனி பவுர்ணமி நாளில் நடக்கும் பவனி உலாவும் பிரசித்தி பெற்றது. இதில் 3 மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். பாவங்கள் போக்குவதில் காசிவிஸ்வநாதரின் மறுபிம்பமாக திகழ்பவர் சந்திரசூடேஸ்வரர். சங்கடங்கள் தீர்த்து சந்ததிகள் வளர துணை நிற்பதால், மாநிலங்கள் கடந்தும் குலதெய்வமாக அவரை வழிபடுகிறோம் என்கின்றனர் ஆண்டாண்டு காலமாய் வழிபடும் பக்தர்கள்.

Related Stories: