நெல்லையில் சுதர்சனருக்கு தனி ஆலயம் : கல்வி வளம்.குழந்தை வரம் அருளும் சுதர்சனப் பெருமாள் வழிபாடு

மும்மூர்த்திகளில் காத்தல் தொழிலை செய்து வரும், விஷ்ணு பகவானின் கையில் வைத்திருக்கும் ஐந்து வகையான ஆயுதங்கள் இருப்பதைக் காணலாம். சங்கு, சக்கரம், வாள், வில் மற்றும் கதாயுதம் என்கிற ஐந்து ஆயுதங்களில், ‘சக்கராயுதம்’ முதன்மையான இடத்தைப் பெறுகிறது. இந்தச் சக்கராயுதத்தை விஷ்ணு தனக்கு நிகரான சக்தியுடையதாக உருவாக்கினார்.

Advertising
Advertising

சக்கராயுதத்தில் இருக்கும் இறைவனை பக்தர்கள் அனைவரும், ‘சுதர்சனர்’ என்று போற்றிப் புகழ்கின்றனர். அவருக்கு பொதுவாக ‘சக்கரத்தாழ்வார்’ என்ற பெயரே நிலைபெற்று விளங்குகிறது. சக்கரத்தாழ்வாரைச் சக்கரராயர், திருவாழி ஆழ்வான், சக்கரராஜன், ஹேதிராஜன், யந்திரமூர்த்தி, மந்திரமூர்த்தி என்கிற வேறு சில பெயர் களாலும் அழைப்பதுண்டு.

சுதர்சனர் வழிபாடு :

பொதுவாக சுதர்சன பெருமாளை வழிபட்டு, வலது புறமாகச் சென்று அவருக்கு பின்புறமுள்ள யோக நரசிம்மரை வணங்க வேண்டும். அவ்வாறு செய்வதால், மனதில் உள்ள அச்சங்கள் அகன்று, மனத் துணிவும், தன்னம்பிக்கையும் ஏற்படும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதனால் விஷ்ணு பக்தர்களிடம், சுதர்சன வழிபாடு மிகச் சிறப்பானதாக கருதப்படுகிறது.

இதனை அடிப்படையாகக் கொண்டுதான் விஷ்ணு கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கு தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அப்படி தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சக்கரத்தாழ்வார், எட்டு கரங்களைக் கொண்டிருந்தால் ‘சுதர்சனர்’ என்றும், பதினாறு கரங்களைக் கொண்டிருந்தால் ‘சுதர்சன மூர்த்தி’ என்றும், முப்பத்திரண்டு கரங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தால் ‘மகா சுதர்சனர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

சுதர்சனருக்கு தனி ஆலயம் :

திருநெல்வேலி மாவட்டத்தில் கரிசூழ்ந்தமங்கலம் என்னும் ஊரில், தாமிரபரணி ஆற்றின் கரையில் சுதர்சன மூர்த்திக்குத் தனிக்கோவில் ஒன்று அமைந்துள்ளது. சுதர்சன பெருமாளுக்காக அமைந்துள்ள ஒரு சில கோவில்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது. சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக திகழ்கிறது இந்த ஆலயம். இங்கு மூலவராக சுதர்சனப் பெருமாள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவருக்கு 16 திருக்கரங்கள் உள்ளது. அந்த கரங்களில் சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம், அக்னி, கத்தி, வேல், சங்கம், வில், பாசம், கலப்பை, வஜ்ரம், கதை, உலக்கை, சூலம் என பதினாறு வகையான ஆயுதங்களைக் கொண்டிருக்கிறார். எனவே இவர் ‘சுதர்சன மூர்த்தி’ என்றும் அழைக்கப்படுகிறார்.

உற்சவர் வெங்கடாசலபதி:

இந்த ஆலயத்தின் மூலவராகச் சுதர்சன மூர்த்தியும், உற்சவராக வெங்கடாசலபதியும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். சுதர்சன மூர்த்தியே மூலவராக இருந்தாலும், கோவில் என்னவோ, உற்சவர் வெங்கடாசலபதி பெயரிலேயே அழைக்கப்படுகிறது. ஆலயத்தின் கருவறை முன்பாக இருக்கும் மண்டபத்தில் உற்சவரான வெங்கடாசலபதி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோர் வீற்றிருக் கிறார். செப்புத் திருமேனி உருவங்களாக இருக்கும் இந்த உற்சவமூர்த்திகளை அழகிய ஆபரணங்களால் அலங்கரித்து வைத்திருக்கிறார்கள். இங்கு மூலவருக்குச் செய்யப்படும் வழிபாடுகளைப் போலவே, உற்சவருக் கும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுவது சிறப்பம்சமாகும்.

இத்தல இறைவனான சுதர்சன மூர்த்தியை வழிபடுவதால், பல்வேறு பலன்களை பக்தர்கள் அடையலாம். குறிப்பாக மனிதனுக்கு வரும் பல்வேறு பாதிப்புகளுக்கும் முதன்மைக் காரணமாக இருக்கும் கடன் (ருணம்), நோய் (ரோகம்), எதிரி (சத்ரு) எனும் மூன்றையும் அழித்து, மன அமைதியை தரும் இறைவனாக இத்தல இறைவன் திகழ்கிறார். மேலும் கல்வி தொடர்பான தடைகள் அனைத்தும் நீங்கவும், சுதர்சன மூர்த்தியை வழிபடுபவர்கள் ஏராளம். இவைத் தவிர கெட்ட கனவுகள், மனக்குழப்பம், மனநோய், தீய சக்திகளால் ஏற்படும் மனம் தொடர்புடைய பாதிப்புகள், அதனால் வரும் துன்பங்களில் இருந்து விடுபடவும் இவரை பக்தர்கள் வழிபடுகிறார்கள். சக்கரத்தாழ்வார் எனப்படும் சுதர்சன மூர்த்தி, நவக்கிரகங்களில் சுக்ரனுக்கு அதிபதியாக விளங்குபவர். எனவே இத்தலம் சுக்ரனுக்குரிய பரிகார தலமாகவும் இருக்கிறது.

குழந்தை வரம் அருளும் தலமாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது. திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் தவிப்பவர்கள் ஏராளம். அப்படி இருப்பவர்கள் இந்த ஆலயத்திற்குச் சென்று, மூலவரான சுதர்சன மூர்த்தியையும், சுதர்சன நரசிம்மரையும் வழிபட்டு வணங்க வேண்டும். பின்னர் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள படித்துறையில் வைத்து, பக்தர்களுக்கு பாயாசம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினால், அவர்களுக்கு விரைவில் குழந்தைச் செல்வம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த நிகழ்வுக்கு ‘படிப்பாயச நேர்த்திக்கடன்’ என்று பெயர்.

சுதர்சன நரசிம்மர் :

சுதர்சனருக்குப் பின்புறம் நான்கு கரங்களோடு யோக நரசிம்மர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். நரசிம்மரின் நான்கு கரங்களிலும் சுதர்சனச் சக்கரங்கள் இருக்கின்றன. பொதுவாக, விஷ்ணு கோவில்களில் இருக்கும் சுதர்சனர் சன்னிதிகளைப் போன்று, இங்கு யோக நரசிம்மரைக் கண்டு வணங்க பின்புறமாகச் செல்வதற்கான வழி இல்லை.

இங்கு சுதர்சன மூர்த்திக்குப் பின்பகுதியில் இருக்கும் யோக நரசிம்மரை வணங்குவதற்குப் பின்புறச் சுவரில் நிலைக்கண்ணாடி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. நரசிம்மருக்குத் தீப ஆராதனை செய்யப்படும் பொழுது, அதன் ஒளி நிலைக் கண்ணாடியில் பிரதிபலிக்கும் போது தான், நரசிம்ம உருவத்தைக் கண்டு வணங்க முடியும். இந்த நரசிம்மரை, ‘சுதர்சன நரசிம்மர்’ என்றே அழைக் கிறார்கள். இவருக்கு தொடர்ச்சியாகப் பதினோரு பிரதோஷ நாட்களில், பானகம் படைத்து வழிபாடு செய்து வந்தால், நினைத்த காரியம் நினைத்த படி நிறைவேறும் என்பது நம்பிக்கை.

அமைவிடம்:

திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் இருந்து மேலப்பாளையம் வழியாகச் சேரன்மகாதேவி செல்லும் வழியில் இருக்கிறது பத்தமடை. இங்கிருந்து தனியாக பிரிந்து செல்லும் பாதையில் 2 கிலோமீட்டர் சென்றால் கரிசூழ்ந்த மங்கலம் என்ற திருத்தலத்தை அடையலாம். இந்த ஊரில் ஓடும் தாமிரபரணி ஆற்றின் கரையிலேயே ‘வெங்கடாசலபதி கோவில்’ அமைந்துள்ளது.

Related Stories: