தடை நீக்கி வளம் சேர்க்கும் சக்கரத்தாழ்வார்

திருமாலின் பஞ்ச ஆயுதங்களான சுதர்சனம், பாஞ்ஜசன்யம், கௌமோதகீ, நந்தகம், சார்ங்கம் போன்றவை அவர் பணிகளை செய்ய எப்பொழுதும் தயாராக இருக்கும். இவற்றில் முதன்மையானது சக்கரத்தாழ்வார் என்று சொல்லப்படும் சுதர்சன பெருமாள். திருமாலை எப்பொழுதும் தாங்கிக்கொண்டிருக்கும் ஆதிசேஷனை அனந்தாழ்வான் என்றும், திருமாலின்  வாகனமான கருடனை கருடாழ்வார் என்றும், நம்மாழ்வார் ஞானம் பெற்ற புளிய மரத்திற்கு திருப்புளியாழ்வான் என்றும் பஞ்சாயுதங்களில் முதன்மையான சுதர்சனம் சக்கரத்தாழ்வார் என்றும் அழைக்கப்படுகின்றன.

மனிதனுக்கு ஏற்படும் நோய்கள், மன அமைதியின்மை எதிலும் தோல்வி, மரண பயம், பில்லி, சூனிய பாதிப்புகள், வியாபாரத்தில் நஷ்டம், கண் திருஷ்டி, முன்னேற்றத் தடை போன்றவற்றை போக்கும் வல்லமை கொண்டவர் சக்கரத்தாழ்வார்.
Advertising
Advertising

முன்காலத்தில் அம்பரீஷன் என்ற ஒரு மன்னன் இருந்தார். பெருமாளின் மீது மிகவும் பற்று கொண்டவர். அவர் கனவில் தோன்றிய திருமால், ‘எனது சுதர்சன சக்கரத்தை வழிபடு; அவர் எந்த நேரத்திலும் உனக்கு நல்ல பலனை கொடுப்பார்’ என்று கூறி மறைந்தார். அன்று முதல் சுதர்சன சக்கரத்தை வழிபட ஆரம்பித்து ஏகாதசி விரதமும் இருந்து மறுநாள் துவாதசி அன்று காலை உணவு உட்கொண்டு விரதத்தை முடிப்பார் மன்னர். அவருடன் மக்களும் இவ்விரதத்தை செவ்வனே மேற்கொண்டனர். இந்த மன்னனை சோதிக்க விரும்பிய துர்வாச முனிவர் ஒருநாள் அரண்மனைக்கு வந்து மன்னனுடைய ஏகாதசி விரதத்துக்கு இடையூறு செய்தார். அதோடு, ஒரு பூதத்தை தோற்றுவித்து மன்னனை விழுங்க உத்தரவிட்டார்.

ஆனால், அம்பரீஷன் தினமும் வணங்கிவரும் சுதர்சனர் மன்னரைக் காப்பாற்ற சீறிப் பாய்ந்து பூதத்தைக் கொன்றுவிட்டு அதை அனுப்பிய துர்வாச முனிவரையும் துரத்தினார். அதைக்கண்டு வெகுண்ட முனிவர் ஓடிச்சென்று பெருமாளை சரணடைந்தார். நாராயணன் அவரை அம்பரீஷிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னார். அதன்படியே முனிவர் செய்ய, அம்பரீஷன் சுதர்சனரை போற்றி பதினொரு சுலோகங்கள் பாடினார். அதைக்கேட்டு சுதர்சனர் அமைதியானார்.சுதர்சனர் தம் திருக்கரங்களில் சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம், அக்னி, கத்தி, வேல், சங்கம், வில், பாசம், கலப்பை, வஜ்ரம், கதை, உலக்கை, சூலம் என பதினாறு ஆயுதங்களை தாங்கியுள்ளார். அவருக்குப் பின்புறம் இருக்கும் யோக நரசிம்மர் தன் ஞானத்தில் தன்னிடம் வந்து நின்று பிரார்த்தனை செய்யும் பக்தனின் வேண்டுதலை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொடுக்கும் வரப்பிரசாதியாய்த் திகழ்கிறார். தன் நான்கு கரங்களில் தர்ம, அர்த்த, காம, மோட்ச சக்கரங்களை வைத்துள்ளார்.

திருவல்லிக்கேணி, ஸ்ரீரங்கம், திருமோகூர், கும்பகோணம், திருமலைவையாவூர் போன்ற தலங்களோடு, சென்னை, செங்குன்றத்திற்கு அருகில் உள்ள ஞாயிறு ஸ்வர்ணராமர் தலத்திலும் சுதர்சனர் தரிசனம் தருகிறார். ஞாயிற்றுக்கிழமைதோறும் மிகவும் சிறப்பான முறையில் பூஜைகள் நடந்து வருகின்றன. ஞாயிறு தலத்துக்குச் சென்று சூரியனை தரிசிக்கும் பக்தர்கள், அதன் அருகிலுள்ள சுதர்சனரையும் தரிசித்தால், பல நலன்கள் ஏற்படும்.

சென்னையை அடுத்துள்ள செங்குன்றத்திற்கருகில் உள்ளது ஞாயிறு தலம்.

Related Stories: