அம்பரீஷனை காப்பாற்றிய சுதர்சனர்

‘‘அம்பரீஷன் ஏழுகடல் சூழ்ந்த புவியை ஆண்டான். ஆனாலும், செல்வத்தையும், சிற்றின்பங்களையும் தோன்றி மறையும் ஆற்று நீர்க்குமிழியாக நினைத்தான். நான் அரசன் என்பது உண்மைதான். அது நாராயணன் எனக்கு கொடுத்துள்ள வேடம். இதில் என் முயற்சி என்பது எதுவுமில்லை என தத்துவம் சொன்னான். பகவான் இட்ட பணியாதலால் நீதி தவறாது ஆட்சி செய்தான். ஆட்சி சிறக்க ஆலயத் திருப்பணி என்று கோபுரங்கள் பல எழுப்பினான். அம்பரீஷனும், பட்டத்து ராணியும் கோயிலுக்கு செல்வர். மன்னன் புல் செதுக்கினால் அதை மகாராணி வெளியே கொட்டுவாள். கிணற்றில் நீர் இரைத்தால் ராணி கோயிலை கழுவி சுத்தம் செய்வாள். கோயிலுக்குச் சென்றதுபோக நடமாடும் கோயிலாக விளங்கும் சாதுக்களை பூஜிப்பான். அவர்கள் பாதத்தை தன் சிரசில் வைத்துக் கொண்டாடுவான். அம்பரீஷன் சக்ரராஜாவை தலையில் சுமந்து சென்று அரியாசனத்தில் அமர்த்தி ஆராதித்தான். அதன் கீழே இவன் அமர்ந்து ஆட்சி புரிந்தான்.

Advertising
Advertising

அம்பரீஷன் துவாதசி, ஏகாதசி விரதத்தை விடாது மேற்கொள்பவன். துவாதசி, ஏகாதசி விரதமே வைகுந்தபதம் அளிக்கும் என திடமாக எண்ணினான். ஒருமுறை துவாதசியன்று பிருந்தாவனத்திற்கு சென்றான். யமுனையில் நீராடினான். பூஜைகள் புரிந்தான். வேதியர்களுக்கு பசுக்களை தானமாகக் கொடுத்தான். அப்போது துர்வாச மகரிஷி பிருந்தாவனத்திற்கு வந்தார். அவரையும் பணிந்து வணங்கினான்.‘‘எப்பேற்பட்ட பாக்கியம் எனக்கு. தாங்கள் உணவருந்திவிட்டுத்தான் செல்ல வேண்டும்’’ என கைக்கூப்பி கேட்டுக் கொண்டான்.துர்வாசர் யமுனையில் நீராடிவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார். யமுனையின் கரையில் தியானத்தில் மூழ்கினார். காலத்தை மறந்தார்.அம்பரீஷனோ, துவாதசி முடியும் தருவாயில் உள்ளதே. இன்னும் துர்வாசரை காணோமே. அவர் வந்தபிறகுதான் முடிக்க வேண்டும். இப்போது என்ன செய்வது என்று கலங்கினான்.

வேதியர்களை கலந்தாலோசித்தான். வேதியர்களோ, வெறும் துளசி தீர்த்தத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். துர்வாசர் வந்தவுடன் உணவிட்டு நீங்களும் உணவருந்தலாம் என்றனர். அம்பரீஷன்  துவாதசி விரதத்தை துளசி தீர்த்தத்தை அருந்தி முடித்துக் கொண்டான். சரியாக அந்த நேரம் பார்த்து துர்வாசர் நுழைந்தார். விஷயமறிந்து கோபத்தில் கொதித்தார்.‘‘அது தீர்த்தமே ஆனாலும், ஒரு ரிஷியை மதிக்காது உன்னை யார் எடுத்துக் கொள்ள சொன்னது. இப்போது என்ன அர்த்தம் தெரியுமா. நீ உண்டதுபோக மீதியுள்ளதை நான் உண்ணப்போவதாக அர்த்தம். இதுதான் சாதுக்களிடம் உனக்குள்ள மரியாதையா’’ என்றார். அம்பரீஷன் அதிர்ந்தான். ‘எம்பெருமானே’ என அவரின் சரணத்தில் விழுந்தான்.துர்வாசரோ, தனது ஜடாமுடியை கிள்ளி அதிலிருந்த ஒரு கேசத்தை உதறி அவன் மீது எறிந்தார். அதிலிருந்து பூதமொன்று வெளிப்பட்டது. அம்பரீஷன் அப்போது கூட, ‘நான் தவறு செய்து விட்டேன். இந்த தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன்’ என கண்மூடி நின்றான். அப்போது அம்பரீஷடமிருந்து அவனறியாது சுதர்சன சக்கரம் கோடி சூரியப் பிரகாசத்தோடு சுழன்று சீறியது. அந்த பூதத்தை இரு கூறாக்கியது. அதோடு நில்லாது துர்வாசரையும் துரத்தியது.

துர்வாசர் பயமும், ஆச்சரியும் மேலிட தன் உயிரைக் காத்துக் கொள்ள ஓடினார். தனது சக்தியால் மேருவின் குகைக்குள் புகுந்தார். அங்கும் சுதர்சன சக்கரம் சுழன்று துரத்தியது. பிரம்மாவிடம் சென்றார். பிரம்மாவோ, ‘ஐயோ என்னால் ஆகாது’ என்றார். எல்லோரும் கைவிட்டுவிட வைகுந்தத்திலுள்ள திருமாலின் அடி பரவினார்.‘‘அச்சுதா, நாராயணா, கேசவா என்னை காப்பாற்று. உன் பக்தனான அம்பரீஷனின் மீது ஏவல் செய்து மாட்டிக் கொண்டு விட்டேன். இந்தப் பாவத்திற்கு ஏதேனும் பிராயசித்தம் இருப்பின் சொல்லுங்கள்’’ என்றார்.‘‘மகரிஷியே நான் என்ன செய்ய. என் சுபாவமே பக்தர்களுக்கு கட்டுப்படுவதுதான். அவர்கள் என் மனதை கொள்ளை கொண்டவர்களாவார்கள். ஏகாதசியன்றோ, துவாதசியன்றோ விரதமிருந்து என்னை நினைக்கும்போது நான் அவன் உள்ளத்தில் குடிகொண்டு விடுகிறேன். என்னை அறியாது என் அன்பு பொழிந்தவண்ணம் உள்ளது. நீர் அந்த அம்பரீஷனையே போய் கேட்டுப் பாருங்கள்’’ என்று புறப்பட்ட இடத்திற்கே திருப்பி அனுப்பினார்.துர்வாசர் அம்பரீஷனிடமே மீண்டும் வந்தார்.

‘‘பாகவத உத்தமனே. உன் அருமை புரியாது தவறு செய்து விட்டேன். பாகவதர்களுக்கு ஏதேனும் ஒன்றெனில் வைகுந்தனின் சரணத்தில் விழுந்தாலும் மன்னிக்க தயங்குகிறான். பாகவதர்களுக்கு தீங்கு செய்தால், பாகவதர்களின் பாதத்தில் விழுதலே அதற்கு விமோசனம் என்கிறான். இதோ....’’ என்று தலை தாழ்த்தி வணங்க குனியும்போது அதுவரை கண்களில் நீர்வழிய நின்றுகொண்டிருந்த அம்பரீஷ பாகவதன் துர்வாசரின் பாதங்களில் விழுந்தான்.

துர்வாச மகரிஷி அள்ளி அணைத்துக் கொண்டார். உச்சி முகர்ந்தார். அம்பரீஷன் துர்வாசருக்கு உணவளித்துவிட்டு தானும் பெருமாள் பிரசாதத்தை உண்டான். துர்வாசர் விடைபெற்றுக் கொண்டு பிரம்மலோகம் சென்றார்.

Related Stories: